Tuesday, February 13, 2018

11- பாம்பும் கீரியும்

தேவப்பட்டினம் என்றொரு கிராமத்தில் மாரப்பன் என்றொரு குயவனும் அவன் மனைவியும் வாழ்ந்து வந்தார்கள். பல வருடங்களாகியும் அவர்களுக்குக் குழந்தை பிறக்கவில்லை.

தங்களுக்கு குழந்தை இல்லாத ஏக்கத்தைப்போக்க ஒரு கீறிப் பிள்ளையைக் குழந்தையைப் போல் வளர்த்து வந்தனர். இப்படி சிலகாலம் சென்றது. ஒரு நாள் குயவனின் மனைவி சுந்தரி கருவுற்றாள். ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தாள்.

நீண்ட கால ஏக்கத்திற்குப் பிறகு பிறந்த முதல் குழந்தை என்பதால் அக்குழந்தை வெகு செல்லமாக வளர்க்கப்பட்டது.

ஒருநாள் தண்ணீர் குடத்துடன் புறப்பட்ட சுந்தரி, கணவனிடம் “குழந்தை தூங்குகிறது. அருகிலேயே இருந்து பார்த்துக் கொள்ளுங்கள், கீரி கடித்துவிடப் போகிறது”, என்று கூறிவிட்டுக் குளக்கரைக்குச் சென்றாள்.

குழந்தையின் அருகிலேயே அமர்ந்து கொண்டிருந்த குயவனுக்கு திடீர் தாகம் உண்டாயிற்று. அவன் தண்ணீர் அருந்த சமையலறைக்குள் சென்றான்.

அந்த நேரம் பார்த்து ஒரு கரு நாகம் எங்கிருந்தோ வந்து குழந்தையின் தொட்டிலின்மேல் ஏற ஆரம்பித்தது. கீரி அதைப் பார்த்து விட்டது. அடுத்த வினாடி கீரி அப்பாம்பைத் துண்டு துண்டாகக் கடித்துக் குதறிவிட்டது.

அத்துடன் தன் எஜமானியின் வரவு நோக்கி தெரு வாசலருகில் நின்றும் கொண்டது.

தண்ணீர் குடத்துடன் வந்த சுந்தரி கீரியின் வாயெல்லாம் இரத்தமாக இருந்ததைப் பார்த்து பதறிப்போனாள்.

அவள் கீரிப்பிள்ளை தன் குழந்தையைக் கடித்து விட்டது. அதனால் தான் அதன் வாயில் ரத்தம் சொட்ட நிற்கிறது என்று தவறாகப் புரிந்து கொண்டாள்.

நிலைமையைத் தீர ஆராயாமல் "அய்யோ! நம் குழந்தையை கீரிப்பிள்ளை கடித்து விட்டதே என்று ஆத்திரம் கொண்டு அடங்காக் கோபத்தோடு அக்கீரியின் மேல் நீர்க்குடத்தை தூக்கிப் போட்டாள்.

கீரிப்பிள்ளை அதே இடத்தில் வலி தாங்காமல் செத்தது. சுந்தரி தன் குழந்தைக்கு என்ன ஆயிற்றோ என்ற பதற்றத்தில் உள்ளே ஓடினாள். குழந்தை தொட்டிலில் அப்படியே உறங்கிக் கொண்டுதான் இருந்தது.

பிறகு என்ன நடந்திருக்கும் என்று சுற்றும் முற்றும் பார்த்த அவளுக்கு ஒரே அதிர்ச்சி. தரையில் பாம்பின் உடல் பல துண்டுகளாக சிதறி இருந்தன. அவளுக்கு உண்மை புரிய ஆரம்பித்தது.

"அடடா பாம்பைக் கொன்ற இரத்த்தத்துடன் இருந்த கீரிப்பிள்ளையைப் பார்த்துக் குழந்தையைத்தான் கடித்து விட்டதோ என்று தவறாக எண்ணி விட்டேனே. அருமையாக வளர்த்த கீரியைக் அவசரப்பட்டுக் கொன்று விட்டேனே!" என்று கண்ணீர் விட்டுக் கதறத் துவங்கினாள்.

க்ஷனநேரத்தில் நடந்து முடிந்து விட்ட இந்த நிகழ்ச்சிகளை உள்வாங்கிக்கொண்ட குயவன் தனது மனைவியை சமாதானப்படுத்தினான்.

