Monday, February 27, 2012

" சிறுவர் உலகம் "....புத்தக வெளியீடு




" சிறுவர் உலகத்தில் எழுதிய முதல் 54  நீதிக்கதைகள் வானதி பதிப்பகத்தாரால் "சிறுவர் உலகம் " என்ற பெயரிலேயே முதல் பாகமாக வெளிவந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அனைவரிடமும் பகிர்ந்து கொள்கிறேன்.

புத்தகம் பற்றிய விவரம் வருமாறு:

புத்தகத்தலைப்பு சிறுவர் உலகம் - 1 (நீதிக்கதைகள்)

வெளியீட்டாளர் வானதி பதிப்பகம்
                       23. தீனதயாளு தெரு
                       தி.நகர். சென்னை- 17.
                       ph.24342810/ 24310769

108 பக்கங்கள் விலை ரூபாய் 50/-

மீதியுள்ள கதைகள் இரண்டாவது பாகமாக விரைவில் வெளிவர உள்ளது.

Saturday, February 18, 2012

107. அச்சம் கலந்த மரியாதை..(நீதிக்கதை)




அது ஒரு அழகிய கிராமம்.கிராமத்தின் வெளியே ஒரு ஆலமரம் இருந்தது.அதன் அடியில் ஒரு பாம்பு புற்றில் பாம்பு ஒன்று வாழ்ந்து வந்தது.

அந்த பாம்பு..தன்னை அடிக்க வருபவர்களை தற்காப்புக்காக கடிக்கும்.ஆகவே மக்கள் யாரும் அந்த புற்றிடம் செல்லமாட்டர்கள்.

ஒரு நாள் ஒரு ஞானி வந்து மரத்திடம் அமர்ந்தார்.அவர் தன்னை துன்புறுத்த வந்ததாக எண்ணிய பாம்பு...அவரை கடிக்க வந்தது...ஆனால் அந்த ஞானியைப் பார்த்ததும்
அவர் காலடியில் விழுந்து எழுந்தது.

மகான் பாம்பிடம்," நீ நிறைய பேரைக் கடித்து நிறைய பாவங்களைத் தேடிக்கொண்டாய்..இனி யாரையும் கடிக்காதே..' என்றார்.

அந்த மகான் சென்றதும்...அன்று முதல் பாம்பு யாரையும் கடிப்பதில்லை.

அது சாதுவாகி விட்டதால்..அதைக் கண்டதும் கிராம மக்கள் அதன் மீது கற்களை வீசி காயப்படுத்தினர்.உடலெங்கும் காயத்துடன் தன் பொந்தினுள் சென்று மறைந்தது பாம்பு.

சில நாட்கள் கழித்து, மீண்டும் அந்த ஞானி வந்தார்.அவர் வந்தது தெரிந்த பாம்பு புற்றிலிருந்து வெளியே வந்து அவரை வணங்கியது.
பின் " ஐயா...நீங்கள் சொன்ன அறிவுரையைக் கேட்டு..நான் யாரையும் கடிக்காமல் சாதுவாய் இருந்ததால் ..மக்களால் கொடுக்கப்பட்ட காயங்களைப் பாருங்கள்" என்றது.

அதற்கு அந்த ஞானி ' முட்டாள் பாம்பே நான் கடிக்காதே என்று தான் சொன்னேன்....சீற வேண்டாம் என்று சொல்லவில்லையே.நீ சீறியிருந்தால் அவர்கள் பயந்து உன்னை நெருங்கி இருக்க மாட்டார்கள்' என்றார்.

நாமும் யாருக்கும் தீங்கு செய்யக்கூடாது.அதே சமயம் யாரும் நமக்கு தீங்கு செய்யக் கூடாது என்பதால்..அவர்கள் நம்மிடம் அச்சம் கலந்த மரியாதை ஏற்படும் வண்ணம் நடந்து கொள்ளவேண்டும்.இல்லையேல் நாம் இளிச்சவாயர்களாக ஆகிவிடுவோம்.

Friday, February 10, 2012

106. நியாயமான ஆசையே வேண்டும். (நீதிக்கதை)




ஒரு ஊரில் வயதான கணவனும் மனைவியும் வறுமையில் வாழ்ந்து வந்தனர்.

அவர்கள் இறைவனிடம் ' கடவுளே..எங்களது முதுமைக் காலத்தில் ஏன் இப்படி வறுமையில் வாட விடுகிறாய் ' என முறையிட்டனர்.

ஒரு நாள் இறைவன் அவர்கள் முன் தோன்றி, ஒரு வாத்தை அவர்களுக்கு கொடுத்துவிட்டு ' தினமும் இந்த வாத்து ஒரு பொன் முட்டையிடும்...அதை விற்று உங்கள் வறுமையை போக்கிக் கொள்ளுங்கள்' என்றார்.

அவர்களும் அப்படியே செய்து வர அவர்கள் வறுமை சிறிது சிறிதாக மறைந்தது.

வறுமை மறைந்ததும் ..அது நாள் வரை அவர்களுக்கு இல்லாத பேராசை உண்டானது.

தினமும் ஒரு பொன் முட்டையிடும் இந்த வாத்தை அறுத்தால்..அதனுள் இருக்கும் அனைத்து பொன் முட்டைகளையும் எடுத்துக் கொண்டு ..நாம் பெரும் பணக்காரர்கள் ஆகி விடலாம் ' என்று எண்ணினர்.

அதனால் அந்த வாத்தின் வயிற்றைக் கத்தியால் கிழித்தனர்.

ஆனால் அந்த வாத்தின் வயிற்றில் பொன் முட்டைகள் இல்லாததுடன் எல்லா வாத்துகள் போல எலும்பும் சதையுமே இருந்தன.

பேராசையால் முட்டாள் தம்பதிகள் தினமும் அடையும் லாபத்தை இழந்தனர்.

மீண்டும் வறுமையால் வாட ஆரம்பித்தனர்.

பேராசை பெரு நஷ்டம்.

நாமும் எந்த நிலையிலும் பேராசை படக்கூடாது.

நம் நியாயமான ஆசைகளை  மட்டுமே இறைவன் நிறைவேற்றிவைப்பார்,