Monday, November 28, 2011

96. ' பெருக்கத்து வேண்டும் பணிவு ' (நீதிக்கதை)
மோகன் நன்கு படிக்கும் மாணவன்.

அவன் வகுப்பில் அனைத்து தேர்வுகளிலும் First Rank வாங்கி வந்தான்.அதனால் அவனுக்கு சற்று கர்வம் இருந்து வந்தது.
சக மாணவர்களிடம் பழகும்போதும் கர்வத்துடனேயே பழகி வந்தான்.

அரையாண்டு தேர்வு வர இருந்தது...
மோகனின் பள்ளி ஆசிரியர் மற்ற மாணவர்களிடம் 'எல்லோரும் நன்கு படித்து ......மோகனைப்போல முதல் மதிப்பெண் எடுக்க முயற்சிக்க வேண்டும் என்றார்.

அதனால் மோகனுக்கு தலைக்கனம் அதிகமாகியது.

கர்வமும் ...தலைக்கனமும் சேர அவன் தேர்வுகளுக்கு சரியாக படிக்கவில்லை.

தேர்வுகள் முடிந்து மதிப்பெண்கள் வந்தபோது ....அவனது ரேங்க் 20 ஐ தாண்டியது.

ஆசிரியர் ...அவனிடம் அதற்கான காரணத்தைக் கேட்டபோது.....இந்த தடவை முதல் ரேங்க் எடுத்த சீனு சொன்னான்.
'சார்...நீங்கள் எப்போதும் மோகனைப் புகழ்வதால் ...அவனைப்போல வரவேண்டும் என நாங்கள் கஷ்டப்பட்டு படித்தோம்.ஆனால் அந்தப் புகழ்ச்சியால் கர்வம் அதிகமாக
மோகன் கவனம் படிப்பில் செல்லவில்லை' என்றான்.

சீனு கூறியதில் இருந்த உண்மையை உண்ர்ந்த ஆசிரியர் ...'மோகன் நாம் எந்த நிலையிலும் கர்வம் கொள்ளக்கூடாது...புகழ்ச்சி ஒருவனை மேலும் முன்னேறவிடாமல் தடுக்கும்...'என்றார் .மேலும் 'நான் உன்னை புகழ்ந்ததை உன்னை மேலும் ஊக்கிவிக்கத்தான் என்பதை உணர்ந்து கொள்' ' என்றார்.

ஆசிரியர் கூறியதை மோகனும் உணர்ந்து கொண்டான்.

நாமும் எப்போதும் நமக்கு ஈடு யாருமில்லையென்று கர்வமோ அகம்பாவமோ கொள்ளக்கூடாது.நம்மை விட வல்லவர்கள் எல்லா துறையிலும் உண்டு என்று எண்ணவேண்டும்.

Wednesday, November 23, 2011

95 .தைரியமாக இருப்போம் (நீதிக்கதை)ஒரு காட்டில் முயல்கள் கூட்டம் ஒன்று வசித்து வந்தது.

அவர்களுக்குள் ஒரு தாழ்வு மனப்பான்மை இருந்து வந்தது.

அதாவது முயல்கள் அனைத்தும் கோழைகளாக இருந்தன.'வேட்டைக்காரன் வந்ததும் நம்மைத்தான் வேட்டையாடுகிறான். சிங்கம், புலி போன்ற மிருகங்களும் நம்மைத்தான் அடித்து உண்ணுகின்றன.ஆகவே...நம் கூட்டம் இனி உயிர் வாழ்வதில் பயனில்லை,ஒன்றாக ஏதேனும் ஒரு குளத்தில் செத்து மடிவோம்' என முயல்களின் தலைவன் கூற
அனைத்தும் ஒரு குளத்தை நோக்கிச் சென்றன.

அந்தக் குளத்தில் நூற்றுக்கணக்கான தவளைகள் வசித்து வந்தன.அவை கரையில் அமர்ந்திருந்தன.முயல்கள் கூட்டமாக வருவதைப் பார்த்த  தவளைகளின் தலைவன்  'முயல்கள் கூட்டமாக நம்மைத்தாக்க வருகின்றன.நாம் கரையில் இருந்தால் ஆபத்துதான்.உடனே குளத்தினுள் சென்றுவிடுவோம்' என முடிவு செய்து குளத்தில் குதித்தன.

