Sunday, March 22, 2015

143. நல்லவனாக இரு ......(நீதிக்கதை)



ஒரு ஊரில் சீதாராமன் என்று ஒருவன் இருந்தான்.அவன் எப்போதும் பிறருக்கு தீங்குகளையே இழைத்து வந்தான்.அதனால் அவ்வூர் மக்களும் அவனைக்கண்டால் பயந்து ஒதுங்கிச் சென்றனர்.

அவனது தந்தை பணக்காரராய் இருந்ததால்...அவன் எந்த வேலைக்கும் செல்லாமல் தன் கவனம் முழுவதையும் கெட்ட செயல்கள் செய்வதிலேயே கழித்து வந்தான்.

ஒரு நாள் திடீரென்று அவனுக்கு நல்லவனாக வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட கோவிலுக்குச் சென்று இறைவனிடம் 'ஆண்டவனே ..என்னை நல்லவனாக மாற்றிவிடு ' என்று வேண்டினான்.

இறைவன் அவன் முன் தோன்றி ' சீதாராமா..இன்றிலிருந்து இரண்டு மாதங்கள் என் கோவிலைச் சுற்றி சுத்தம் செய், .உழவாரப் பணி செய்  என்றார். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தாகம் தணிய தண்ணீருக்கு ஏற்பாடு செய். இரண்டு மாதங்களுக்கு பின் நான் வந்து உன்னை நல்லவனாக ஆக்குகிறேன் என்றார்.

அவனும் அன்றிலிருந்து கடுமையாக உழைத்து கோவிலை அழகாக ஆக்கினான்.அவனது மனம் வேறு எந்த விஷயத்தையும் நினைக்கவில்லை. மக்கள் அவனை விரும்ப ஆரம்பித்தார்கள்.

இரண்டு மாதம் கழித்து இறைவன் மீண்டும் வந்து ' சீதாராமா...இப்போது சொல்....உனக்கு இப்போது பிறருக்கு தீங்கு இழைக்கவேண்டும் என்று தோன்றுகிறதா' என்றார், அவனும் ' இல்லை ' என்றான்.

' நீ எந்த வேலையும் செய்யாமல் சோம்பித் திரிந்ததால் ...உன் உள்ளத்தில் பிறருக்கு தீங்கிழைக்கும் எண்ணம் தோன்றியது. ஆனால் இரண்டு மாதமாக ஓய்வின்றி உழைத்து பிற எண்ணங்கள் ஏதும் இல்லாமல் நல்ல காரியங்களையே செய்ததால்....உன் மனமும் மாறியது. நல்லவன் என்ற பெயரை எடுக்க ஆரம்பித்துள்ளாய்' என்றார்.

நாமும் நல்ல எண்ணங்களையும், நல்ல உழைப்பையும் வளர்த்துக் கொண்டால் நல்லவனாக போற்றப்படுவோம்.

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

100% உண்மை... உழைப்பே தெய்வம்...

Kanchana Radhakrishnan said...

நன்றி
திண்டுக்கல் தனபாலன்.