Friday, September 1, 2023

50.-உறுதி..முயற்சி..நம்பிக்கை

50 - உறுதி,முயற்சி,நம்பிக்கை 




சரவணன் ஒரு ஏழை விவசாயியின் மகன்.

ஒருநாள்,சரவணனின் மாமா அவனுக்கு ஒரு பேனா பரிசளித்தார்..பின் அவனிடம்  ‘நீ படித்து என்னவாகப்போகிறாய்  ?’என்று கேட்டார்.

அவன்  ‘கலைக்டர் ஆவேன்’ என்றான்.

அவன் மாமா அவன் பதிலைக் கேட்டு சிரித்துவிட்டு  ‘ நீ ஒரு ஏழை…உன்னால் எப்படி அவ்வளவு பெரிய பதவியை அடைய முடியும்’ என்றார். 

பள்ளிக்கு அழுதபடியே வந்தவனை பள்ளி தலைமை ஆசிரியர் பார்த்து,அவன் அழுவதின் காரணத்தைக் கேட்டார்.அவனும் தன் மாமா சொன்னதை சொல்லி ‘ஏன் சார் என்னால் கலைக்டர் ஆக முடியாதா?’ என்று கேட்டான்.

"கண்டிப்பாக முடியும்..நன்கு படித்து ..நேர்மையான வழியில்  உழைத்தால்..கலைக்டர் மட்டுமல்ல நீ எண்ணிய இலக்கை அடையலாம்.முதலில் நம்மால் முடியும் என்ற நம்பிக்கை வேண்டும்’ என்றார்.

அவர் கூறியதை மனதில் கொண்டு சரவணன் நன்கு படித்து எல்லா பரீட்சைகளிலும் நல்ல மதிப்பெண்கள் எடுத்து கலைக்டர் பதவிக்கு வந்தான்.

இன்று ..அவன் படித்த பள்ளியில் ஆண்டுவிழா நிகழ்ச்சி அவன் தலைமையில் நடக்க இருக்கிறது.

நிகழ்ச்சியில் பேசியவன்.."மாணவர்களே! நம்மால் முடியாதது என்று எதுவுமே இல்லை.முதலில் நாம் ஒரு இலக்கை நிர்ணயித்து கொண்டு..அதை அடைந்தே தீருவேன்..என்ற நம்பிக்கையுடன் செயல் பட்டால் வெற்றி நிச்சயம்" என்றான்.

நாமும் நம் விரும்பிய வாழ்வை அடைய வேண்டுமானால் அதற்கான உறுதி, முயற்சி,நம்பிக்கை ஆகியவற்றுடன் செயல் பட்டால் வெற்றி நிச்சயம்.

Wednesday, August 30, 2023

49.தேனீயும் ..கொடுக்கும்

49.தேனீயும் கொடுக்கும்



 ஒரு மரத்தில் தேன் கூடு ஒன்று இருந்தது.தேனீக்களின் தலைவியாகிய ராணித் தேனிக்கு கடவுளை சந்திக்கவேண்டும் என்ற எண்ணம் இருந்ததால்,அது கடவுளை நினைத்து தவம் செய்தது.

ராணித் தேனியின் முன் கடவள் தோன்றி..’உனக்கு என்ன வரம் 

வேண்டும்? "என்று கேட்டார்.

‘இறைவா… என்னிடமிருக்கும்  தேனை நாடி வருவோரைக்கொட்டி…அவர்கள் சகிக்க முடியாத வேதனையை அனுபவிக்குமாறு செய்து அருள வேண்டும்’ என்று ராணித் தேனி கேட்க…கடவுளுக்கு வருத்தம் ஏற்பட்டது.

‘தேனியே..பிறர்க்கு உதவ வேண்டும் என நீ கேட்டிருந்தால்  எனக்கு மகிழ்ச்சி ஏற்பட்டிருக்கும்.ஆனால் நீயோ பிற்ர்க்கு  தொல்லை தரவேண்டும் என வரம் கேட்கிறாய்.நீ கேட்ட வரத்தை கொடுக்கிறேன்,ஆனால் பிறரை துன்புறுத்தவேண்டும் என நினைக்கும் உனக்கு ஒரு பாடம் கற்பிக்க விரும்புகிறேன்..எனது வரம் மூலம் உனக்கு கொடுக்கு ஒன்று முளைக்கும்.அந்த கொடுக்கினால் மற்றவர்களை கொட்டி துன்புறுத்தலுக்கு உள்ளாக்கும்போது உன்  கொடுக்கின் நுனி உன்னால் கொட்டப்பட்டுள்ளவரின் உடலில் ஒட்டிக்கொள்ளும்.உடன் நீ இறந்து விடுவாய் "என்று கூறி மறைந்தார்.

அன்றுமுதல் தேனி  யாரையும் கொட்டவில்லை.ஏனெனில் கொட்டினால் அது  இறந்துவிடுமே.

வன்முறையால் அழிந்துவிடுவோம்  ஆகவே  வன்முறையில் ஈடுபடாமல் நாம் பிறர்கு நன்மை செய்யவேண்டும்…அப்படி நடந்தால் நமக்கும் நன்மை  வந்து சேரும்.

Sunday, July 16, 2023

48.தகுதி

48.தகுதி




ராமன்,வாசுகி தம்பதியருக்கு கந்தன் ஒரே பையன்.

பக்கத்திலுள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கிறான்.படிப்பிலும் கெட்டிக்காரன்.விளையாட்டிலும் ஆர்வம் அதிகம்.

ஆனால் அவனிடம் ஒரு கெட்ட பழக்கம் இருந்தது,அளவுக்கதிகமாக இனிப்பு சாப்பிடுவான்.வீட்டில் இனிப்பு ஏதும் இல்லாவிடில் சர்க்கரை டப்பாவை காலி செய்து விடுவான்.

கந்தனின் பெற்றோருக்கு கந்தனின் இந்த கெட்ட பழக்கம் மிகவும் கவலையை  உண்டு  பண்ணியது.பிற் காலத்தில் அவனது உடல் நலம் இதனால் கெட்டுவிடும் என்று அஞ்சினர்.

பக்கத்து வீட்டு நண்பர் ஒருவர் கந்தனின்  தந்தையிடம் "பக்கத்து ஊரில் ஒரு வைத்தியர் உள்ளார்..அவர் மருத்துவர் மட்டுமல்லாது மன ரீதியான ஆலோசனைகளையும் கூறுவார்.அவரிடம் கந்தனை கூட்டிச்செல்லுங்கள்" என்றார்.

 அவனது பெற்றோர் அவனை பக்கத்து ஊர் மருத்துவரிடம்  காண்பித்தனர்.ம்ருத்துவர் கந்தனின் கெட்ட பழக்கத்தை கேட்டுவிட்டு," ஒரு வாரம் கழித்து வாருங்கள். நான் இதற்கு ஒரு தீர்வு சொல்கிறேன்" என்றார்.

கந்தனின் பெற்றோருக்கு ஒரே ஆச்சிரியம்,ஏன் மருத்துவர் ஒரு வாரம் கழிச்சு வரச்சொன்னார் என்று.ஒன்றும் புரியவில்லை  அவர்களுக்கு.

அடுத்த வாரம் வந்தது.கந்தனின் பெற்றோர் அவனை மருத்துவரிடம் அழைத்து சென்றனர்.

அவரிடம் கந்தனின் தந்தை" எங்களை ஏன் ஒரு வாரம் கழிச்சு வரச்சொன்னீர்கள் "என்று கேட்டார்.

அதற்கு மருத்துவர்," ஒருவருக்கு அறிவுரை  கூறவேண்டுமென்றால் சொல்பவருக்கு ஒரு   தகுதி வேண்டும்..எனக்கு  அன்று அந்த தகுதியில்லை.ஏனென்றால்  நானும் நிறைய இனிப்பு சாப்பிடுவேன் உங்களது  குறையை கேட்டவுடன் நானும் ஒரு வாரமாக இனிப்பு சாப்பிடாமல்..அறிவுரை கூறுவதற்கான தகுதியினை உண்டாக்கி கொண்டேன். மேலும்இனிமேலும் இனிப்பை அதிகம் சாப்பிடமாட்டேன்.

கந்தன் நல்ல பையன்.நன்றாக படிக்கிறான்.நான்  சொல்வதைக்கேட்டு அவனும் கொஞ்சம் கொஞ்சமாக இனிப்பு சாப்பிடுவதை நிறுத்தி விடுவான்.நீங்கள் கவலைப்படாதீர்கள்.வீடு  போய் சேருங்கள்" என்றார்.

வீட்டுக்கு சென்றவுடன் கந்தனின் நடவடிக்கையில் ஒரு மாற்றம் தெரிந்தது.கொஞ்சம் கொஞ்சமாக அதிகம் இனிப்பு சாப்பிடுவதை  நிறுத்தினான்.

நாம் யாருக்காவது அறிவுரை சொல்ல நேரிட்டால் முதலில் அதற்கான தகுதியை நாம்  உண்டாக்கிகொள்ளவேண்டும்..


Friday, July 14, 2023

47.விழிப்புணர்வு

47- விழிப்புணர்வு 




குரு சிஷ்யர்களுக்கு பாடம்  நடத்திக்கொண்டிருந்தார்.

அப்பொழுது ஒரு சிஷ்யன் ஐயா, நாங்கள் எப்படி ‘விழிப்புணர்வு’ பெறுவது என்று கேட்டான்.

குரு உடனே நீங்கள் உங்களை"அறிவால்’ நிரப்பிக்கொள்ளுங்கள்' என்றார்.

சிஷ்யர்களுக்கு புரியவில்லை".சற்று விளக்கமாக கூறுங்கள்" என்றனர்.

குரு உடனே அவர்களிடம் ‘அறிவால் நிரப்பிக்கொள்வது  என்றால் ...பல நூறு ஓட்டைகளை கொண்ட சல்லடையில்   நீரை நிரப்புவதாகும்" என்றார்.

பின் சீடர்களிடம், " நீங்கள் போய் முயன்று பாருங்கள்" என்றார்.

சீடர்கள் வெளியே வந்து சல்லடையில் தண்ணீர் ஊற்ற அது முற்றிலும் ஓட்டைகள் வழியாக வெளியே வந்தன.

இன்னொரு சீடன் "ஐஸ் கட்டியை போடலாம்" என்று கூற அதையும் செய்து  பார்த்தனர்.அதுவும் சிறிது நேரத்தில் உருகிவிட்டது.

என்ன செய்வது என்று புரியாமல் குருவிடம் வந்து தங்களது இயலாமையக் கூறினர்.

