Monday, November 24, 2014

141-சமாதானம் அவசியம் ( நீதிக்கதை),



காட்டில் மான் ஒன்று இறந்து கிடந்தது.அதை ஒரே சமயத்தில் சிங்கம் ஒன்றும், கரடி ஒன்றும் பார்த்தன.

கரடி, "நான் தான் முதலில் மானைப் பார்த்தேன்..ஆகவே அது எனக்குச் சொந்தம் 'என்றது.

ஆனால் சிங்கமோ. "நான் தான் முதலில் பார்த்தேன்.ஆகவே இந்த மான் எனக்கேச் சொந்தம்' என்றது.

இரண்டும், செத்துக் கிடந்த மான் யாருக்குச் சொந்தம் என நீண்ட நேரம் சண்டைப் போட்டுக் கொண்டிருந்தன.அதனால் இரு மிருகங்களும் சோர்வு மேலிட மயங்கின.அப்போது நரி ஒன்று அங்கு வந்து, இறந்து கிடந்த மானையும், அதற்காக சண்டையிட்டுக் கொள்ளும் சிங்கத்தையும்.கரடியையும் பார்த்தது.இதுதான் சமயம் என நரி மானைத் தின்றுவிட்டு ஓடியது.

மயக்கம் தீர்ந்ததும் விழித்துக் கொண்ட கரடியும், சிங்கமும், நரி வந்து மானைத் தின்றுவிட்டுப் போனதை அறிந்தன."நாம் இருவரும் சமாதானமாய் போயிருந்தால், மானை பங்குப் போட்டு உண்டிருக்கலாம்.நாம் சண்டையிட்டதால் வேறு ஒருவன் புகுந்து நம்மை ஏமாற்றிவிட்டானே" என வருந்தின.

நாமும் அவர்களைப் போல் இல்லாமல்..எல்லாரிடமும் போரிடும் குணத்தைவிட்டு சமாதானமாய்ச் சென்றால் இழப்பு .எதுவும் ஏற்படாது.

Friday, November 21, 2014

140-நமது மகிழ்ச்சி பிறருக்கு துன்பம் ஆகலாமா? (நீதிக்கதை)




அன்று பள்ளி விடுமுறை என்றதால் சில சிறுவர்கள் சேர்ந்து, அந்த ஊரில் இருந்த ஒரு குளக்கரைக்கு வந்தனர்.

அந்தக் குளத்தில் பல தவளைகள் குதித்து விளையாடிக் கொண்டிருந்தன.

அதைக் கண்ட சிறுவர்கள் மகிழ்ச்சி மேலிட..அந்தத் தவளைகள் மீது யார் அதிகம் கல் எறிகிறார்கள் பார்க்கலாம் என்று போட்டி போட்டுக் கொண்டு, கரையில் இருந்த கற்களை எடுத்து தவளைகள் மீது வீச ஆரம்பித்தார்கள்.இதனால் பல தவளைகள் காயம் அடைந்தன.அப்போது, தைரியமாக ஒரு தவளை..அவர்களிடம் வந்து..

"கல்லெறிவதை நிறுத்துங்கள்.உங்கள் விளையாட்டால் சற்று முன் வரை மகிழ்வோடு விளையாடிக் கொண்டிருந்த எங்களில் பலர் காயமடைந்து வேதனையில் உள்ளனர்.நீங்கள் சந்தோஷமாய் இருக்க வேண்டுமென..எங்களை வேதனைப் படுத்தலாமா?:"என்றது.

சிறுவர்களும் தங்களது தவறை உணர்ந்து தவளையிடம் மன்னிப்புக் கேட்டனர்.

நமது மகிழ்ச்சி..இன்னொருவர் வேதனையால் ஏற்படக்கூடாது

Tuesday, November 18, 2014

139.இறைவனுக்கு நன்றி சொல்வோம் (நீதிக்கதை)



ஒரு ஊரில் காகமொன்று இருந்தது.அது கருப்பு நிறத்தில் இருப்பதை வெறுத்தது.

ஒரு நாள் ஒரு குளக்கரையில் இருந்த மரத்தின் மீது அமர்ந்திருந்தது.

