Thursday, October 20, 2016

158. வியாபாரிக்கு தண்டனை

ஒரு வியாபாரி நெய்யில் கலப்படம் செய்து விற்று வந்தான்.மக்கள் புகார் அளித்தனர். அவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிபதி முன்னர் நிறுத்தப்பட்டான்.

நீதிபதி வழங்கிய தண்டனை:

1.அவன் விற்கும் நெய் முழுவதும் அவனே குடிக்கவேண்டும்.
       அல்லது
2.100 கசையடி
       அல்லது
3. 100 பவுன் அபராதம்

இவற்றில் அவன் விருப்பமான தண்டனையை ஏற்கவும் என்றார் நீதிபதி.

முதலில் அவன் நெய் குடிக்கவே விரும்பினான்.ஆனால் நாற்றம் வீசும் நெய்யை அவனால் குடிக்க முடியவில்லை.

சரி என கசையடிக்கு தயார் என்றான். ஆனால் இருபது கசையடிக்கு மேல் அவனால் தாங்க முடியவில்லை.

அதனால் அபராதம் செலுத்திவிட்டு போவதாக கூறினான் நீதிபதியும் ஒப்புக்கொள்ள அபராதம் செலுத்திவிட்டு வெளியே வந்தான்.

முதலிலே அவன் தன் தவற்றை உணர்ந்து மன்னிப்பு கேட்டு அபராதத்துடன்  வெளியே வந்திருக்கலாம்.

நம்மில் பலரும் அப்படித்தான்.துன்பம் வரும்போது முதலிலே கடவுளை வேண்டி பயன்பெறாது....கடைசியில் இறைவனிடம் சரணடைகிறோம்.

ஆண்டவை என்றும் நம்புவோமாக.

Tuesday, June 14, 2016

157 -ஸ்ரீ ராமகிருஷ்ணர் அருளிய கதைகள்

6  மனதை ஒருமுகப்படுத்து.

பாண்டவர்களும் கௌரவர்களும் துரோணரிடம் வில்வித்தை கற்கத்தொடங்கினர்.

ஒரு நாள்....

அர்ச்சுனன் கையில் வில்லைக்கொடுத்து சற்றுத்தொலைவில் இருந்த பறவையை நோக்கி  அம்பு எய்தச்சொன்னார் துரோணர்.

' அர்ஜுனா...உன் கண்ணுக்கு என்ன தெரிகிறது பக்கத்திலுள்ள சகோதரர்கள் தெரிகிறார்களா?' என்றார்.

'இல்லை' என்றார் அர்ஜுனன்.

'நான் தெரிகிறேனா'

'இல்லை'

'மரத்தை பார்க்கிறாயா'

'இல்லை'

'மரத்தின் மீதுள்ள பறவையை பார்க்கிறாயா'

'இல்லை'

'வேறு என்ன பார்க்கிறாய்'

'பறவையின் கண்ணை மட்டும் பார்க்கிறேன்'

இப்படி செய்ததால் தான் பறவையின் மீது சரியாக அம்பெய்த முடிந்தது அர்ச்சுனனால்.

நாமும் நாம் அடைய எண்ணும் இலக்கை மட்டுமே பார்க்கவேண்டும்.மற்றவற்றை தவிர்த்திடவேண்டும். யார் தன் கண்ணையும் கருத்தையும் இலக்கில் வைக்கிறானோ அவனே வெற்றியடைவான்.

'


Thursday, June 2, 2016

156.ஸ்ரீ ராமகிருஷ்ணர் அருளிய கதைகள்

5. ' பற்றற்றான் பற்று '


நடுத்தர வயது கணவன், மனைவி  அவர்கள்.
உலக வாழ்க்கையை வெறுத்து துறவு பூண்டனர். இறைவனை தரிசிக்கும் நோக்கத்துடன் பல புண்ணியத்தலங்களுக்கு சென்று வந்தனர்,

ஒரு நாள்,அவர்கள் நடந்து செல்லும்போது,மனைவி சற்று பின்னாக வந்து கொண்டிருந்தாள். முன்னால் சென்றுகொண்டிருந்த கணவனின் கால்களில்எதுவோ இடறியது.குனிந்து பார்த்தவன்  அது ஒரு வைரக்கல் என்பதை உணர்ந்தான்.அதைக்கண்டால் தன் மனைவிக்கு உலகப்பற்று ஏற்பட்டுவிடும் என்று ஐயம் கொண்டான்.ஆகவே,மனைவி வருவதற்கு முன்,அந்த வைரக்கல்லை  அவளது பார்வை படாது மறைக்க முயன்றான்.