இதைப் பார்த்த முயல்கள்....'நாம் கோழைகள் தான் ..நமக்கு தைரியமில்லை தான்...ஆனாலும் நம்மைவிட தைரியமில்லாதவர்களும் இருக்கிறார்கள். இந்த தவளைகள் நமக்கு  பயப்படுகின்றன.அவைகளைப்  பொறுத்தவரை அவைகளைவிட நாம் தைரியசாலிகள்.ஆகவே நாம் செத்து மடியக்கூடாது....இனி தைரியத்தை வரவழைத்துக்கொண்டு....நம்மை யாரேனும் தாக்க நினைத்தால் நாலு கால் பாய்ச்சலில் தப்பிப்பிழைப்போம்' என்று கூறின.

உலகில் நம்மைவிட தைரியமில்லாதவர்களும் இருக்கிறார்கள்.ஆகவே நாம் எந்த சமயத்திலும் தைரியத்தை இழக்காமல் சாதனைகள் புரியவேண்டும்.

Sunday, November 20, 2011

குழந்தைகள் உலகம்.....தொடர் பதிவு
இந்த தொடருக்கு என்னை அழைத்த சாகம்பரிக்கு நன்றி.

இன்று குழந்தைகள் ..அந்த வயதில் நாம் இருந்ததைவிட புத்திசாலியாகத்தான் இருக்கிறார்கள்.அவர்களை வழி நடத்திச் செல்ல பெற்றோர்கள் அறிந்திருக்க வேண்டியவைகளே அதிகம்.ஆகவே இத் தொடர் பதிவில் பெற்றோர்கள் பற்றியே எழுதியுள்ளேன்.

மழலையர் உலகம்.....

ஆஹா..சூது..வாது இல்லாத உலகம்...மழலைச்சொல்..இசையைப்போல மனதை மயக்கக்கூடியது...அதனால் தான் வள்ளுவனும்

குழலினி தியாழினி தென்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.
                       -   என்றான்......

குழந்தைகள் மனம் நாம் சொல்வதை ' பளீச் ' என பிடித்துக் கொள்ளும்...பசுமரத்தாணிப்போல ...
அதனால் தான் பெரியவர்கள் குழந்தைகளிடம் பார்த்து பேசவேண்டும்.

குழந்தையிடம் 'பொய் பேசக்கூடாது' என்று அறிவுரை சொல்லிவிட்டு ...நாம் வீட்டிலிருந்தபடியே நம்மைத் தேடி வருபவரிடம் ' இல்லை' என்று சொல்லுமாறு குழந்தையைப் பணித்தால்...அந்தக் குழந்தைக்கு நம்மிடம் இருக்கும் மரியாதையும் போகும்..அதுவும் பொய் சொல்ல ஆரம்பிக்கும்.

தனியார் சேனல் ஒன்றில் சூப்பர் சிங்கர் போட்டிக்கு வரும் குழந்தைகளில் எத்தனைப் பேர் உண்மையில் மனமுவந்து வருகிறார்கள்.பெற்றோர்களின் சொல்லுக்கு கட்டுப்பட்டு வருகிறார்கள்...அதற்கு குழந்தைகளை எவ்வளவு பாடுபடுத்துகிறார்கள் என்பதை ..அக்குழந்தை தேர்வு ஆகவில்லையெனில் கண்டிக்கும் பெற்றோரையும் காணமுடிகிறது.

ஆனால் அதே சமயம்..என்னமாய் சுருதி பிசகாமல் பாடுகின்றனர் அவர்கள்...நம்மால் முடியாததை அவர்கள் சாதித்தை ஒவ்வொரு பெற்றோர் முகமும் காட்டியது.

குழந்தைகள் திறமை எதில் உள்ளதோ அதில் ஈடுபடுத்தவேண்டும்.அதை விடுத்து நாம் விரும்பும் துறையில் அவைகளை திசை திருப்பக்கூடாது.

குழந்தையின் மீது பெற்றோர் முழு நம்பிக்கை வைக்கவேண்டும்.உங்கள் குழந்தை உங்களுக்கு உயிர் என அக்குழந்தை உணருமாறு நடந்து கொள்ளவேண்டும்.

குழந்தையின் சாதனைகளை,திறமைகளை உடனுக்குடன் பாராட்டவேண்டும்.

சின்ன சின்ன தவறுகள் குற்றமல்ல என்று அவர்களுக்கு உணர்த்தி திருத்தவேண்டும்.

குழந்தைகளின் ரசனைகள் ஆச்சிரியமானவை.அவர்கள் குழந்தைகளாக இருக்கும் போதே தங்களால் எது முடியும் எது முடியாது என புரிந்து கொள்கிறார்கள்.

அவர்களின் திறனை வளர்க்க வாய்ப்புகளை பெற்றோர் ஏற்படுத்தித் தரவேண்டும்.

அவர்கள் பின்னால் என்றும் நின்று பொறுமையுடன் இருந்து அவர்களுக்கு ஆதரவு தர வேண்டும்.