அப்போது நீரில் இரு அன்னப்பறவைகள் நீந்திக் கொண்டிருந்தன.

அவற்றைப் பார்த்த காகம்' அந்த அன்னப்பறவைகளைப் போல நான் வெள்ளையாக இல்லையே' என வருந்தியது.
அந்தப் பறவைகளைப்போல நாமும் தண்ணீரில் நீந்தினால் தன் சிறகுகளில் இருக்கும் கரிய நிறம் போய் வெண்மை நிறம் வந்துவிடலாம் என எண்ணியது.

உடனே....அன்று முழுதும் அது தண்ணீரில் நீந்தியது.தன் இறகுகளை தேய்த்து ..தேய்த்து பார்த்தது.அதனால் சில இறகுகளையும் இழந்தது.

அதைப் பார்த்த அன்னப் பறவைகளில் ஒன்று காகத்திடம் ' இறைவன் படைப்பில் ஒவ்வொரு உயிரினமும் ஒவ்வொரு உருவம்,நிறம் பெற்றவை.அதை மாற்ற நினைத்தால் நடக்காது' என அறிவுரை கூறியது.மேலும்,' கடவுள்...எந்த அங்கஹீனத்தையும் கொடுக்காமல் படைத்ததற்கு நன்றி சொல்லவேண்டும்.' என்றது.

ஒருவன் கருப்பா,சிவப்பா என்பதில் இல்லை உயர்வு தாழ்வு.அவர்கள் செய்யும் செயல்களில் தான் இருக்கிறது என்பதை உணரவேண்டும்.

Sunday, November 16, 2014

138- செய்நன்றி மறவேல்!

                 

ஒருநாள் மான் ஒன்று புல் மேய்ந்துக் கொண்டிருக்கையில், வேடன் ஒருவன் கண்களில் சிக்கியது.அவன் மானைக் கொல்ல, அம்பெய்தப் பார்த்தான்.

மான் நாலு கால் பாய்ச்சலில் பாய்ந்து ஓடியது.சிறிது தூரம் சென்றதும், ஒரு புதரைப்பார்த்து அதன் பின் ஓடி ஒளிந்தது.
மானைத் துரத்தி வந்த வேடன் அதைக் காணாது சுற்றும் முற்றும் தேட ஆரம்பித்தான்.

அவனிடமிருந்து தப்பிவிட்டோம் என்ற எண்ணத்தில்..புதரில் வளர்ந்திருந்த செடியின் இலைகளை மான் தின்ன ஆரம்பித்தது.

அப்போது அச்செடி, "மானே! நான் உன்னை வேடனிடமிருந்து காப்பாற்றியுள்ளேன்! ஆனால், நீ..எனது செல்வங்களான இலைகளை உண்ணுகிறாய்.தயவு செய்து சில நாட்களாவது அவை தாயான என்னிடம் இருக்கட்டும்" என கெஞ்சியது.

ஆனால், அதைக் கேட்காத மான்..செடியின் இலைகளை உண்ணத் தொடங்கியது.அப்போது, அதனால் சிறு சலசலப்பு உண்டாக, வேடன் மான் அங்கு ஒளிந்திருப்பதைப் பார்த்துவிட்டான்.அதன் மீது அம்பை எய்திக் கொன்றான்.

தன்னைக் காத்த செடியின் செய்நன்றியை மான் மறந்ததால் மான் உயிரையே இழக்க நேர்ந்தது.

நாமும் நமக்கு ஒருவர் சிறிய உதவியைச் செய்தாலும் அதை மறக்காது, உதவி புரிந்தோர்க்கு நம்மாலான நன்மைகளையே செய்ய வேண்டும்.

Friday, November 14, 2014

137- அன்னை சொல் கேள்! ( நீதிக்கதை,)

                               


எலி ஒன்று குட்டி போட்டிருந்தது.

இரவு நேரம்.தாய் எலி குட்டி எலியிடம், "இந்த பொந்தை விட்டு வெளியே வராதே! நான் வெளியே சென்று, யார் வீட்டிலிருந்தாவது நமக்கான உணவை கொண்டு வருகிறேன்" என்று கூறி விட்டுச் சென்றது...