ஆனால் மனைவிக்கு கணவன் எதையோ மறைக்க முயன்றது புரிந்துவிட்டது. அவனது மூடிய கையை பிரித்தாள்.அதில் வைரம் இருந்ததையும்,கணவன் மறைக்க முயன்ற நோக்கத்தையும் அறிந்தாள்.

கணவனைப் பார்த்து, ' வைரத்துக்கும், கூழாங்கல்லுக்கும் வேறுபாடு காண்பவன் எப்படித் துறவியாய் இருக்க முடியும்? என்று கேட்டாள்.

கணவன் வெட்கி தலை குனிந்தான்.ஆசை அதிகம் உள்ளவர்களுக்கு எல்லாவற்றிலும் விருப்பம்.ஆனால் இறைவன் மீது பற்று வைத்தவர்களோ,இறைவனை மட்டுமே மனதில் தேக்கிக் கொள்கிறார்கள்.மற்றவற்றின் மீதிருந்த நாட்டத்தை விடுகிறார்கள்.

Friday, April 8, 2016

155. ஸ்ரீ ராமகிருஷ்ணர் அருளிய கதைகள்



4.' ஆண்டவன் மீது நம்பிக்கை "

ஆற்றுக்கு மறுகரையில் வசித்து வந்த சன்னியாசி ஒருவருக்கு தினந்தோறும் படகில் பால் கொண்டு வந்து தருவாள் ஒரு பெண்,

ஒரு சமயம் படகு வர தாமதமானதால் குறித்த நேரத்தில் பால் கொண்டு வந்து தர முடியவில்லை.

இதனால் கோபமடைந்த சன்னியாசி,தாமதத்திற்கான காரணத்தைக் கேட்க.அந்தப் பெண்ணும் படகு கிடைக்காததைக் கூறினாள்.

உடன் சன்னியாசி ' ஆண்டவன் பெயரைச் சொன்னால் பிறவிப் பெருங்கடலையே கடக்கலாம், உன்னால் இந்த ஆற்றைக்கூட கடக்க முடியவில்லையே' என்றார்.

சன்னியாசி சொன்னதைக்கேட்ட அந்தப் பெண்..... தினமும் ஆண்டவன் பெயரை உச்சரித்தபடியே ஆற்றினைக் கடந்து வந்து பால் எடுத்து சென்று கொண்டிருந்தாள்.

தினசரி சரியான நேரத்துக்கு அவள் வருவதைக் கண்ட சன்னியாசி ' நீ எப்படி ஆற்றைக் கடக்கிறாய் ' என்றார்,

பகவான் நாமத்தை உச்சரித்தப்படியே ஆற்றில் நடந்து வருவேன்  என்றாள்.

"அப்படியா" என ஆச்சரியத்துடன் கேட்டவர் அதை தனக்கு காண்பிக்குமாறு கூறினார்.

' பால்காரப்பெண் ஆண்டவன் பெயரை கூறியபடியே ஆற்றில் நடக்க ஆரம்பித்தாள்'.

வியந்த குருவால் ..அவளைப்போல ஆற்றில் நடக்க முடியவில்லை.தனது ஆடை நனைந்துவிடுமே என்ற பயம்.

ஆண்டவனை நம்புகிறவர் .... துணி நனையுமே என ஏன் பயப்படுகிறீர்கள் என்றாள் பெண்.

அப்பொழுதுதான் சன்னியாசிக்கு ஆண்டவன் மீது தான் முழு நம்பிக்கை வைக்கவில்லை எனத் தெரிந்தது.

