Monday, October 23, 2017

3. - தீமை செய்தால் தீமையே வரும்
ஒரு கிராமத்தில் கந்தன் என்பவர் வாழ்ந்து வந்தார்,
அவருடைய தோட்டத்தில் வெண்டைக்காய் நிறைய காய்த்திருக்கும்.
வாரம் ஒரு முறை அவற்றை பறித்து பையில் நிரப்பி தோளில்  வைத்துக்கொண்டு நான்கு கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கும் டவுன் வரை நடந்து சென்றே ரெகுலராக ஒரு மளிகை/காய்கறி கடையில் விற்று விட்டு வருவது வழக்கம். வெண்டைக்காயை கொடுத்துவிட்டு அதற்கு பதிலாக அரிசிபருப்பு,சர்க்கரை போன்ற  வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி வருவது வழக்கம்.

கந்தன் கொண்டு வரும் வெண்டைக்காயின் சுவை அந்த பகுதி மக்களிடையே மிகவும் பிரபலம். இதை பயன்படுத்தி மளிகைக் கடைக்காரரும் நல்ல லாபம் சம்பாதித்துவிடுவார்.

பல வருடமாக கந்தன் காயைக்கொண்டுவருவதால்  மளிகைக் கடைக்காரர் அதை எடை போட்டு பார்ப்பதில்லை,
கந்தன் சொல்லுகின்ற எடையை அப்படியே நம்பி அதற்கு
 ஈடான மளிகைப் பொருட்களை கொடுத்து அனுப்புவார்..
காரணம் கந்தனின் நேர்மையும் நாணயமும்  எல்லோரும் அறிந்ததே.

ஒரு நாள் கந்தன் பத்து கிலோ வெண்டைக்காயை கொடுத்துவிட்டு அதற்கான் பொருட்களை வாங்கிச் சென்றார்.
சிறிது நேரத்தில் பத்து கிலோ வெண்டைக்காயும்  மொத்தமாய் வேண்டும்
என்று ஒரு சமையல்காரர் வந்து  கேட்க அவருக்காக மளிகைகடைக்காரர் கந்தன் கொடுத்த வெண்டைக்காய்களை எடை போட ஒன்பது கிலோ தான் இருந்தது.

அன்று முழுவதும் மளிகைக்காரருக்கு தூக்கமே வரவில்லை..கந்தன் மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தோம்,இவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகத்தை செய்து விட்டாரே1
இத்தனை வருடங்களாக இப்படி முட்டாள்தனமாக எடை குறைவான வெண்டைக்காய்களை வாங்கி ஏமாந்துவிட்டோமே என்று புலம்பினார்.

அடுத்த முறை கந்தன் வந்தால் சும்மா விடக்கூடாது என்று கடுங்கோபத்தில் இருந்தார்.

நான்கு நாட்கள் கழித்து கந்தன் மிகவும் சந்தோஷமாக வந்தார்.
நல்ல விளைச்சல் என்பதால் நிறைய காய்கறிகளைக் கொண்டு வந்திருந்தார்.

'கையும் களவுமாக பிடிக்கவேண்டுமென்று எத்தனை கிலோ என்று மளிகைக்கடைக்காரர் கேட்க பத்து கிலோ  என்றார் கந்தன்.
அவர் முன்னாலே எடையை போட்டு பார்க்க ஒன்பது கிலோ தான் இருந்தது.

வந்த கோபத்தில் மளிகைக்காரர் பளார் பளார் என்று கந்தன் கன்னத்தில் அறைந்தார்.
இத்தனை வருடங்களாக இப்படித்தான் ஏமாத்திகிட்டு இருக்கியா?
கிராமத்துக் காரங்க ஏமாத்தமாட்டங்கன்னு நம்பித்தானே எடை போடாம அப்படியே வாங்கினேன்.இப்படி துரோகம் பண்ணிட்டியே "சீ" என துப்ப,நிலை குலைந்து போனார் கந்தன்.