தாய் எலி சென்றதும், குட்டி எலி வெளியே வந்து..வெளியுலகைக் காண ஆசைப்பட்டது.

அது பொந்தை விட்டு வெளியே வந்து, சிறிது தூரம் ஓடியது.அங்கு இருந்த வீடுகளை எல்லாம் பார்த்து வியந்தது.

அப்போது சற்று பெரிய நாலுகால் பிராணி ஒன்றைப் பார்த்து.அது குட்டி எலியைக் கவ்வ ஓடியது.பயந்த குட்டி எலி படுவேகமாக ஓடி வந்து பொந்திற்குள் நுழைந்தது.

சிறிது நேரம் கழித்து, தாய் எலி வந்ததும், குட்டி எலி" அம்மா! உன் சொல்லைக் கேட்காமல் நான் வெளியே சென்றேன்.அப்போது நாலு கால் பிராணி ஒன்று என்னைக் கவ்வ வந்தது" என்றது.

அதற்கு தாய் எலி,"அந்த பிராணியின் பெயர்தான் பூனை.நமது எதிரி அது.அதற்காகத்தான் உன்னை வெளியே வர வேண்டாம் என்றேன்.தாயான என் அறிவுரையைக் கேட்காமல் வெளியே சென்றதால் ஆபத்தில் மாட்ட இருந்தாய்.இனியாகிலும் பெரியவர்கள் சொல்படிக் கேட்டால், நமக்கு எந்த ஆபத்தும் வராது..என அறிந்து கொள்" என்றது

நாமும், நம்மை பெற்றவர்கள், பெரியோர்கள் கூறும் அறிவுரையை மதித்து நடக்க வேண்டும்.

Children's Day


Happy Children's Day






குழந்தைகள் அனைவருக்கும் எனது இனிய 'குழந்தைகள் தின நல் வாழ்த்துகள்

Wednesday, November 12, 2014

136- காட்டெருமையின் முன்னேற்பாடு (நீதிக்கதை)

                 

ஒரு காட்டில், காட்டு எருமை ஒன்று தன் கொம்புகளை மரத்தில் உரசியபடியே தீட்டிக் கொண்டிருந்தது.

அதைக் கண்ட நரி , "எதற்கு தேவையில்லாமல் இப்போது கொம்புகளை கூராக்க தீட்டிக் கொண்டிருக்கிறாய்" என்றது.

"திடீரென சிங்கமோ, புலியோ என்னைத் தாக்க வந்தால், அதனிடமிருந்து தப்பிக்கலாம் அல்லவா? ஆகவேதான் கூர் தீட்டிக் கொண்டிருக்கிறேன்" என்றது எருமை.

"வேலையற்ற வேலை செய்கிறாய்.அதற்கு நொண்டிச் சாக்கு ஒன்றும் சொல்கிறாய்" என நரி கிண்டல் செய்தது.

அந்த சமயம், சிங்கம் ஒன்று பெரும் கர்ஜனை செய்தபடியே காட்டெருமையின் மீது பாய்ந்தது.நரி சிங்கத்தைக் கண்டதும் ஓடி ஒளிந்தது.

தன் மீது பாய்ந்த சிங்கத்தை காட்டெருமை கூரிய தனது கொம்புகளால் குத்தி தூக்கி எறிந்தது.காயமுற்ற சிங்கம் ஓடிவிட்டது.

திரும்பி வந்த நரி எருமையைப் பார்த்து, "ஆபத்து வரும் முன் காத்துக் கொள்ள நீ செய்த முன்னேற்பாடு போற்றுதலுக்குரியது" என பாராட்டியது.

நாமும் எந்த ஒரு வேலையையும், பிறகு செய்து கொள்ளலாம் என தள்ளிப் போட்டால், அதனால் பல சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கும்.ஆகவே, எந்த ஒரு வேலையையும் தள்ளிப் போடக்கூடாது. 

Tuesday, November 11, 2014

135. ' நரியின் சாதூர்யம்' (நீதிக்கதை)




ஒரு காட்டை ஒட்டி ஒரு சிறு நதி ஓடிக்கொண்டிருந்தது.
அதில் ஒரு முதலையும் ஒரு நண்டும் இருந்தன.அவை இரண்டும் நதியில் இருந்த மீன்களை உண்டு உயிர் வாழ்ந்தன.
மற்ற சில விலங்குகளும் தண்ணீர் அருந்த வருவதுண்டு.