குரு உடனே சீடர்களே "சல்லடையை எடுத்துக்கொண்டு என்னோடு வாருங்கள்" என்றார்.

சீடர்களும் அவர் பின்னால் சென்றனர்.

குரு சீடர்கள் குளிக்கும் பெரிய நீர் தொட்டியில் சல்லடையை போட்டார். சல்லடை நீருக்குள் மூழ்கியது.சீடர்களிடம் "இப்பொழுது சல்லடையில் நீர் நிரம்பியுள்ளது பார்த்தீர்களா"என்றார்.

"அதுபோல விழிப்புணர்வு பெறுவது எப்படி என்று கேட்டீர்களே அதை பெற அறிவு என்னும் கடலுக்குள் உங்களை தூக்கிப்போடுங்கள்.அறிவு உங்களை விட்டு விலகாது எ"ன்றார் குரு.

சீடர்களுக்கு தெளிவு பிறந்தது.

46.உருவ கேலி கூடாது

 

46- உருவ கேலி கூடாது




ஒரு மிருக காட்சி சாலையில் ஒட்டகம்,யானை ,மான் மூன்றும் நண்பர்களாக இருந்தனர்.

ஆனால் ஒட்டகம் மட்டும் எப்போதும் மானைப்பார்த்து ‘ உனக்கு நீண்ட காதுகளும்,பெரிய கொம்புகளும் சிறிய வயிறும் இருக்கு’. பார்க்க நன்றாக இல்லை' என்று கேலி செய்யும்.

யானையை பார்த்து ‘நீ பருமனானவன்.உன் தோல் மிகவும் தடிப்பானது.கால்களும் தூண்கள் போன்றவை.முறம் போன்ற காதுகள்,நீண்ட தும்பிக்கை,சம்பந்தமில்லாமல் தந்தம் வேறு’ என்று கேலி செய்யும்.

யானையும் மானும் ஒன்றும் சொல்லாமல் நம்மை இறைவன் இப்படி படைத்துவிட்டான் என்ன செய்வது.காரணமில்லாமல் இறைவன் எதையும் செய்யமாட்டான் என்று தன்னைத்தானே தேற்றிக்கொள்ளும்

ஒரு நாள் மிருக காட்சி சாலைக்கு ஒரு ஆளுயுர முகம் பார்க்கும் கண்ணாடியை அந்த நிறுவத்தினர் கொண்டு வைத்தனர்.அதைப்பார்க்க எல்லா மிருகங்களும் ஆவலோடு  ஓடி வந்தன.

ஒட்டகமும் வந்தது.தன் உருவத்தை பார்த்தது.

‘நீண்ட கால்கள்,முதுகின் பின்புறம் உள்ள திமில்பெரிய மற்றும் தட்டையான பாதங்கள், நீண்ட கண் இமைகள்,மெல்லியபிளவுபட்ட நாசித்துவாரங்கள்,மிக நீண்ட வயிறு’ இவ்வளவும் கொண்ட விகாரமான உருவம் யார் ?"என்று  யானையிடமும் மானிடமும் கேட்டது.

அவர்கள் இருவரும் "நீ தான் இத்தகைய அம்சங்களைக்கொண்டவன்." என்றன

"நீ எப்பொழுதும் எங்கள் உருவத்தை கேலி செய்து கொண்டிருக்கிறாய்.உன் உருவத்தை பற்றி உனக்கு தெரியவில்லை.ஆண்டவ்னின் படைப்பில் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.அவை எல்லாம் நன்மைக்குத்தான்.நீ பாலைவனங்களில் அதிகமாக் காணப்படுவ்தால் இந்த மாதிரி உருவம் இறைவன் உனக்கு கொடுத்திருக்கிறார்.அதை புரிந்துகொண்டு நீ இனிமேல் யாரையும் ஏளனமாக உருவக்கேலி செய்யாதே!" என்றன.

ஒட்டகமும் தன் தவறை உண்ர்ந்து அன்று முதல்அவர்களுடன் நண்பனாக இருந்தது.

..

Friday, July 7, 2023

45. திட்டமிடுதல்

 
  45 - திட்டமிடுதல்


முருகனின் தந்தை ஒரு விவசாயி. அவரிடம் சிறு விவசாய நிலம் ஒன்று இருந்தது.அதில் நான் கு தென்னை மரங்களும் உண்டு.

முருகனின் தகப்பனார் இதில் வரும் சொற்ப வருமானத்தைக்கொண்டு முருகனை பக்கத்திலுள்ள அரசு பள்ளியில் படிக்க வைத்தார். அவன் எட்டாவது படித்துக்கொண்டிருந்தான்.முருகன் படிப்பிலும் நல்ல புத்திசாலி.அவனுக்கு விவசாயத்திலும் ஈடுபாடு அதிகம்.

விடுமுறை நாட்களில் தந்தையுடன் விவசாய நிலத்தை அவன் பார்வையிடுவது வழக்கம்.

ஒரு நாள் அப்படி  செல்லும்போது பக்கத்து நிலத்தில் அந்த விவசாயிக்கு மூன்று கருவேலமரங்கள் உள்ளன.அதை வெட்டுவதற்கு  அவர் மூன்று பேரை அழைத்து ' நீங்கள் மூன்று மணிநேரத்தில் யார் வேகமாக மரத்தை  வெட்டுகிறார்களோ அவர்களுக்கு சன்மானம் அதிகம்'என்று கூறினார்.

அதில் இரண்டு பேர் கோடாரியை வாங்கியவுடன் மரத்தை வெட்ட ஆரம்பித்தனர்.மூன்றாமவர் இரண்டு மணிநேரம் கோடாரியை கூர்மையாக்கிவிட்டு மரத்தை வெட்ட களத்தில் குதித்தார்.அவரே சவாலில் ஜெயித்தார்.

இதை பார்த்துக்கொண்டிருந்த முருகனிடம் அவனது தந்தை "அந்த மூன்றாம் நபர் எப்படி வெற்றி பெற்றார் என்பதை கவனித்தாயா? அவரது வெற்றியில் ஒரு திட்டமிடுதல் இருந்தது.எந்த காரியத்தை செய்வதிலும் ஒரு திட்டமிடுதலும்,புத்திசாலித்தனமும் அவசியம்.ஓட்ட பந்தயத்தில் ஓடுபவர்கள் கூட முதலில் மெதுவாக ஆரம்பித்து போகப்போக வேகத்தை கூட்டுவார்கள்.அதுபோல் நீயும் எந்த பாடத்தை ஆரம்பிக்கும் முன் ஒரு திட்டமிடுதல் வேண்டும்.அதுவே உனக்கு வெற்றி க்கு வழி தரும்.உன்  புத்திசாலிதனத்தால் நீ அடைய வேண்டியதை அடையலாம்" என்றார்.

Thursday, June 15, 2023

44.பிறர் மனம் புண்படவேண்டாம்



44- பிறர் மனம் புண்பட பேசக்கூடாது 




ஒரு குளத்தில் ஒரு தங்க நிற மீனும் ஒரு கெளத்தி மீனும் வசித்து வந்தன. தங்க நிற  மீன் தங்கம் போல் பள பள வென்று இருக்கும். கெளத்தி மீன் கருப்பாக இருக்கும்.

அந்த குளத்தருகில் ஒரு மரத்தில் ஒரு காகம் இருந்தது.அது அவ்வப்பொழுது இந்த மீன்களுடன் பேசிக்கொண்டு பொழுதைக் கழிக்கும்.

தங்க நிற மீனுக்கு தான் பள பளவென்று இருப்பது பெருமை.அதனால் அது கெளத்தி மீனையும் காகத்தையும் எப்பொழுதும் ‘நீங்கள் இருவரும் கருப்பாக இருக்கிறீர்கள்’என்று கேலி செய்து கொண்டிருக்கும்

கெளத்தி மீன் இதைக்கேட்டு ஒன்றும் சொல்லாமல் இறைவன்  தன்னை இப்படி படைத்திருக்கிறான் என்ன செய்வது என்று அமைதியாக இருந்து விடும்.

ஆனால் காகம் வந்த சண்டையை விடாது.தங்க மீனிடம் நீ தங்க நிறமாக இருப்பது  உனக்கு ஆபத்து..அந்த நிறம் தான் உனக்கு பெரிய கெடுதலை கொடுக்கும் பார் என்று கூறும்.

ஒரு நாள் இரண்டு மீன்களும் குளத்தில் விளையாடிக்கொண்டிருந்தன.மரத்தின் மேலே காகம் உட்கார்ந்துகொண்டு இரண்டு மீன்களும் விளையாடுவதை  பார்த்துக்கொண்டிருந்தது.

அப்பொழுது ஒரு கொக்கு ஒன்று வந்து தங்க மீனிடம் 'தூரத்தில் நான் வந்து கொண்டிருந்தபோது உனது தங்க நிறம் என் கண்களை பறித்தது.அதனால் நீ தான் எனக்கு இன்றைய உணவு என்று கூறி அதனை கவ்வியது.தங்க மீன் அலற மேலே பார்த்துக்கொண்டிருந்த காகம் கொக்கின் தலையை கொத்த வலி தாங்காமல் கொக்கு தங்க மீனை விட்டுவிட்டு ஓடிவிட்டது.

பின்னர் காகம் கீழே வந்து தங்க மீனிடம் "நீ எப்பொழுதும் என்னையும் கெளத்தி மீனையும் கேவலமாக மனது புண்படும்படி பேசுவாய்.அதனால் தான் நீ இன்று ஆபத்தில் மாட்டிக் கொண்டுவிட்டாய்.இனிமேல் இப்படி மற்றவர்கள் மனது புண்படும்படி நடக்காதே" என்று அறிவுரை கூறியது.தங்க மீனும் தன் தவறை உணர்ந்தது.

நாமும் பிறர் மனம் புண்படும்படி நடந்துகொள்ளக்கூடாது.



Friday, June 2, 2023

43.எதுவும் நம்மால் முடியும்

 43- எதுவும் நம்மால் முடியும்


சந்திரன்,பரசுராம்,வனஜா தம்பதியருக்கு ஒரே பையன்.அவனுக்கு பத்து வயதாகிறது.அருகில் உள்ள பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கிறன்.

 சந்திரன்  படிப்பிலும் சுமார் தான்.எப்பொழுதும் கணக்கு பாடத்தில் குறைவான மதிப்பெண் எடுப்பான்.கேட்டால்  எனக்கு கணக்கு வராது என்று கூறுவான்.

