Tuesday, January 31, 2012

105. " பச்சோந்தியாய் இராதே " (நீதிக்கதை)




ஒரு மரத்தினடியில் ஒருவன் பச்சோந்தி ஒன்றைப் பார்த்தான்.அது பழுப்பு நிறமாய் இருந்தது.

அவன் தன் நண்பனிடம் ' நான் பச்சோந்தியைப் பார்த்தேன்.அது பழுப்பு நிறம் ' என்றான்.

அந்த நண்பனோ..'இல்லை...இல்லை..அது பச்சை நிறம் நான் பார்த்திருக்கிறேன்' என்றான்.

இவற்றைக் கேட்டுக்கொண்டிருந்த மற்றவன் ' இல்லை அது நீல நிறம்' என்றான்.

வேறொருவன் ' அது சிவப்பு நிறம் ' என்றான்.

அனைவரும் ஒருவருக்கொருவர் இது சம்பந்தமாக சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த ஒருவர் இவர்களின் சண்டைக்கான காரணம் கேட்க ...ஒவ்வொருவரும் தான் பார்த்த பச்சோந்தியின் நிறம் பற்றிக் கூறினர்.

உடனே அவர்..'நீங்கள் சொல்லுவது எல்லாம் உண்மையே..பச்சோந்தி ...அவ்வப்போது அது இருக்குமிடத்திற்கு ஏற்ப தன் நிறத்தை மாற்றிக் கொள்ளும்' என்றார்.

இது கேட்டு நண்பர்கள் ஆச்சிரியமடைந்தனர்.

அவர் மேலும் கூறினார்.' சமயத்திற்கு ஏற்றாற் போல நிறம் மாறும் பச்சோந்தி மாதிரி நாம் இருக்கக் கூடாது.எப்போதும்..எந்த இடத்திலும் நல்ல குணத்தோடு  பிறர் மீது
குறை கூறாது..அடக்கத்துடன் ..மற்றவர் மீது அன்புடன் நாம் இருந்து கொள்ளவேண்டும்.

 "பச்சோந்தி போன்று நேரத்துக்கு தக்கபடி மாறக்கூடாது" என அறிவுரை கூறினார்.

Wednesday, January 25, 2012

104. ' மூடர்களை திருத்த முடியாது' (நீதிக்கதை)



ஒரு பணக்காரரிடம் முட்டாள் வேலைக்காரன் ஒருவன் இருந்தான்.

அவன்..அந்த பணக்காரரைத் தேடி யார் வந்தாலும் பணக்காரரிடம் ' ராமசாமி வந்திருந்தார்...கிருஷ்ணசாமி வந்திருந்தார் ' என்பான்.

இதனால் வருபவர்கள் தங்களுக்கு வேலைக்காரன் மரியாதை தருவதில்லை என்று பணக்காரரிடம் முறையிட்டனர்.

பணக்காரர் உடனே வேலைக்காரனை அழைத்து ...'இனி என்னைத் தேடி வருபவர்களுக்கு நீ மரியாதை தர வேண்டும்..அவர்களை திரு.ராமசாமி..திரு.கிருஷ்ணசாமி என்று சொல்லவேண்டும்' என்றார்.

முட்டாள் வேலைக்காரன் ..அதற்கு பிறகு யார் வந்தாலும்..எது வந்தாலும் அதற்கு முன் ..திரு.. திரு.. என்ற அடை மொழியைச் சேர்த்தான்.

சில நாட்களில்....வேலைக்காரனின் ' திரு' பழக்கம் பணக்காரருக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

மீண்டும் வேலைக்காரனை கூப்பிட்டு ' இனி..உன் வாயால் ' திரு' என்ற சொல்லைக் கேட்டால் ...உன்னை வேலையை விட்டு நிறுத்தி விடுவேன் ' என்றார்.

வேலைக்காரனும் பயந்தபடியே ' சரி' என தலையை ஆட்டினான்.

ஒரு நாள் ..இரவு பணக்காரர் வீட்டிற்கு திருடர்கள் வந்தனர்....பணக்காரரின் அனைத்து பணம்,நகைகளை கொள்ளையடித்து ஓட முற்பட்டனர்.

அதை வேலைக்காரன் பார்த்துவிட்டான்.. வேகமாக பணக்காரர் படுக்கை அறைக் கதவை தட்டினான்.அவரும் கதவைத் திறந்தார்.உடன் வேலையாள் ' டன் வந்து டிண்டு '
போனான் என்றான்.

பணக்காரருக்கு என்ன சொல்கிறான் என்று புரியவில்லை.பலமுறை கேட்டும் .....நான் சொன்னால் என்னை வேலையை விட்டு துரத்தி விடுவீர்கள்' என்றான்.

பணக்காரரும் ..' உன்னை துரத்த மாட்டேன்..சொல்' என்றார்.

' திருடன் வந்து திருடிண்டு போனான் ' என்றான்...அப்போதுதான் பணக்காரருக்கு ' திரு ' என்ற வார்த்தையை சொல்லக் கூடாது என்று சொன்னது ஞாபகம் வந்தது.

மூடர்களை திருத்துவது என்பது மிகவும் கடினம் என்று பணக்காரர் உணர்ந்தார். தன் விதியை நொந்து கொண்டார்.

நாமும் மூடர்களுக்கு அறிவுரை சொல்லும்போது மிகவும் கவனமாக இருக்கவேண்டும்.

Tuesday, January 17, 2012

103. " கண்ணுடையர் கற்றோர் " (நீதிக்கதை)




படிக்காமல்...சோம்பேறியாய் ஊரைச் சுற்றிக்கொண்டிருந்தான் மாடசாமி...