கோடைகாலம் வந்ததது...நதியில் நீர் வரத்தும் குறைய மீன்களே இல்லாத நிலை வந்தது.தண்ணீர் குறைந்ததால்,முதலைக்கு பயந்து விலங்குகள் தண்ணீர் அருந்தவும் வருவ்தில்லை.
உண்ண எதுவும் இல்லா நிலையில்,ஒரு நாள்,முதலை நண்டிடம்,நீ விலங்குகளிடம் சென்று நான் இறந்து விட்டதாகச் சொல்.அதை நம்பி ஏதேனும் விலங்குகள் வந்தால் அதை அடித்து நாம் உண்ணலாம் என்றது. நண்டும் அப்படியே செய்ய ......நரி ஒன்று முதலையை உண்ணலாம் என ஆசையுடன் நண்டுடன் வந்தது.

செத்தது போலக்கிடந்த முதலையைப் பார்த்ததும் நரிக்கு சந்தேகம் வந்தது. உடனே தன் மூளையை உபயோகித்து "முதலை செத்தது போலத்தெரியவில்லையே ! அப்படி இறந்திருந்தால் அதன் வால் ஆடுமே " என்றது.

இதக் கேட்டவுடன் முதலை தன் வாலை ஆட்டியது.அதைப் பார்த்த நரி,நண்டிடம் 'செத்த முதலை எப்படி வாலை ஆட்டும்.நீங்கள் இருவரும் போய் சொல்கிறீர்கள்' என கூறிவிட்டு ஓடியது.

அறிவில்லாத முதலையும் நண்டும் ஏமாந்தது.

நாமும் யாரேனும் ஏதேனும் கூறினால் அதை உடனே நம்பாது நம் அறிவை பயன்படுத்தி உண்மையை கண்டறியவேண்டும்.

Friday, November 7, 2014

134. கழுதை சிங்கமாகுமா..(நீதிக்கதை)



கழுதை ஒன்று தனது சலவைத்தொழிலாளியான முதலாளியிடமிருந்து தப்பி காட்டுக்குள் புகுந்தது.

காட்டில் புலி,சிங்கம்,யானை போன்ற மிருகங்களைப் பார்த்து பயந்து ....அவற்றிடம் இருந்து எப்படி தப்புவது என புரியாது விழித்தது.

அப்போது சிங்கத்தின் தோல் ஒன்று கழுதைக்குக் கிடைத்தது.அதை எடுத்து போர்த்திக்கொண்டு காட்டிற்குள்.. தானும் ஒரு சிங்கம் போல உலாவியது.

அது தெரியாத மிருகங்கள் கழுதையை சிங்கம் என நினைத்து பயந்து ஓடின.

அதைக் கண்டு மகிழ்ந்த கழுதை ....மீண்டும் நகரத்திற்குள் நுழைந்தது.மனிதர்கள் சிங்கம் நகரத்திற்குள் இருப்பதைப் பார்த்து பயந்தனர்.

கழுதைக்கு மகிழ்ச்சி அதிகமாகியது...திடீரென கத்த ஆரம்பித்தது.காணாமல் போயிருந்த தன் கழுதையைத் தேடிக் கொண்டிருந்த சலவைத்தொழிலாளி ...தன் கழுதையின் குரல் கேட்டு வந்தான்.
தன் கழுதை சிங்கத்தின் தோலை போர்த்தியிருப்பதைக் கண்டு அதை நீக்கிவிட்டு கழுதையை பலமாக அடிக்க ஆரம்பித்தான்.

நாமும் நம்மைப் போலவே நடந்து கொள்ளவேண்டும்.
பிறர் போல நடிக்க ஆசைப்பட்டால் ஒருநாள் ஆபத்தில் சிக்கிக்கொள்வோம்.

