ஒரு சலவைத் தொழிலாளி இருந்தான்.அவன் தினந்தோறும் தன் கழுதையின் முதுகில் சுமைகளை ஏற்றி..குளத்திற்குச் சென்று துணிகளைத் துவைத்து...கழுதையின் மேல் வைத்து திரும்பி வருவான்.அவனுடன் அவனது செல்லப் பிராணியான நாயும் செல்லும்.
கழுதை, என்ன உழைத்தாலும்..அதை சலவைத் தொழிலாளி பாராட்டுவதில்லை.தேவையான உணவு மட்டும் அளித்து வந்தான்.
ஆனால், நாயுடன் அவன் கொஞ்சி விளையாடுவான்.தான் உண்ணுவதையெல்லாம் அதற்கும் கொடுப்பான்.நாயும் வாலை ஆட்டியவாறே..அவனிடம் பேசுவது போல குரைக்கும்.கழுதைக்கு இது ஆத்திரத்தைக் கிளப்பியது.
ஒருநாள் இரவு..
நாய் குரைப்பதைக் கேட்டு, எழுந்துவந்த சலவைத் தொழிலாளி, திருடன் ஒருவன் துணிகளைக் களவாட வந்ததையும், அவனை நாய் குரைத்து விரட்டியதையும் அறிந்து, நாயைத் தூக்கி கொஞ்சினான்.
இதையெல்லாம்..பார்த்துக் கொண்டிருந்த கழுதை, விவரம் அறியாது, தானும் தன் முதலாளியிடம் நல்ல பெயர் வாங்க எண்ணியது.
நள்ளிரவு நேரம்...எழுந்து கத்த ஆரம்பித்தது.அதனது நாராசக் குரலைக் கேட்ட தொழிலாளி ..வெளியே வந்து, தன் தூக்கத்தைக் கெடுத்த கழுதையை நையப் புடைத்தான்.
கழுதை வேதனையுடன் முணகியது.சலவைத் தொழிலாளி படுக்கச் சென்றதும்...நாய் ஆறுதலாக கழுதையிடம் வந்து அதை நக்கிக் கொடுத்தது.பின்னர் சொன்னது,'நான் என் வேலையைச் செய்தேன்..அதற்கு பாராட்டுக் கிடைத்தது.அதுபோல நீயும்..உன் வேலையை மட்டும் ஒழுங்காகச் செய்து வா..என்றேனும் பாராட்டுக் கிடைக்கும்.தவிர்த்து இன்னொருவர் போல நீயும் இருக்க எண்ணாதே.அவரவர் வேலையை அவரவர் செய்ய வேண்டும்.இல்லையேல் துன்பப் பட வேண்டியது தான்' என்றது.
நாமும்..நமக்கான வேலையை ஒழுங்காகச் செய்ய வேண்டுமே அல்லாது, பிறரது வேலையில் தலையிட்டால் துன்பமே அடைவோம்.