Saturday, April 19, 2025

15.புத்திசாலி தீர்ப்பு

  தீர்ப்பு




 


ஒரு செல்வந்தரிடம் 17 குதிரைகள் இருந்தன. அவருக்கு மூன்று மகன்கள் இருந்தனர்.அவர் நோய்வாய் பட்டதால் கீழ்கண்டவாறு உயில் எழுதி வைத்தார்.

இருக்கும் 17 குதிரைகளில் பாதி பெரியவனுக்கும்,மீதியில் 2/3 பங்கு இரண்டாம்மகனுக்கும்.இரண்டாம் மகனுக்கு கொடுத்த பின் மீதியில் 2/3 பங்கு   மூன்றாம்  மகனுக்கும்  எழுதி வைத்திருந்தார்.

மூன்று  மகன்களுக்கும்  ஒண்ணுமே புரியவில்லை.எப்படி குதிரைகளை பிரித்துக்கொள்வது என்று தெரியவில்லை..

உடனே அவர்கள் அந்த ஊர் நாட்டாண்மையிடம் சென்று அவருடைய உதவியை நாடினர்.நாட்டாண்மை புத்திசாலி.எல்லோருடைய சிக்கல்களையும் தீர்த்து வைப்பார்.

செல்வந்தரின் உயிலை பார்த்துவிட்டு நாட்டாண்மை கீழ்கண்டவாறு  கூறினார்

முதலில் தன்னிடம் இருக்கும் ஒரு குதிரையை கொண்டு வந்து நிறுத்தினார். மொத்தம் 17+1= 18 ஆயிற்று.முதல் மகனுக்கு 18 குதிரைகளில் பாதி அதாவது 9 குதிரைகளை  கொடுத்துவிட்டார்.

இண்டாம் மகனுக்கு மீதி 9 ல் 2/3 பங்கு அதாவது 6 குதிரைகள் அவனுக்கு கொடுப்பது என்று முடிவாயிற்று.

மூன்றாம் மகனுக்கு முதல் இரண்டு பேருக்கு கொடுத்த மீதியில் 2/3 பங்கு.அதாவது மீதியுள்ள 3 ல் 2/3 பங்கு, 2 குதிரைகளை அவனுக்கு கொடுப்பது என முடிவாகியது.

எஞ்சிய ஒரு குதிரை செல்வந்தருடையது. ஆகையால் அவர் அந்த குதிரையை எடுத்துக்கொண்டு அந்த இடத்தை விட்டு அகன்றார்.

Sunday, April 13, 2025

13. சாதுர்யம்




 மதுரைக்கு பக்கத்தில் நத்தம் என்ற ஊர் உள்ளது. அங்கு சிதம்பரம் என்பவர் ஊர்மக்களுக்கு தேவயான பணத்தை அதிக வட்டிக்கு கொடுத்துவந்தார்,

அதில்சின்னசாமியும் ஒருவர்.அவரால் வட்டியை தவறாது கொடுக்கமுடியவில்லை.சின்னசாமிக்கு சாந்தி என்ற ஒரு மகள் இருக்கிறாள், நன்கு படித்தவள்.ஊர் மக்களுக்கு உரம் வாங்குவது பற்றியும் நெல்லை விற்பதற்கு வேண்டிய உதவிகளையும் செய்பவள்.சிதம்பரத்திற்கும் அவருடைய கம்பெனியில் கணக்கு வழக்குகளை பார்த்து அதில் வரும் வருமானத்தில் அப்பா வாங்கின வட்டியை அடைத்து வந்தாள்.அவளுக்கு சிதம்பரம் அதிக வட்டி வாங்குவது பிடிக்காது.

சிதம்பரத்திற்கு சாந்தி மேல் ஒரு கண் இருந்தது,நன்கு படித்தவள்.கணக்கு வழக்குகளை நன்றாக பார்க்கிறாள். அவளை தமது பையனுக்கு திருமணம் செய்துவைக்கவேண்டும் என்று நினைத்தார், 

ஒருநாள் சிதம்பரம் சின்னசாமியை கூப்பிட்டு நீ மூன்று மதமாக வட்டி கட்டவில்லை.உன் மகளும் படிப்பிற்காக கம்பெனி பக்கம் வரவில்லை.ஆகையால் உனது மகளை என் பையனுக்கு திருமணம் செய்து விடலாம்.உனது கடனையும் ரத்து செய்துவிடுகறேன் என்றார்.சின்னசாமி அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை.

சிதம்பரம்  மேலும் கூறினார். நான் ஒர் போட்டி வைக்கிறேன்.அதில் உன் மகள் ஜெயிக்கவேண்டும் என்று போட்டியைபற்றி கூறினார்,

நான்  இரண்டு கூழாங்கற்களை ஒரு பையில் போடுவேன்.ஒன்று வெள்ளை மற்றொன்று கருப்பு,உங்கள் மகள் அதில் ஒன்றை எடுக்கவேண்டும்.அவள் கருப்புக் கல்லை எடுத்தால் உங்களது எல்லா கடன்களும் ரத்து செய்யப்படும்.நீங்கள் உங்கள் மகளை எனது மகனுக்குதிருமணம் செய்து வைக்கவேண்டும்.அந்த கல்வெள்ளையாக இருந்தால் உங்கள் கடன் அப்படியே இருக்கும்.நீங்கள் உங்கள் மகளை என் மகனுக்கு திருமணம் செய்து கொடுக்கவேண்டாம் என்றார்,சின்னசாமியும் சாந்தியும் அதற்கு உடன்பட்டனர்,

சிதம்பரம் தோட்டத்திலிருந்த கூழாங்கற்கள் குவியலிலிருந்து இரண்டு கற்களை எடுத்தார்,யாருக்கும் தெரியாமல் இரண்டையுமே கறுப்பாக எடுததார்.இதை சாந்தி பார்த்துவிட்டாள். போட்டி ஆரம்பமாயிற்று.