Thursday, October 30, 2014

133. அறிவுரை வழங்கும் தகுதி (நீதிக்கதை)




கடற்கரை ஓரம் நண்டு ஒன்று வசித்து வந்தது.அது தனது மகனான குட்டி நண்டை நடக்கச் சொல்லி அழகுப் பார்த்தது

ஆனால் ...குட்டி நண்டோ...நேராக நடக்க முடியாமல் தனது இடது பக்கவாட்டிலேயே நடந்தது.அதனைப் பார்த்த தாய் நண்டு ' மகனே...பக்கவாட்டில் நடக்கக்கூடாது.நேராக நடக்கவேண்டும்' என்று அறிவுரை கூறியது.

உடனே குட்டி நண்டு...' அம்மா..எவ்வளவு முயன்றும் என்னால் நேராக நடக்க முடியவில்லை.நேராக எப்படி நடப்பது என எனக்கு சொல்லிக்கொடு ' என்றது.

தாய் நண்டும்...அப்படி நடக்கப் பார்த்தது..ஆனால் அதனால் நேராக நடக்க முடியவில்லை.பக்கவாட்டிலேயே நடந்தது.
அப்போதுதான் அதற்கு....நண்டினமான தங்களால் நேராக நடக்க முடியாது என உணர்ந்தது.அது தெரியாமல் தன் மகனுக்கு அறிவுரை கூறினோமே என நாணியது.

நாமும் பிறர்க்கு ஏதேனும் அறிவுரை வழங்குமுன், நாம் அப்படி நடந்து கொண்டோமா என யோசிக்க வேண்டும்.

அறிவுரை வழங்குமுன் அதற்கேற்றார் போல நம்மை திருத்திக் கொள்ள வேண்டும்.

Monday, October 27, 2014

133.ஆபத்தில் உதவ வேண்டும் (நீதிக்கதை)



சரவணனும் முருகனும் நண்பர்கள்.இருவரும் ஒரு நாள் அடுத்த ஊருக்கு பிரயாணம் செய்தனர்.

போகும் வழியில் அவர்கள் ஒரு காட்டைக் கடக்க வேண்டியிருந்தது.காட்டில் கொஞ்சதூரம் போனதும் ஒரு பெரிய கரடி அவர்களுக்கு முன்னால் வருவதைக்கண்டனர்.

கரடியைக் கண்டதும் சரவணன் உடனே ஒரு மரத்தில் ஏறிக்கொண்டான்.முருகனுக்கு மரத்தில் ஏறத்தெரியாது.மரத்தின் மீது ஏறிய சரவணனின் உதவியும் கிடைக்கவில்லை.

தன்னாலும் தனித்து கரடியை எதிர்க்கமுடியாது.என்ன செய்வது என யோசித்தவன்,உடனே மூச்சை அடக்கிகொண்டு இறந்தவன் போலக்கிடந்தான்.

கரடி அவனிடம் வந்து பார்த்து ...இறந்த உடல் நினைத்து அப்பால் போய்விட்டது.

கரடி போனதும்,மரத்திலிருந்து இறங்கிய சரவணன் முருகனிடம் 'கரடி உன்னிடம் என்ன சொல்லிற்று ' என்று கேட்டான்
முருகன் சொன்னான்,கரடி என்னிடம் வந்து ' ஆபத்தில் உதவாத நண்பனை நம்பாதே ' என்றது என்றான்.

நாமும் சரவணனைப் போல இல்லாமல் ,,,அடுத்தவர்க்கு ஆபத்து.ஏற்பாட்டால் அவர்களைவிட்டு விலகாமல் நம்மால் முடிந்த உதவியைச் செய்யவேண்டும்.

Wednesday, October 22, 2014

132. நல்ல நண்பன் வேண்டும் (நீதிக்கதை)



ஒரு கிராமத்தில் விவசாயி ஒருவன் இருந்தான்.அவன் வயல்களில் பயிரிட்டிருந்த தானியங்களை பறவைகள் வந்து நாசம் செய்து கொண்டிருந்தன.அதனால் அவற்றைப் பிடிக்க வலையைக் கட்டியிருந்தான் அவன்.

அன்று மாலை,அந்த வலையில் பல பறவைகளுடன் ஒரு கொக்கும் மாட்டிக்கொண்டது.

