Monday, March 19, 2018

17 - அன்னதானம்

அன்னதானத்தின் அவசியம் தெரியுமா?
அனைவருக்கும் கேட்டவரம் அனைத்தையும்
அளித்த கொடையாளி கர்ணன். தன் வாழ்நாளின்
ஒருவரை அமர்வித்து உணவளித்து அன்னதானம்
செய்ததில்லை.
இறந்தபின் சொர்க்கம் அடைந்தான்.
அங்கு அனைவரும் பசி, தாகம் இன்றி சுகமாக
இருந்தனர். ஆனால் கர்ணனுக்கு மட்டும் கடும்
பசி எங்கு தேடியும், யாரை கேட்டும்
உணவு கிடைக்கவில்லை.
நாரதரை கண்டு, எனக்கு மட்டும் சொர்க்கத்தில்
ஏன் இந்த அவல நிலை? எனக் கேட்டான். நாரதர்,
கர்ணா! உனது ஆள்காட்டி விரலை வாயில்
இட்டு சுவை என்றார். கர்ணனும்
அப்படியே செய்ய பசியும் தீர்ந்தது. ஆனால்
வாயிலிருந்து விரலை எடுத்தாலோ மீண்டும்
பசித்தது. காரணம் கேட்ட கர்ணனிடம் நாரதர் நீ
உனது வாழ்நாளில் ஒருவருக்காவது அன்னதானம் செய்ததில்லை.ஒரு சமயம் துரியோதனன் வீட்டில் அன்னதானம் நடைபெற்றது. பசியால் வாடிய ஒருவன் உன்னிடம் வந்து விசாரித்த போது, அன்னதானம் நடக்கும் இடத்தை நீ உனது ஆள்காட்டி விரலால் சுட்டிக்காட்டினாய். அந்த பெரும் புண்ணியம் உனது ஆள் காட்டி விரலில் தொற்றியுள்ளது. அந்த விரலைச் சுவைத்தவுடன்
பசி நீங்குகிறது. எனவே தான் தானத்தின்
சிறந்தது அன்னதானம் என்றார்.
எனவே தான் கர்ணன், அன்னதானம்
செய்வதற்காகவே மறுபிறவி எடுக்க விரும்பி,
சிவனிடம் வரம் கேட்டுப் பெற்றான். கர்ணனின்
மறுபிறவியே சிறுத்தொண்ட நாயனார்.
பக்தரின் அன்னதான அவசியத்தை உலகுக்
உணர்த்தவே சிவன் வீர சைவ அடியாராக
வந்து பிள்ளைக்கறி கேட்டு அருள் புரிந்தார்.
இக்கதையையே சீராளன் கதை என கிராமங்கள்
தோறும் பல நூற்றாண்டுகளாக சிவபக்தர்கள்
சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்

Thursday, March 1, 2018

16. எல்லோரும் உயர்ந்தவர்களே



காகம்  ஒன்று தான் கருப்பு நிறத்தில் இருப்பதாக தாழ்வு மனப்பான்மை கொண்டு இருந்தபோது ஒரு அன்னத்தை பார்த்தது.

அது அன்னத்திடம் சென்று ' அன்னமே ! நான் உன்னைப்போல வெண்மையாக விரும்புகிறேன் என்றது.

அதற்கு அன்னம், "காகமே! உண்மையில் என்னை விட பச்சைக் கிளி தான் அழகு.நானே, பச்சைக்கிளியாக  விரும்புகிறேன்" என்றது.

அடுத்து காகம் , பச்சைக்கிளியிடம் சென்று, "பச்சைக்கிளியே! நான் உன்னைப்போல ஆக விரும்புகிறேன்" என்றது

அதற்குக்  கிளி, "காகமே! எனக்கு இரண்டு நிறங்களே உள்ளன.ஆனால், மயிலுக்கோ, பலநிறங்கள்.ஆகவே, நானே அழகாக மயிலாக இருக்க விரும்புகிறேன்" என்றது

உடன் காகம். மயிலிடம் சென்று, "மயிலே! நான் உங்களைப் போல ஆக விரும்புகிறேன்" என்றது.

