Friday, October 29, 2010

48-குல்லா வியாபாரியும் ..குரங்கும் - நீதிக்கதை

ஒரு ஊரில்  ஒரு குல்லா வியாபாரி இருந்தார்.அவர் தலைக்குல்லாய்களை  ஒரு மூட்டையாகக்  கட்டி  தலையில் சுமந்து வியாபாரம்  செய்து வந்தார் .
வெயிலில்  அவர் அலைவதால் ..அவரும் ஒரு குல்லா அணிந்திருந்தார்    .
ஒருநாள்  குல்லாக்களை  விற்க..தலையில் சுமந்தப்படி  சென்ற அவர் ..ஒரு மரத்தின் கீழ்  மூட்டையை இறக்கி வைத்து விட்டு கண்ணயர்ந்தார் .
அந்த மரத்தில் நிறைய குரங்குகள் இருந்தன.அவை கீழே இறங்கி வந்து மூட்டையைப்  பிரித்து அதில் இருந்த குல்லாய்களை ..அதனதன் தலைகளில் அணிந்துக் கொண்டன.
தூக்கம் கலைந்து எழுந்த வியாபாரி ..குல்லா மூட்டையைக் காணாது ..மரத்தை ஏறிட்டு நோக்க ..குரங்குகள் ஒவ்வொன்றும் குல்லாய் அணிந்திருந்தன.
அவற்றிடம் இருந்து குல்லாயை எப்படி வாங்குவது என யோசித்த வியாபாரி ..குரங்குகள் நாம் செய்வதையே திரும்பச் செய்யும் என படித்திருந்தார் .
அதனால் , தன் தலையிலிருந்த  குல்லாயைக் கழட்டி கீழே எறிந்தார் .
அதைப் பார்த்த குரங்குகள் ..தங்கள் தலையில் இருந்த குல்லாய்களையும் கீழே வீசின .
வியாபாரி எல்லாவற்றையும் எடுத்து மீண்டும் மூட்டையாகக் கட்டிக் கொண்டு வியாபாரத்திற்குக்
கிளம்பினார் .
  எந்த காரியத்திலும்..நாம் சற்று  சிந்தித்து செயல்பட்டால் வெற்றி அடையலாம் .

இந்தக் கதையில் வியாபாரி தன் புத்தியை உபயோகித்ததால்  அவரது குல்லாக்களும்
சேதமின்றி திரும்பக் கிடைத்தது .

Thursday, October 21, 2010

47- தென்னையும் நாணலும் - நீதிக்கதை

ஒரு ஆற்றங்கரையின் ஓரத்தில் ஒரு தென்னை மரமும்.நாணலும் இருந்தன.
தென்னை மரத்துக்கு தான் உயர்ந்தவன் என்ற எண்ணம் இருந்தது.ஆகவே அவ்வப்போது நாணலை அது கேலி செய்து வந்தது.
'நீ மிகவும் சிறியவன்..மழை,காற்று,வெயில் இவற்றை உன்னால் தாங்க முடியாது.நானோ உயர்ந்தவன் ...நான் எல்லாவற்றையும் தாங்குவேன்...எனக்கு
கவலை இல்லை' என்றது தென்னை நாணலைப் பார்த்து.
சில நாட்கள் கழிந்தன்.
மழைகாலம் வர... ஒரு நாள் புயல் ஏற்பட்டது...
புயல் காற்றில் நாணல் தலை வணங்கியது..தென்னையோ புயலை எதிர்த்தது..
தென்னை வேரோடு சாய்ந்தது.
நாணல் எந்த சேதமும் அடையவில்லை.
நாமும் தென்னையைப்போல கர்வமாய் இல்லாமல் நாணலைப்போல அனைவரிடமும் பணிவாக இருக்கவேண்டும்.

Wednesday, October 13, 2010

46 - பழுத்த இலையும் பள்ளமும்(நீதிக்கதை)