விவசாயி வந்து பறவைகளைப் பிடித்தான். மாட்டிக்கொண்ட கொக்கு விவசாயியைப் பார்த்து ' ஐயா நீங்கள் பறவைகளைப் பிடிக்கத்தானே வலையைப் போட்டீர்கள்.நான் பறவை அல்ல ...அதனால் என்னை விடுவிக்கவேண்டும்' என்று கேட்டது.

அதற்கு விவசாயி ..." நீ சொல்வது உண்மை. ஆனால் நீ கெட்டவர்களுடன் அகப்பட்டாய்.கெட்டவர்கள் நட்பு உனக்கு இருப்பதால்..அவற்றுடன் சேர்ந்து நீயும் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றான்.

நாமும்....கெட்டவர்கள் நட்பை விட்டொழிக்க வேண்டும்.இல்லையேல் என்றேனும் ஒரு நாள் அவர்களுடன் சேர்ந்து நமக்கும் தண்டனை கிடைக்கும்.

" நல்ல நண்பனையே தேர்ந்தெடுங்கள்"

Tuesday, March 11, 2014

131. ' யார் உயர்ந்தவர்.. (நீதிக்கதை)




ஒன்று முதல் ஒன்பது வரை ஒன்பது நண்பர்கள் விளையாடிக்கொண்டிருந்தார்கள். ' 0 ' மட்டும் தனியாக சோகமாக அமர்ந்துள்ளது.அவர்கள் விளையாட்டில் அதை சேர்க்கவில்லை.

ஆசிரியர்:  வகுப்பறைக்குள் நுழைய ....

ஒன்று :   ஆசிரியர் வந்துட்டார்...ஆசிரியர் வந்துட்டார்.....

எல்லோரும் எழுந்து நின்று: வணக்கம் சார்..

ஆசிரியர்: வணக்கம். எல்லோரும் உட்காருங்க.இப்ப attendance எடுக்கப் போறேன். வந்திருக்கிறவர்கள் present சொல்லவும்.ஒன்று..

ஒன்று:    Presnet Sir

ஆசிரியர்:  இரண்டு

இரண்டு:    Present Sir

ஆசிரியர்:   மூன்று

மூன்று:     Present Sir

(இப்படி ஒன்பது வரை கூப்பிட அனைத்து எண்களும் Present சொல்ல )

ஆசிரியர்:   சைஃபர்
(Present  சப்தம் வராததால் மீண்டும்) சைஃபர் இன்னிக்கு வரலியா.......

இரண்டு:  வந்திருக்கான் Sir.

ஆசிரியர்:  என்ன...சைஃபர் தூங்குகிறாயா?
          எழுந்து நில்
         (சைஃபர் சோகத்துடன் எழுந்து நிற்க)
         ஏன் Present சொல்லவில்லை....

         (சைஃபர் அழ ஆரம்பிக்க)

ஆசிரியர்: ஏன் அழற!

சைஃபர்:  நான் சைஃபர்.அதனால் எனக்கு மதிப்பு இல்லையாம்.ஒன்று முதல் ஒன்பது வரை எந்த நண்பனும்...என்னை அவர்களுடன் விளையாட்டில் சேர்த்துக் கொள்ள மாட்டேன்  என்று சொல்கிறார்கள்.

ஆசிரியர்: அப்படியா...உட்கார்..நீ மதிப்புள்ளவன் என அவர்கள் வாயாலேயே சொல்ல வைக்கிறேன்.

          ஒன்று முதல் ஒன்பது வரை ஒவ்வொருவரும் தாங்கள் ஏன் மதிப்புள்ளவர்கள் என்று சொல்லவேண்டும்.

          முதலில்  ஒன்று நீ சொல்...

ஒன்று:    (எழுந்து நின்று ) ஐயா...நீங்களே நாங்கள் பத்து பேர் இருக்கும் போது ஒன்றான என்னையே முதலில் கூப்பிட்டீர்கள்.இது ஒன்றே நான் அவர்களை விட மதிப்பு வாய்ந்தவன் என்பதற்கான சான்று.

          தவிர ...படிப்பில் முதல் மாணவனாய் இருக்கவேண்டும்...முதல் மதிப்பெண் பெற வேண்டும் என ஆசிரியர்களும் பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை நினைக்கின்றனர்.ஆகவே    
           நானே அனைவரை விட உயர்ந்தவன்.