அதற்கு, மயில், "காகமே! என்னைப் போல அழகாக இருந்தால் ஆபத்தும் உண்டு.என்னைக் கொண்டு சென்று, மிருகக் காட்சிச் சாலையில் கூண்டில் அடைத்துவிடுகிறார்கள்.எனக்குத் தெரிந்து, காகங்கள் மட்டுமே , யாருக்கும் பயப்படாமல், சுதந்திரமாக பறந்துக் கொண்டிருக்கும் பறவை இனம் ஆகும்.ஆகவே நீ நீயாகவே இரு.அதுதான் நல்லது: என்றது.

அப்பொதுதான் காகத்திற்கு, தான் மட்டுமே, அபாயமின்றி சுதந்திரமாக பறக்கக் கூடிய இனம் என்று உணர்ந்தது.

மேலும், இறைவன் படைப்பில், உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்று யாருமில்லை.எல்லோரும் சமமானவர்களே என்றும் உணர்ந்தது    

Monday, February 26, 2018

15 -முற்பகல் செய்யின்


நாம் யாருக்கேனும் தீங்கிழித்தோமாயின்..அதற்கான பலனை பின்னாளில் நாமே அனுபவிக்க வேண்டியிருக்கும்.

கர்ணன் வாழ்க்கையிலும் அப்படி நடந்தது,அதுவே இக்கதையாகும்.

முனிவர் ஒருவர் காட்டில் தியானம் செய்து கொண்டிருந்தார்.அவரது ஆசிரமத்தைச் சேர்ந்த பசுவும், கன்றும் அருகே புல்லை மேய்ந்து கொண்டிருந்த நேரத்தில், கன்றின் மீது அம்பு ஒன்று பாய்ந்தது.அக்கன்று துடிதுடித்து இறந்தது..இறக்கும் தறுவாயில் அக்கன்றின் வேதனைக் கத்தல் கேட்டு முனிவர் தியானம் கலைந்தது.

அவர், இறந்த கன்றையும், தாய்ப்பசு கண்ணீருடன் நிற்பதையும் பார்த்தார்.

அம்பு எய்தி பசுவைக் கொன்றவனைத் தேடினார். அப்போது ஒரு வீரன் கையில் வில்லுடன் அங்கு வந்தான்.அவன்தான் அம்பை எய்திருக்க வேண்டும் என முனிவர் எண்ணினார்.அவரது கோபம் அந்த வீரன் மீது சாபமாக அமைந்தது.

"சிறு கன்றின் மீது அம்பு எய்தி கொன்றவனே! உனக்கு முடிவுகாலம் வருகையில், உன் தேரில் நின்று நீ போர் புரிகையில், தேரின் சக்கரங்கள் மண்ணுக்குள் புதையும்.அந்த நேரமே உனக்கு மரண நேரமாய் அமையும் என்பதை உணர்வாயாக!" என்றார்.

அந்த வீரன் தான் கர்ணன்.

கன்றைக் கொன்ற தன் செயலால் வருந்தினான் கர்ணன்.ஆனாலும் விதியின் செயல் இது என தன்னை தேற்றிக் கொண்டான்.

அந்த முனிவர் சாபப்படியே பாரதப் போரில் கர்ணன் மரணம் நிகழ்ந்தது. .

Monday, February 19, 2018

14. நமது கடவுள்


ஒருநாள் கடவுள், ஒரு குழந்தையை பூமியில் பிறக்க வைக்கத் தயாராய் ஆனார்.