வீட்டில் அப்பா அவனுக்கு ஒரு சைக்கிள் வாங்கிக்கொடுத்தார்.அதையும் அவனுக்கு ஓட்டுவதற்கு தைரியமில்லை.இப்படி தன்னம்பிக்கை இல்லாமல் அவன் இருந்தது பெற்றோர்களுக்கு மனதுக்கு வருத்தமாக   இருந்தது.

தாய்,தந்தை இருவரும் அவனை எப்படியாவது நம்பிக்கையுள்ள பையனாக மாற்றவேண்டுமென்று பல வழிகளிலும் பாடுபட்டனர்.

ஒரு நாள்  விடுமுறையன்று மூவரும் அந்த ஊருக்கு வந்துள்ள மிருககாட்சிசாலைக்கு போனார்கள்.சந்திரனுக்கு அங்குள்ள மிருகங்களை பார்த்ததில் மிகவும்சந்தோஷம்.ஒவ்வொரு மிருகத்தையும் பார்த்து ஏதாவது கேள்விகள் கேட்டுக்கொண்டு வந்தான்.கடைசியில் ஒரு யானையை பார்த்தான்.அதன் காலை சங்கிலி போட்டு கட்டியிருந்தனர்.சந்திரன் அப்பாவிடம் அப்பா, " ஏன் இந்த யானை சங்கிலியுடன்  இருக்கிறது. யானை பலமுள்ளதுதானே,அது சங்கிலியை தன் காலால் உதைத்து எறிந்து விட்டு வரலாமே" என்று கேட்டான்.

அதற்கு தந்தை, " யானைக்கு பிறந்தவுடன் சங்கிலியை காலில் கட்டியுள்ளார்கள்.இப்பொழுது வளர்ந்தபிறகும் அந்த சங்கிலி அப்படியே உள்ளது.யானை மிகவும் பலம் வாய்ந்தது ஆனால் யானைக்கு மனதளவில் தன்னால் இந்த சங்கிலியைஅறுத்து வெளியே வரமுடியும் என்ற நம்பிக்கை  அதற்கு இல்லை. அதனால் தான் அப்படியே இருக்கிறது." என்றார்

மேலும், "அதுபோல இல்லாமல் நீ நம்பிக்கையுடன் எந்த வேலையையும் செய்யவேண்டும்.தன்னால் முடியும் என்ற எண்ணம் உனக்கு வரவேண்டும்" என்றார்.

தந்தை சொன்னதைகேட்ட சந்திரனுக்கு தன்னால் முடியும் என்ற நம்பிக்கை வந்தது.வீட்டுக்கு  வந்தவுடன் தன்னால் முடியும் என்று பள்ளியில்  கொடுத்த கணக்குகளை  போட்டான்.சரியாக  இருந்தது.

காலையில் நான் தைரியமாக பள்ளிக்கு cycle ல் செல்வேன் என்று கிளம்பினான்.அவனது பெற்றோர்களுக்கு  மிகவும் சந்தோஷம்.

குழந்தைகளே நீங்களும் எதுவும் நம்மால் முடியும் என்ற தன்னம்பிக்கையோடு இருக்கவேண்டும்.




Monday, May 29, 2023

42. நண்பனை ஆராய்ந்து தேர்ந்தெடு

 42 - நண்பனை ஆராய்ந்து தேர்ந்தெடு


திண்டுக்கல் பக்கத்தில் ஒரு கிராமத்தில் விவசாய தோட்டங்கள் இருந்தன..அதில் வேலாயுதம் என்ற விவசாயி க்கு சொந்தமான  இரண்டு தோட்டங்கள் உள்ளன.வேலாயுதம் தினமும் வந்து தோட்ட்த்திற்கு தண்ணீர்  விட்டு குப்பைகளையெல்லாம் அகற்றிவிட்டு செல்வ்து வழக்கம்.

அந்த தோட்டத்திற்கு ஒரு மானும்,ஒரு காகமும் வேலாயுதம் இல்லாத பொழுது வந்து மான் புற்களையும்,காகம் பழங்கள்,கொட்டைகள் முதலியவைகளை உண்டுவிட்டு செல்வது வழக்கம்.

மானும், காகமும் சிறந்த நண்பர்களாக இருந்தனர்.இரவில் அவர்கள் ஒரு மரத்தடியில்  மானும் ,மரத்தின் கிளையில் காகமும் வசிப்பது  வழக்கம்.

அந்த தோட்டத்தில் ஒரு நரி அவ்வப்போது வருவது வழக்கம்.மானும் காகமும் சிறந்த நண்பர்களாக இருப்பது நரிக்கு பிடிக்கவில்லை.எப்படியாவது அவர்களை பிரிக்கவேண்டும் என்று நினைத்தது.

ஒரு நாள் மானிடம் நரி ,"நண்பா அடுத்த தோட்டத்தில் நிறைய பச்சைபசேலென்று புல்வெளிகள் நிறைய உள்ளன.நீ என்னுடன் வந்தால் அதை நீ உண்டு மகிழலாம் "என ஆசைக்காட்டியது.

மானும்  வருவதாக கூறியது.மரத்தின் மேலிருந்த காகம் அதைக்கேட்டு மானிடம் நண்பா’ முன் பின் தெரியாதவர்களிடம் நாம் நட்புடன் பழகக்கூடாது.நீ நரியுடன் செல்ல வேண்டாம்" என்றது.

மான் கேட்கவில்லை.அடுத்த நாள் மான் நரியுடன் சென்றது.

மானுக்கு அந்த புல்வெளியை பார்த்ததும் மிகவும்மகிழ்ச்சி.துள்ளி துள்ளி  குதித்து ஓடியது.வேண்டிய அளவு புற்களை  சாப்பிட்டது.இதை தூரத்திலிருந்து பார்த்த வேலாயுதம்." இதற்கு ஒரு முடிவு கட்டவேண்டும்,நாளைக்கு மான் வரட்டும் பிடித்து விடுகிறேன் "என்று மனதில் சொல்லிக்கொண்டு இரவு ஒரு வலையை மான் வரும் டத்தில்  போட்டான்.

அடுத்த நாள் மான் வந்தபோது வலைக்குள் சிக்கிக்கொண்டது. நரியிடம், "என்னை காப்பாத்து" என்று கூற நரியோ 'நான் இன்று விரதம் எதையும் கடிக்கமாட்டேன்" என்று கூறி தப்பியது.

நரியிம் எண்ணம் மானை இரவு அடித்து சாப்பிடலாம் என்பதே.

அப்பொழுது காகம் நண்பனை தேடிக்கொண்டுவர, மான் வலையில் மாட்டிக்கொண்டு இருப்பதை பார்த்து "நான் சொல்வதை நீ கேட்கவில்லை,இப்பொழுது மாட்டிக்கொண்டாய்.சரி இப்பொழுது நான் சொல்வதைக்கேள் ..அந்த விவசாயி தூரத்தில்  வந்துகொண்டிருக்கிறான்.நீ இறந்தது போல் நடி.நான் உன்னை மெதுவாக கொத்திக்கொண்டிருக்கிறேன்.விவசாயி நீ இறந்து விட்டாய் என்று நினைத்து வலையை எடுத்துக்கொண்டு போய்விடுவான்.நாமும் தப்பிக்கலாம்" என்றது.

 அது போல் மானும் இறந்தது போல் மூச்சை அடக்க வேலாயுதம் மான் இறந்து விட்டது என்று நினைத்து வலையை எடுத்து விட்டான்.இரண்டும் தப்பி ஓடின.

இதை பார்த்த அவன் தன் கையில் இருந்த கம்பால் மானை நோக்கி வீசினான்.கம்பு தவறி புதருக்குள் இருந்த நரியின் தலையின் மேல் பட்டு அது இறந்தது.

நட்பை தேர்ந்தெடுக்கும் முன்பு ஆராய்ந்து பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டும் என்று காகம் கூறியபடியே மானுடன் சென்றது.

Monday, May 1, 2023

41. பிறன் பொருள் விரும்பாதே


41- பிறன் பொருள் விரும்பாதே



 வயலூர் என்ற ஊரில் உள்ள நடுநிலைப் பள்ளியில் ராஜனும்,சிங்காரமும் ஆறாம் வகுப்பு படிக்கிறார்கள்.ராஜனுடைய அப்பா பக்கத்து ஊரில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக உள்ளார். ராஜனும் நன்றாகப் படிப்பான்.நல்ல பழக்க வழக்கங்கள் உள்ளவன்.எல்லோரிடமும் மரியாதையாக இருப்பான்.

அவனுக்கு நேர்மாறாக சிங்காரம் இருப்பான்.படிப்பில் ஆர்வம் கிடையாது.பள்ளிக்கும் சரியாக வருவதில்லை.

இருவரும் அடுத்தடுத்த வீட்டில் இருப்பதால் நன்றாகபேசிக்கொள்வார்கள்.சேர்ந்து விளையாடுவார்கள்.சிங்காரத்திற்கு ராஜன் தன்னை விட இரண்டு வயது சிறியவன் என்பதால் அவனிடம் மட்டும் அன்பாக நடந்து கொள்வான்.

ஒரு நாள் ராஜனுக்கு அவனுடைய அப்பா புஸ்தகம் வாங்குவதற்கு ஐம்பது ரூபாய் கொடுத்தார்.அதை எடுத்துக்கொண்டு வந்தவன் வழியில் சிங்காரத்தை பார்த்து "சாயங்காலம் பள்ளிக்கூடம் விட்டபின் கடைக்கு போய் ஒரு புஸ்தகம் வாங்கவேண்டும்,நீயும் கூட வருகிறயா என்று கேட்டான்.

"வருகிறேன்" என்றான் சிங்காரம்.

ராஜன் பையில் ஐம்பது  ரூபாயை பார்த்த சிங்காரம் இடைவேளையின் போது அவனுடைய பையிலிருந்து அதை எடுத்து விட்டான். சாயங்கால்ம் இதை வைத்துக்கொண்டு சினிமாவுக்கு செல்லலாம் என்பது அவனது எண்ணம்.

இடைவேளை முடிந்து ராஜன் பையைப் பார்க்க அதில் ஐம்பதுரூபாய் இல்லை.

அவன் உடனே ஆசிரியரிடம் முறையிட்டான்.

ஆசிரியர் உடனே  “மாணவர்களே எல்லோரும் நான் உட்பட கண்ணை இரண்டு நிமிடம் மூடியிருப்போம்.திருடியவன் யாராக இருந்தாலும் மெதுவாக வந்து ராஜன் பையில் பணத்தை வைத்து விடுங்கள். இதனால் யார் எடுத்தார் என்று யாருக்கும் தெரியாது,எடுத்தவனும் திருந்தி விடலாம்"என்றார்.