ஆசிரியர்:  சரி...இப்போது ....இரண்டு நீ சொல்....

இரண்டு:   ஐயா...இறைவனால் படைக்கப்பட்டுள்ள அனைத்திற்கும்,மனிதன் படைத்த அனைத்திற்கும் இரண்டு பக்கங்கள்தான்.  உதாரணமாக ஒரு இலையை எடுத்து கொண்டாலும்    
          இலையின் உள்புறம்,வெளிபுறம் என இரண்டு.ஆண்பெண்,இன்பம்,துன்பம், வலது,இடது என எல்லாமே இரண்டுதான். ஆகவே நானே உயர்ந்தவன்.

ஆசிரியர்: o.k. ...மூன்று  நீ சொல்...


மூன்று:  ஐயா....தமிழ் என்றாலே மூன்று எழுத்து.தவிர்த்து இயற்றமிழ்,இசைத்தமிழ்,நாடகத்தமிழ் என தமிழை மூன்று வகைப் படுத்துவர்.
         அது போல தெய்வங்களிலும் பிரம்மா,விஷ்ணு,சிவன் என படைத்தல்,காத்தல்,அழித்தல் தொழில்களை புரியும் சுவாமிகளை மும்மூர்த்திகள் என்றே சொல்லுவார்கள்.ஆகவே மூன்றான நானே
         உயர்ந்தவன்.


ஆசிரியர்: o.k. நான்கு  நீ சொல்  ....


நான்கு : ரிக்,யஜூர்,சாம,அதர்வணம் என வேதங்கள் நான்கு வகைப்படும்.எந்த ஒரு செயல்செய்தாலும் அதுபற்றி நாலு பேரை கேட்டு தெரிந்து கொள் என்பார்கள்.
         ஆகவே நான்கான நானே உய்ர்ந்தவன்.


ஆசிரியர்: ஐந்து


ஐந்து:    ஒவ்வொரு மனிதன் கைகளிலும் ஐந்துவிரல்கள்.கால்களில் ஐந்து விரல்கள்..தவிர...இந்த பூமியே பஞ்ச பூதங்களால் ஆனது...பூமி.காற்று,ஆகாயம்,நெருப்பு, நீர் என.தவிர மெய்,வாய்,கண்,மூக்கு
         செவி என மனித உடலும் ஐந்து ஆகும்.


ஆசிரியர்: ஆறு  நீ...
.

ஆறு:     சுவைகள்...இனிப்பு,காரம்,புளிப்பு,உப்பு,உவர்ப்பு.துவர்ப்பு என ஆறு வகைப்படும்.
         தமிழ்க் கடவுள் என போற்றப்படும் முருகனுக்கு ஆறு முகங்கள்..
         மனிதர்களுக்கு உணவு விளைவிப்பதற்கும்,குடிநீருக்கும் தண்ணீர் அவசியம், அது ' நதி ' எனப்படுகிறது
         அது ' ஆறு ' என எங்கள் பெயரிலேயே அழைக்கப்படுகிறது.
         ஆதலால் நானே உயர்ந்தவன்.

ஆசிரியர்: ஏழு...


ஏழு:     ஐயா...வாரத்தின் நாட்கள் ஏழு.
         திருப்பதி பாலாஜி வீற்றிருக்கும் இடம் ஏழுமலைகளைக் கொண்டது.
         அதனால் ஏழு ஆகிய நானே உயர்ந்தவன்.

ஆசிரியர்: எட்டு........
.

எட்டு:    திசைகள் எட்டு..மனிதன் எங்கு சென்றாலும் என்  எல்லைக்குள் தான் இருந்தாக வேண்டும். ஆதலால் நானே பெரியவன்..

ஆசிரியர்: ஒன்பது நீ என்ன சொல்லப்போகிறாய்?

ஒன்பது:  ஐயா நவக்கிரகங்கள் ஒன்பது.இன்பம்,நகைச்சுவை,கருணை,கோபம்.வீரம்.பயம்,அருவருப்பு,அற்புதம்,சாந்தம் என நவரசங்கள்.நவராத்திரி,நவரத்தினம் என்றெல்லாம் சொல்லப்படுகிறது.
         ஆகவே ஒன்பதான நானே உயர்ந்தவன்.