சிதம்பரம் சாந்தியிடம் ஒரு கல்லை எடுக்கசொன்னார்,அவள் தந்திரத்தை தந்திரத்தால் வெல்லவேண்டும் என்று நினைத்து அவள் பையிலிருந்து ஒரு கல்லை எடுத்து அதை யாரும் பார்க்காதவண்ணம் கீழே கிடக்கும் கற்களோடு போட்டுவிட்டாள்,பிறகு நான் வருந்துகிறேன் ஒருகல் தவறுதலாக கீழே விழுந்துவிட்டது என்றாள்.

உடனே கூடியிருந்த பொதுமக்கள் பையில் இருப்பது கருப்புக்கல்.ஆகவே அவள் எடுத்தது வெள்ளைக்கல் என்று கூறினர்.சிதம்பரத்திற்கும் வேறு வழி இல்லை, அதை ஒத்துக்கொண்டார்.இவ்வாறாக சாந்தி தன்னை அந்த கந்து வட்டிக்கரரிடமிருந்து காத்துக்கொண்டாள்,தனது சாதுர்யத்தால் சிதம்பரத்தின் சூட்சியை வென்றாள்.

மேலும் அவள் தன் தந்தையிடம் நான் சம்பாதித்து உங்கள் கடனை அடைக்கிறேன் கவலை வேண்டாம் என்று ஆறுதல் கூறினாள்.


Tuesday, April 8, 2025

12.முயன்றால் முடியாதது இல்லை

 

8- முயன்றால் முடியாதது இல்லை


8-



 கந்தன் அனைத்துப் பாடங்களிலும்  எப்போதும் குறைந்த மதிப்பெண் பெற்று வந்தான்.

அந்த முறையும் அப்படித்தான்.

அதனால் அவனது அப்பா கோபித்துக்கொள்ள..அழுதுகொண்டே தன்  அறைக்குள் வந்து அமர்ந்தான்.

அப்போது அறையின் மூலையில் ஒரு சிலந்தி...வலை பின்னிக்கொண்டிருந்தது.அது அவனது கவனத்தை ஈர்க்க அதையே பார்த்துகொண்டிருந்தான்.

அது வட்டமாக சுவரின் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு தன் எச்சிலால் வலை பின்னிக்கொண்டிருக்கும் போது ஒரு பக்கம் அறுந்தது. அதை சரி பண்ணிவிட்டு மேலும் தொடர்கையில் மற்றொரு முனை அறுந்தது.

இப்படி தொடர்ந்து அறுந்து கொண்டிருந்தாலும் தன் முயற்சியை விடாது அடுத்த 

அரை மணிநேரத்தில்  அது வலையை பின்னி முடித்து நடுவில் சென்று அமர்ந்தது.

அதை பார்த்ததும் மகிழ்ச்சியால் அவன் கை தட்டினான்.

அவன் பின்னால்..அவனுக்கே தெரியாமல் நின்றுகொண்டிருந்த அம்மா..'கந்தா..பார்த்தாயா..பல முறை வலைஅறுந்தும் ..தன்னால் முடியாது என்று விட்டுவிட்டு போகவில்லை சிலந்தி.நேரத்தை பற்றி கவலைப்படாமல் பல முறை முயன்று தன் வேலையை செவ்வனே முடித்துவிட்டது.அதற்கு காரணம் அதனுடைய விடாமுயற்சியே.கடவுள் ..அனைவருக்கும் மூளையை கொடுத்துள்ளான்..அதை சரியாக பயன்படுத்தி..விடாமல் முயன்று படித்தால் உன்னாலும் நல்ல மதிப்பெண்கள் வாங்கமுடியும்.

சிலந்தியின் விடாமுயற்சி உனக்கு ஒரு பாடமாக அமையும்' என்றாள்.

அடுத்து வந்த அனைத்து பாடங்களிலும் கந்தன் முதல் மதிப்பெண் பெற்றான் என்பதை நான் உங்களுக்கு கூறவேண்டுமா..என்ன?.

Tuesday, April 1, 2025

11. கெடுவான் கேடு நினைப்பான்

 

மதுரை பக்கத்தில் ஒரு கிராமத்தில் அண்ணன் தம்பி இருவர் இருந்தனர்.இருவருக்கும் வேலையில்லை.வறுமையில்வாடினர்,

அண்ண்ன் தம்பியிடம், தம்பி பக்கத்து ஊர் பண்ணையாரிடம் வேலைக்கு ஆள்  வேண்டும் என்று எனது நண்பன் வீரப்பன் கூறினான்,ஆகவே நான் அங்கு போய் முடிந்தால் வேலையில் சேர்ந்து விட்டு பின்னர் உன்னை அழைக்கிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பினான்.
பண்ணையாரிடம் வேலை கேட்க அவர் எனக்கு ஒரு ஆள் வேலைக்கு வேண்டும்.அவர் என்னுடன் ஒரு வருடம்  தங்கியிருக்கவேண்டும்,நான் சொல்லும் வேலையெல்லாம் செய்யவேண்டும்.சாப்பாடும் தங்குவதற்கு இடமும் தருகிறேன்,வருடக்கடைசியில் நான் சொன்ன மூன்று வேலைகளையும் சரியாக செய்தால்நிறைய பணம் கொடுப்பேன் .அப்படி இல்லையென்றால் நீ வெறும் கையுடன் தான் செல்லவேண்டும் என்றார்,
ஒரு வருடம் முடிந்தது.அண்ணன் கிளம்பும் முன் அவனிடம் முதல் வேலையாக இரண்டு ஜாடிகள் பண்ணையார் கொடுத்தார். ஒன்று பெரியது மற்றொன்று சிறிது.பெரிய ஜாடியை சிறிய ஜாடிக்குள் வைக்கவேண்டும் என்றார் அண்ணனிடம்.
அது முடியாத காரியம்,அதனால் அவன் செய்ய வேண்டிய முதல் வேலை தோல்வியடைந்தது.
இரண்டாவது வேலை ஒரு அறையில் ஈரமான நெல் உள்ளது.அதை வெளியே எடுத்து செல்லாமல்காய வைக்கவேண்டும்.அண்ணனால் அதுவும் இயலாத காரணத்தினால் இரண்டாவது வேலையையும் செய்யமுடியவில்லை,