 எந்தப் பிரச்சனையையும் தீர ஆராயாமல் அவசர புத்தியால் முடிவெடுத்தால் அது தவறாகிவிடும்

Monday, February 12, 2018

10- பிறவிக்குணம்




ஒரு காட்டிற்குள், அமைதியாக, அழகான நதி ஒன்று ஓடிக் கொண்டிருந்தது.

அந்நதியில், எப்போதும் அன்னப்பறவைகள் நீந்தி விளையாடி வந்தன.நதிக்கரையில், சில காகங்கள் வசித்து வந்தன.

அந்த காகங்கள் இறந்த சில பறவைகளை கொத்தித் தின்று வாழ்ந்து வந்தன.

ஒரு காகத்திற்கு, அன்னப்பறவை ஒன்றின் நட்புக் கிடைத்தது.

நல்லதையும், தீயவனவற்றையும் பிரித்துப் பார்ப்பதில் அன்னப்பறவை பெயர்ப் பெற்றது.

அன்னப்பறவை காகத்தினிடம் "நண்பா! நீயும் எங்களைப் போல,நல்லதை மட்டுமே பிரித்து உண்.ஏன் இறந்து அழுகிக் கிடக்கும் பறவைகளை உண்ணுகிறாய்?" என்றது.

காகமும், அன்னப்பறவை சொன்னதில் உள்ள நன்மையை உணர்ந்து, 'இனி அப்படியே நடப்பதாக உறுதி அளித்தது"

அந்த சமயத்தில்..எங்கிருந்தோ அழுகிய நாற்றம் வர . அந்த நாற்றத்தினால் ஈர்க்கப்பட்ட காகம் அங்கு பறந்து சென்று பார்த்தது.

ஒரு எலி ஒன்று அழுகிய நிலையில் செத்துக் கிடந்தது.

உடனே, தான் நண்பன் அன்னப்பறவைக்கு அளித்திருந்த உறுதி மொழியை மறந்து, எலியைக் கொத்தி உண்ண ஆரம்பித்தது.

அதைப் பார்த்த அன்னம், சிலரது பிறவிக் குணத்தை மாற்ற முடியாது என்று உணர்ந்தது..

Sunday, February 11, 2018

9-நன்றி மறப்பது நன்றன்று


ஒரு காட்டில், சிங்கம் ஒன்றை உயிருடன் பிடிக்க எண்ணிய சிலர், ஒரு கூண்டினைத் தயாரித்து அதில் ஒரு ஆட்டுக் குட்டியை கட்டி வைத்திருந்தனர்
ஆட்டிற்கு ஆசைப்பட்டு ,சிங்கம் கூட்டினுள் அகப்பட்டுக் கொள்ளும் என்ற எண்ணத்தில்.

ஒரு சிங்கமும், அதுபோலவே கூண்டினுள் மாட்டிக் கொண்டது

அப்போது ,அவ்வழியாக ஒரு விறகுவெட்டி வந்தான்.சிங்கம் அவனிடம்,"மனிதா! என்னை விடுவித்து விடு.நான் உன்னை ஒன்றும் செய்ய மாட்டேன்" என்றது

மனிதர்களை அடித்துக் கொல்பவன் நீ.உன்னை நான் எப்படி நம்புவது?" என்றான் விறகுவெட்டி

'நான் மனிதர்களை அடித்துக் கொல்பவன் தான்.அதற்காக..என்னை காப்பாற்றியவனை நான் அப்படிச் செய்வேனா? நன்றி மறப்பவன் அல்ல நான்" என்றது

சிங்கத்தின்பேச்சினை நம்பிய விறகுவெட்டி, கூண்டினைத் திறந்து சிங்கத்தை விடுவித்தான்.

வெளியே வந்த சிங்கம் ,விறகுவெட்டி மீது பாயத் தயாரானது.

உடன் விறகுவெட்டி, "சிங்கமே! உன்னை விடுவித்த எனக்கு நீ காட்டும் நன்றி இதுதானா?" என்றான்

"மனிதனை அடித்துக் கொல்பவன் நான்.என் உயிரைக் காப்பாற்றுக் கொள்ள பொய் சொன்னேன்.நீ மனிதன்.உன் அறிவைப் பயன் படுத்தி, ஒருவருக்கு உதவும் முன், அது நல்லதா?கெட்டதா? என்பதை உணர வேண்டாமா" என்றது.

அப்போது அவ்வழியாக நரி ஒன்று வந்தது.