அனைவரும் கண்களை மூடிக் கொண்டனர்

இரண்டு நிமிடம் கழித்து எல்லோரும் கண் திறந்துபார்த்தபோது, ராஜன் பையில் பணம் இருந்தது.

"யார் வைத்தார்கள்" என்று தெரியவில்லை.

மாலை பள்ளி விட்டபின் ஆசிரியர் தனியாக அமர்ந்திருக்க சிங்காரம் வந்தான்."சார், நான் தான் பணத்தை எடுத்தேன்ஆனால் பணத்தை திருப்பி வைக்கவில்லை.மனசு உறுத்தலாக இருக்க உங்களிடம் உண்மையை சொல்லி மன்னிப்பு கேட்டு பணத்தை கொடுத்து  விட  வந்தேன் "என்றான்.

அதைக்கேட்டு ஆசிரியர் எ"னக்கு தெரியும் இப்படி நடக்குமென்று.நான் தான் அந்த ஐம்பது ரூபாயை வைத்தேன்.எடுத்தவன் எப்படியும் திருந்தி என்னிடம் வருவான் என்ற நம்பிக்கையில் இதை செய்தேன் "என்றார்.

"மேலும் நீயும் திருந்திவிட்டாய் எனக்கும் மிகவும் மகிழ்ச்சி.இனிமேல் நீயும்  பிறர் பொருளுக்கு ஆசைப்படாமல் ராஜனைப்போல நன்றாகப்படித்து சிறந்த மாணவனாக வ்ரவேண்டும்" என்றார். 

சிங்காரமும் தவறை உண்ர்ந்து அன்று முதல் நன்றாக படித்து நல்ல மாணவனான்.


















Friday, April 28, 2023

39. உருவு கண்டு எள்ளாமை வேண்டாம்


39- உருவு கண்டு எள்ளாமை வேண்டும்



 அந்த ஊரில் மிருக காட்சி சாலை ஒன்றிருந்தது.

அந்த மிருக காட்சியில் எல்லா மிருகங்களும் இருந்தன

சிங்கம்,புலி ஆகியவை தனித்தனி கூண்டில் அடைக்கப்பட்டிருந்தன..

ஒட்டகம்,யானை எல்லாம் தனியே அவர்களின் பாகனோடு நின்று கொண்டிருந்தன.

அங்கு வந்த சிறுவர்,சிறுமிகள் ஒட்டக சவாரியை விரும்வ..பாகனும்அதில் ஏறி வலம் வர ஒப்பு கொண்டான்.

சிறிது நேரம் கழித்து..ஒட்டகம் சற்று இளைப்பாறியது.

அப்பொழுது அருகே இருந்த மற்ற மிருகங்கள் ஒட்டகத்தை பார்த்து “நீ ஏன் இவ்வளவு உயரமாக இருக்கிறாய்,உயரமான  கழுத்து,அதில் பெரிய திமில் என்றுபார்க்க அருவருப்பாக இருக்கிறது"என்று கேலி செய்தன.

  அப்பொழுது  ஒட்டகம் “நண்பர்களே’ உங்களுக்கு என்னைப்பற்றி தெரியாது.நான் சொல்கிறேன் தெரிந்துகொள்ளுங்கள் .

நாங்கள் பெரும்பாலும் பாலைவனத்தில் தான் வாழ்வோம். மிருக காட்சியிலும் இருப்போம்.

உணவும் நீரும் கிடைக்கும்போது அதை திமிலாக்கிகொள்வோம்.(திமிலில் கொழுப்பாக சேர்த்துக்கொள்வோம்)

உணவோ நீரோ கிடைக்காத காலத்தில் எங்கள் திமிலின் கொழுப்பில் உள்ள ஹைட் ரஜனோடு நாங்கள் சுவாசிக்கும் காற்றில் உள்ள ஆக்ஸிஜனைக்  கலந்து நீராகவும் உணவாகவம் மாற்றிக்கொள்வோம்.

உணவு மட்டும் கிடைத்தால் போதும்,நீரின் தேவையில்லாமல் ஒரு மாத காலம் எங்களால்  பயணம்  செய்ய முடியும்.

உணவும்,நீரும் இல்லாமல் ஒரு வார காலம் இருப்போம்.

குளிர் காலத்தில் ஆறு மாத காலம் வரை கூட நீர் அருந்தாமல் எங்களால் இருக்கமுடியும். நீர் கிடைத்தால் 100 லிட்டெர் தண்ணீரை 10 நிமிடத்தில் குடித்து விடுவோம்.

இறைவன் எங்களுக்கு 50 ஆண்டுகள் வரை வாழ அருள் புரிந்திருக்கிறார்.

எங்கள் முன்னோர்கள் பெரும்பாலோர் பாலைவனத்தில் வாழ்ந்து வந்ததால் எங்களை “பாலைவனகப்பல்.." என்றும் கூறுவர்.

பாலைவனத்தில் வாழ்வதற்கேற்ப ஆண்டவன் எங்களை இப்படி படைத்திருக்கிறார்.என்னைப்போன்ற சிலர் தான் நகரங்களில்  காணப்படுகிறோம்.

உருவத்தைக்கண்டு இகழக்கூடாது.காரணமில்லாமல் ஆண்டவன் எதையும் படைக்க மாட்டார்."  என்றது

அதைக்கேட்ட மற்ற மிருகங்கள் அதை எள்ளி நகையாடுவதை நிறுத்திவிட்டு மரியாதையுடன் நடத்த ஆரம்பித்தன,.


Thursday, April 27, 2023

38. அவரவர் பார்வையில்


38- அவரவர் பார்வையில்



 ஒரு ஊரில் வெவ்வேறு மதத்தலைவர்கள் இருந்தார்கள்.ஒவ்வொரு மதத்தலைவர்களும் அவர்களுடைய மதக் கடவுளை உயர்வாக பேசி மற்ற மதக்கடவுள்களை தங்களுக்கு தெரியாது என்பது போல் பேசுவர்.

இதனால் இவர்களுக்குள் எந்த மதக்கடவுள் உயர்ந்தவர்  என்ற சர்ச்சை  வந்தது.

அனைவரும் இந்த சர்ச்சைக்கு ஒரு தீர்வு கிடைக்க அந்த ஊரைச்சேர்ந்த நீதிபதியிடம் சென்றனர்.

அவர்களது குறையை கேட்ட நீதிபதி தன் வேலையாட்களிடம் ஒரு  ஆனையையும் 4 கண் பார்வை இல்லாதவர்களையும்  அழைத்து  வரச்சொன்னார்.

 அவர்களிடம் நீதிபதி  யானை ஒன்று உங்கள் எதிரே உள்ளது.அதை தொட்டுபார்த்து யானை எப்படி உள்ளது  என்று சொல்லவேண்டும் என்றார்.

யானையின் காதுகளை தொட்ட முதல் நபர் முறம் போல் உள்ளது என்றான்.

யானையின் வயிற்றை தொட்ட இரண்டாம் நபர் சுவர் போல் உள்ளது என்றான்.

யானையின் கால்களை தொட்ட மூன்றாம்  நபர் தூண் போல் உள்ளது என்றான்.

யானையின் வாலைத்தொட்ட நாலாவது  நபர் துடைப்பம் போல் உள்ளது என்றான்.

உடனே நீதிபதி மதத்தலைவர்களிடம் பார்த்தீர்களா "யானை ஒன்று தான் ஆனால் ஒருவனுக்கு முறம் போலவும்,மற்றொருவனுக்கு சுவர் போலவும்,இன்னொருவனுக்கு தூண் போலவும், நான்காவது நபருக்கு துடைப்பம் போலவும் தோன்றியிருக்கிறது.

கடவுள்  ஒருவர் தான்,அவரவர் பார்வையில் தான் வித்தியாசம் இருக்கிறது என்றார். "

இதைக்கேட்ட மதத்தலைவர்கள் வெட்கி தலைகுனிந்து திரும்பினர்.

Wednesday, April 26, 2023

37. வாத்தின் புத்திக் கூர்மை



37- வாத்துகளின் புத்தி கூர்மை



 ஒரு குளத்தின் அருகில் ஒரு ஆண் வாத்தும் பெண் வாத்தும் வசித்து வந்தன.

ஒரு நாள் பெண் வாத்து குளக்கரையில் இரண்டு  முட்டையிட்டது. அந்த முட்டைகளை  இரண்டு வாத்துகளும் கவனமாக பாதுகாத்து வந்தன.

அந்த குளத்தின் அருகே இருந்த மரம் ஒன்றில் பாம்பு புற்று ஒன்று இருந்தது.அதிலிருந்த பாம்பு இந்த முட்டைகளை பார்த்துவிட்டது.பாம்புக்கு முட்டைகளை எடுத்து உணவாக்கிகொள்ளவேண்டும் என்ற ஆசை  எழுந்தது.

வாத்துகள் இரண்டுக்கும் நல்ல பசி.அதனால் அவை இரண்டும் ஒரு இலையால் முட்டைகளை மூடி விட்டு குளத்தில் நீந்தி மீன்கள் சாப்பிட கிடைக்குமா என்று பார்த்தன. அந்த  சமயத்தில் பாம்பு வந்து அந்த முட்டைகளை ஒவ்வொன்றாக விழுங்கி விட்டது.

திரும்ப வந்த வாத்துகள் முட்டையை காணவில்லைஎன்றதும் மிகவும் வருத்தமடைந்தன.யார் எடுத்தார்கள் என்று தெரியவில்லை.சுற்று முற்றும் பார்த்ததில் பாம்பு புற்றினைக் கண்டதும் பாம்பு தான் எடுத்திருக்கும் என்று தீர்மானித்தன.

அடுத்த முறை மீண்டும் இரண்டு முட்டை போட்டது வாத்து.பின் இரண்டு வாத்துகளும் மரத்தில் மறைந்து கொண்டு பார்த்தன.அப்பொழுது பாம்பு வந்துகொண்டிருந்தது.அது முட்டையை எடுக்கும்போது வாத்து பாம்பிடம் "அவசரப்படாதே,நான் சொல்வதை  சற்று பொறுமையுடன் கேள்" என்றண.

"என்ன?" என்று கேட்டது? பாம்பு.

