Sunday, March 28, 2010

13 - புத்திசாலிச் சிறுவன்
ஒரு நாள் சில சிறுவர்கள் பந்து விளையாடிக் கொண்டிருந்தனர்.அச்சமயத்தில் ஒரு சிறுவன் உதைத்த பந்து அருகில் இருந்த மரத்தின் பொந்திற்குள் விழுந்தது.

பந்துக்கு சொந்தக்காரச் சிறுவன் அழ ஆரம்பித்தான்.

அந்தப் பந்தை பொந்திலிருந்து எப்படி எடுப்பது என்று யாருக்கும் தெரியவில்லை.

அப்பொழுது ஒரு புத்திசாலிச் சிறுவன் அருகிலிருந்த வீட்டிலிருந்து ஒரு வாளியில் தண்ணீரை எடுத்து வந்து பொந்திற்குள் கொட்ட பந்து எழும்பி தண்ணீரின் மேல் வந்தது. அந்த பந்தை எடுத்து உரிய சிறுவனிடம் ஒப்படைத்தான்.

எந்த ஒரு காரியத்திற்கும் சற்று சிந்தித்தால் அந்த சிக்கலில் இருந்து விடுபடலாம்.

Thursday, March 25, 2010

12 - செய்யும் தொழிலே சிறந்தது
பரந்தாமன் கல் உடைப்பவன்.கல் உடைப்பதைவிட நல்ல வேலை கிடைக்கக் கடவுளை வேண்டினான்.

ஒரு நாள் அவன் முன்னால் கடவுள் தோன்றி 'உனக்கு என்ன வேண்டும்' என்றார்'.


'சூரியன் உலகம் முழுக்கத் தெரியும்..நானும் அவ்வாறு தெரிய ஆசைப்படுகிறேன் எனவே'சூரியனாக வேண்டும் ' என்றான்.

கடவுள் சம்மதம் தெரிவிப்பதற்குள் சூரியனை மேகம் மறைத்தது . உடனே 'மேகம் ஆக வேண்டும்' என்றான்.

மேகத்தை மழை மேகங்கள் மறைக்க ..தான்' மழை மேகமாக' ஆக வேண்டும் என்றான்.

மேகம் மழையாகப் பெய்தபின் 'மழையாக' வேண்டும் என்றான்.

மழைநீர் நதியாக ஓடியதைப் பார்த்து 'நதியாக மாறவேண்டும்' என்று ஆசைப்பட்டான்.

ஓடி வந்த நதியை ஒரு பெரிய பாறாங்கல் தடுத்ததைப் பார்த்து 'கல்லாக வேண்டும்'என்றான்.

உடனே கடவுள் அந்தக் கல்லையே உடைக்கும் நீ சிறந்தவன் தானே..என்றார்.சற்று சிந்தித்த பரந்தாமன் ஆமாம்..ஆமாம்..என்றான்.

சிரித்த கடவுள்

'இருக்கும் இடமே சொர்க்கம்'
'இருக்கும் நிலையே நல்ல நிலை'
'செய்யும் தொழிலே சிறந்த தொழில்'

என்பதை அனைவரும் உண்ர்ந்து கொள்ள வேண்டும் என்றார்.

Monday, March 22, 2010

11 - நாயும் ... எலும்புத்துண்டும்
டாமி என்ற நாய்க்கு....ஒரு நாள் எலும்புத் துண்டு ஒன்று கிடைத்தது

எலும்பைக் கடித்து அதிக நாட்கள் ஆகிவிட்டபடியால் ..அது மிகவும் சந்தோஷத்துடன் எடுத்துக் கொண்டு ஓடியது.

வழியில்...ஒரு ஆற்றின் பாலத்தை அது கடக்க நேரிட்டது...

அப்போது ஆற்றின் நிழலில்.. இதன் நிழல் தெரிந்தது.ஆனால் டாமியோ..'வேறு ஒரு நாய் ஒன்று..தன்னை விட பெரிய எலும்புத் துண்டோடு..நிற்கிறது என எண்ணியது.

தன்னிடமிருப்பதைவிட ..அந்த எலும்புத் துண்டு சற்று பெரிதாக இருப்பதாக எண்ணியது.தண்ணீரில் தெரிந்த தன் நிழலுடன் சண்டைபோட்டு ...அதை பறிக்க திட்டமிட்டு தன் நிழலைப் பார்த்து குரைத்தது.

அப்போது ...அதன் வாயிலிருந்த எலும்புத்துண்டு தண்ணீரில் விழுந்தது.டாமி ஏமாந்தது.அதற்கு எதுவுமே இல்லாமல் போயிற்று.

இதனால் நாம் அறிவது என்னவென்றால்..நம் கையில் உள்ள பொருளை விட்டு ..மற்றவர் கையில் உள்ள பொருளுக்கு ஆசைப்படக்கூடாது.