"நாம் நரியிடம் நியாயம் கேட்போம்" என்றான் விறகுவெட்டி.

மனிதனை அடித்துத் தின்று விட்டு,  நரியையும் கொன்று உண்ணலாம் என்ற ஆசையில், சிங்கம் அதற்கு சம்மதித்தது.

சிங்கத்தின் நன்றி கெட்ட செயலை அறிந்த நரி, விறகுவெட்டியை காப்பாற்ற எண்ணியது

அதனால், சிங்கத்திடம் ,"நீங்கள் எந்த கூண்டில் அடைபட்டு இருந்தீர்கள்?" என்றது.

சிங்கம் கூண்டினைக் காட்டியது.

"எப்படி அடைபட்டுக் கிடந்தீர்கள்?" என்றது நரி.

"இப்படித்தான்" என்று கூறியபடியே, சிங்கம் கூண்டினுள் சென்றது.உடன் நரி, கூண்டினை இழுத்து மூடியது.

இப்போது, சிங்கம் மீண்டும் கூண்டினுள்.

நரியைப் பார்த்து சிங்கம், "நரியே! நீ செய்தது நியாயமா?" என்றது

"உதவி செய்த மனிதனை, நீ அடித்துக் கொல்வது நியாயமானால், நான் செய்ததும் நியாயம்தான்"என்ற நரி, விறகுவெட்டியைப் பார்த்து,"ஒருவருக்கு உதவும்முன், அந்த உதவிக்கு அவன் தகுதியானவனா? என யோசித்து செய்ய வேண்டும்" என அறிவுரை கூறியது.

நாமும் ஒருவர் செய்த உதவியை மறந்து நடந்தோமானால், தீங்கு விளையும் என்று உணர வேண்டும்.

நன்றி மறப்பது நன்றன்று 

Saturday, February 10, 2018

8 -உழைப்பே உயர்வு தரும்



சரவணனும், கந்தனும் நண்பர்கள்.
சரவணன் எல்லோரிடமும் இரக்கக் குணம் கொண்டவன்.கந்தனோ, யார்..யாருக்கு இரக்கம் காட்ட வேண்டும் என்பதை அறிந்தவன்

ஒருநாள், வாலிப வயது பிச்சைக்காரன் ஒருவன் அவர்களிடம் வந்து , தனக்கு பசிப்பதாகக் கூறி பிச்சைக் கேட்டான்.கந்தன் அவனிடம், "உனக்கு இளம் வயது.ஏன் பிச்சை எடுக்கிறாய்? ஏதேனும் வேலை செய்து பிழைக்கலாமே!' என திட்டி அனுப்பி விட்டான்.

ஆனால், சரவணனோ அவனைக் கூப்பிட்டு, சிறிது பணம் தந்து அனுப்பினான்

அடுத்தநாளும் இப்படியே நடந்தது

மூன்றாம் நாள், அவன் வந்த போது, கந்தன் அவனை தர தர  என இழுத்துக் கொண்டு ஒரு நதிக்கரைக்கு வந்தான்.அவனிடம் ஒரு தூண்டிலைக் கொடுத்து, "இனி நீ இந்தத் தூண்டில் மூலம் மீன் பிடித்து, அதை விற்று, உழைத்து உண்ண வேண்டும்." என்று கோபத்துடன் கூறிச் சென்றான்.

பிறகு அவர்கள் அந்தப் பிச்சைக்காரனப் பார்க்கவேயில்லை.

சில வருடங்கள் ஓடின..

ஒருநாள் பணக்கரர் ஒருவர் கந்தனையும், சரவணனையும் பார்க்க வந்தார்.

அவர் யார் ?என அவர்களூக்குத் தெரியவில்லை.

அவரே சொன்னார்"ஐயா''நீங்கள் தூண்டில் கொடுத்து உழைத்துப் பிழைக்கச் சொன்னீர்களே! அந்தப் பிச்சைக்காரன் நான்.அன்றுமுதல் உழைத்தேன்.பணக்காரன் ஆனேன்.உழைப்புத்தான் உயர்வு தரும் என உணர்ந்தேன்.
அதற்கு உங்களுக்கு நன்றி என்றதுடன் கந்தனுக்கும் சரவணனுக்கும் சில பரிசுகள் கொடுத்துவிட்டுச் சென்றார்.