"நீ எங்கள் முட்டைகளை உணவாக்கிகொள்கிறாய்.எங்களுடைய குழந்தைகளை அழிக்கிறாய்.இங்கு இரண்டு முட்டைகள் தான் உள்ளது.பக்கத்து காட்டில் ஒரு மரத்தடியில் நிறைய முட்டைகள் உள்ளன.நீ விரும்பினால் நாங்கள் உன்னை அங்கு அழைத்து செல்கிறோம்" என்றன..

பாம்பும் அதிக உணவுக்கு ஆசைபட்டு சரி என்று சொல்லி அவைகளுடன் சென்றது.

அதற்கு முந்தின நாள் பருந்திடம் ஒருஇடத்தில் காத்திருக்கச்சொல்லி, தாங்கள் அதற்கு உணவாக பாம்பை அழைத்து  வருவதாக கூறியிருந்தன.

திட்டமிட்டபடி அந்த மரத்தடியில்  பருந்து காத்துக்கொண்டிருந்தது. வாத்துகள் பாம்புடன் வந்ததும் பருந்து பாம்பை கொத்தி தனக்கு உணவாக்கிகொண்டது.

தந்திரத்தால் தன்னை எதிரியிடம் காப்பாற்றிய பருந்துக்கு நன்றி கூறிவிட்டு தனது முட்டைகளை அடைகாக்க வாத்துகளும் சந்தோஷமாக திரும்பின.


36. செய்யும் தொழிலே தெய்வம்

 

36- செய்யும் தொழிலே தெய்வம்


மதுரையை ஆண்ட மன்னர்களுள் வீரபாண்டியன் என்ற அரசன் கலைகளில் ஆர்வம் உள்ளவர்.அவரது மனைவியும் அவரைப்போல கலைகளில் ரசனை உள்ளவள்.

ராணிக்கு தனது அந்தபுரத்தில் ஒரு அம்மனின் சிலை வடிக்கவேண்டும் என்ற ஆசை இருந்தது.அவளுக்கு பூஜை வழிபாடுகளில் மிகுந்த நம்பிக்கை உண்டு.

ராணியின் விருப்பத்திற்கேற்ப அரசன் கைதேர்ந்த சிற்பிகளை அழைத்து ஒரு அம்மன் சிலையை வடிவமைக்கச் சொன்னார்.வந்த சிற்பிகளில் அனுபவமிக்க சிற்பி ஒருவரை தேர்ந்தெடுத்து அவரிடம் ‘ஆறடி  உயரமுள்ள ஒரு அம்மன் சிலை  அந்தபுரத்தில் வடிவமைக்கவேண்டும்’ என்றார்.

சிற்பியும் அதற்கு ஒத்துக்கொண்டு வேலையை ஆரம்பித்தார்.அரசரும், அரசியும் அவ்வப்பொழுது வந்து மேற்பார்வையிடுவது வழக்கம்.சில நாட்கள் கழித்து  மற்ற மந்திரிகள் அரசரிடம் சிலை முடியும் தறுவாயில் உள்ளது என்று கூற இருவரும் சிற்பக்கூடம் விரைந்தனர்.

அங்கு அவர்கள் முழுமையான சிலை  கீழே கிடக்க சிற்பி மீண்டும் ஒரு புது சிலையை செதுக்கிகொண்டிருந்தார். அதற்கு காரணம் கேட்ட அரசரிடம் சிற்பி  அம்மனின் மூக்கில் ஒரு பெரிய ஓட்டை விழுந்துவிட்டது.அதனால் தான் மீண்டும் செய்கிறேன் என்றார்.

அரசர் , "ஆறடி உயரத்தில் உள்ள சிலையில் சிறு தவறு இருந்தால் மற்ற்வர்களுக்கு தெரியாது,இதையே வைத்துக்கொள்ளலாமே "என்றார்.

அதற்கு சிற்பி அரசே ‘ என் மனம் ஒப்பவில்லை’.  ஒரு வேலையை நம்மிடம் ஒப்படைப்பவர்களை நாம் ஏமாற்றக்கூடாது.அப்படி ஏமாற்றுவது அவர்களுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம் ஆனால் நம் மனசாட்சிக்கு தெரியும்மேலும்  நாம் ‘செய்யும் தொழிலே  தெய்வம்”அந்த தெய்வத்தை ஏமாற்றுவது தொழில் தர்மம்  இல்லை."என்றார்.

அரசர் சிற்பியின் நேர்மையை பாராட்டி அவருக்கு அரசவையில் முக்கியமான  பதவி கொடுத்தார்.

Monday, April 24, 2023

35. யோசித்து செய்.

35- யோசித்து செய்





அந்த கிராமத்தில் ஒரு  குளம் இருந்தது.அதில் மீன்களும் தவளைகளும் நிறைய இருந்தன.குளத்தின் அருகே உள்ள ஒரு மரப்பொந்தில் ஒரு  சுண்டெலி வசித்து வந்தது.சுண்டெலிக்கு தண்ணீரில் குதித்து விளையாட ஆசை.ஆனால் தன்னால்  முடியாது என்று அறிந்த சுண்டெலி அந்த குளத்தில் அடிக்கடி காணப்பட்ட தவளை ஒன்றின்  நட்பை  பெற்றது.இருவரும் மிகவும்  நண்பர்களாக  இருந்தனர்.

ஒரு நாள் சுண்டெலி தவளையிடம் ‘நண்பா ‘ எனக்கு தண்ணீரில் குதித்து விளையாடவேண்டும்’ என்று ஆசை.நீ எனக்கு உதவி செய்வாயா?" என்று கேட்டது.

தவளையும் "நாளைக்கு நான் நீ தண்ணீரில் விளையாடுவதற்கு உதவி செய்கிறேன்" என்றது.

அடுத்த நாள் தவளை வெகுநேரம் யோசித்தது.எப்படி சுண்டெலியை தண்ணீருக்குள் கொண்டு வருவது என்று தெரியவில்லை.சட்டென்று ஒரு யோசனை தோன்ற அதை செயல்படுத்தியது

அதன்படி தவளை ஒரு கயிற்றை எடுத்து அதனை தன் காலிலும் சுண்டலியின் காலிலும் சேர்த்து கட்டியது.இரண்டும் சேர்ந்தாற்போல் தண்ணீரில்   இறங்கியது.அப்பொழுது மேலே பறந்துகொண்டிருந்த பருந்து ஒன்று இவர்களை தாக்க வந்தது.உடன் தவளை தன்னையும் சுண்டெலியையும்  காப்பாற்றும் எண்ணத்தில் தண்ணீரில்  முழுவதுமாக இறங்கியது.தண்ணீரில் மூழ்கிய சுண்டெலி மூச்சு திணறி இறந்தது. அதன் உடல் மேலே மிதந்தது.

அதைப் பார்த்த பருந்து சுண்டெலியை தூக்க அதனுடன் கயிற்றால் கட்டப்பட்ட தவளையையும் சேர்த்து தூக்கியது.பருந்துக்கு உணவாக எலியும் தளையும் கிடைத்தது.

இதிலிருந்து நாம் பெ, அவர் சொல்வதை செய்யும்போது அதற்கான எதிர்பலன் என்னவாகும் என்று யோசித்து அதற்கேற்றபடி செயல்படவேண்டும்.










`

அதை 





lmஅதைஆஆஆஆஆஆஅathaiaaaaaaaஆஆ

Thursday, April 20, 2023

34. எல்லாவற்றிற்கும் காரணம் உண்டு


34- எல்லாவற்றிற்கும் காரணம் உண்டு




 ஒரு காட்டில் ஆமையும்,நத்தையும் நண்பர்களாக இருந்து வந்தன.அவர்களைத்தேடி ஒரு முயல் அவ்வப்பொழுது அங்கு வரும்.மூன்றும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருக்கும்.

ஒரு நாள் முயல் அவற்றிடம் "உங்களால் என்னை மாதிரி வேகமாக ஓடமுடியாது,துள்ளி குதித்து  விளையாடவும் முடியாது.ஆண்டவன் உங்களை ஏன் இப்படி படைத்திருக்கானோ தெரியவில்லை", என்று ஏளனமாக பேசியது.மேலும் முயல் அவற்றைப்பார்த்து "உங்களால் உங்கள் முதுகிலுள்ள ஓட்டை சுமந்து கொண்டு நடப்பதே சிரமம்,பின் எவ்வாறு ஓடமுடியும் "என்றும் கேலி செய்தது.

அப்போது ஓநாய் ஒன்று அவற்றை நோக்கி ஓடி வந்தது.உடனே ஆமையும் நத்தையும் தங்கள் உடலை ஓட்டுக்குள் இழுத்துக்கொண்டு மறைத்துக்கொண்டன.ஓநாய் முயலை குறிபார்த்தது.முயல் வேகமாக தப்பி ஓடியது.முயலை தொடர்ந்து சென்றதால் களைப்படிந்த ஓநாய் வந்த வழியே திரும்பி விட்டது.

சற்று நேரம் கழித்து அங்கு வந்த முயலிடம் ஆமை சொன்னது.."எங்களை ஏளனமாக பேசினாயே.ஓநாய் வந்ததும்..நாங்கள் எங்கள் உடலை சுருக்கிக் கொண்டு கூட்டினுள் அடைந்தோம்.ஓநாய் எங்களை ஒன்றும் செய்யவில்லை.ஆனால் உன்னைப் பிடிக்க நினைத்த போது..பயத்தில் எவ்வளவு வேகமாக ஓடினாய்? இப்போது புரிந்த்தா..ஆண்டன் ஏன் உனக்கு ஓடும் திறமையையும்,எங்களுக்கு கூட்டினையும் தந்துள்ளார் என்று."

ஒவ்வொரு உயிருக்கும் உயிர் வாழ என்னன்ன தேவையோ அதை பல வடிவங்களில் ஆண்டவன் கொடுத்திருக்கிறார்"

இறைவன் படைப்பில் எல்லாவற்றிற்கும் காரணம் உண்டு.


Wednesday, April 19, 2023

26 - நிலையாமை

26 - நிலையாமை
     



கங்கையில் ஒரு வியாபாரி குளித்துக் கொண்டிருந்தான். அப்போது அழகான கைத்தடி ஒன்று மிதந்து வந்தது. அதை எடுத்துக் கொண்டு கரையை நோக்கி நீந்தினான் அவன். அப்போது ஒரு நீர்ச்சுழலில் மாட்டிக் கொண்டான்.தப்பிக்கக் கடும் முயற்சி செய்தான்.ஒரு வழியாகப் போராடி உயிர் பிழைத்தான். ஆனால் அந்தக் கைத்தடி எங்கோ நழுவிப் போய் விட்டது.