Thursday, March 18, 2010

10 - நன்றி மறப்பது நன்றன்று


கண்ணனும் ...முருகனும் நல்ல நண்பர்கள்.ஒரு நாள் கடற்கரைக்குச் சென்ற இவர்கள்..மணலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்..அப்போது நடைபெற்ற விவாதத்தில் முருகனின் பேச்சு கண்ணனுக்கு கோபத்தை உண்டாக்க..அவனது கன்னத்தில் பளாரென அறைந்தான் கண்ணன்.

அடியை வாங்கிக்கொண்ட முருகன்..சற்று நேரம் திகைத்துவிட்டான்.பின் கடற்கரை மணலில் 'கண்ணன் என்னை அடித்தான்' என எழுதினான்.

பின் இருவரும் மௌனமாக வீடு திரும்பினர்..அப்போது வேகமாக வந்த கார் ஒன்று முருகனை இடிக்குமாறு வர..உடனே கண்ணன்...முருகனை இழுத்து..நடக்க இருந்த விபத்தை தவிர்த்தான்.

நன்றியுடன் முருகன்...பக்கத்தில் இருந்த கல் ஒன்றை எடுத்து..பெரிய பாறாங்கல் ஒன்றில் 'இன்று கண்ணன் என் உயிரைக் காப்பாற்றினான்' என செதுக்கினான்.

இதைக் கண்ட கண்ணன்..'நான் உன்னை அடித்ததை மண்ணில் எழுதினாய்..காப்பாற்றியதை கல்லில் எழுதினாயே..ஏன்'என்றான்.

அதற்கு முருகன் ..'ஒருவர் செய்த தீங்கை மணலில் எழுதினால் ...அதை அடுத்த நிமிடம் காற்று கலைத்துவிடும்...அதே வேளையில் செய்த நன்மையை கல்லில் எழுத ..அது அழியாமல் என்றும் நிற்கும்'என்றான்.

ஒருவர் செய்த தீமையை உடனே மறந்து விடவேண்டும்.அதே வேளையில் அவர்கள் செய்த நன்மையை என்றென்றும் மறக்கக்கூடாது என்பதையே இச் செயல் நமக்கு தெரிவிக்கிறது.

Sunday, March 14, 2010

9-'நன்மைக்கு நன்மையே நடக்கும்;


ஒரு நாள் கந்தன் தந்தையுடன் மலைகள் இருந்த பகுதி ஒன்றில் நடந்து சென்றுக் கொண்டிருந்தான்.அப்போது கால் தடுக்கி விழ நேரிட்டது...வலியால் 'ஆ'எனக் குரல் கொடுத்தான்..

'ஆ' என எதிரொலியும் கேட்டது...

கந்தனுக்கு ஒரே ஆச்சரியம்..

'யார் நீ 'என்றான்.

பதிலுக்கு 'யார் நீ' என்று கேட்டது...

'உன்னை பாராட்டுகிறேன்; என்றான்.

அதுவும் அப்படியே கூறிற்று.

அப்பாவிடம் கந்தன்..'அப்பா..என்னது இது;என்றான்.

அவன் அப்பா சொன்னார்..'கந்தா..இதன் பெயர் எதிரொலி' ஆகும். உண்மையில் நாம் என்ன சொல்கிறோமோ..அதையே இது திரும்பச்சொல்லும்.

நீ இப்போது..'நீ சொல்கிறபடி செய்கிறேன்' என்று சொல் என்றார்..

கந்தனும் ..அப்படியே சொல்ல..திரும்ப எதிரொலியும் 'நீ சொல்கிறபடி செய்கிறேன் 'என்றது.

கந்தா...இதிலிருந்து தெரிந்து கொள்..நல்லதோ..தீமையோ எது நாம் செய்தாலும் அதுவே நமக்குத் திரும்ப நடக்கும்.

இதைத்தான் இந்த எதிரொலி உணர்த்துகிறது.

ஆகவே எப்போதும் நாம் அனைவருக்கும் நல்லதே செய்ய வேண்டும் என்றார்.

Thursday, March 11, 2010

8.பால்காரனும் ...பேராசையும்


பால்காரன்...தன் மாட்டிலிருந்து கறந்த பாலை ஒரு குடத்தில் இட்டு....அதை தலையில் சுமந்தபடியே அடுத்த ஊருக்கு ..விற்க புறப்பட்டான்.

பாலை விற்றதும் என்ன செய்யலாம் என்று எண்ணமிட்டுக் கொண்டிருந்தான்.

இப்பாலை விற்று வரும் பணத்தில் நூறு கோழிகள் வாங்குவேன்...அவற்றை வளர்த்து சந்தையில் அதிக பணத்திற்கு விற்பேன்.

விற்று வந்த பணத்தில் மூன்று அல்லது நான்கு ஆட்டுக் குட்டிகளை வாங்குவேன்.வீட்டின் அருகில் உள்ள புல்வெளியில் அவை மேயும்..அவை வளர்ந்தவுடன் அவற்றை விற்று ஒரு பசுமாட்டை வாங்குவேன்.

அப்போது என்னிடம் பசுமாட்டின் எண்ணிக்கை அதிகரிக்கும்.அதனால் ஒரு குடத்திற்கு பதில் இரு குடத்தளவு பால் விற்க கிடைக்கும்.