மூன்றாவது வேலையாக பண்ணையார் கூறியது' என்  தலையின் எடையை மட்டும் சரியாக சொல்லவேண்டும். அண்ணனால் அதுவும் முடியவில்லை அதனால் அந்த வேலையும் தோல்வியில் முடிந்தது,

அண்ணன் மனது கஷ்டப்பட்டு வேலைக்கான ஊதியம் கிடைக்காமல் வெறும் கையுடன்ஊருக்கு திரும்பினான், தம்பியிடம் நடந்ததைக்கூறி வருத்தப்பட்டான்,.
தம்பி  அண்ணனிடம் அண்ணா, நீ கவலைப்படாதே, நான் போய் அந்த பண்ணையாருக்கு ஒருபாடம் கற்பிக்கிறேன் என்று சொல்லி பண்ணையாரின் ஊருக்கு வந்தான்,

பண்ணையாரை சந்தித்து அவருடைய நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஒரு வருடம் முடிந்தபின் மூன்று வேலைகளைப்பற்றி கேட்டான்.

முதல் வேலைக்கு அவன் உடனே பெரிய ஜாடியை உடைத்து சிறிய ஜாடியில் போட்டான்.அவரிடம் அப்பொழுதான் சிறிய ஜாடிக்குள் பெரிய ஜாடியை வைக்கமுடிய்ம் என்றான் 
இரண்டாவது கேள்விக்கு பண்ணையாரின் நெல் வைக்கும் கூரையை பிய்த்து எறிந்தான்,அப்பொழுதுதான் சூரிய வெளிச்சம் பட்டு நெல் கதிர்கள் காயும் என்றான்.
பண்ணையார் இவன் வல்லவனாக இருக்கிறானே என்று யோசித்தார்.

மூன்றாவது கேள்விக்கு ஒரு  பெரிய பூசணிக்காயை கொண்டுவந்தான்,
அவரிடம் பண்ணையாரே உங்கள் தலையின் எடையும் இந்த பூசணிக்காயின் எடையும் ஒன்றாகத்தான் இருக்கும்.ஒரு தராசில் ஒரு பக்கம்பூசணிக்காயையும் ம்றுபக்கம் உங்கள் தலையை வெட்டி வைக்கிறேன் என்று கூறி ஒரு அரிவாளை எடுத்து வந்தான்,

பண்ணையார் தன் தவற்றை உண்ர்ந்தார்.தான் செய்தது தப்பு என்று கெஞ்சினார்..இனிமேல் ஏழை எளிய மக்களை ஏமாற்றுவதை விட்டு விடும்படி கூறி தன்  அண்ணனை ஏமாற்றிய பணத்தையும் தனக்கு சேரவேண்டிய பணத்தையும் சேர்த்து வாங்கிகொண்டு வெற்றியுடன் ஊருக்கு கிளம்பினான்.

பண்ணையாரும் அன்றிலிருந்து மற்றவர்களை ஏமாற்றுவதை விட்டுவிட்டார்.
கெடுவான் கேடு நினைப்பான் என்ற பழமொழி அவருக்காகவே உருவானது போல் உள்ளது.



Friday, March 14, 2025

10. நேர்மை


 


உஷாவும் ஸ்ரீனிவாசனும் Pandian Express ல் சென்னையில் இருந்து மதுரைக்கு அவர்களுடைய பெண் வீட்டுக்கு போவதற்காக ஏறினார்கள்.

உஷா சினிமா பாட்டு கேட்பதில் ஆர்வம் உள்ளவர்.அதனால் mobilட்e phone ல் பாட்டு கேட்டுக் கொண்டு வந்தார்.ஸ்ரீனிவாசன் ஜன்னல் ஓரத்தில் உட்கார்ந்துகொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்.

ஒரு சிறு ஸ்டேஷனில் வண்டி நின்றது..உஷா கணவனிடம் காபி வாங்க சொன்னாள்.அவரும் அங்கு காபியோட வந்த ஒரு சிறுவனிடம் இரண்டு காபி கொண்டுவா என்றார். அவன் காபியை கொடுத்துவிட்டு ரூபாய் நாற்பது வேண்டும் என்றான்,ஸ்ரீனிவாசனும் ரூபாய் 200/ நோட்டு ஒன்றை கொடுத்துவிட்டு மீதி பணத்துக்காக காத்திருந்தார், அதற்குள் வண்டி கிளம்பிவிட்டது.

ஸ்ரீனிவாசன் மிகவும் வருத்தப்பட்டார்.அவருடைய மனைவி உஷா அவருடைய கவனமின்மைக்கு அவரை கோபித்துக்கொண்டார்,ஸ்ரீனிவாசனும் தன்னையே நொந்துகொண்டு அமைதியாக இருந்தார்.

அடுத்து Trichy Junction வந்தது.அங்கு வண்டி அரைமணிநேரம் நிற்கும்.அப்பொழுது ஒருவர் ஓடிவந்து அவரிடம் "ஐயாநீங்கள் போன ஸ்டேஷனில் இரண்டு காபி வங்கினீர்களா? என்று கேட்டார்,ஸ்ரீனிவாசனும் ஆமாம் என்று சொல்ல,அவர் ஸ்ரீனிவாசனிடம் ரூபாய் 160/ கொடுத்து என் மகன் கொடுக்கசொன்னான் என்றார்.