அப்போது அந்தக் குழந்தைக் கடவுளைக் கேட்டது..
"கடவுளே! என்னை பூமிக்கு அனுப்பினால், அங்கு யாருக்கும் என்னைத் தெரியாதே!"
அதற்குக் கடவுள் சொன்னார்,"கவலைப்படாதே! பூமியில் நிறைய தேவதைகள் உள்ளனர்.அவற்றில் ஒரு தேவதை  யிடம்தான் உன்னை அனுப்புகிறேன்"
"அது புதிய இடம்.யாரையும் எனக்குத் தெரியாது.அழுகை, அழுகையாக வரும்.இங்கு நீங்கள் இருக்கிறீர்கள்,நான் சந்தோஷமாக இருக்கிறேன்" என்றது
அதற்குக் கடவுள்."பயப்படாதே! பூமியில் உன்னை வரவேற்கக் காத்திருக்கும் தேவதை, உனக்காகப் பாடுவார்.உன்னிடம் அன்பாய் இருப்பார்.உன்னை எப்போதும் சந்தோஷத்தில் வைப்பார்"என்றார்.
"எனக்கு அங்கு பேசும் மொழி தெரியாதே!" என்றது குழந்தை
"அனைத்தையும் அந்தத் தேவதைக் கற்றுக் கொடுப்பார்" என்றார்.கடவுள்
"உங்களை மீண்டும் என்னால் பார்க்க முடியுமா? "என்றது குழந்தை
"என்னைப் பற்றியும்,என்னைத் தொழும் முறையையும், மீண்டும் என்னிடம் வர செய்ய வேண்டியதை அந்தத் தேவதை உனக்கு சொல்லிக் கொடுப்பார்" என்றார் கடவுள்
"சரி" என்றது குழ்ந்தை.
அப்போது அங்கு ஒரு பெரும் சப்தம் கேட்கக் கடவுள்"நீ பூமிக்கு செல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது" என்றார்.
உடன் குழ்ந்தை, "என்னை வரவேற்கப் போகும் தேவதையின் பெயரைச் சொல்ல வில்லையே" என்றது
அதற்கு க் கடவுள், "அந்த தேவதையின் பெயர் உனக்கு வேண்டாம்.ஆனால் அவரை நீ கூப்பிட வேண்டியது "அம்மா" என்று" என்றார்.
அப்போது,, பூமியில் ஒருவர் வீட்டில் குழந்தை ஒன்று பிறந்தது.


Sunday, February 18, 2018

13- மாறவேண்டியது நாமே



பலநூறு ஆண்டுகளுக்கு முன்னால், ஒரு நாட்டை ஆண்டு வந்த அரசன், தனது நாட்டைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பினான்.

கரடு முரடான சாலைகளிலும், வெயிலால் சூடேறிக் கிடந்த தெருக்களிலும் நடந்தான்.மிகவும் சிரப்பட்டான்.காலில் சூட்டினால் கொப்புளங்கள்.வலியும் அதிகமாய் இருந்தது.

சமதள சாலைகளும், தெருவின் சூட்டைக் குறைக்க தெருமுழுதும் பசுவின் தோலினால் மூடினால், அவதிப்படுவதைத் தடுக்கலாம் என்றனர் அமைச்சர்கள்.

ஆனால், நாடு முழுதும், பசுத்தோல் போர்த்துவது நடக்கும் செயலா? அதற்கு எவ்வளவு செலவாகும்.ஆயிரக் கணக்கில் பசுக்கள் இறந்தால்தானே தோலும் கிடைக்கும் என்றெல்லாம் மன்னன் நினைத்தான்.

அப்போது, மூத்த அமைச்சர் ஒருவர் , ஒரு செய்தியைக் கூறினார்,"மன்னா!நம்மால் அவ்வளவு செலவு செய்ய முடியாது.ஆனால், தெருக்களை தோலினால் மூடுவதற்குப் பதிலாக, நாம் ஏன்., அவரவர் கால்களை தோலினால் மூடிக் கொள்ளக் கூடாது.தோலும் அதற்கு சிறிதளவேப் போதுமே!"

அமைச்சரின் இந்த அறிவுரை, மன்னனுக்குப் பிடித்தது.இதுவே காலணிகள் தோன்றக் காரணமாக அமைந்தது.

இதிலிருந்து நாம் ஒரு நீதியையும் அறியலாம்.