ஆண்டவனிடம் நாம் வைக்கும் நம்பிக்கை நம்மை ஆச்சிரியங்களை செய்ய வைக்கும் என உணர்ந்தார்.

நாமும் கடவுளை வேண்டிக்கொண்டால் மட்டும் போதாது கடவுளிடம் முழு நம்பிக்கையை வைக்கவேண்டும்.

Sunday, March 20, 2016

154. ஸ்ரீ ராமகிருஷ்ணர் அருளிய கதைகள்



3. இராமபிரானும், தவளையும்

இராமபிரான் வனவாசத்தில் இருந்தபோது காட்டின் வழியாகப் போய்க் கொண்டிருந்தார்.ஒரு நாள் தன் வில்லையும் அம்பையும் தரையில் நட்டுவிட்டுப் பம்பை என்னும் குளத்தில் நீர் பருகுவதற்காக இறங்கினார்.

நீரை அருந்திவிட்டு..மீண்டும் கரையேறி வந்து தனது அம்பையும் வில்லையும் எடுக்கும் சமயத்தில் தமது வில் ஒரு தவளையைத் துளைத்திருப்பதைக் கண்டார். தவளையின் உடல் முழுவதும் ரத்தம். இதைக் கண்ட ராமர் மனம் வருந்தி ...தவளையிடம்,

" ஏ தவளையே! நான் வில்லை வைக்கும் சமயம் நீ சப்தம் செய்திருந்தால்..... உன்னை நான் காப்பாற்றியிருப்பேனே! உனக்கு இந்த கதி வந்திருக்காதே!" என்றார்.

அதற்கு தவளை ," பெருமானே " எனக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால்....உன்னை சரணடைவேன் ,,ஆனால் அந்த ஆபத்து உன்னாலேயே வந்தால் என்னால் என்ன செய்யமுடியும்? யாரிடம் முறையிடமுடியும்" என்றது..

இதனால் நாம் அறியும் நீதி என்ன வெனில் ..." நீதி வழங்குபவரே அநீதியை இழைத்தால்...நீதி கிடைக்க வேறு வழியில்லை...எனவே நீதிமான்கள் தவறு ஏதும் இழைக்கக்கூடாது என்பதாம்.

Thursday, February 18, 2016

153. ஸ்ரீ ராமகிருஷ்ணர் அருளிய கதைகள்



2 .ஒன்றே கடவுள்

ஒரு ஊரில்,துணிகளுக்கு சாயம் பூசும் ஒருவன் இருந்தான்.

அவனிடம் பாத்திரம் நிறைய வண்ணக்கலவை இருந்தது.அந்த ஊர் மக்கள் தங்கள் ஆடைக்கு எந்த நிறம் கேட்டு வருகின்றார்களோ,அந்த வண்ணப்பாத்திரத்தில்
தோய்த்தெடுத்து அவர்கள் கேட்கும் நிறத்தைக்கொ டுத்து அனுப்புவான்.

ஒரு முறை ஒருவன் வந்தான்.' என் துணிக்கு என்ன நிறம் வேண்டும் எனக் கேட்கத் தெரியவில்லை.தங்கள் பாத்திரத்தில் என்ன நிறம் வைத்திருக்கிறீர்களோ அந்த நிறத்தைத் தோய்த்து தாருங்கள் என்றான்.

அந்த சாயக்காரனைப் போலத்தான் பரம்பொருளும்.

சாயக்காரனிடம் நாம் எந்த சாயத்தைக் கேட்டாலும் அதையே அவன் மக்களுக்கு தருவது போல், பரம்பொருளிடம் தத்தம் தேவைகளை எவ்வெவ்வாறு கேட்கிறாரோ
அவ்வவ்வாறே அவர்களுக்கு உதவுகின்றார்.
 அவருக்கு பாரபட்சம் கிடையாது. சாயப்பாத்திரம் போல கடவுள் ஒருவரே ஆவார்.

அவர் பல வழிகளிலும்,பல நிறங்களிலும்.பல வடிவங்களிலும் மாறி மாறி அருள்  பொழிகின்றார்.