ஸ்ரீனிவாசனுக்கு ஆச்சிரியமாக இருந்தது.ஸ்ரீனிவாசன் அவரிடம் நீங்கள் உங்களுடைய பையனை நன்றாக வளர்த்திருக்கிறீர்கள் என்று பாராட்டி பேசினார்,

உடனே பையனின் தந்தை "ஐயாநாங்கள் ஏழை குடும்பம் தான்.ஆனால் அதில் நேர்மையும் உண்மையும் இருக்கும்.என் இரண்டு பையன்களுக்கும் அதை சொல்லித்தான் வளர்த்திருக்கிறோம் என்றார். மேலும் உங்களைப்போல உள்ள பெரியவர்களின் ஆசீர்வாதத்தால்நன்றாக இருக்கிறோம் என்றார்,

முக்கியமாக செய்யும் வியபாரத்தில் நேர்மை இருக்கவேண்டும்.அப்பொழுதுதான் வாழ்நாளில் முன்னுக்கு வரமுடியும் என்று சொல்லி வள்ர்த்திருக்கிறோம் என்றார்,

நாம் நேர்மையாக நடந்துகொண்டால் அதற்காக கிடைக்கும் பரிசு பெருமதிப்புள்ளதாக அமையும்,

Tuesday, February 18, 2025

9. ஆலமரமும் காட்டுச்செடியும்

 




விவசாயி ஒருவர் ஒரு ஆலமரக்கன்றை தனது  தோட்டத்தில் நட்டு வைத்தார்.அது காற்றில் அசைந்து ஒடிந்து விடாமல் இருக்க கொழுக்கொம்பாக ஒரு குச்சியைநட்டு வைத்து அதில் செடியை கட்டிவைத்தார்.ஆடு மாடு அதை திங்காமல் இருக்க அதை சுற்றி வலையால் வேலி அமைத்தார்.அதற்கு அவ்வப்போது தண்ணீர் ஊற்றினார்.தேவையான உரமும் போடப்பட்டது.

ஆலமரக்கன்று பாதுகாப்போடு பேணப்படுவதை கண்டு எதிரேயுள்ள காட்டுச்செடி பொறாமையுடன் ன இந்த மாதிரி ஒரு "சிறை வாழ்க்கை" உனக்கு தேவையா என்று கேலிசெய்தது.மேலும் எங்களைப் பார் நாங்கள் எவ்வளவு சுதந்திரமாக இருக்கிறோம் என்றது.

ஆலமரச்செடி வெகுநேரம் யோசித்தது.இனிமேல் நமக்கு இந்த நரக வாழ்க்கை வேண்டாம், இதிலிருந்து நாம் எப்படியாவது தப்பிக்கவேண்டுமென்று எண்ணியது.

அடுத்தநாள் காட்டுச்செடி இருந்த இடமெல்லாம் வெட்டி எறியப்பட்டது.அந்த வழியாக வந்த விவசாயின் மகன் அவரிடம் அப்பா ஏன் சில செடிகள் எல்லாம் வெட்டப்பட்டும் இந்த செடி மட்டும் பாதுகாக்கப்பட்டும் இருக்கிறது என்று கேட்டான்.

விவசாய தன் மகனிடம் அழிக்கப்பட்ட செடிகள் எல்லாம் காட்டுசெடிகள்.அவைகள் சீக்கிரமாக வளர்ந்து சீக்கிரமாக  அழியக்கூடியது பாதுகாக்கபட்ட செடிதான் "ஆலமரக்கன்று".இது பல நூறு ஆண்டுகள் வளர்ந்து பயன்படக்கூடியது.இது பெரிய மரமாக வளர்ந்து விழுதுகளுடன் மக்களுக்கு பயனுள்ள மரமாக இருக்கும்.அதனால் தான் இதற்கு இத்தனை பதுகாப்பு, என்றார்.

ஆலமர்க்கன்றும் தன்னை கட்டிவைத்திருக்கும்  குச்சியும்,சுற்றியிருக்கும் வேலியும் தான் தன்னை நலமாக வாழ்வதற்குதானே தவிர தமது சுதந்திரத்தை பறிப்பதற்கு அல்ல என்று புரிந்துகொண்டது

நீங்களும் ஆலமரமாய் வளர வேண்டுமென்றால் சில கட்டுப்பாடுகளுக்கு பணியத்தான் வேண்டும்.

Monday, February 17, 2025

8.பூமராங்




பாஸ்கருக்கு இருமல்,ஜுரம் அதிகமாக இருந்ததால் அருகிலுள்ள மருத்துவரிடம் சென்றார்.மருத்துவரும் அவரை நன்கு பரிசோதித்து விட்டு சில மருந்துகள் எழுதி கொடுத்தார்.பாஸ்கர் மருத்துவரிடம்  consulting fees எவ்வளவு என்று கேட்டார். அவர் ஐநூறு ரூபாய் என்றார்.பாஸ்கர் ஆச்சிரியப்பட்டார்..ஏன் இவ்வளவு அதிகம் என்று டாக்டரிடம் கேட்டார்.டாக்டர் உங்களுக்கு ஏன் இருமல் ஜுரம் வந்தது என்று பார்த்து பரிசோதித்து மருந்துகளை கொடுக்கவேண்டும் , அதனால் தான் ஐநூறு ரூபாய் வாங்குகிறேன் என்றார். பாஸ்கர் மனமில்லாமல் பணத்தை கொடுத்துவிட்டு வீட்டுக்கு திரும்பினார்.

அன்று மாலை டாக்டர் தன் காரில் வெளியே சென்றார்,கார் நடுவழியில் நின்றது.அருகிலுள்ளவர்களிடம் சொல்லி mechanic ஐ வரவழைத்தார்.வந்தது அவரிடம் காலையில் சிகிச்சைக்கு வந்தபாஸ்கர்.பாஸ்கர் பத்து நிமிடம் காரை பரிசோதித்துவிட்டு ஏதோ ஒரு இடத்தில் ஒரு தட்டு தட்டினார்.உடனே கார்  start ஆகி விட்டது.கூலி ஆயிரம் ரூபாய் கேட்டார்.