"ஊரை மாற்ற நினைக்காமல், நம்மை மாற்றிக் கொண்டால்...ஊர் தானாக மாறும்" என்பதுதான்.

Wednesday, February 14, 2018

12- உருவம் பார்த்து எடை போடக்கூடாது


                        


உருவத்தில் சிறியவனாக இருப்பதால் அவனை ஏளனம் செய்யக்கூடாது. அவன் வேறு விடையங்களில் வல்லவனாக இருப்பான் என்பதை உண்ர்த்தும் நீதிக்கதை

ஒரு காட்டில் சிங்கம் ஒன்று வசித்து வந்தது. அது தனது பலத்தாலும், தோற்றத்தாலும், கர்ஜனையாலும் காட்டில் வசித்த அனைத்து மிருகங்களையும் பயமுறுத்தி வந்தது.
பயம் காரணமாய் அனைத்து மிருகங்களும் சிங்கத்திற்கு கிட்டச் செல்வதில்லை. சிங்கத்தைக் கண்டால் பயந்து ஓடிவிடுகின்றன.

ஆனால் 'ஈ" ஒன்று பயமின்றி சிங்கத்தின் மீது வந்து அமர்ந்தது.  அதைப் பார்த்ததும் சிங்கம் கோபமுற்று கர்ஜனை செய்தபடியே..'உன்னை என் பற்களால் கடித்துக் குதறுவேன், நகங்களால் பிறாண்டுவேன், நசுக்கிப் பொசிக்கிப் போடுவேன் என்றது.

அதற்கு ஈ யோ நீ பலசாலியாய் இருக்கலாம்..உன்னைப் பார்த்து மற்ற மிருகங்கள் பயப்படலாம். ஆனால் நான் பயப்பட மாட்டேன். இன்னும் சொல்லப்போனால்..நீ சொன்னபடி உன்னையே நீ பற்களால் கடித்துக் கொள்ளவும், நகங்களால் விறாண்டிக் கொள்ளவும் செய்வேன்" என்றது.

இதைக் கேட்ட சிங்கம் கோபத்துடன் ஏலுமாயின் முடிந்தால்அதைச் செய் என் சவால் விட..ஈ பறந்து வந்து சிங்கத்தின் முதுகில் அமர்ந்து அதைக் கடித்தது. ஈ முதுகில் அமர்ந்த போது..அதை விரட்ட சிங்கம்.தன் பற்களால் முயன்ற போது..ஈ பறந்து விட சிங்கம் தன் முதுகைத் தானே கடித்துக் கொண்டது.

ஈ சிங்கத்தின் முகத்தில் அமர்ந்த போது, அதை விரட்ட தன் கால் நகங்களால் முயல..ஈ பறக்க...சிங்கம் தன் நகங்களால் தன் முகத்தையே பிறாண்டிக் கொண்டது. இவ்வாறு பலதடவை சிங்கத்தை நன்கு இம்சை செய்து விட்டு ஈ பறந்தது. 

சிங்கத்தினால் ஈயை பிடிக்கவோ நசுக்கவோ முடியவில்லை. அதனால் சிங்கம் தன் இயலாமையை எண்ணி வெட்கப்பட்டது. 

அதன் பின்புதான் சிங்கத்திற்கு புரிந்தது..தான் உடலளவில் வீரமாய் இருந்தாலும்..ஒரு சிறு ஈ தன்னை இம்சைப் படுத்தி விட்டதே என்று. .

உருவத்தைக் கண்டு யாரையும் எடை போடக் கூடாது 

Tuesday, February 13, 2018

11- பாம்பும் கீரியும்

தேவப்பட்டினம் என்றொரு கிராமத்தில் மாரப்பன் என்றொரு குயவனும் அவன் மனைவியும் வாழ்ந்து வந்தார்கள். பல வருடங்களாகியும் அவர்களுக்குக் குழந்தை பிறக்கவில்லை.