இதிலிருந்து சோம்பித் திரிபவர்கள் வாழ்வில் முன்னேற முடியாது.உழைப்பே உயர்வு தரும் என உணருவோமாக

Friday, February 9, 2018

7 - விட்டுக் கொடுக்கும் மனம்


அந்த ஊரின் நடுவே ஆறு ஒன்று ஓடிக் கொண்டிருந்தது.
ஆற்றைக் கடக்க ஒரு பாலம் ஒன்றிருந்தது.அது மிகவும் குறுகிய பாலம்.ஒருவர் போனால் , ஒருவர் வர முடியாத அளவிற்குக் குறுகியது,

ஒருநாள் பாலத்தின் ஒருமுனையிலிருந்து ஆடு ஒன்று பாலத்தைக் கடக்க எண்ணி பாலத்தில் நடக்க ஆரம்பித்தது

அதே நேரத்தில்,எதிர்முனையில் இருந்தும்,ஆற்றினைக் கடக்க பாலத்தில் ஒரு ஆடு வர ஆரம்பித்தது.

இரு ஆடுகளும், நடு பாலத்தில் சந்தித்தன

முதல் ஆடு, "வழி விடு.நான் தான் முதலில் கடக்க ஆரம்பித்தேன்"என்றது

எதிர் முனையில் இருந்து வந்த மற்ற ஆடோ, "முடியாது.நான் தான் முதலில் கடக்க ஆரம்பித்தேன்..நீ வழிவிடு" என்றது.

இரண்டு ஆடுகளும். ஒன்றுக்கொன்று விட்டுக் கொடுக்காமல் ..நடுப்பாலத்தில் சண்டையிட்டுக் கொண்டிருந்தன.
 ஒருகட்டத்தில், ஒன்றை ஒன்று முட்டிக் கொண்டு, கால்கள்  தடுமாற, பாலத்திலிருந்து ஆற்றில் விழுந்தன.இரு ஆடுகளையும் ஆறு அடித்துச் சென்றது.

ஒன்றுக்கொன்று விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இல்லாததால் தங்கள் உயிரை இழந்தன.

வாழ்விலும், நாம் விட்டுக் கொடுக்கும் மனப்பாங்கினைக் கொண்டால், வாழ்வு சிறப்பாக அமையும்.

Thursday, February 8, 2018

6 - நட்பின் பெருமை


ராமனும், குமரனும்  நண்பர்கள்.
இருவரும் ஒரே பள்ளியில், ஒரே பிரிவில் நான் காம் வகுப்பு படித்து வந்தனர்
ராமன், காலையில் விரைவில் எழுந்து, காலைக்கடன்களை முடித்து, குளித்து முடித்து, சிறிது நேரம் பள்ளிப் பாடங்களைப் படித்துவிட்டு, காலை உணவை அருந்திவிட்டு பள்ளி செல்வது வழக்கம்

ஆனால், குமரனோ ,நேர் எதிர்.
தாமதமாகத் தான் தினமும் எழுவான்.அவசர அவசரமாகக் காலைக் கடன்களை முடித்து, அரை குறையாகக் குளித்ததாகப் பெயர் பண்ணிவிட்டு, உணவை அள்ளி அள்ளி வாயில் போட்டுக் கொண்டு பள்ளிக்கு ஓடுவான்

ஒருநாள் குமரன், மிகவும் தாமதமாக எழுந்தான்.பள்ளிக்கோ நேரம் ஆகிறது.அவசர அவசரமாகக் காலைக் கடன்களை முடித்து பள்ளிக்கு விரைந்தான்

முதல் பீரியட் முடிந்ததும்...பொறுக்க முடியாத்தால் அவன் கால்சட்டை நனைந்தது.

அதைப்பார்த்த ராமன் உடனடியாக தன்னிடமிருந்த தண்ணீர்
பாட்டிலைத் திறந்து..ஏதேச்சையாகத் தண்ணீர் கொட்டுவது போல குமரனின் கால்சட்டையில் தண்ணீரைக் கொட்டினான்
மற்ற மாணவர்கள் பார்த்த போது, தான் தவறி தண்ணீரைக் கொட்டிவிட்டதாகக் குறி குமரனிடம் மன்னிப்புக் கேட்டான்.

மாலையில், பள்ளி முடிந்ததும், குமரன் , ராமனிடம் வந்து "ராமா..என் கால்சட்டை நனைந்ததை நீ பார்த்துவிட்டாய்.மற்றவர்கள் பார்த்து..என்னைக் கேலி செய்யப் போகிறார்களே என்று உடனே தண்ணீரைக் கொட்டி, தண்ணீரினால் என் கால்சட்டை நனைந்தது போல செய்து விட்டாய்.உன் இந்த உதவியை மறக்க மாட்டேன்" என்றான்.