அது விற்ற பணம் ஏராளமாய் கிடைக்கும்...அதில் சந்தோஷமாக இருப்பேன்,,,ஆனந்தக் கூத்தாடுவேன் என...தலையில் இருந்த குடத்திலிருந்து கைகளை எடுத்துவிட்டுக் குதித்தான்.

தலையில் இருந்த குடம் கீழே விழுந்து பால் முழுவதும் தெருவில் ஆறாய் ஓடியது.

அவனது பேராசை எண்ணங்கள்...இருந்ததையும் அவனை விட்டு ஓடிப்போகச் செய்தது.

பேராசை பெரு நஷ்டம்.

Sunday, March 7, 2010

'எல்லோரும் நல்லவரே'
ஒரு நாள் ஒரு புழு ஒன்று புல்வெளியில் தன் குட்டிப் புழுவுடன் விளையாடிக் கொண்டிருந்தது.

அதை மரக்கிளையில் அமர்ந்திருந்த புறா ஒன்று பார்த்தது.அதைக் கொத்தித் தின்ன விரும்பியது.அதை பார்த்த புழு அசையாமல் இருந்தது...புழுவின் இந்த செய்கை புறாவிற்கு வியப்பைத் தந்தது...'நான் உன்னை தின்ன வருவது தெரிந்ததும்..அசையாமல்..என்னிடம் பயம் இல்லாமல் இருக்கிறாயே..எப்படி' என்றது புறா.

'என் மனதிற்குள் ...நீ என்னை துன்புறுத்தமாட்டாய் என்றே தோன்றுகிறது'என்றது புழு.

'என் மனதில் உள்ளது உனக்கு எப்படித் தெரியும்'என புறாக் கேட்டது.

'உன்னைப் பார்த்ததும்..உன்னை என் தோழனாக நினைத்து விட்டேன்..நண்பனுக்கு ஆபத்து வந்தால் காப்பவன் நண்பன் அல்லவா..உயிர் காப்பான் தோழன் ஆயிற்றே..சரி..உனக்கு ஒன்று சொல்கிறேன்..வேடன் ஒருவன் வலைவீசி உன்னைப் பிடித்தால் உனக்கு வருத்தம் ஏற்படாதா ...? அதே போன்று தானே..நீ என்னைத் தின்றால் நானும் வருத்த மடைவேன்.

அது போலவே..அந்த வேடன் உன்னை விடுவித்தால்..நீ எவ்வளவு சந்தோஷம் அடைவாய்...நீயும் என்னை விட்டு விட்டால் நானும் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்..அதுதானே நட்பின் இலக்கணம் என்றது.

புறா...புழுவின் பேச்சுத் திறமையை பாராட்டி விட்டு புழுவை விட்டுச் சென்றது.

நல்ல குணம் கொண்ட புறா போன்றவர்கள் ஒருவருக்குக் கெடுதல் செய்யும்போது ..எடுத்துச் சொன்னால் தன்னைத் திருத்திக்கொள்வார்கள்.

உலகில் எல்லோரும் நல்லவர்களே!.

Thursday, March 4, 2010

புத்திசாலித்தனம்..
படிக்காத ஒருவன்...மெத்தப் படித்த ஒருவனும் அடுத்த ஊருக்குச் செல்ல புறப்பட்டனர்.படிக்காதவன் ஒரு பை நிறைய பணம் எடுத்துக்கொண்டான்.படித்தவனோ கையில் ஒன்றும் எடுத்துக்கொள்ளவில்லை.

சிறிது தூரம் அவர்கள் நடந்ததும் இருண்ட காடு வந்தது,காட்டினுள் நடந்தனர்..பசிக்கு.. அங்கு மரங்களில் பழுத்திருந்த பழங்களை உண்டனர்.

திடீரென ..திருடர்கள் கூட்டம் ஒன்று அவர்களை வழிமறித்தது.

படிக்காதவனிடம் இருந்த பணமூட்டையைக் கேட்க படிக்காதவன் கொடுக்க மறுக்க..அவனை நைய்யப் புடைத்து பணப்பையினை பிடுங்கிக் கொண்டார்கள்.

படித்தவனைப் பார்த்து..'உன்னிடம் இருப்பதையும் கொடு' என்றனர்....

படித்தவன் தன்னிடம் ஒன்றுமில்லை என்று கூறியதோடு திருடர் தலவனைப் புகழ்ந்து புத்திசாலித்தனமாக ஒரு இனிய பாடலைப் பாடினான்...பாடலைக் கேட்ட திருடர் தலைவன் மகிழ்ந்தான். படிக்காதவனிடமிருந்து பிடுங்கிய பணமூட்டையிலிருந்து சிறிது பணத்தை படித்தவனிடம் எடுத்துக் கொடுத்தான்.

ஒருவனது புத்திசாலித்தனம் அவனை ஆபத்துக் காலத்தில் காப்பாற்றும்.அதற்கு கல்வியறிவு அவசியம்.