டாக்டர் ஆச்சிரியப்பட்டார்,ஒருதட்டு தட்டியதற்கு ஆயிரம் ரூபாயா என்றார்.பாஸ்கர் , டாக்டர் சார் நான் தட்டியதற்கு கூலி வேண்டாம்.ஆனால் எந்த இடத்தில் தட்டினால் கார் மூவ் ஆகும் என்று கண்டுபிடித்து தட்டினேன்,அதற்குதான் ஆயிரம் ரூபாய் என்றார்.

டாக்டருக்கு காலையில் தான் பாஸ்கரிடம் நடந்துகொண்டது ஞாபகம் வந்தது.

அவர்து செய்கை ' பூமராங்காய்' அவருக்கே திரும்பியது.


Sunday, February 16, 2025

7. மனித நேயம்




"மிதிலா" குடியிருப்புக்ககு கீழே வள்ளி கீரை விற்கும் சப்தம் கேட்டது.

உடனே பர்வதம்மாள் கீழே போனாள்.வள்ளியிடம் அரைக்கீரை ஒரு கட்டு எவ்வளவு என்றாள்? வள்ளி இருபத்திஐந்து ரூபாய் என்றாள்.பர்வதம் அவளிடம் நீ எப்பொழுதும் எனக்கு இருபது ரூபாய்க்குத்தான் கொடுப்பாய்.இப்பொழுது என்ன வந்தது என்றாள்., உடனே இல்லை அம்மா மற்றகீரை என்றால் பரவாயில்லை அரைக்கீரை சுலபமாக கிடைக்காது என்றாள வள்ளி..அதெல்லாம் இல்லை என்று பலவந்தமாக அவளிடம் இருபது ரூபாய் கொடுத்துவிட்டு கீரையை வாங்கிக்கொண்டு வீடு திரும்பினாள் பர்வதம்.

சிறிது தூரம் சென்றதும் மீண்டும் வந்து வள்ளியிடம் ஏன் உன் முகம் வாட்டமாக இருக்கிறது . காலையில் ஒன்றும் சாப்பிடவில்லையா என்று வினவினாள்.

வள்ளி கண்ணீருடன் இல்லையம்மா...வீட்டில் அரிசி கூட இல்லை.இருந்தால் கஞ்சி போட்டு குடித்துவிட்டு வருவேன் என்றாள்.

பர்வதம் உடனே வள்ளியிடம் ஒரு ஐந்து நிமிடம் இங்கேயே இரு ,வருகிறேன் என்றாள்.திரும்பியவள் கையில் ஒருதட்டில் 4 இட்லி சாம்பாருடன் வள்ளியிடம் கொடுத்து சாப்பிடச் சொன்னாள்

வீட்டுக்கு வந்த பர்வதத்திடம் மகன் சரவணன், ஏம்மா நீகீரைக்கட்டுக்கு ஐந்து ரூபாய்க்கு பேரம் பேசினாய்.ஆனால் அவளுக்கு 4 இட்லி சாம்பார் கொடுக்கிறாய்.வெளியில் ஒரு இட்லி ஐந்து ரூபாய் தெரியுமா என்றான்.

பர்வதம் சரவணனிடம் முதலில் பேரம் பேசியது வியாபரம்.இரண்டாவது இட்லி கொடுத்தது மனித நேயம்.இது வேறு அது வேறு/இரண்டையும் ஒப்பிடாதே என்றாள்.

அம்மாவை பெருமிதத்துடன் பார்த்தான் சரவணன்..

Friday, February 14, 2025

6 எட்டு




 கந்தசாமி வாத்தியார் கரூர் பக்கத்தில் ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒனபதாம் வகுப்புக்கு தமிழ் வாத்தியாராக இருக்கிறார். அவரிடம் படித்த மாணவர்கள் பலர் இன்று பல துறைகளில் பெரும் புள்ளிகளாக இருகின்றனர்.

கந்தசாமி வாத்தியார் மிகவும் கண்டிப்பானவர்.ஒரே பள்ளியில் 35 வருடமாக இருப்பதால் அவர் மீது எல்லோருக்கும் தனி மதிப்பும் மரியாதையும் உண்டு.ஓய்வு பெறுவதற்கு இன்னும் ஆறு மாதங்கள் இருப்பதால் தலைமை ஆசிரியர் அவரை கூப்பிட்ட்டு ஐயா,இன்னும் 6 மாதங்கள் தான் உங்களூக்கு சர்வீஸ் இருப்பதால் மாணவர்களிடம் மிகவும் கண்டிப்பாக இருக்கவேண்டாம்.உங்கள் காலம் போல் இப்போது இல்லை. மாணவர்களை கோபமாக பேசினாலும் கண்டனத்திற்கு ஆளாக நேரிடும்.அதனல் ஜாக்கிரதையாக இருங்கள் என்றார்.

கந்தசாமி வாத்தியாருக்கு அன்று  போதாத காலம்.அவருடடைய வகுப்பில் விக்ரம் என்ற ஒரு பையன் படிக்கிறான்,நன்றாக படிப்பதில்லை.எப்பொழுதும் மற்றவர்களுடன் பேசிக்கொண்டே இருப்பான்.அவன் அன்று வீட்டு பாடங்களை முடிக்கவில்லை,அவனை இப்போது திருத்த முடியவில்லை என்றால் அவனது எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும் என்று அவரது உள் மனம்  சொல்ல"அவர் விக்ரமின் அரைக்கை சட்டையை சற்றே தூக்கி "எட்டு" போடுவது போல் ஒரு கிள்ளு கிள்ளினார்.மாணவன் மயக்கம்  அடைந்தான்.

விக்ரமை அருகிலுள்ள மருத்துவமனைக்கு எடுத்துசென்றனர்.அவனது பெற்றோருக்கும் காவல் துறையினருக்கும் விவரம் தெரிவிக்கப்பட்டது.

