Monday, June 28, 2010

31. "கர்வம் கூடாது"



ரமேஷ் புத்திசாலி மாணவன்...

அதனால் அவனுக்கு கர்வம் உண்டு...யாருடனும் நட்பு வைத்துக்கொள்ளமாட்டான்..எல்லோரும் அவனை விட அறிவில் மட்டமானவர்கள் என எண்ணம்.

மற்ற மாணவர்கள் அனைவரும் சேர்ந்து எப்படியாவது ரமேஷை ஏதாவது ஒரு பந்தயத்தில் தோற்கடித்து ...வல்லவனுக்கு வல்லவன் பூமியில் உண்டு என நிரூபிக்க வேண்டும் என எண்ணினர்

அப்போது ...அந்தப் பள்ளியில் புதிதாக சேர்ந்த வினோத் என்ற மாணவன் அந்தப் பணியை ஏற்றான்.

அவன் ரமேஷிடம் சென்று 'ரமேஷ் நீ புத்திசாலி ..அதேபோல நானும் உன்னைவிட புத்திசாலி தான்' என்றான்.

கோபமடைந்த ரமேஷ் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் ..'நான் ஒரு கேள்வி கேட்பேன் .உனக்கு விடை தெரியவில்லை எனில் நீ எனக்கு பத்து ரூபாய் தரவேண்டும்.நீ கேட்கும் கேள்விக்கு எனக்கு பதில் தெரியவில்லை என்றால் நான் நூறு ரூபாய் தருகிறேன்'என்றான்.ஆனால் அந்த கேள்விக்கு உனக்கு விடை தெரியவில்லை என்றால் கூட நீ பத்து ரூபாய் கொடுத்தால் போதும்' என்றான்.

பின் ரமேஷ் கேட்டான்'பூமிக்கும் ..சந்திரனுக்கும் இடையே எவ்வளவு தூரம்'.

வினோதிற்கு பதில் தெரியாததால் பத்து ரூபாயை ரமேஷிற்கு கொடுத்தான்.இப்போது வினோத் கேள்வி கேட்கவேண்டும்.

வினோத் கேட்டான்..

'மலை ஏறும்போது மூன்று கால்களுடன் ஏறி..இறங்கும்போது நான்கு கால்களுடன் இறங்கியது யார்'.

ரமேஷிற்கு விடை தெரியவில்லை.அதனால் ஒப்புக் கொண்டபடி நூறுரூபாயை வினோதிற்கு கொடுத்துவிட்டு ..விடையை நீயே சொல்' என்றான்.

'எனக்கும் தெரியாது'என்ற வினோத் பத்து ரூபாயை நீட்டினான்.அப்போது தான் கூறிய வார்த்தைகளை வைத்தே வினோத் தன்னை வென்றதை உணர்ந்து ரமேஷ் தலை குனிந்தான்.

அவன் கர்வம் மறைந்து அனைவருடனும் நட்பாக பழக ஆரம்பித்தான்.

Tuesday, June 22, 2010

30.மனதில் உறுதி வேண்டும்


அது ஒரு சிறு கிராமம்...அந்த கிராமத்தில் தண்ணீர் பிரச்னை வந்தது...மக்கள் எல்லாம் சேர்ந்து ஒரு கிணறு வெட்ட தீர்மானித்தனர்.ஒரு இடத்தை தீர்மானித்து ...அந்த இடத்தில் இருபது அடி ஆழம் தோண்டினர்.ஆனால் தண்ணீர் கிடைக்கவில்லை..

இடம் சரியில்லை என நினைத்து வேறொரு இடத்தை தேர்ந்தெடுத்து அங்கு முப்பது அடி வெட்டினர்.அங்கும் அவர்களுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை.

அந்த இடமும் சரியில்லை என மூன்றாவதாக ஒரு இடத்தை கண்டுபிடித்து அங்கு ஐம்பது அடி வெட்டினர்.தண்ணீர் இல்லை.

மூன்று இடங்களிலும் சேர்த்து அவர்கள் நூறடிக்கு மேல் தோண்டியுள்ளனர்.

அவர்கள் தங்கள் முயற்சியை ஒரே இடத்தில் பொறுமையுடன் மேற்கொண்டிருந்தால் முதலில் வெட்டிய இடத்திலேயே தண்ணீர் கிடைத்திருக்கும்.

மனதில் உறுதியுடன் செய்யும் காரியத்தில் ஈடுபடவேண்டும்....அப்போது தான் வெற்றி கிடைக்கும்.

எடுத்த காரியத்தில் கவனம் செலுத்தி மனதை ஒருமுகபடுத்தினால் வெற்றி நிச்சயம்.

Friday, June 11, 2010

29.முயன்றால் முடியாததில்லை


மூன்று தவளைகள் ஒன்றுக்கொன்று நண்பர்களாக இருந்தன.

ஒரு தவளை...மிகவும் சோம்பேறியாகவும்..தன்னால் எந்த வேலையும் செய்யமுடியாது என்றும் தாழ்வு மனப்பாமையுடன் இருந்தது.

இரண்டாவது தவளை ..எந்த விஷயத்திலும் எந்த முயற்சியும் செய்யாமல் ..எல்லாமே விதிப்படிதான் நடக்கும் என வேதாந்தம் பேசி வந்தது.

மூன்றாவது தவளையோ ..எந்த காரியத்திலும் முயற்சியை விடாது..விடா முயற்சி செய்து..வெற்றி பெற்று வந்தது.

ஒரு நாள் அவை மூன்றும் இருட்டில் போனபோது கிணறு வெட்ட வெட்டியிருந்த ஒரு பெரிய பள்ளத்தில் வீழ்ந்தன.

முதல் தவளை..'ஐயோ பள்ளத்தில் வீழ்ந்துவிட்டோமே..இனி வெளியே வரமுடியாதே' என அழுதவாறு இருந்தது.

இரண்டாவது தவளையோ...'நாம் பள்ளதில் விழ வேண்டும் என்பது விதி..நாம் வெளியே வரவேண்டும் என்று விதிக்கப்பட்டிருந்தால் வெளியே வருவோம் என சும்மா இருந்தது.

மூன்றாவது தவளையோ..கண்டிப்பாக என் முயற்சியால் நான் வெளியேறுவேன் என்று கூறி தாவி..தாவி.. குதிக்க ஆரம்பித்தது...

ஒரு கட்டத்தில்..மண்ணின் பக்கவாட்டத்திலிருந்த ஒரு கிளையில் அது தாவி உட்கார்ந்தது...அடுத்த தாவில் வெளியே வந்து விழுந்தது.,,

பின் தன் நண்பர்கள் நிலை குறித்து மனம் வருந்தி தன் வழியே சென்றது.

'முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார்'

எந்த ஒரு காரியமும் முயன்றால் வெற்றி அடையலாம்