தங்களுக்கு குழந்தை இல்லாத ஏக்கத்தைப்போக்க ஒரு கீறிப் பிள்ளையைக் குழந்தையைப் போல் வளர்த்து வந்தனர். இப்படி சிலகாலம் சென்றது. ஒரு நாள் குயவனின் மனைவி சுந்தரி கருவுற்றாள். ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தாள்.

நீண்ட கால ஏக்கத்திற்குப் பிறகு பிறந்த முதல் குழந்தை என்பதால் அக்குழந்தை வெகு செல்லமாக வளர்க்கப்பட்டது.

ஒருநாள் தண்ணீர் குடத்துடன் புறப்பட்ட சுந்தரி, கணவனிடம் “குழந்தை தூங்குகிறது. அருகிலேயே இருந்து பார்த்துக் கொள்ளுங்கள், கீரி கடித்துவிடப் போகிறது”, என்று கூறிவிட்டுக் குளக்கரைக்குச் சென்றாள்.

குழந்தையின் அருகிலேயே அமர்ந்து கொண்டிருந்த குயவனுக்கு திடீர் தாகம் உண்டாயிற்று. அவன் தண்ணீர் அருந்த சமையலறைக்குள் சென்றான்.

அந்த நேரம் பார்த்து ஒரு கரு நாகம் எங்கிருந்தோ வந்து குழந்தையின் தொட்டிலின்மேல் ஏற ஆரம்பித்தது. கீரி அதைப் பார்த்து விட்டது. அடுத்த வினாடி கீரி அப்பாம்பைத் துண்டு துண்டாகக் கடித்துக் குதறிவிட்டது.

அத்துடன் தன் எஜமானியின் வரவு நோக்கி தெரு வாசலருகில் நின்றும் கொண்டது.

தண்ணீர் குடத்துடன் வந்த சுந்தரி கீரியின் வாயெல்லாம் இரத்தமாக இருந்ததைப் பார்த்து பதறிப்போனாள்.

அவள் கீரிப்பிள்ளை தன் குழந்தையைக் கடித்து விட்டது. அதனால் தான் அதன் வாயில் ரத்தம் சொட்ட நிற்கிறது என்று தவறாகப் புரிந்து கொண்டாள்.

நிலைமையைத் தீர ஆராயாமல் "அய்யோ! நம் குழந்தையை கீரிப்பிள்ளை கடித்து விட்டதே என்று ஆத்திரம் கொண்டு அடங்காக் கோபத்தோடு அக்கீரியின் மேல் நீர்க்குடத்தை தூக்கிப் போட்டாள்.

கீரிப்பிள்ளை அதே இடத்தில் வலி தாங்காமல் செத்தது. சுந்தரி தன் குழந்தைக்கு என்ன ஆயிற்றோ என்ற பதற்றத்தில் உள்ளே ஓடினாள். குழந்தை தொட்டிலில் அப்படியே உறங்கிக் கொண்டுதான் இருந்தது.

பிறகு என்ன நடந்திருக்கும் என்று சுற்றும் முற்றும் பார்த்த அவளுக்கு ஒரே அதிர்ச்சி. தரையில் பாம்பின் உடல் பல துண்டுகளாக சிதறி இருந்தன. அவளுக்கு உண்மை புரிய ஆரம்பித்தது.

"அடடா பாம்பைக் கொன்ற இரத்த்தத்துடன் இருந்த கீரிப்பிள்ளையைப் பார்த்துக் குழந்தையைத்தான் கடித்து விட்டதோ என்று தவறாக எண்ணி விட்டேனே. அருமையாக வளர்த்த கீரியைக் அவசரப்பட்டுக் கொன்று விட்டேனே!" என்று கண்ணீர் விட்டுக் கதறத் துவங்கினாள்.

க்ஷனநேரத்தில் நடந்து முடிந்து விட்ட இந்த நிகழ்ச்சிகளை உள்வாங்கிக்கொண்ட குயவன் தனது மனைவியை சமாதானப்படுத்தினான்.

 எந்தப் பிரச்சனையையும் தீர ஆராயாமல் அவசர புத்தியால் முடிவெடுத்தால் அது தவறாகிவிடும்