ராமனும் குமரனைப் பார்த்து, "குமரா! இதற்கான காரணம் என்ன தெரியுமா? நீ தினமும் தாமதமாக எழுவதால்...உன்னால் எந்த ஒரு வேலையையும் ஒழுங்காகச் செய்ய இயலவில்லை.நீயும் என்னைப் போல சீக்கிரம் எழுந்தால், ஆரவாரமில்லாது எல்லா வேலைகளையும் செய்யலாம் இல்லையா?" என்றான்.

குமரனும், தன் தவறினை உணர்ந்து, அடுத்த நாள் முதல் ராமனை பின் பற்ற ஆரம்பித்தான்.

இப்போது, அவர்கள் வகுப்பில் முதல் மாணவர்கள் அவர்களே ஆகும்.



Wednesday, February 7, 2018

5 - முட்டாள் தோழன்


நரியூர் என்ற ஊரில் அரசன் ஒருவன் அரசாண்டு வந்தான்.அவனுக்கு ஒருவர் ஒரு நாள் குரங்கு ஒன்றை பரிசாக அளித்தார்.

அந்த குரங்கும், அரசனிடம் மிகவும் பாசமாய் இருந்தது.
அரசர் உலாவச் செல்லும் போதெல்லாம், குரங்கையும் உடன் கூட்டிச் செல்வார்

ஒருநாள், அப்படிச் செல்லும் போது, முட்புதர் ஒன்றில் இருந்த பாம்பு ஒன்று அரசரைக்  கடிக்க இருந்தது.அதைக் கண்ட குரங்கு, அந்தப் பாம்புடன் சண்டையிட்டு அதைக் கொன்றது.
மன்னனுக்கோ மகிழ்ச்சி.குரங்கு, தன் உயிரைக் காத்தது என அனைத்து மந்திரிகளிடமும் சொல்லி, குரங்கின் விசுவாசத்தைப் போற்றினான்.
தவிர்த்து, அன்று முதல் குரங்கை தன் பாதுகாவலராக அமர்த்தினான்.

அமைச்சர்கள் அனைவரும் அரசனிடம்' அரசே! என்ன இருந்தாலும் குரங்கு ஒரு விலங்கு, அதற்கு பகுத்தறிவோ,முடிவெடுக்கும் திறனோ இருக்காது" என்றனர்.
ஆனால் , அரசனோ, "குரங்கிற்கு, பாசமும், விசுவாசமும் உள்ளது.அது போதும்" என்றான்.
அன்றுமுதல் குரங்கு அரசனின் பாதுகாவலன் ஆகியது.

ஒருநாள், அரசனுக்கு தூக்கம் வந்தது,மிகவும் சோர்வுடன் காணப்பட்ட அவன், குரங்கினிடம், "நான் தூங்கப் போகிறேன்.யாரும் தொந்தரவு செய்யாமல் பார்த்துக் கொள்" என்று கூறிவிட்டு தூங்கச் சென்றார்.

அரசன் தூங்க ஆரம்பித்ததும், ஈ ஒன்று பறந்து வந்து ராஜாவின் மூக்கின் மீது அமர்ந்தது.அதை விரட்டி அடித்த குரங்கு, "மன்னன் தூங்குகிறார்.அவரை இம்சித்தால் கொன்றுவிடுவேன் உன்னை" என ஈயை எச்சரித்தது.
அதை பொருட்படுத்தாத ஈ, இம்முறை அரசனின் கழுத்தில் அமர்ந்தது.

தூங்கும் அரசனை இம்சிக்கும் ஈ மீது கோபம் கொண்ட குரங்கு, அரசனின் வாளை எடுத்து, அவரது கழுத்தில் அமர்ந்திருந்த ஈ ம் மீது ஒரே போடாக போட்டது.
வாள், மன்னனின் கழுத்தில் பாய்ந்து மன்னன் உயிர் நீத்தான்.

முட்டாளை பாதுகாவலனாக அமர்த்தியதால் மன்னன் உயிரிழக்க நேரிட்டது.

ஆகவே, குழந்தைகளே! நாமும் முட்டாள்களை நண்பனாகக் கொள்ளக் கூடாது