அவர்கள் வேலையை அவர்களே செய்து கொள்ளும் திறனை பெற்றோர்கள் அவர்களிடம் ஏற்படுத்தவேண்டும்.

இதைச்செய்...உனக்கு அதை வாங்கித்தருகிறேன் என்றெல்லாம் சொல்லி வளர்க்காதீர்கள்...இப்பழக்கம்தான் பின்னாளில் ஒரு காரியத்தைச் செய்து முடிக்க ஆதாயம் உள்ளதா என்று அவர்களை நினைக்க வைக்கிறது.

இன்றைய குழந்தைகள் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவதாக பரவலாக ஒரு செய்தி உள்ளது.அவர்களிடம் பேசி அதை மாற்ற வேண்டியது பெற்றோர் கடமை.
ஆதரவாக பேசி அவர்கள் மன அழுத்தத்தை போக்குவதோடு அவர்களை ஊக்கப்படுத்துங்கள்.

எப்போதும் குழந்தைகளை குறை சொல்லிக்கொண்டே இருக்கக்கூடாது...குழந்தை செய்யும் செயலை பாராட்டுங்கள்.இதனால் தன்னைப் பற்றிய தாழ்வு மனப்பான்மை அவர்களிடம் அகலும்.

நம் குழந்தையை...அவையில் முந்திருப்பச் செய்ய வேண்டியது பெற்றோர் கடமை.

தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.

அப்படி தந்தை செய்தால் மகனும்(மகளும்)

மகன் தந்தைக் காற்றும் உதவி இவன் தந்தை
என்நோற்றான் கொல்லெனும் சொல்

என்பதற்கேற்ப நடப்பார்கள்.

அப்போதுதான் அவனை(ளை)ப் பெற்ற தாயும்

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோர் எனக்கேட்ட தாய்

என்பதற்கேற்ப மகிழ்ச்சியடைவாள்.

ஒரு ஜோக்:

குழந்தை: (வீட்டிற்கு வரும் விருந்தினரைப்பார்த்து) அம்மா..
          நேற்று இந்த மாமாவுக்கு இரட்டை நாக்கு என்று
           சொன்னே'''ஆனா ஒரு நாக்குத்தானே இருக்கு....
(மேற் சொன்ன துணுக்கில் தவறு யாருடையது?..)

அணைப்பு

அலுவலகத்திலிருந்து
அம்மா வருவதை
எதிர்பார்த்த குழந்தை..
அலுப்பாய் வந்த
அம்மாவிடம் திட்டும்,
ஆத்திரத்துடன் வந்த
அப்பாவிடம்
அடியும் வாங்கி
அழுதபடியே - பாசத்துடன்
அணைத்தது..தன்
இளவரசி சிண்ட்ரெல்லாவை...
Tuesday, November 15, 2011

94. 'புத்தி இல்லையேல் என் செய்வது' (நீதிக்கதை)
ஒரு கிராமத்தில் விவசாயி ஒருவன் இருந்தான்.அவன் கடுமையாக அவன் வயலில் உழைத்து தக்காளி பயிரிட்டு வந்தான்.

தக்காளி அமோகமாக விளையும்..அதில் சில சொத்தை தக்காளிகளும் இருக்கும்...அவற்றை அவன் ...தன் வீட்டில் இருக்கும் மாடுகளுக்கும்,ஆடுகளுக்கும் உணவாக போட்டு வந்தான்.

அவனது உழைப்பு,செய்கை,குணம் எல்லாவற்றையும் பார்த்த இறைவன் அந்த ஆண்டு அவன் வயலில் விளைந்த தக்காளி முழுவதையும் சொத்தை தக்காளியாக இல்லாமல் நல்லவைகளாகவே வளர அருளினார்.

அதைப்பார்த்த விவசாயி மிகவும் கவலைப்பட்டான் .ஊரார்..;ஏன் கவலையாக இருக்கிறாய்....? இந்த வருடம் தான் தக்காளிகள் நன்றாக விளைந்திருக்கிறதே..?' என்றனர்.

;என் வயலில் விளைந்த சொத்தை தக்காளிகளை ஆடுகளுக்கும் மாடுகளுக்கும் போட்டு வந்தேன்.இப்போது எல்லா தக்காளிகளும் நன்றாக இருப்பதால்...நான் அவற்றிற்கு போட சொத்தை தக்காளிக்கு எங்கு போவேன்...?' அதுதான் என் கவலை என்றான்.

கடினமாக உழைப்பவர்களாக இருந்தாலும் புத்தியை உபயோகிக்க தெரியாதவர்களுக்கு ...ஆண்டவன் அருள் கிடைத்தாலும் பயன் இல்லை...