பள்ளியே அல்லோலப்பட்டது.என்ன செய்வது என்று தெரியாமல் கந்தசாமி வாத்தியார் தானே சரணடையும் நோக்கத்தில் காவல்நிலையம் வந்தார்.காவல் துறை அதிகாரி இல்லாததால் அருகில் இருந்த நாற்காலி ஒன்றில் அமர்ந்தார்.

சிறிது நேரத்தில் அதிகாரி வர அவருக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு வாத்தியார் நடந்ததைக் கூறினார்.

பொறுமையாக எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த அதிகாரி...தன் அரைக்கை சட்டையை சற்றே உயர்த்தி...அந்த கருமை நிற வடுவை  காண்பித்தார்

இந்த வடுவை பார்த்தீங்களா...இது எனக்கு நீங்க போட்ட எட்டு,,,என்னைத்தெரிகிறதா உங்களுக்கு..நான் தான் அருணாசலம்..உங்க பழைய மணவன்.ஒரு நாள்..நான் ..பக்கத்து பையன் பையிலிருந்து பணத்தை திருடிட்டேன் .அதை தெரிஞ்சிக்கிட்ட நீங்க கொடுத்த பரிசு.,.மேலும் நீங்கள் என்னிடம்  இனிமேல் நீ தப்பு பண்ணக்கூடாது,ஏதாவது செஞ்சா...அந்த நேரம் இந்த காயம் எப்படி ஏற்பட்டதுங்கிற எண்ணம் உனக்கு வரணும்.இந்த காயத்தால் ஏற்படப்போகும் வடு ...உன்னை ஒரு நேர்மையானவனாக மாற்றும்  என்று சொன்னீங்க..அன்னிக்கு நீங்க எனக்கு இந்த தண்டனை கொடுக்கலைன்னா...நான் இன்னிக்கு இப்படி ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரியாக மாறியிருப்பேனான்னு தெரியாது.

நீ அருணசலமா.....ரொம்ப மகிழ்ச்சி என்றார்.வாத்தியார்.

ஐயா....அன்னிக்கு நான் நடந்துகிட்ட மாதிரி..ஒரு மாணவன் தப்பா நடந்துகிட்டு இருக்கான்..நீங்களும் அன்னிக்கு எனக்கு கொடுத்த அதே தண்டனையை கொடுத்திருக்கீங்க.அவன் பயத்திலே மயங்கி விழுந்திட்டான்.இது ஒரு பெரிய தவறாக என்று எனக்கு தெரியவில்லை,

உங்க மேலே ஏதவது புகார் வந்தா நான் பாத்துகிறேன்.நீங்க போங்க...கான்ஸ்டபிள் ...சாரை....நம்ம ஜீப்பிலே கொண்டு போய் வீட்டிலே விட்டுட்டு வா என்றார்,

இன்ஸ்பெக்டர் வாத்தியாரிடம் இன்றைய தலைமுறை தங்கள் ஆசிரியர்கள் சொல்வதைக்கேட்டு பொறுப்புடன் நடந்தால் எதிர்காலத்தில் சிறந்த குடிமகனாக திகழ்வார்கள் என்றார்.

உண்மைதான் உன்னைப்போல என்றார் கந்தசாமி வாத்தியார்.

Wednesday, February 12, 2025

5.நேர்மையின் வெற்றி

 



முனியன் 10 வயது சிறுவன்.அவனுக்கு தாய் மட்டும் இருக்கிறாள்.தந்தை முருகனின் சிறுவயதிலே காலமாகிவிட்டார்.முனியனின் அம்மா இரண்டு வீட்டில் வேலை செய்து வருகிறாள்.

முனியனின் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒருவர் நிலக்கடலை வியாபாரம் செய்யும் ஒருபெரிய கடையில் வேலை பார்த்து வருகிறார்.அவர் முனிய்னிட்ம் நான் உன்னை நன் வேலை பார்க்கும்கடைக்கு அழைத்து செல்கிறேன்.அங்கு என்ன வேலை கொடுத்தாலும் செய்கிறாயா என்று கேட்டார்?.

முனியனும் சரி என்று சொல்ல அவர் அவனை தான் வேலை பார்க்கும் கடைக்கு அழைத்து சென்றார்.

அந்த கடையின் மேலதிகாரி அவனிடம் என் கடையில் பல சிறுவர்கள் வேலை பார்க்கிறார்கள் .அவர்கள் நாங்கக் கொடுக்கும் வேர்க்கடலைகளை சிறிய பொட்டலமாக போட்டு ஒரு பொட்டலம் இரண்டு ரூபாய் என்று விற்றுக்கொடுப்பார்கள்.அது மதிரி நீ செய்யவேண்டும்,போக்குவரத்து சாலையில் சென்று அங்கே வரும் வாகனங்களிடமும் விற்கலாம்.அது உன் சாமர்த்தியம்.நீ எத்தனை பொட்டலம் விற்கிறாயோ அதன் படி உன்னுடைய சம்பளம் இருக்கும் என்றார்.

முனியனும் வேலையை  ஒத்துக்கொண்டு மிகவும் நேர்மையுடன் கொடுத்த வேலையைசெய்துவந்தான்.

ஒரு நாள் முனியன் சாலையில் ஒரு கார் சிக்னலில் நின்றுகொண்டிருந்ததுஅவரிடம் நிலக்கடலலை வாங்கிக்கொள்ளும்படி கேட்டான்.அவர் அவனுக்கு பத்து ரூபாய் கொடுத்தார்.பதிலுக்கு அவன் அவரிடம் 5 நிலக்கடலை  பொட்டலங்களை கொடுத்தான்.அவர் வாங்கவில்லை.

முனியன் அவரிடம் ஐயா ' நான் என் முதலாளிக்கு நேர்மையாகவும்,உண்மையாகவும் இருக்க விரும்புகிறேன்,என் உழைப்புக்கு கிடைத்த பணம் போதும்.இனாமாக வாங்கினால் நான் அவ்ருக்கு செய்யும் துரோகம் ஆகும் என்றான்.காரில் இருப்பவர் அவனிடம்நீ உன் முதலாளியை பார்த்திருக்காயா என்று கேட்டார்.அவன் இல்லை என்றான்.