ஒரு பெரிய மரம் ஒன்று இருந்தது..அம்மரத்தின் வேரருகே ஒரு பள்ளம் ஒன்றும் இருந்தது..
இலையுதிர் காலம் வந்தது...
மரத்தில் இருந்த இலைகள் பழுத்து கீழே விழ ஆரம்பித்தன.அப்போது ஒரு பழுத்த இலை கீழே பள்ளத்தில் விழுந்தது...அந்த இலை பள்ளத்தைப் பார்த்து ...என்னை உன் பள்ளத்தில் ஏற்றுக்கொள்
இல்லாவிடில்...அடிக்கும் காற்றில் நான் எங்கே போவேன் என தெரியாமல் அல்லாடுவேன் என்றது..
அந்த பழுத்த இலையால் தனக்கு என்ன லாபம் என்று கருதிய பள்ளம்"காப்பாற்ற முடியாது" என்று கூறி பழுத்த இலையை வெளியே தள்ளியது.
பெரும் காற்று அடிக்க இலை பறந்து எங்கோ சென்று விட்டது.
மற்றுமொரு நாள்..வேறொரு இலை பள்ளத்தில் விழுந்தது..மழை வேறு பெய்ய ஆரம்பித்தது..உடனே பள்ளம்..இலயைப் பார்த்து ..
'என்னை மூடிக்கொள்.. இல்லாவிடில் இந்த மழை நீர் என்னுள் நிரம்பி என்னை மூழ்கடித்துவிடும்..மண் சரிந்து என்னை நீக்கிவிடும்' என்று கெஞ்சியது.
அதற்கு அந்த இலை
'அன்று என் சகோதர இலை உன்னை உதவி வேண்டிய போது நீ உதவவில்லை...அதுவும் காற்றில் எங்கோ சென்று மறைந்துவிட்டது..ஆனால் நீ உதவி கேட்கும்போது நான் உன்னைப்போல இருக்கமாட்டேன்'. என்று சொல்லிவிட்டு ..அந்த பள்ளத்தின் மேல்..அதை முழுவதுமாக மறைத்தது இலை.
மழை பெய்து ஓய ..பள்ளமும் காப்பாற்றப்பட்டது.பின் இலை பள்ளத்தைப்பார்த்து 'இனியும் உதவி என நம்மை நாடிவருபவருக்கு..நம்மால் ஆன உதவியை செய்யவேண்டும் என்பதைக் கற்றுக்கொள்'என்றது.
நாமும் பிறருக்கு உதவி செய்வதை ஒரு குறிக்கோளாகக் கொள்ளவேண்டும்.

Wednesday, October 6, 2010

45- 'ராமனும் - பேசும் கிளியும்'.(நீதிக்கதை)

யார் எது சொன்னாலும் உடனே நம்பி விடுவான் ராமன்.
ஒரு நாள் சந்தைக்கு அவன் போன போது ஒரு வியாபாரி ஒரு கூண்டுக்குள் ..கிளி ஒன்றை வைத்து விற்றுக் கொண்டிருந்தான்,,'இந்தக் கிளி பேசும் கிளி 'என்றான்.
ராமனும் நூறு ரூபாய் கொடுத்து அந்தக் கிளியை வாங்கினான்...வீட்டில் அதற்கு பேசப் பழக்கினான்.ஒரு மாதம் ஆகியும் அந்தக் கிளி பேசவில்லை..
அதை அவன் எடுத்துக்கொண்டு ..தான் அதை வாங்கிய வியாபாரியிடம் சென்றான்.
அந்த வியாபாரியோ ..அந்தக் கிளியை வாங்கி ..பரிசோதிப்பது போல பாசங்கு செய்து ..இந்த கிளிக்கு காது கேட்காது ..அதனால் நீங்கள் சொல்வதைக் கேட்டு அதனால் பேச இயலவில்லை..என்று சொல்லி ..வேறு ஒரு கிளியைக் காட்டி ..'இதை வாங்கிக் கொள்ளுங்கள்..இது பேசும்..' என்றான்.
ராமன் மீண்டும் ஒரு நூறு ரூபாய் கொடுத்து அந்தக் கிளியை வாங்கினான்.அதற்கும் பேசக் கற்றுக்கொடுத்தான்.அதுவும் பேசவில்லை.
அப்போது ராமனின் நண்பர் ஒருவர் வந்தார்.அவரிடம் ராமன் நடந்ததைக் கூறினான்.
உடனே அந்த நண்பர் 'அடடா ..என்னை முதலிலேயே கேட்டிருக்கலாமே ..அந்த வியாபாரி ஒரு புளுகன்..பொய் சொல்லி வியாபாரம் செய்வதே அவன் பிழைப்பு' என்றான்.
ராமன் தான் ஏமாற்றப்பட்டதை எண்ணி மனம் வருந்தினான்.யார்..என்ன சொன்னாலும் அதைக் கேட்காமல் நமது அறிவை உபயோகித்து ..அது சாத்தியமா..என யோசித்து செயல்படவேண்டும்.