அய்யா....என்னை மன்னிச்சிடுங்க.நான் ரொம்ப ஏழை.
எடைக்கல்லு வாங்கிற அளவுக்கு என் கிட்டே காசு இல்லீங்க,
ஒவ்வொரு முறையும் நீங்க கொடுக்கிற  ஒரு கிலோ சர்க்கரையை ஒரு தட்டுலேயும் இன்னொருட்தட்டிலே  காயயும் வைச்சுத்தான் கொண்டு வருவேன்.
இதைத்தவிர் வேற எதுவும் தெரியாதுங்கய்யா, என்று காலைப் பிடித்து அழ மளிகைக்காரருக்கு செருப்பால் அடித்தது போல் இருந்தது.

'தான் செய்த துரோகம்  தனக்கே வந்ததை உணர்ந்தார்1

இத்தனை வருடங்களாக கந்தனை ஏமாற்றிய  மளிகைக்காரரும் அவருக்கே தெரியாமல் ஏமாந்து கொண்டுதான் இருந்திருக்கிறார் என்பது
தெளிவானது..

நாம் எதை தருகிறோமோ
அதுதான் நமக்கு  திரும்ப வரும்
நல்லதை தந்தால் நல்லது வரும்
தீமையை தந்தால் தீமை வரும்.

ஆகவே நல்லதை மட்டுமே செய்வோம்,நல்லதை மட்டுமே விதைப்போம்.

Wednesday, October 18, 2017

2 -முயற்சி

கடவுளின் மீது பக்தி கொண்ட  கழுகு ஒன்று இருந்தது.தினமும் இறைவனை தியானம் செய்யும்.

அது வானில் பறந்தபடியே  கீழே மேய்ந்துகொண்டிருக்கும்  கோழிக்குஞ்சுகள்,ஓடி ஒளியும் எலி போன்றவற்றை பார்த்து சரேலென இறங்கி.அவற்றை கொத்திக்கொண்டு போய் பசி ஆறும்.

கடந்த சில தினங்களாக அதற்கு வயதானதால் வெளியே சுற்ற முடியவில்லை.உணவுக்கு ஏதேனும் வழி கிடைக்குமா என பார்த்தது.எதுவும் கிட்டவில்லை.

ஆகவே இறைவனை தியானித்து "ஆண்டவா" என்னால்  இன்று வெளியே போக முடியவில்லை.பசி வாட்டுகிறது.எனக்கு உண்ண ஏதாவது அளியுங்கள்,என வேண்டியது.

காலை,மாலை போய் இரவும் வந்தது.அதற்கு எதுவும் கிட்டவில்லை அதனால் இறைவன் மீது கோபமுற்று "இவ்வளவு நாள் உன்னை வேண்டிய உன் பக்தனுக்கு ஒரு வேளை உணவைக்கூட அளிக்காத இரக்கமற்றவனா நீ" என அரற்றியது.

இறைவன் அதன் முன் தோன்றி." கழுகே நீ காலையில் என்னை வேண்டியபோதே உனக்கான உணவைக் கொடுத்துவிட்டேன்,சற்று திரும்பிப்பார்" என்றார்.

கழுகு திரும்பி பார்க்க ஒரு செத்த எலி  கிடந்தது.' நான் உனக்கு உணவினை கொடுத்தாலும் அதற்கான சிறு முயற்ச்சியாவது நீ செய்யவேண்டும்.நீ அப்படி முயலாதது உன் தவறு' என்று கூறி மறைந்தார்.

நமக்கு எல்லாமே இறைவன் என்றாலும்...நமக்கு வேண்டியதை அவர் அளித்தாலும் அதற்கான நம் முயற்சியும் சிறிதளவாவது இருக்கவேண்டும் என்பதே இக்கதையின் நீதி.