அடுத்தநாள் அவனுக்கு முதலாளி அழைப்பதாக சொல்ல அவருடைய அறைக்கு சென்றான்

அவனுக்கு ஆச்சிரியம் .அவன்காரில் பார்த்தவர் தான் அவனுடைய முதலாளி.அவர் அவனிடம் முனியா உன் நேர்மையை பாராட்டுகிறேன், இனிமேல்நீ வேர்க்கடலை விற்க போகவேண்டாம்..நான் என் கம்பெனியில் ஒரு வேலை கொடுக்கிறேன்,அதற்கு முதலில் நீ  மூன்று மாதம்  பயிற்சி எடுக்கவேண்டும்.அதன்பின் நீ வேலையில் சேரலாம் என்றார்.

முனியனும் அவர் சொல் படி கேட்டு அந்த கம்பெனியில் படிபடியாக உய்ர் பதவிகளை அடைந்து முன்னேறினான்.

நேர்மையும் உண்மையுமாக உழைத்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம்.

Tuesday, February 11, 2025

4.உள்ளதைச் சொல்லும் கண்ணாடி

 





ரமேஷின் தாத்தா அடிக்கடி நிலைக்கண்ணாடியை பார்ப்பார்.பிறகு ஏதோ சிந்தனையில் ஆழ்ந்துவிடுவார்.

ரமேஷுக்கு ஆச்சரியம்.தாத்தா ஏன் அடிக்கடி கண்ணாடியை  உற்று உற்று பார்க்கிறார் என்று.அந்த கண்ணாடியில் அப்படி என்ன தான் இருக்கிறது..ஒரு வேளை மாயா ஜாலக் கண்ணாடியோ? அவனால் ஆவலை அடக்கமுடியவில்லை.

தாத்தாவை கேட்டான்

தாத்தா நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் கண்ணாடி சாதாரணக்கண்ணாடி தானே என்று கேட்டான்.ஆமாம் என்றார் தத்தா.

அதில் அப்படி என்ன தெரிகிறது என்றான்?

தாத்தா கூறினார், நான் பார்த்தால் என் முகம் தெரியும்,நீ பார்த்தால் உன் முகம் தெரியும்.

பின்னர் ஏன் நீங்கள் அடிக்கடி அதையே பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள் என்று வினவினான்.

தாத்தா சிரித்தார்.மேலும் தாத்தா கூறினார் இது சாதாரணகண்ணாடி தான்.ஆனால் அது தரும் பாடங்கள் நிறைய என்றார்,

ரமெஷுக்கு ஒன்றும் புரியவில்லை..பாடமா..?கண்ணாடியிடம் நாம் என்ன பாடம் பெற முடியும் என்று கேட்க

தாத்தா கூறலானார்.:கண்ணாடி சொல்லும்முதல் பாடம்:

நம் முகத்தில் ஏதேனும் அழுக்கோ கறையோ பட்டடுவிட்டால் கண்ணடியில் அது தெரிகிறது.அந்தக் கறையை கண்ணாடி கூட்டுவதுமில்லை,குறைப்பதுமில்லை.உள்ளதை உள்ளபடி காட்டுகிறது.அதுபோல உன் சகோதரனிடமும் நணபனிடமும் எந்த அளவுக்கு குறை இருக்கிறதோ அந்த அளவுக்குத்தான் சுட்டிக்காட்டவேண்டும்,எதையும் மிகையாகவோ ஜோடித்தோ சொல்லக்கூடாது.

கண்ணாடி சொல்லும் இரண்டாவது பாடம்:

கண்ணாடிக்கு முன்னால் நீ நிற்கும்போதுதான் உன் குறையைக்காட்டுகிறது,நீ அகன்றுவிட்டால் கண்ணாடி மௌனமாகிவிடும்,அதுபோல மற்றவரின் குறைகளை அவரிடம் நேரடியாகவே சுட்டிக்காட்டவேண்டும்.அவர் இல்லாதபோது முதுகுக்கு பின்னால்பேசக்கூடாது,

மூன்றாவது பாடம்

ஒருவருடைய முகக்கறையை கண்ணாடி காட்டியதால் அவர் அதன் மீது கோபப்படுவ்தில்லை.அதே போல் நம்மிடம் உள்ள குறைகளை யாரேனும் சுட்டிக்காட்டினால் அவர்மீது கோபமோ எரிச்சலோ படாமல் அந்த குறைகளை திருத்திக்கொள்ளவேண்டும்.

ரமேஷ் தாத்தாவை ஆரத்தழுவிக்கொண்டு கண்ணாடி உவமையில் இத்தனை கருத்துக்களா என்று ஆச்சிரியப்பட்டு நன்றி கூறினான்.

Wednesday, February 5, 2025

3. விரும்பி செய்யும் எந்த வேலையும் கடினமானதில்லை.





 முருகன் திண்டுக்கல் பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரு அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தான்.

அவனது தாய் தந்தை இருவரும் சிறிய அளவில் பாத்திரகடை ஒன்றை வைத்து வியாபாரம் செய்துவந்தனர்.

முருகனுக்கு படிப்பை விட வியாபாரத்தில் நாட்டம் அதிகம்.தினமும் சாயங்காலம் பள்ளி விட்டவுடன் கடைக்கு வந்து அவனது பெற்றோருக்கு வேண்டிய  உதவிகளை செய்வான்,

அவனுக்கு  பத்திரிகை  படிக்கும் பழக்கம் உண்டு, அதில் வரும் பெரிய பெரிய super market,departmental store  இவற்றை பார்த்துவிட்டு தன் கடையையும் இந்த மாதிரி கொண்டு வரவேண்டுமென்று நினைப்பான்.