அவன் ஒரு நாள் தெருவில் நடந்து கொண்டிருந்தபோது...அவனுக்கு இணையாக...அந்த ஊர் பள்ளிக்கூடத்தின் தலைமையாசிரியரும் வந்து கொண்டிருந்தார்...

அவரைப் பார்த்த மக்கள்...அவருக்கு வணக்கம் சொன்னனர்.

தலையை அசைத்து தலைமை ஆசிரியர் அந்த வணக்கங்களை ஏற்றுக் கொண்டிருந்தார்.அதையெல்லாம் கவனிக்காத மாடசாமி மக்கள் தன்னைத்தான் வணங்குவதாக எண்ணி கர்வம் அடைந்தான்.

இது தினசரி நடந்து கொண்டிருந்து.

ஒரு நாள் தலைமை ஆசிரியர் சற்று நேரம் கழித்து பள்ளிக்கு செல்ல வேண்டியிருந்தது.ஆகவே தாமதமாக புறப்பட எண்ணினார்.

இதை அறியாத மாடசாமி...தெருவில் நடக்க ஆரம்பித்தான்...ஆனால் ஒருவரும் கண்டுகொள்ளவில்லை.யாரும் வணக்கமும் சொல்லவில்லை.

இதனால் கோபம் அடைந்தவன்...'நீங்கள் எல்லாம் எனக்கு ஏன் வணக்கம் சொல்லவில்லை' என மக்களிடம் கேட்டான்...

அதைக்கேட்டு சிரித்த மக்கள்....;மூடனே ...நாங்கள் ஏன் உனக்கு வணக்கம் சொல்ல வேண்டும்....நீ என்ன படித்தவனா...அல்லது உழைத்து சம்பாதிப்பவனா...நீ படிக்காத சோம்பேறி....தினசரி உன் தேவைகளுக்கே பிறரை எதிர்பார்ப்பவன்' என்றனர்.

அப்போதுதான் மடசாமிக்கு தான் செய்த தவறுகள் புரிய ஆரம்பித்தது.இது நாள் வரை மக்கள் மதித்தது தலைமை ஆசிரியரை என்று.

இனி சோம்பித் திரியாமல்...முடிந்தவரை படிக்க ஆரம்பிப்பேன் ...உழைத்து சம்பாதிப்பேன் என்றான்....

பின்னால் தலைமை ஆசிரியர் அப்போது வர மக்களுடன் சேர்ந்து அவனும் வணக்கம் சொன்னான்.

படிப்பறிவும்,கர்வம் இல்லாமையும்,கோபம் இல்லாமையும்,உழைப்பும் ஒவ்வொருவரையும் வாழ்க்கையில் உயர்த்திவிடும்.

' கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு
 புண்ணுடையர் கல்லா தவர்.'

கண்ணில்லாவிடினும் அவர் கற்றவராக இருப்பின் கண்ணுடையவராகவே கருதப்படுவார்.கல்லாதவருக்குக் கண் இருப்பினும் அது புண் என்றே கருதப்படும் என்கிறார் வள்ளுவர்.

Friday, January 6, 2012

102. மூத்தோர் சொல் மதிப்போம்...(நீதிக்கதை)



ஒரு பெரிய மரத்தினடியில் பாம்பு புற்று ஒன்று இருந்தது.

அம்மரத்தில் காகம் ஒன்று கூடு கட்டி குஞ்சு பொரிக்க எண்ணியது.

அப்போது ஒரு மூத்த காகம் ஒன்று...'அந்த மரத்தினடியில் பாம்பு புற்று இருக்கிறது.ஆகவே அம்மரத்தில் கூடு கட்டாதே' என்றது.ஆனால் மற்ற காகம் அதைக் கேட்கவில்லை.'

அடுத்த நாள் கூட்டினுள் முட்டையிட்டுவிட்டு காகம் உணவிற்காக வெளியே சென்றது.

காகம் இல்லாத நேரம் பொந்திலிருந்து ...பாம்பு ஒன்று மரத்திலேறி கூட்டினுள் இருந்த முட்டையைத் தின்றுவிட்டது.

வழக்கமாய் இது நடந்து கொண்டிருந்தது.அப்போதுதான் மூத்த காகத்தின் புத்திமதியை தான் கேட்கவில்லை என நினைத்தது.

உடன் அதனிடம் சென்று நடந்ததைக் கூறி....ஆலோசனைக் கேட்டது.

மூத்த காகம் ...' நான் அப்போதே கூறினேன் நீதான் கேட்கவில்லை ..சரி...இதற்கு ஒரு வழி பண்ணுகிறேன் என்று சொல்லிவிட்டு....அந்த நாட்டு ராணி குளிக்கும் தடாகத்திற்குச் சென்றது.

ராணி தன் முத்துமாலையைக் கழட்டி கரையில் வைத்துவிட்டு குளிக்கச்  சென்றாள். மூத்த காகம் அந்த மாலையை எடுத்துக்கொண்டு பறந்தது.

ராணி கூச்சலிட, வெளியேயிருந்த சேவகர்கள் உடனே காகத்தின் பின்னே ஓடினர்.மூத்த காகம் மரத்தினடியில் வந்து மாலையை புற்றினுள் போட்டது.

வந்த சேவகர்கள் பாம்பு புற்றை வெட்டினர். மாலையை எடுக்கும்போது பாம்பு வெளியே வந்தது.அதையும் வெட்டிக் கொன்றனர்.

அதற்கு பின் காகம் இடும் முட்டைகள் திருட்டு போகாமல் குஞ்சுகளாக வெளியே வந்தன.

நாமும் நம்மைவிட அனுபவசாலிகள் கூறும் அறிவுரை படி நடந்தால் நமக்கும் நல்லதே நடக்கும்.