Monday, September 25, 2017

1 - நான் ஒரு முட்டாளுங்க - நீதிக்கதை


ஒரு பெரிய குரு இருந்தார். முற்றும் துறந்தவர். எல்லாம் கற்றவர். அவரை ஒரு பிரசங்கம் செய்யக் கூப்பிட்டிருந்தாங்க.
பத்தாயிரம் பேர் வருவாங்கனு சொல்லியிருந்தாங்க. அவரை அழைச்சிட்டு வர ஒரு குதிரைக் காரன் போயிருந்தான். அன்னிக்குன்னு பார்த்து ஊரில் பயங்கர மழை. கூட்டம் கேன்சலாகி எல்லோரும் கலைஞ்சு போயிட்டாங்க.
குரு வந்தபோது அங்கே யாருமே இல்லை. பேசறதுக்காக நிறையத் தயார் பண்ணிட்டு வந்த குருவுக்கோ ஏமாற்றம். இருக்கிற ஒரு குதிரைக்காரனுக்காக மட்டும் பிரசங்கம் பண்ணவும் மனசில்லை.
'என்னப்பா பண்ண லாம்?’னு கேட்டார்.
‘அய்யா! நான் குதிரைக் காரன்... எனக்கு ஒண்ணும் தெரியாதுங்க. ஆனா ஒண்ணே ஒண்ணு தெரியுங்க... நான் முப்பது குதிரை வளர்க்கிறேன். புல்லு வைக்கப் போறப்போ எல்லாக் குதிரையும் வெளியே போயி, அங்கே ஒரே ஒரு குதிரை மட்டும்தான் இருக்குதுனு வெச்சுக்கோங்க. நான் அந்த ஒரு குதிரைக்குத் தேவையான புல்லை வெச்சிட்டுத்தாங்க திரும்புவேன்’னான்.
பொளேர்னு அறைஞ்ச மாதிரி இருந்தது குருவுக்கு. அந்தக் குதிரைக்காரனுக்கு ஒரு ‘சபாஷ்’ போட்டுட்டு, அவனுக்கு மட்டும் தன் பிரசங்கத்தை ஆரம்பிச்சார். தத்துவம், மந்திரம், பாவம், புண்ணியம், சொர்க்கம், நரகம்னு சரமாரியா போட்டுத் தாக்கி பிரமாதப் படுத்திட்டார் குரு. பிரசங்கம் முடிஞ்சுது. ‘எப்படிப்பா இருந்தது என் பேச்சு?’னு அவனைப் பார்த்து பெருமையா கேட்டார் குரு.
‘அய்யா... நான் குதிரைக்காரன். எனக்கு ஒண்ணும் தெரியாதுங்க. ஆனா ஒண்ணே ஒண்ணு தெரியுங்க... நான் புல்லு வைக்கப் போற இடத்தில் ஒரு குதிரைதான் இருந்துச்சுன்னா, நான் அதுக்கு மட்டும்தான் புல்லு வெப்பேன். முப்பது குதிரைக்கான புல்லையும் அந்த ஒரு குதிரைக்கே கொட்டிட்டு வர மாட்டேன்!’னான். அவ்ளோதான்... குரு தெறிச்சிட்டார்!
நீதி...மத்தவங்களுக்கு என்ன தேவையோ, அல்லது எது சொன்னா புரியுமோ அதை மட்டும் சொல்லனும்...புரியாத, தேவையில்லாத விஷயங்களை மெனக்கெட்டு சொல்றது நம்மை தான் முட்டாளாக்கும் !!!

Saturday, May 27, 2017

இயேசு கூறிய உவமைகள் 8- காணாமல் போன காசு

(இது இயேசு தனது போதனைகளின் போது கூறிய உவமானக்கதையாகும்)

இயேசுவை பரிசேயர்., பாவிகளுடன் சேர்ந்து அவர்களுக்கு போதிக்கிறார் எனக் குற்றம் சாட்டியபோது, மனம் திரும்புதல் பற்றி கூறிய மூன்று   உவமைகளில் இரண்டாவதாகும்

நீதிமான்களுக்கின்றி பாவிகளுக்கே  இயேசு அதிகம் தேவை என்பதை வலியுறுத்தும் முகமாகக் கூறப்பட்டது

காணாமல் போன ஆடு, ஊதாரி மைந்தன் ஆகிய உவமைகள் ஒரே பொருளைக் கொண்டிருக்கின்றன

ஒரு பெண்ணிடம் இருந்த பத்து வெள்ளிக் காசுகளில் ஒன்று காணாமல் போய் விட்டாலும், எண்ணெய் விளக்கேற்றி வீட்டைப் பெருக்கி அதைக் கண்டு பிடிக்கும் வரை கவனமாகத் தேடி, அது கிடைத்ததும், காணாமல் போன காசைக் கண்டு பிடித்து விட்டேன் என மற்றவருடன் அந்த மகிழ்ச்சியைப் பங்கிட்டுக் கொள்கிறாள்

காணாமல் போன காசு பாவ வழியில் சென்று கடவுளை விட்டு தூரமாக இருக்கும் மனிதரை குறிக்கிறது.அவன் மீண்டும் கடவுளிடம் திரும்பும் போது விண்ணரசில் மிக மகிழ்ச்சி உண்டாகும்