அடுத்த நாள் பள்ளியில் டீச்சர் ஒவ்வொருவரிடமும் உங்கள் எதிர்கால ஆசை என்ன என்று கேட்டுக்கொண்டிருந்தார்.முருகன் முறை வந்ததும்  அவன் சொன்னான் ' எனக்கு படிப்பை விட வியாபாரம்' செய்ய  ஆசை. என.  பெற்றோரின் தொழிலை பெரிசு படுத்தவேண்டும் என்றான்.

டீச்சர் உடனே முருகா  நீ இப்பொழுதுபத்தாம் வகுப்பு படிக்கிறாய் .படிப்பிலும் ஓரளவுக்கு நீ நன்றாக படிக்கிறாய்,அதனால் இன்னும் இரண்டு வருடம்  படித்தால் பன்னிரண்டாவது முடித்துவிடுவாய்.அதற்கு பின் நீ உன் தொழிலை தொடரலாம்.

ஒவ்வொரு மாணவனும் அடிப்படை கல்வியான பன்னிரண்டாம் வகுப்பை முடித்திருக்கவேண்டும்.மேலும் நீ விருப்பபட்டால் அதற்கு பிறகு தொலைதூரகல்வி மூலம் நீ ஒரு டிகிரி வாங்கிவிடலாம்,அது உன் தொழிலை எவ்வாறு முன்னுக்கு கொண்டுவருவது பற்றி அறிய உதவும்.

விரும்பி செய்யும் எந்த தொழிலும் கடினமானதில்லை என்றார்.

Thursday, January 30, 2025

2. கல்விச் செல்வம்




 கருப்பன் ஒரு அரசுப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தான். அவன் ஒரு ஏழை.அவனது அப்பா அம்மா இருவரும் படிக்காதவர்ககள்.அரசாங்கம் அமைத்துள்ள ' 100நாள் வேலை' திட்டத்தில்  வேலை செய்பவர்கள். கருப்பனுக்கு வீட்டில் வழிகாட்ட யாரும் இல்லாததால் அவன் வகுப்பில் சுமாராகத்தன் படிப்பான்.

இதனால் அவனுடன்  படிக்கும் மற்ற சிறுவர்கள் அவனிடம் பேசுவதில்லை.அவனை குறை கூறிக்கொண்டேயிருப்பார்கள்.அதனால் வருத்தமடைந்த கருப்பன் வீட்டில் அவனது தந்தையிடம் கூறி அழுதான்.

அவனது தந்தை 'கருப்பா அழாதே.உன்னோடுயாரும் பேசாதபோது உன்னை குறைகூறும்போது உனக்கு கோபம் வரும்.அந்த சமயங்களில் நீ மௌனமாக இருப்பதே சிறந்தது.

மேலும் நீ படிக்கும் விஷயத்தில் கவன்ம் செலுத்து,புரியாதது எதுவும் இல்லை.மீண்டும் மீண்டும் படிக்க எல்லாம் புரியும்.வகுப்பில் முதல் மாணவனாக வருவதற்கு முயற்சி செய்.பின் உன் பின்னால் எல்லோரும் வருவார்கள் என்று அறிவுரை கூறினார்.

கருப்பனும் தந்தை சொல் கேட்டு நன்றாக படித்து வருடாந்திர தேர்வில் முதல் மதிப்பெண் எடுத்து வகுப்பில் சிறந்த மாணவனாக திகழ்ந்தான்.சக மாணவர்கள் அவனுடன் நணப்ர்களாக பழ்க ஆரமித்தனர்.

Tuesday, January 28, 2025

சிறுவ்ர் கதைகள்----- 1.எதிலும் குறை காணாதீர்கள்

 


1.எதிலும் குறை காணாதீர்கள்

---------------------------------------------------------

சிதம்பரத்திற்கு அருகே உள்ள ஒரு கிரமத்தில் சங்கரன் என்பவன் ஒரு ஹோட்டeலை நடத்தி வந்தான்.அந்த ஹோட்டல் நெடுஞ்சாலைக்கு அருகில் இருப்பதால் அவனுடைய ஹோட்டலுக்கு கூட்டம் அதிகம் வரும்.

சமீபகாலமாக அந்த ஹோட்டலின் இட்லியை விரும்பி சாப்பிடுபவர்கள் அதிகமாக இருந்தனர்.இட்லி மாவை அரைப்பதற்கு ஆட்கள் தேவைப்பட்டனர்.அடுத்த நாள்' ஆட்கள் தேவை' என விளம்பரம் செய்தான்.

விளம்பரத்தை பார்த்து ராமன் என்பவன் வந்தான்.அவனிடம் சங்கரன் ஒரு கிலோ அரிசியும் அதற்கு தேவையான உளுந்தும் கொடுத்து அரைக்க சொன்னான்.ராமன் அரைத்து முடித்தவுடன் இவனிடம் காண்பித்தான்.சங்கரன் உடனே அரைத்த பதம் போதாது 'வெண்ணெய்" போல் இருக்கவேண்டும் என்றான்.

இரண்டு முறை மீண்டும் மீண்டும் அரைத்தும் சங்கரன் திருப்தி அடையவில்லை.

மூன்றாம் முறையாக ராமன் உண்மையான வெண்ணையை கொண்டு வந்து காண்பித்தான்.அப்பொழுதும் சங்கரன் வெண்ணெய் போல் இருக்கவேண்டும் என்றான்.

உடனே ராமன் இந்த முறை நான் வெண்ணையைத்தான் கொண்டு வந்தேன்.அதுவும் மாவு என்று எண்ணி வேண்டுமென்றே குறை சொன்னீர்கள்.உங்கள் நோக்கம் குறை சொல்வதுதான் என்று தெரிந்து கொண்டேன்,இப்படிப்பட்ட ஒருவரிடம் நான் வேலை செய்ய விரும்பவில்லை என்று கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்,

நாமும் எப்பொழுதும் ஒருவர் செய்யும் வேலையை குறை கூறிக்கொண்டே இருக்கக்கூடாது,