Saturday, January 23, 2016

152. ஸ்ரீ ராமகிருஷ்ணர் அருளிய கதைகள்





1. கடவுளே சொந்தம்

      ஒரு குரு ...தனது சீடனுக்கு, ஆன்மீக வாழ்க்கையின் பெருமையையும்,உலக மக்களின் போக்கையும் பற்றிக் கூறினார்.நீண்ட நேர உரையாடலுக்குப் பிறகு....'கடவுள் ஒருவரே அனைவருக்கும் சொந்தமானவர்' என்றார்.

      குருவோ சன்னியாசி...சீடனுக்கோ மனைவி,மகன்,மகள் எல்லாம் உண்டு.அதனால் அவன் குருவின் வார்த்தைகளை நம்பவில்லை.தான்,தன் மனைவி,மக்களுக்கு உழைப்பதைப் பார்த்து....தன் குடும்பத்தில் உள்ளவர்கள்,தனக்கு உதவாமலா போய்விடுவார்கள் என்ற சிந்தனையில் குரு சொன்னவற்றை அவன் மறுத்தான்..
 
      சீடன், குருவிடம்,' என் தாய். என்  மனைவி., என் மக்கள்,என் உறவினர்கள் எல்லோரும் என் மீது அளவற்ற பாசம் வைத்துள்ளார்கள். நான் இல்லாவிடில் அவர்கள் உலகே இருண்டுவிடும் என்று எண்ணுவார்கள்.எனக்குதலைவலி வந்தாலும் பொறுக்க மாட்டர்கள். அப்படியிருக்கையில் என்னை அவர்கள் ஒதுக்கியா விடுவார்கள்' என்றான்,

      உடன் குரு,' நாம் யாரையும் நம்பி விடக்கூடாது.எல்லோருடைய அன்பும் பொய்யானது.யாரும் யாருக்காகவும் வாழவில்லை.வேண்டுமானால் இதை சோதித்துப் பார்க்கலாம்.உனக்கு சில மாத்திரைகளை தருகிறேன்.நீ  வீட்டிற்கு போய்,அதனை சாப்பிட்டுவிட்டு படுத்துக் கொள்.நீ இறந்து விட்டதாக அவர்கள் எண்ணுவர்.அதே சமயம் அவர்கள் என்னன்ன செய்கிறார்கள் என்பதையும் நீ அறிந்து கொள்வாய்.அப்போது நான் அங்கு வருகிறேன்' என்று கூறிவிட்டு, சீடனிடம் சில மாத்திரைகளை கொடுத்தார்

      சீடனும்,வீட்டிற்கு சென்று,மாத்திரைகளை சாப்பிட்டுவிட்டு. இறந்தவன் போல் படுத்துக் கிடந்தான்.அவனைச் சார்ந்த உறவினர்கள், அவன் இறந்து விட்டதாக எண்ணி அழ ஆரம்பித்துவிட்டனர். அப்போது அங்கே வந்த குரு.... அவர்களிடம் ' என்னால் இவனை பிழைக்கவைக்க முடியும் .அரிய மருந்து ஒன்று உள்ளது.அதை இவனுக்கு கொடுக்கின்றேன்...இவன் பிழைத்துக்கொள்வான். ஆனால் இந்த மருந்தை உங்களில் ஒருவர் முதலில் சாப்பிடவேண்டும் அப்படி சாப்பிடுபவர்கள் இறந்து விடுவார்கள்.பின்னர் அந்த மருந்தை இவனுக்குக் கொடுத்தால் இவன் பிழைத்துக் கொள்வான்' என்றார்.

     மருந்த பெற்றுக்கொண்டவர்கள்...அதை வாங்கிப் பார்த்துவிட்டு, அதனை உண்ண விருப்பமின்றி அவரிடம் திருப்பி கொடுத்துவிட்டனர்.

     யாரும் அவனுக்காக உயிரை விட விரும்பவில்லை.

     எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த சீடன்,  எழுந்து குரு சொன்னது ' சரி' என ஒப்புகொண்டான்.