Tuesday, May 23, 2017

இயேசு கூறிய உவமானக் கதைகள் 7- காணாமல் போன ஆடு

(இது தனது போதனைகளின் போது இயேசு கூறிய உவமையாகும்.இயேசு பாவிகளுடன் சேர்ந்து, அவர்களுக்கு போதிக்கிறார் என பரிசேயர்கள் கூறிய போது சொன்னது இது)

ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளுள் ஒரு ஆடு காணாமல் போகிறது.அவர் மீதமுள்ள 99 ஆடுகளையும் பாலை நிலத்தில் விட்டு விட்டு, காணாமல் போனதைக் கண்டுபிடிக்கச் செல்வார்.

கண்டுபிடித்ததும், அவர் அதை மகிழ்வுடன் தன் தோள்களில் போட்டுக் கொள்வார்.வீட்டுக்கு வந்து நண்பர்களையும், அண்டை வீட்டாரையும் அழைத்து, "காணாமல் போன ஆட்டைக் கண்டு பிடித்ததாகக் கூறி மகிழ்வார்.

இங்கு, காணாமல் போனதாகச் சொன்ன ஆடு, பாவ வழியில் சென்று, கடவுளை விட்டு தூரமாக உள்ள மனிதரை குறிக்கிறது.அவன், மீண்டும் கடவுளிடம் திரும்பும் போது விண்ணரசில் மிகவும் மகிழ்ச்சி ஏற்படும்.மனம் மாறா 99 நேர்மையானவர்களையும் குறித்த மகிழ்ச்சியை விட, மனம் மாறிய பாவியைக் கண்டே மகிழ்ச்சி உண்டாகும்.

Monday, May 22, 2017

இயேசு கூறிய உவமானக் கதைகள் 6- கனிகொடா அத்திமரம்

(பாவ வழிகளை விட்டு திரும்பாதவர்களுக்கு நடக்க இருப்பதை விளக்கும் கதை இது.)

ஒருவர் தமது திராட்சைத் தோட்டத்தில் அத்திமரம் ஒன்றை நட்டு வைத்திருந்தார்.அவர் வந்து அதில் கனியைத் தேடிய போது எதையும் காணவில்லை

உடனே , அவர் தோட்டக்காரரைக் கூப்பிட்டு, " மூன்று ஆண்டுகளாக இம்மரத்தில் கனியைத் தேடி வருகிறேன்.ஆனால் எதையும் காணவில்லை.ஆகவே இம்மரத்தை வெட்டி விடுங்கள்.இது ஏன் இடத்தை வீணாய் அடைத்துக் கொண்டிருக்க வேண்டும்?" என்றார்

ஆனால், தோட்டக்காரரஓ, "இந்த ஆண்டும் இதை விட்டு வையுங்கள்.நான் இதற்கான எருக்களைப் போட்டு கொத்தி விடுகிறேன்.அப்படிச் செய்தும், அடுத்த ஆண்டும் கனையைக் கொடுக்காவிட்டால் வெட்டிவிடலாம்" என்றார்.

இதில், தோட்டஉரிமையாளர் கடவுளாகும். தோட்டக்காரர் பரிசுத்த ஆவியாகும்.ஒரு மனிதனுக்கு கடவுள் அவனது பாவ வழிகளை விட்டுத் திரும்ப பல சந்தர்ப்பங்களைக் கொடுப்பார்.ஆனால் பலன் இல்லாது போனால் கனி கொடாத அத்திமரம் வெட்டப்பட்டது போல நரகத்தில் தள்ளப்படுவார்  

Wednesday, May 17, 2017

இயேசு கூறிய உவமானக் கதைகள் 5- ஊதாரி மைந்தன்

(இயேசு போதித்துக்கொண்டிருந்த போது, ஒருநாள், அன்றைய சமூகத்தில் பாவம் செய்பவர்களாகக் கருதப்பட்ட ஆயக்காரர் (வரி வசூலிப்பவர்), பாவிகள் (கொடிய வியாதிகளால் பாதிக்கப்பட்டவர்கள் பாவம் செய்தவர்களாகக் கருதப்பட்டனர்) அவரது போதனையை கேட்கும்படி அவரிடம் வந்து சேர்ந்தனர்.அப்பொழுது, தங்களை பாவம் அறியாதவர்களாக எண்ணிக் கொண்ட பரிசேயரும்,வேதபாரகரும் (யூத கோயில் மத குருகள்) தமக்குள், இயேசு பாவம் செய்தவர்களை ஏற்றுக் கொண்டு அவர்களுடன் உணவருந்துகிறார் என்றனர்.அப்போது இயேசு கூறிய உவமை இதுவாகும்)