கரைக்கு வந்த அவன் அழகான கைத்தடியை இழந்து விட்டேனே என்று கதறினான். அங்கு இருந்த ஒரு துறவி, ''அய்யா, நீங்கள் குளிக்க வெறுங்கையுடன் வந்ததை பார்த்தேனே? இப்போது கைத்தடியை நழுவ விட்டதாகக் கூறுகிறீர்களே?'' என்று கேட்டார்.
வியாபாரி நடந்ததைக் கூறினான்.

துறவி சொன்னார், ''அய்யா, உங்களைப் பார்த்தால் எனக்கு சிரிப்பு வருகிறது. கங்கையில் கைத்தடி மிதந்து வந்தது. இப்போதும் அது மிதந்து கொண்டு போகிறது. அப்படி இருக்கையில் அது உங்கள் கைத்தடி என்று எப்படிக் கூறுகிறீர்கள்? அந்தக் கைத்தடியை இரண்டு நிமிடங்கள் தங்கள் கையில் வைத்திருந்ததனால் அது உங்களுடையது என்று சொந்தம் கொண்டாட உரிமை பெற்று விட்டீர்களா?''

வாழ்க்கையில் எதுவும் நிச்சயமில்லை. பிறக்கும் போது யாரும் எதையும் கொண்டு வருவதில்லை. இறக்கும் போதும் எதையும் கொண்டு போவதில்லை. ஆனால் வாழ்வில் பலவற்றை உரிமை கொண்டாடுகிறோம். நமது துன்பங்களுக்கெல்லாம் அது தான் காரணம்.





Tuesday, April 18, 2023

33.புத்திசாலியும் மூடனும்


33- புத்திசாலியும்..மூடனும்




 தாமோதரன் ஒரு ஆசிரியர்.எல்லோரிடத்திலும் அன்பானவர்.இலவச பாடசாலை ஒன்று ஆரம்பித்து எல்லோருக்கும் இலவசமாக கல்வி கற்று தந்தார்.அதனால் அந்த கிராம மக்களுக்கு அவர் மேல் ஒரு மரியாதை உண்டு.சிறுவர்,சிறுமிகளிடம் மிகவும் கண்டிப்பாக இல்லாமல் அன்பாக இருந்ததால் எல்ல சிறுவர் சிறுமிகளும் அவரிடம் பாடம் கற்க விருப்பபட்டனர்.

அந்த ஊரில் ராமு என்ற செல்வந்தன் இருந்தான்.படிப்பறிவு கிடையாது.அவனது வீட்டில் அவனது பெற்றோர் எவ்வளவு கெஞ்சியும்  பள்ளிக்கூடம் பக்கம் சென்றதில்லை.அவனுக்கு ஆசிரியரிடம் மரியாதை கிடையாது.அவரை எங்கு கண்டாலும் வம்புக்கு இழுப்பான்.

ஒரு நாள் மாணவ மாணவிகளுக்கு பாடம் சொல்லிக்கொடுத்துவிட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்த ஆசிரியரை ராமு வழிமறித்தான்.

அவன் கையில் ஒரு பெரிய பூசணிக்காய் ஒன்று இருந்தது.அவன் ஆசிரியரைப் பார்த்து உங்களை ஊரில் எல்லோரும் ‘அறிவாளி’ என்று கூறுகின்றனர்.உங்களுக்கு தெரியாதது எதுவும் இல்லை என்கின்றனர். நான்  உங்களுக்கு ஒரு கணக்கு போடுகிறேன்.அதில் நீங்கள் தோற்று விட்டால்  உங்களை ‘முட்டாள்” என்று நீங்கள் ஒத்துக்கொள்ளவேண்டும் என்று சொல்லி கணக்கை கூறினான்.

‘ இந்த பூசணிக்காயின் எடை என்ன? என்றான்.

அதைக்கேட்ட ஆசிரியர் ஒரு நிமிடம் யோசித்தார்.இவன் ஒரு மூடன்,இவனுக்கு சரியான  பாடம் புகட்ட வேண்டும் என்று நினைத்தார்.

அவனிடம் ‘உன் தலையின் எடை எவ்வளவோ அவ்வளவு தான் பூசணிக்காயின் எடையும். வேண்டுமென்றால் உன் தலையைக் கொய்து விட்டு இரண்டையும் அளந்து பார்க்கலாம் என்றார்.

தன்னுடைய ஆணவத்தை அடக்கிய  ஆசிரியர் ‘ புத்திசாலி;' என்று உணர்ந்த ராமு அவரிடம் தன் செயலுக்காக வருந்தி மன்னிப்பு கேட்டான்.அதற்கு பின் அவரிடம்  வம்பு செய்வதில்லை,மரியாதையுடன் நடந்து கொள்ள ஆரம்பித்தான்..

32. குறையில்லாதவர் யாருமில்லை…

 32- குறையில்லாதவர் யாருமில்லை



மாதவனும்,கல்யாணியும் அரசு  அலுவலகத்தில் வேலை பார்த்து வருகின்றனர்.மாதவன் அலுவலகத்துக்கு ஸ்கூட்டரில் செல்வது வழக்கம்கல்யாணி பஸ்ஸில் செல்வாள்.அவர்களது மகள் நேத்ரா வீட்டு பக்கத்திலுள்ள பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கிறாள்.மாதவன் மாலை அலுவலகத்திலிருந்து பள்ளி சென்று அவளை அழைத்து வருவது வழக்கம்.

ஒரு நாள் மாதவன் ஸ்கூட்டர் பழுது அடைந்த்து. அதனால் அவன் பஸ்ஸில் அலுவலகத்துக்கு சென்றான்.மாலை வரும்போது மகளை   பள்ளிக்கூடத்திலிருந்து  ஆட்டோவில் அழைத்து கொண்டு வந்தான்.

வீட்டிற்கு வந்தவுடன் நேத்ரா ‘ அப்பா எனக்கு மிகவும் பசிக்கிறது  ஏதாவது செய்து கொடுங்கள்' என்றாள்.மாதவனும் கல்யாணி வர லேட்டாகும் என்பதால் மகளிடம் ‘கண்ணா, நான் உனக்கு தோசை வார்த்து தருகிறன் ‘ என்றான்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து மாவை ஊற்றி தோசை வார்க்கலானான்.முதல் இரண்டு தோசை தீய்ந்துவிட்டது. மூன்றாம் தோசை சுமாராக வந்தது.நேத்ராவும் பசியால் அதனை சாப்பிட்டாள்.

அம்மா வந்தவுடன் நேத்ரா அம்மா ‘ அப்பா எனக்கு தோசை வார்த்து கொடுத்தார்’ஆனால்  எல்லாம் தீய்ந்துவிட்டது..உன்னை போல் முறுகலாக அப்பாவுக்கு  வார்க்க தெரியவில்லை  என்றாள்.

அம்மா சொன்னாள் 'நேத்ரா அப்பாவும் இன்று பஸ்ஸில் களைப்புடன் வந்திருப்பார்.வந்தவுடன் நீ பசி என்று கூறியதும் தனக்கு சரியாக வார்க்க தெரியாவிட்டாலும் பரவாயில்லை என்று தோசை வார்த்தார். முதல் தடவை செய்ததால் அவருக்கு தெரியவில்லை.

அதனால் அதை நாம் சுட்டிக்காட்டக்கூடாது.தவறுகள் எல்லோருக்கும் சகஜம்.அடுத்தடுத்த தோசை கண்டிப்பாக நன்றாக வரும்.

இதுபோல் பள்ளியிலும் நீ நண்பர்கள் யாரிடமும் எந்த குறையும் கண்டுபிடிக்கக்கூடாது.குறைகள் இல்லாத மனிதர்களே இல்லை.. குறைகள் விரைவில் நிறைகளாக மாறும் "என்றாள்.


Monday, April 17, 2023

31.அவனின்றி ஓர் அணுவும் அசையாது

31- அவனின்றி ஓர் அணுவும் அசையாது





 மகத நாட்டு மகளுக்கு கல்யாணம்.ஊரே ஒரே கொண்டாட்டத்தில் உள்ளது.அரசன் மகளின் கல்யாணத்துக்கு மூன்று நாட்கள் தொடர்ந்து அன்னதானம்  வழங்க ஏற்பாடு செய்திருந்தான்.

முருகன் ஒரு ஏழை.அவனுக்கு உடுத்துவதற்கு உடை கூட ஒழுங்காக இல்லை.இந்த கிழிந்த உடையுடன் அரண்மனைக்கு எவ்வாறு  செல்வது, அன்னதானத்தில் எவ்வாறு  கலந்து கொள்வது என்று அவனுக்கு ஒரே கவலையாக இருந்தது.

இருப்பினும் தன்னிடமுள்ள ஒரு ஆடையை தோய்த்து அணிந்து கொண்டு அரண்மனையில் அன்னதான வரிசையில்  நின்று கொண்டான். அவனுக்கு முன்னால்  பத்து பேர் நின்று கொண்டிருந்தனர்.எல்லோருக்கும் உணவு வழங்கப்பட்டது..அவனுடைய நேரம் வந்த போது அரண்மனை சேவகன்  அவனை தள்ளிவிட்டு அடுத்தவனுக்கு உணவு கொடுத்தான்.மனது மிகவும் வருத்தப்பட்டு முருகன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.

முருகன் அப்படியே பசியால்  நடந்துகொண்டு குளத்தங்கரைக்கு வந்தவன் அதிலுள்ள தண்ணீரை அள்ளிக்குடித்துவிட்டு தன்னைத்தானே நொந்துகொண்டு இறைவா ‘என்னை ஏன் இப்படி படைத்தாய் ? நான் என்ன தவறு செய்தேன்? ஏழையாய் பிறந்தது என் தவறா?" என்று  புலம்பினான்.

திடீரென்று பின்புறம் ஒரு குரல் கேட்டது.திரும்பி பார்த்த முருகன் ஆச்சிரியப்பட்டுப் போனான்.நின்றது அரசன்.

அரசன்,அவனிடம் "உன்னை சேவகர்கள் தள்ளிவிட்டதை நான்  பார்த்தேன்.அதனால் உன் பின்னால் வந்தேன்.என்னுடன் வா "என்று கூறி அவனுக்கு நல்ல உடைகளை அணிவித்து அவனை தன்னுடன் அமர்ந்து சாப்பிட வைத்தார்.அவனுக்கு தேவையான பொருள் உதவியும் செய்தார்.அவனது அரசாங்கத்தில் ஒரு வேலையையும் போட்டுக் கொடுத்தார்.