Sunday, November 13, 2011

93. கேடு நினைக்கக்கூடாது (நீதிக்கதை)
ஒரு காட்டில் ...ஆடுகள் கூட்டம் கூட்டமாக போய் மேய்வது வழக்கம்.

அவ்வப்போது ...வழி தவறிப்போகும் ஆடுகளை ஓநாய் ஒன்று கொன்று உணவாக்கிக்கொள்வது வழக்கம்.

ஒரு நாள் அப்படி ஆடுகள் மேய்ந்துக் கொண்டிருந்த போது ...நரி ஒன்று அவற்றின் மீது பாய்ந்து ஆட்டுக்குட்டி ஒன்றை வாயில் கவ்விக் கொண்டு ஓட்டம் பிடித்தது.

அதைப்பார்த்த ஆடுகள் ...'மீண்டும் திருட்டு  ஓநாய்  வந்து ஆட்டைக் கவ்விக்கொண்டு ஓடுகிறதே!' எனக் கூச்சல் போட்டன.

ஆட்டுக்குட்டியை கவ்விக் கொண்டு ஓடிய நரி ஓநாயைப் பார்த்து 'ஓநாயே உன் மீது  இன்று எந்த தவறும் இல்லாதபோதும் அந்த ஆடுகள் உன் மேல் பழியை சுமத்துகின்றனவே' என்றது.

அதற்கு ஒநாய்.....'ஆடுகள் சொல்வதிலும் உண்மை உள்ளது.நான் பல முறை அவற்றின் மீது பாய்ந்து பல ஆடுகளைக் கவர்ந்து வந்திருக்கிறேன் .... ஆகவே எப்போது அவைகளுக்குக் கொடுமை நடந்தாலும் என் நினைவு வருகிறது' என்றது.

நாமும் யாருக்கும் எந்தக் காலத்திலும் சிறு கெடுதலும் செய்யக்கூடாது.அப்படி செய்தால் நாம் கெடுதல் செய்தவர்க்கு எந்த துன்பம் நேர்ந்தாலும் பழி நம்மை வந்துசேரும்.

Wednesday, November 2, 2011

92.கெட்டப் பழக்கங்களை விடவேண்டும்........(நீதிக்கதை)ரமேஷ்...தன் நண்பர்களை கேலி செய்வது....அவர்களுடன் சண்டையிடுவது..சரியாக படிப்பதில்லை..பொய் சொல்வது என கெட்டப்பழக்கங்கள் அதிகம் கொண்டவனாகத் திகழ்ந்தான்.

அன்று அவனது தந்தை...ரமேஷின் பள்ளி ஆசிரியரைப் பார்த்து....'ரமேஷிடம் இருக்கும் கெட்டப் பழக்கங்களை போக்குவது எப்படி..' என்றார்.

அதற்கு ஆசிரியர்...'இன்று மாலை அவனை என்னை சந்திக்கச் சொல்லுங்கள்' என்றார்.

மாலை ரமேஷ் ஆசிரியரைப் பார்க்க வந்தான்.

ஆசிரியர் அவனை அழைத்துக்கொண்டு மரங்கள் நிறைந்த தோப்பிற்குள் சென்றார்.

ரமேஷிடம் ஒரு சிறிய செடியைக் காட்டி அதைப் பிடுங்கச்சொன்னார். ரமேஷ் அதை வேருடன் பிடுங்கினான்.
பின்னர் சற்றே வளர்ந்த செடியை பிடுங்கச்சொன்னார்.ரமேஷும் சற்று கஷ்ட்டப்பட்டு அந்த செடியை வேருடன் பிடுங்கினான்.
பின் வளர்ந்த மரத்தை பிடுங்கச் சொன்னார்.ரமேஷ் எவ்வளவோ முயன்றும் அவனால் முடியவில்லை.

ஆசிரியர் சொன்னார். ';கெட்ட பழக்கங்களும் இப்படித்தான்..ஆரம்பத்திலேயே முயன்றால் திருத்திவிடலாம்.இல்லாவிட்டால் அவை மனதில் நன்கு வேரூன்றி விடும்.
பின்னர் அவற்றிலிருந்து விடுபடமுடியாமல் சமூகத்தில் அவன் கெட்டவன் என்ற பெயரிலேயே வாழ நேரிடும்' என்றார்.

புரிந்து கொண்ட ரமேஷ்...'அன்று முதல் நல்ல பையனாக நடந்து கொள்வதாக ஆசிரியருக்கு வாக்கு அளித்தான்.அதன்படியே நல்லவனாக மாறினான்.

கெட்ட பழக்கம் என்று தெரிந்தாலே அதை முளையிலேயே கிள்ளி விடவேண்டும்.