ஒரு மனிதனுக்கு இரண்டு மகன் கள் இருந்தனர்.அவர்களில் இளையவன் தன் தகப்பனிடம், சொத்தில் தன் பங்கைத் தரும்படி கூறினான்.தகப்பனும், தன் மகன் களுக்கு சொத்தைப் பிரித்தார்.

இளைய மகன் எல்லாவற்றையும்  விற்று சேர்த்துக் கொண்டு..வெளிதேசத்திற்குச் சென்று..அங்கேயே தீய வழிகளில் வாழ்ந்து சொத்துகளை அழித்தான்.எல்லாவற்றையும்  அழித்தப் பின்னர், அந்நாட்டில் திடீரென கொடிய பஞ்சம் ஏற்பட்டது.அவன், வயல்களில் பன்றிகள் மேய்க்கும் குடியானவனிடம் வேலைக்கு சேர்ந்தான்.பன்றிகள் தின்னும் தவிட்டயாவது தின்னலாம் என எண்ணினான்.ஆனால், அதுவும் அவனுக்குக் கிடைக்கவில்லை

நாளடைவில், அவனுக்கு புத்தி தெளிந்தது."என் தகப்பனிடம் எத்தனையோ வேலையாளர்ககலுக்கான சாப்பாடு இருக்கின்றது.நானோ பசியால் சாகிறேன்..நான் என் தகப்பனிடம் சென்று...தகப்பனே! இறைவனுக்கு எதிராகவும், உனக்கு முன்னதாகவும் பாவஞ் செய்தேன்.உன் குமாரன் எனச் சொல்ல தகுதியற்றவன்.என்னை உங்களது வேலையாளிகளில் ஒருவனாக வைத்துக் கொள்ளுங்கள்" என எண்ணி தன் தகப்பனிடம் வந்தான்

அவனைக் கண்டதும், தகப்பன் கட்டித்தழுவி முத்தமிட்டான்.மகனானவன் தகப்பனுக்கு தந்தையே .இறைவனுக்கு எதிராகவும், உமக்கு  முன்பும் பாவஞ்செய்தேன்."என்றான்

தந்தை தன் வேலையாட்களிடம், உயர்ந்த ஆடைகளைக் கொணரச் செய்து அவனுக்கு அணிவித்தான்.கைக்கு மோதிரத்தையும், கால்களுக்கு காலணிகளையும் அளித்தான்.இறந்த தன் குமரன் மீண்டும் உயிர் பெற்றுள்ளான் என மகிழ்ந்து விருந்தளித்தான்

வயல் வேலைகளிலிருந்து திரும்பிய மூத்த மகன் நடந்த விஷயங்களை அறிந்து, கோபமுற்று, வீட்டினுள் செல்லாமல் வெளியே இருந்தான்

தகப்பன் வெளியே வந்து அவனை வருந்தியழைத்தார்

அவனோ, " நான் உங்கள் கட்டளையை மீறாமல் இவ்வளவு நாட்கள் உழைத்தேன்.ஆனால் என்னை நீங்கள் போற்றவில்லை.உமது இந்த மகன் எல்லா கெட்ட வழிகளிலும் ஈடுபட்டு சொத்துகளை அழித்துவிட்டு வந்த பின் அவனுக்கு விருந்து அளித்து கௌரவிக்கிறீர்கள்" என்றான்

அதற்குத்  தகப்பன், ",மகனே! நீ எப்போதும் என்னுடன் இருக்கின்றாய்.எனக்கானது எல்லாம் உன்னுடையதாகி விட்டது.
உன் சகோதரனான இவனோ இறந்தான்.மீண்டும் உயிர்ப்பித்தான்.காணாமல் போனவன் மீண்டும் காணப்பட்டான்.ஆகவே நாம் மகிழ்ச்சியாய் இருக்க வேண்டாமா?" என்றார்