இறைவன் எப்பொழுதும் நம்மை கைவிடுவதில்லை.நாம் கேட்பதை அவன் கொடுப்பதில்லை என்று வருந்தவே வேண்டாம்,

அவனுக்குத்தெரியும்  நமக்கு வேண்டியதை எந்த அளவு எப்போது தருவது என..ஆனால் ஒருநாள் கண்டிப்பாக அள்ளித்தருவான்.

“அவனின்றி ஓர் அணுவும் அசையாது.”


 


\

Sunday, April 16, 2023

30. முட்டாளாக்கிய முட்டாள்




 ஒரு ஊரில் சங்கரன் என்ற அப்பாவி ஒருவன் இருந்தான்.அவனது செயல்கள் எல்லாம் வினோதமாகவே இருக்கும்.அவனை எல்லோரும் முட்டாள் என்றே கூப்பிடுவர்.

அவன் ஒரு வீட்டில் தோட்டவேலைகளை செய்துகொண்டு அந்த வீட்டம்மா கொடுக்கும் உணவை சாப்பிட்டுக்கொண்டு பொழுதை கழித்து வந்தான்.அந்த ஊரில் உள்ள மற்றவர்கள் அவனிடம் வேலை வாங்குவர்.ஆனால் சரியான ஊதியம் கொடுப்பதில்லை.

ஒரு நாள் அவன் வேலை செய்யும் வீட்டிற்கு ஒரு விருந்தினர் வந்தார்.அந்த வீட்டுக்காரர் விருந்தினரிடம் சங்கரை காண்பித்து 'இவன் ஒரு முட்டாள்இவனிடம் எந்த வேலையையும் இலவசமாக வாங்கலாம்.வேண்டுமென்றால் சோதித்து பாருங்கள்' என்றார்.

உடனே விருந்தினர் அவருடைய ஒரு கையில் ஒரு ரூபாயும் மற்றொரு கையில் 5 ரூபாயும் வைத்திருந்து அவனிடம் "உனக்கு எது வேண்டும்?" என்று கேட்டார்.அவன் ஒரு ரூபாய் வைத்திருந்த கையை தேர்ந்தெடுத்தான்.விருந்தினர் அவனை தனியே அழைத்து," ஏன் அப்படி செய்கிறாய் ?"என்று கேட்டார்.

அதற்கு அவன் ,"ஒரு ரூபாயை எடுத்தால் எல்லோரும் நான் முட்டாள் என்று நினைத்து மீண்டும் மீண்டும் எனக்கு பணம் கொடுப்பார்கள்.இவ்வாறு நான் ஒரு நாளைக்கு ரூபாய் 5 முதல் 10 வரை சம்பாதிப்பேன் .ஆனால் நான் 5 ரூபாயை எடுத்தால் அதற்கு பிறகு யாரும் பணம் கொடுக்கமாட்டார்கள்."என்றான்

அவன் மேலும்  .’ நான் முட்டாளில்லைஎன்னை முட்டாளாக நினைத்து கொடுப்பவர்கள் தான் முட்டாள்கள்" என்றான். 

Saturday, April 15, 2023

29. புத்தி கூர்மை

   29- புத்தி கூர்மை



 கிராமம் ஒன்றில் புலவர் ஒருவர் வறுமையில் வாடினார்.

இதைப்பார்த்த அந்த ஊர் கிராமத்தலைவர் ..'நம் நாட்டு அரசரைப் பாடி அரசரிடமிருந்து பரிசினைப் பெற நீர் முயற்ச்சிக்கலாமே…’என்றார்.

புலவரும் அரசனைத் தேடி சென்றவர்,மன்னனை கண்டு புகழ்ந்து பாடியதும்,மன்னர் மகிழ்ந்து 'உங்களுக்கு என்ன அன்பளிப்பு வேண்டும் ?’ என்று கேட்டார்.

புலவரும், இனி வறுமையில் பாதிக்ககூடாது  என்று எண்ணினார்.பின் அங்கு பல  கட்டங்கள் கொண்ட சதுரங்க பலகை ஒன்று இருப்பதை  கண்டார்."உடன் அரசரிடம், எனக்கு பெரிதாக ஒன்றும் வேண்டாம்..அந்த சதுரங்க பலகையில் பல கட்டங்கள்  இருக்கின்றன  அல்லவா? அதில் முதல் கட்டத்தில் ஒரு நெல் மணியை வைத்து பின் ஒவ்வொரு கட்டத்திற்கும் அதை இரட்டிப்பாக்கினால் அதை பரிசாக ஏற்றுக்கொள்வேன் ’ என்றார்.

புலவர் இப்படி கேட்பதைக்கண்டு அவரை எள்ளி நகையாடிய அரசனும் ‘ சரி’ என்றார்.

பின் அரசன்’ அரண்மனை சேவகர்களிடம் புலவர் கேட்டபடி நெல்மணிகளை எடுத்து வாருங்கள்’ என்றார்.

முதல் கட்டத்தில் ஒன்று,இரண்டாம் கட்டத்தில் இரண்டு,மூன்றாம் கட்டத்தில் 4,நான்காம் கட்டத்தில்8 என நெல்மணிகளை  அடுக்கினர்.

பத்தாம்  கட்டம் வந்தபோது நெல்மணிகள் 512 ம், இருபதாம் கட்டம் வந்தபோது எண்ணிக்கை 

5,24,288 ஆயிற்று. 32ம் கட்டம் வந்தபோது அதாவது சதுரங்க பட்டையின் பாதிதூரம் வந்தபோதுஎண்ணிக்கை 214,74,83,648  (214 கோடிகளுக்கும் மேலே).

அது பெருகியது.

விரைவில் எண்ணிக்கை கோடான கோடிகளைத்தாண்டி அரசனின் ராஜ்ஜியம் முழுவதும் புலவனிடம் இழக்கும் நிலைமை ஏற்பட்டது.

புலவரின் சாதூர்யத்தையும் அது புரியாது அவரை எள்ளி நகையாடியதையும் உணர்ந்த அரசன் புலவரிடம் மன்னிப்பு கேட்டார்.

பின் புலவருக்கு தேவையான பரிசுகளைக் கொடுத்து அவரை வறுமையிலிருந்து விடுவித்தார்.

கூட்டு-பெருக்கும் சக்தி என்றும் பெரிது என்று நாமும் உணரவேண்டும்.


Wednesday, April 12, 2023

. 28. தோற்றத்தைக்கண்டு எடை போடக்கூடாது

 28 - தோற்றத்தை கண்டு எடை போடக்கூடாது


ஒரு காட்டில் கரடி ஒன்று வாழ்ந்து வந்தது.ஒரு நாள் உணவு எதுவும் கிடைக்காமல் பசியால்  அலைந்து திரிந்தது.

அப்போது ஒரு மரத்தின் மீது ..ஒரு தேன் கூட்டை கண்டது.அந்த தேன் கூட்டில் உள்ள தேனை குடிக்க எண்ணி அதன் அருகே சென்றது.

அப்போது வெளியே சென்று இருந்த தேனி ,ராஜா கரடி ஒன்று தேன் கூட்டிற்கு வருவதை பார்த்தது.

பார்த்ததும் அதன் அருகில் சென்றது.

கரடி அந்த தேனியை பார்த்து நான் இப்போது தேன்  கூட்டிலுள்ள தேனை குடிக்கப்போகிறேன் என்றது.

உடனே தேனி தெரியும், இது எங்கள் வீடு, இதை ஒன்றும் செய்யாதீர்கள்’ என்று கெஞ்சியது.

கரடி தேனியை பார்த்து ..’நீ எவ்வளவு சிறியவன்,நான் உன்னைவிட எவ்வளவு பெரியவன்,பலசாலியும் கூட தெரியுமா,உன்னால் என்னை ஒன்றும் செய்யமுடியாது ‘ என்றது.

நிலைமையை உணந்த தேனி ..'எனக்கு ஒரு நிமிடம் அவகாசம் கொடுங்கள்நான் வீட்டிலுள்ள பொருட்களை தேன் கூட்டிலிருந்து எடுத்து சென்று விடுகிறேன்’ என்றது.கரடியும்  அதற்கு சம்மதித்தது.

தேனி உடனே  கூட்டிற்கு சென்று மற்ற தேனீக்களிடம்  நடந்ததைக் கூறியது.மற்ற தேனீக்களும் உடனே கூட்டை விட்டு வெளியே வந்தன..அவை அனைத்தும் கரடியை கொட்ட தொடங்கின.கரடி தேனீக்கள் கொட்டியதால் வலியால் துடித்தது..பின் ஓடத்தொடங்கியது.தேனீக்களும் விடாமல் கரடியை துரத்தின.அவற்றிடமிருந்து தப்பிக்க கரடி பக்கத்திலுள்ள ஆற்றில் குதித்தது.

தேனீக்களும் கரடியை மன்னித்து அதனை விட்டுவிட்டன..உருவத்தில் சிறியது என கரடி  நினைத்ததால் அதற்கு வந்தது வினை.நாமும் உருவத்தில் சிறியவனவற்றை பார்த்து அலட்சியம் செய்யக்கூடாது.


Tuesday, April 11, 2023

27. பிறரை குறைத்து மதிப்பிடக்கூடாது

   27- பிறரை குறைத்து மதிப்பிட கூடாது


ஒரு தோட்டத்தில் ஒரு எறும்பு புற்று இருந்தது.அதிலிருந்த எறும்புகள் பக்கத்திலிருந்த ஒரு பெரிய மரத்தின் மீது ஏறிக்கொண்டிருந்தன.

மரத்திற்கு பக்கத்தில் ஒரு முசுக்கொட்டை செடி ஒன்று இருந்தது.அதில் ஒரு கூடு இருந்தது.அந்த கூட்டிற்குள் ஒரு புழு ஒன்று வாலாட்டிக்கொண்டிருந்தது..அது ஒரு பட்டுப்புழு.

எறும்பு கூட்டத்தில் ஒரு பெரிய எறும்பு புழுவைப்பார்த்து ‘எங்களைப்பார்,எத்தனை உயரமான மரத்தில் ஏறிச்செல்கிறோம்.ஆனால் உன்னால் ஒருபோதும் இவ்வளவு உயரத்திற்கு வரமுடியாது' என்று கேலி செய்தது.மற்ற எறும்புகளும் அதனை ஆமோதித்தன.