ஆசிரியர்: சைஃபர் ...இவர்கள் சொல்வதை எல்லாம் கேட்டாயா? இப்போதும் நான் மதிப்பில்லாதவன் என்று நீ சொன்னதையே திரும்பச் சொல்லப்போகிறாயா..?

சைஃபர்:  ஆம் Sir.

ஆசிரியர்: சரி...உன் மதிப்பு உனக்கு தெரியவில்லை...நானே சொல்கிறேன் கேள்.  நீ எல்லாரையும் விட மதிப்பு அதிகம் வாய்ந்தவன். முதலில் உன்னை கண்டுபிடித்ததே இந்தியர்கள் என
         பெருமைப்படுவோம்.
         சைஃபர் நீ இங்கே வா.....வந்து நில்...
         (சைஃபர் வந்து நிற்கிறது)
         ஒன்று இங்கே வா.. சைஃபரின் அடுத்து நில்.....
         (ஒன்று வந்து நிற்கிறது)
         இப்பொழுது ஒன்றே உன் மதிப்பு என்ன?

ஒன்று:   ஒன்று.

ஆசிரியர்: சைஃபர்..நீ இப்போது ஒன்றின் அடுத்தபக்க்ம் இடம் மாறி நில்.
         ஒன்றே இப்போது உன் மதிப்பு என்ன?

ஒன்று:    பத்து...

ஆசிரியர்: சைஃபர் பார்த்தாயா...நீ ஒன்றின் பக்கத்தில் வந்து நின்றதும் ஒன்றின் மதிப்பு...பத்து மடங்கு உயர்ந்து விட்டது.அதாவது ஒன்று உன்னுடன் சேர்ந்ததும்தான் அதிக மதிப்பைப் பெற்றது,.
          இது போல ஒவ்வொரு எண்ணுடன் நீ சேரும்போது அவற்றின் மதிப்பை பத்து மடங்கு உயர்த்தி விடுகிறாய்.
         எண்களே ...இப்போது புரிந்து கொள்ளுங்கள் சைஃபர் உங்களுடன் இணைந்ததும் உங்கள் மதிப்பு உயர்கிறது.
         இனியாவது ' 0 ' ஐ உங்களுடன் விளையாட சேர்த்துக் கொள்வீர்களா...

ஒன்று   ஐயா..இதுவரை சைஃபரின் மதிப்பு தெரியாமல் அதை ஒதுக்கி வைத்தோம்.
முதல்    இனி நாங்கள் அனைவரும் சைஃபருடன் சேர்ந்து ஒன்றாக...ஒற்றுமையாக இருப்போம்.
ஒன்பது   இதை விளங்க வைத்த உங்களுக்கு நன்றி.
 வரை

சைஃபர்: என்னை எனக்கே புரிய வைத்த உங்களுக்கு நன்றி Sir.

ஆசிரியர்: உங்களுக்கெல்லாம் இன்னொன்றும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்,இறைவனால் படைக்கப்பட்ட,,மனிதனால் உருவாக்கப்பட்ட எதற்கும் மதிப்பில்லை என்பதே கிடையாது.எல்லாமே மதிப்பு
         வாய்ந்தவை அதனதன் உபயோகத்தில். இறைவன் அனைவருக்கும் ஒரே மூளையைத் தான் கொடுத்திருக்கிறான்.அதனால், யாரும் யாரையும் விட உயர்ந்தவர்க ள் அல்ல.
         இறைவன் அளித்த மூளையை சரியான வகையில் உபயோகிப்பவன் புத்திசாலியாகிறான்.
         இறைவன் படைத்த மூளையின் மதிப்பு உணர்ந்து படித்து ...நாமும் புத்திசாலி என பெயர் எடுப்போம்.
   
         அடுத்தது Play Time. என்ன செய்யப்போகிறீர்கள்.

எல்லா எண்களூம்:
        எல்லோரும் ஒன்றாக விளையாடப் போகிறோம்  Sir.

ஆசிரியர்: Good.