( ஆயிரம் நல்லவர்கள் , நல்வழியில் வாழ்ந்தாலும், மனம் திருந்திய கெட்டவனால் இறைவன் மிகுந்த இன்பம் அடைவார்.
எவ்வளவு பாவம் செய்து தவறிப்போனாலும், பாவங்களை உணர்ந்து இறைவனிடம் திரும்பும் போது இறைவன் அவனை மன்னித்து ஏற்பார்)

Monday, May 15, 2017

இயேசு கூறிய உவமானக் கதைகள் 4- இரவில் வந்த நண்பன்

(இயேசுவின் காலத்தில் யூதாவில் காணப்பட்ட வீடுகளில் இரவில் உறங்குகையில் முன் கதவை மூடி அதன் பின்னால் உறங்குவது வழக்கம்.ஆகவே இரவில் யாரும் கதவைத் திறக்க வேண்டுமாயின் எல்லோரும் தூக்கத்திலிருந்து எழ வேண்டும்)

ஒருவர் தன் நண்பரிடம் நள்ளிரவில் சென்று "நண்பா..மூன்று அப்பங்களை எனக்குக் கடனாகக் கொடு, எனது நண்பர் ஒருவர் பயணம் செய்யும் வழியில் என்னைப் பார்க்க வந்துள்ளார்.அவருக்குக் கொடுக்க என்னிடம் ஒன்றுமில்லை" என்றான்

அதற்கு உள்ளே இருப்போர், "எனக்குத் தொல்லைக் கொடுக்காதே.ஏற்கனவே கதவைப் பூட்டியாயிற்று.என் பிள்ளைகளும் என்னுடன் படுத்துள்ளனர்.நான் எழுந்து உனக்கு ஏதும் தரமுடியாது" என்றார்

ஆயினும், அவர் விடாது கதவைத் தட்டிக் கொண்டிருந்த படியால், அவர் தொல்லையின் பொருட்டாவது எழுந்து அவருக்குத் தேவையானதைக் கொடுத்தார்

பின்னர், இயேசு இன்னுமொரு உவமையைக் கூறி, மேலே சொன்னதைத் தெளிவாக்கினார்

மக்களை நோக்கி , "பிள்ளை மீனைக் கேட்டால் உங்களுள் எந்தத் தந்தை யாவது மீனுக்குப் பதிலாக பாம்பைக் கொடுப்பாரோ! முட்டையைக் கேட்டால் அவர் தேளைக் கொடுப்பாரா?  நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிந்துள்ளீர்கள்.அப்படியாயின் விண்ணுலகத் தந்தை தம்மிடம் கேட்போருக்குத் தூய ஆவியைக் கொடுப்பது எத்தனை உறுதி என்றார்

முதலில் சொன்ன அப்ப உவமை இடைவிடாத ஜெபத்தைக் குறிக்கிறது.பின்னுரை உவமையின் பொருளை விளக்குகிறது

(கேளுங்கள் உங்களுக்குக் கொடுக்கப்படும்.தேடுங்கள் நீங்கள் கண்டடைவீர்கள்.தட்டுங்கள் உங்களுக்குத் திறக்கப் படும்.ஏனெனில், கேட்போர் எல்லோரும் பெறுகின்றனர்.தேடுவோர் கண்டடைகின்றனர்.தட்டுவோருக்குத் திறக்கப்படும்)

Thursday, May 11, 2017

இயேசு கூறிய உவமானக்கதைகள் 3- இரண்டு மகன்கள்

(இது தனது போதனையின் போது கூறிய கதையாகும்)

இயேசு ஆலயத்திற்குள் போதித்துக் கொண்டிருந்த போது, தலைமைக் குருக்களும், மக்களின் முப்பர்களும் அவரை அணுகி, "எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தது யார்?" என்று வினவ இயேசு இவ்வுவமையைக் கூறினார்

ஒரு மனிதருக்கு இரண்டு புதல்வர்கள் இருந்தனர்.

மூத்த மகனிடம் சென்ற தந்தை, "மகனே! நீ இன்று திராட்சைத் தோட்டத்திற்குச் சென்று வேலை செய்" என்றார்

அதற்கு மூத்த மகன் "நான் போக விரும்பவில்லை" என்றான்.பின்னர், தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டு போய் வேலை செய்தான்.

தந்தை அடுத்த மகனிடம் சென்றும் இதையேச் சொன்னார்

அவன் "நான் போகிறேன்:" என்றான்.ஆனால் போகவில்லை

முதலில் போக மறுத்து, பின் மனம் மாறிச் சென்றவன் பாவிகளாக இருந்து மனம் மாறியவரைக் குறிக்கிறது.இவர்கள், முதலில் கடவுளின் சொல் கேளாமல் நடந்தனர்.பின் மனம் மாறி கடவுள் சொற்படி நடந்தனர்

முதலில் போகிறேன் என்று சொல்லி பின் போகாமல் இருந்த இரண்டாமவன், கடவுள் சொன்னதை செய்வதாகக் கூறி வெளி வேடமிட்டவன் ஆகிறான்.இப்படிப்பட்டவன், விண்ணரசில் இடம் பிடிக்க மாட்டார்கள் என்பது இவ்வுவமையின் பொருளாகும்

Wednesday, May 10, 2017

இயேசு கூறிய உவமானக் கதைகள் - 2- இரண்டு கடன்காரர்கள்

(இக்கதை மனம் திருந்துதல் பற்றிக் கூறப்பட்ட உவமையாகும்)

சீமோன் என்னும் பரிசேயர் வீட்டில் உண்பதற்காக இயேசு சென்றிருந்த போது கூறிய கதையாகும்

இயேசுவை சீமோன் என்னும் பரிசேயர், தம்மோடு உணவு உண்ண அழைத்திருந்தார்.

இயேசுவும், சென்று பந்தியில் அமர்ந்தார்.

அந்நகரில் மிகவும் பாவியான் பெண் ஒருத்தி இருந்தாள்.

இயேசு, பரிசேயர் வீட்டில் உணவு உண்ணப் போகிறார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டு, அப்பெண், நறுமணத்தைலம் கொண்ட படிகச் சிமிழைக் கொண்டு வந்தார்.இயேசுவிற்குப் பின்னால் கால் மாட்டில் வந்து அழுது கொண்டே நின்றார்.அவரது காலடிகளை தன் கண்ணீரால் நனைத்து, தம் கூந்தலால் துடைத்து..தொடர்ந்து முத்தமிட்டு, அக்காலடிகளில் நறுமணத்தைலம் பூசினார்

சீமோன் இதைக் கண்டு, "இவர் ஓர் இறைவாக்கினர் எனில், தம்மைத் தொடும் இப்பெண் யார், எத்தகையவள் என அறிந்திருக்க வேண்டுமே.இவள் பாவியாயிற்றே1" என எண்ணினார்

அவர் தனக்குள் சொல்லிக் கொள்வதை அறிந்த இயேசு, சீமோனிடம்  ,கேள்வியாக  ஒரு உவமையைக்  கூறினார்

"கடன் கொடுப்பவர் ஒருவரிடம் ஒருவர் ஐந்தூறு தெனாரியமும், மற்றவர் ஐம்பது தெனாரியமும் கடன் பட்டிருந்தனர்.கடனைத் தீர்க்க அவர்களால் இயலாமற் போனதால், இருவர் கடனையும் அவர் தள்ளுபடி செய்தார்.இவர்களில் யார் அவரிடம் அதிக அன்பு காட்டுவார்?"

சிமோன் அதற்கு  பதிலாக , "அதிகக் கடன் பெற்றவர் எவரோ அவரே" என்றார்.

இயேசு அவரிடம் " நீர் சொன்னது சரியே" என்றவர், அப்பெண்னை நோக்கித் திரும்பி, :இவரைப் பார்த்தீரா! நான் வீட்டிற்குள் வந்த போது நீர் என் கால்களைக் கழுவ தண்ணீர் தரவில்லை.இவரோ தன் கண்ணீரால் என் கால்களைக் கழுவினார்.தன் கூந்தலால் துடைத்தார்.என் காலடிகளுக்கு ஓயாமல் முத்தமிட்டார்..நறுமணத் தைலம் பூசினார்,இவர் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டன.ஏனெனில் இவர் மிகுதியாக அன்பு கூர்ந்தார்.குறைவாக மன்னிப்புப் பெறுவோர் குறைவாக அன்பு செலுத்துவோர் ஆவர்" என்றார்

இவ்வுமமையின் பொருள்- கடவுளை அதிகமாக அன்பு செய்தால் அவர் கூடுதலான பாவங்களை மன்னிக்கிறார்

(பரி சேயர் என்றால் பிரித்தெடுக்கப்பட்டக் கூட்டம் எனப் பொருள்.வேதப்பிரமாணத்திற்கு ஜெப ஆலயங்களில் விளக்கம் கொடுக்கும் கிறித்துவர்கள் இவர்கள்.மிகவும் செல்வாக்கு மிக்கவராய்த் திகழ்ந்தார்கள்)

Sunday, May 7, 2017

இயேசு கூறிய கதைகள் 1- இரக்கமற்ற பணியாளன்(இயேசுபிரான் தன் போதனைகளின் போது கூறிய உவமானக்கதை இது.
இயேசுவின் சீடரான பேதுரு,' தன் சகோதரர், சகோதரிகளில் ஒருவர் தனக்கு எதிராக பாவம் செய்தால்,எத்தனை முறை அவரை மன்னிக்கலாம்' என்று கேட்டபோது சொன்னது இது.பாவமன்னிப்பை  பற்றியது.)


அரசர் ஒருவர் தன் பணியாளர்களிடம்  கணக்குக் கேட்க விரும்பினார்

அவர் கணக்குப் பார்க்கத் தொடங்கிய போது, அவரிடம் பத்தாயிரம் தாலந்து கடன் பட்ட ஒருவனைக் கொண்டு வந்தனர்

அவன், பணத்தைத் திருப்பிக் கொடுக்க முடியாத நிலையில் இருந்தான்.

ஆனால், அரசரோ, அவனையும், அவன் மனைவி மக்களோடு உடமைகள் யாவற்றையும் விற்றுப் பணத்தைத் திருப்பி அடைக்க ஆணையிட்டார்

உடன், அப்பணியாள், அவர் காலடிகளில் பணிந்து , "என்னைப் பொருத்தருள வேண்டும்.விரைவில் கடனைத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்" என்றான்

அவன் மீது பரிதாபம் கொண்டு மன்னன், அவனை விடுவித்ததுடன், அவன் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்தார்

அப்பணியாள் வெளியே சென்றதும், அவனிடம் நூறு தெனரியம் கடன் பட்டிருந்த உடன் பணி புரியும் பணியாளரைக் கண்டான்,"என் கடனைத் திருப்பித் தா" என அவனைப் பிடித்துக் கழுத்தை நெரித்தான்

அந்த பணியாளனும், இவன் கால்களில் விழுந்து, தன்னை மன்னிக்கும் படியும், விரைவில் அவன் கடனை அடைத்து விடுவதாகவும் கூறினான்.

ஆனால் அவன் அதற்கு  இசையாமல் அவனை சிறையெடுத்தான்

இதைப் பார்த்த மற்ற பணியாளர்கள் அர்சனிடம் சென்று முறையிட்டனர்

அரசன், அவனை வரவழைத்தான். "பொல்லாதவனே! நீ என்னை வேண்டிக் கொண்டதால் உன் கடன் முழுவதையும் நான் தள்ளுபடி செய்தேன்.ஆனால், நீயோ..உன் பணியாளரிடம் சற்றும் இரக்கம் காட்டவில்லை.ஆகவே, உன் கடன் அனைத்தையும் அடைக்கும் வரை தண்டனையை அனுபவித்தேத் தீர வேண்டும் என அவனை தண்டித்தான்

(பிறர் நம்மிடம் இரக்கமும், அன்பும் காட்ட  வேண்டும் என நினைக்கும் நாமும், பிறரிடம் அன்பாயும், இரக்கத்துடனும் இருக்க வேண்டும்)

(தாலந்து,தெனரியம் என்பதெல்லாம் கிரேக்கச் சொல்லின் நேரடி மொழிபெயர்ப்பாகும், இவை, கிரேக்கம், ரோம் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் பயன் படுத்தப்பட்ட நாணய அலகாகும்) 

இலக்கிய பரிசு


  நான்  எழுதிய "மயிலும் கொக்கும்" என்ற சிறுவர்களுக்கான நீதிக்கதைகள் புத்தகத்திற்கு கவிதை உறவின் இலக்கியப் பரிசுகளில், சிறுவர் நூல்களுக்கான வகையில் முதல் பரிசுக்குரியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்