புழு அமைதியாக  இருந்தது.இந்த புழுதான் நன்கு வளர்ந்து கூட்டுபுழு ஆகி பின் அழகிய பட்டுபூச்சி ஆகும்.இதனை அறியாத எறும்புகள் அந்த புழுவை கேலியும் கிண்டலும் செய்தபடி அந்த இடத்தை விட்டு சென்றன.

அடுத்த இரண்டு தினங்களில் அங்கு வந்த எறும்புகள் வெறும் கூட்டை மட்டும் பார்த்தன.அதைப்பார்த்த எறும்புகள் புழு கூட்டிலேயே தனது வாழ்வை முடித்துக்கொண்டன  போலும் என்று எண்ணின.

அப்பொழுது ஒரு குரல் ‘எறும்பு நண்பர்களே’ என்று யாரோ கூப்பிடும் குரல் கேட்டது. மரத்தின்  உயரத்தில் அழகிய பட்டுபூச்சி சிறகடித்து நின்றது.பட்டுபூச்சி எறும்புகளைப்பார்த்து ,"இப்போது நான் உங்களை விட உயரமாக எதையும் பற்றிக்கொள்ளாமல் பறக்கிறேன்.உங்களால் இவ்வளவு உயரம்வரமுடியாது.நான் உங்களை கேவலப்படுத்தவில்லை.ஒவ்வொருவருக்கும் ஒரு திறமையை இறைவன் கொடுத்திருக்கிறான். அந்த  திறமைகளுக்காக நாம் மற்றவர்களை  இகழக்கூடாது.அதை புரிந்து கொள்ளுங்கள்" என்றது.

எறும்புகளும் .அதனை கேட்டு தலை குனிந்தன.

Friday, April 7, 2023

25. முயன்றால் முடியும்

   25 - முயன்றால் முடியும்


சதீஷ் ஒரு அரசாங்க பள்ளிக்கூடத்தில் 11ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான்.அவனுக்கு படிப்பில் மட்டுமல்லாமல் விளையாட்டிலும் ஆர்வம் அதிகம்.குறிப்பாக கால்பந்து ஆட்டத்தில் அவனுக்கு அதிக ஈடுபாடு அதிகம்.அவனுடைய பள்ளிகூட  கால்பந்து அணிக்கு அவன் தான்  தலைவன்.

அவன் தன் அணியில் இருக்கும் எல்லோரிடத்திலும் மிகவும் அன்பாக இருப்பான்.அவர்களுக்கு நல்ல பயிற்சி கொடுப்பான்.அவனது விடாமுயற்சியால் அவனது அணி மற்ற பள்ளிகளோடு விளையாடும்போது எப்பொழுதும் முதலாவதாக வெற்றிபெறும்.

ஒரு முறை அண்டை மாவட்டத்தோடு விளையாடும்போது அ்வனது  அணியால்  ஒரு போட்டியிலும் வெற்றி பெற முடியவில்லை.அதனால் அவன் மனதளவில் மிகவும் சோர்வடைந்துவிட்டான்.

இதை பார்த்த அவனது உடற்பயிற்சியாளர் அவனிடம் வந்து ‘சதீஷ் விளையாட்டில் வெற்றி தோல்வி என்பது சகஜம்’ ஆகவே தோல்வியைக்கண்டு மனம் தளராதே.இது வரைக்கும் நாம் நிறைய கோப்பைகள் பள்ளியளவில் வாங்கியிருக்கிறோம்..அதை மனதில் கொண்டு உன்னுடைய சக தோழர்களுக்கு  சரியான பயிற்சியும், மனவலிமையையும் நீ தான் கொடுக்கவேண்டும் என்றார்.

சதீஷும் ஆசிரியர் சொல்வதைக்கேட்டு அணியில் உள்ள மற்ற மாணவர்களை ஊக்கப்படுத்தி,சிறந்த பயிற்சி கொடுத்தான். அடுத்து நடந்த மாவட்ட அளவு போட்டியில் அவனது அணி முதலிடம் பெற்றது.

நம்மால் முடியாதது என்று எதுவுமில்லை.முயன்றால் எல்லாம் சாத்தியமே!





Tuesday, April 4, 2023

24.நினைத்தால் முடியும்

  24- நினைத்தால் முடியும்




 நடேசன் திருச்சி அருகே ஒரு கிராமத்தில்  விவசாயம்செய்து வந்தான்.அவனுக்கு குடி பழக்கம் இருந்தது.காலையில் எழுந்து நிலத்துக்கு சென்று எல்லா வேலைகளையும்   முடித்து  விட்டு வரும் போது நிறைய குடித்து விட்டு வருவான்.வீட்டில் சரியாக பணம்  கொடுப்பதில்லை.இதனால் அவனுக்கும் அவன் மனைவிக்கும் சண்டை ஏற்படும்.குழந்தைகள் இருவரையும் நன்றாக படிக்க வைக்க அவள் நினைத்தாள்.ஆனால் அது முடியவில்லை.

எவ்வளவோ அவன் மனைவி முயன்றும் அவனை திருத்த  முடியவில்லை.பக்கத்து வீட்டில்  நடேசனின்  நண்பர் வசித்து  வந்தார்.அவர் நடேசனின் மனைவியிடம் ‘அடுத்த ஊரில் ஒரு ஞானி ஒருவர் இருக்கிறார்’ என்றும் அவரிடம் நடேசனை கூட்டி செல்லுமாறு சொன்னார்.'அவருடைய போதனையால் நடேசன் ஒரு வேளை திருந்தக்கூடும் "என்றார்.

அடுத்த நாள் நடேசனின் மனைவி அவனை ஞானியிட அழைத்து சென்றாள்.ஞானியிடம் நடேசன் தன் நிலைமையை கூறினான்.எவ்வளவு முயன்றும் தன்னால் குடியை கட்டுபடுத்தமுடியவில்லை என்றான்.எனக்கு நீங்கள் தான் ஒரு வழி கூறவேண்டும் என்றான்.அவர் அவன் சொல்வதையெல்லாம் கேட்டு ‘நீ நாளை வா "என்று சொல்லி அனுப்பினார்.

அடுத்த நாள் அவன் சென்றபோது ஞானி ஒரு தூணை இறுக்கக் கட்டிக்கொண்டு  ‘என்னை விட்டு விடு என்னை விட்டு விடு என்று கத்திக்கொண்டிருந்தார்.

நடேசன் அவரைப்பார்த்து  ‘ஐயா, நீங்கள் தான் தூணை கட்டிக்கொண்டிருக்கிறீர்கள்,நீங்கள் தான் தூணை விடவேண்டும்.’ என்றான்.

உடனே ஞானி "இதுபோல நீ தான் குடியை கட்டிக்கொண்டிருக்கிறாய்,நீயாகத்தான்  விடவேண்டும்" என்றார்.

நடேசனும் அதை உணர்ந்து குடியை கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தி நல்லவனாக மாறினான்.

Monday, April 3, 2023

23.தன்னம்பிக்கை

     23 - தன்னம்பிக்கை


ஒரு ஊரில் ராமன்,லட்சுமணன் என்ற இரு சகோதரர்கள் வாழ்ந்து வந்தனர். ராமனுக்கு 10 வயது லட்சுமணனுக்கு 8 வயது.இருவரும் ஒருவருக்கொருவர் ஒற்றுமையாக இருந்தனர்.எங்கு சென்றாலும் ஒற்றுமையாகவே சென்றனர்.படிப்பிலும் அவர்கள் புத்திசாலிகள்.

விடுமுறை அன்று ஒருநாள் அவர்கள் இருவரும் விளையாட வீட்டின் பின்புறம்  சென்றனர்.அவர்கள் அப்படி விளையாடிக்கொண்டிருக்கும் போது அவர்களையும் அறியாமல் வெகுதூரம் சென்றுவிட்டனர்.அங்கு ஒரு பாழடைந்த   கிணறு இருந்தது.அதில் பெரியவன் ராமன்  தவறி விழுந்து விட்டான்.சிறியவனான லட்சுமணன் செய்வதறியாது அழுது அங்குமிங்கும் ஓடினான்.யாருமின்றி அந்தப் பகுதி வெறிச்சோடி இருந்தது.

அப்பொழுது லட்சுமணன் கண்ணில் ஒரு வாளியும் அதனுடன் இணைந்த கயிறும் கண்ணில் தென்பட்டது.உடனே அதை அவன் எடுத்து கிணற்றில் போட்டு அண்ணனை வாளியை கெட்டியாக பிடித்துக் கொள்ளச் சொன்னான்.ராமனும் கயிற்றை பிடித்துக் கொள்ள லட்சுமணன் தன்பலத்தையெல்லாம் உபயோகித்து ராமனை  மேலே  இழுத்தான். ராமனும் மேலே வந்துவிட்டான்.லட்சுமணனுக்கு அவனாலேயே அவனது செயலை நம்பமுடியவில்லை.

லட்சுமணன் தன்னம்பிக்கையோடு தன்னால் முடியுமென்று நினைத்து இந்த காரியத்தை செய்தான்.

நாமும் ஒரு செயலில்  ஈடுபடுமுன் அச்செயலை நம்மால் செய்து முடிக்கமுடியும் என்ற நம்பிக்கையோடு செய்தால் வெற்றி நிச்சயம்.

Saturday, April 1, 2023

22. வருமுன் காத்துக்கொள்ளுதல்

22- வருமுன் காத்து கொள்




ஒரு சிறிய குளத்தில்  மூன்று மீன்கள் நண்பர்களாக வாழ்ந்துவந்தன.

 முதல்  மீன் துன்பம் வருமுன் தப்பித்துக்கொள்ள விரும்பும்.

இரண்டாவது மீன் துன்பம் வரும்போது அதிலிருந்து தப்பித்துக்கொள்ள வழி தேடும்.

மூன்றாவது மீன் தனக்கு துன்பம்வந்தால் அதை ஏற்றுக்கொள்ளும்.

ஒரு நாள்  மீனவர்கள்  இருவர் குளக்கரைக்கு வந்தனர்.குளத்தில் தண்ணீர் குறைவாக இருப்பதால் நாளை வந்து மீன் பிடித்துக்கொண்டு செல்லலாம் என்று பேசிக்கொண்டனர்.

இதைக்கேட்ட முதல் மீன் தன் நண்பர்கள் இருவரிடமும்  எச்சரிக்கை செய்தது.அவர்கள் இருவரும் முதல் மீன் சொல்வதை கேட்கவில்லை.

அதனால் முதல் மீன் ஒரு வாய்க்காலின் வழியே வெளியேறி வேறு இடத்துக்கு சென்று விட்டது.

இரண்டாவது மீனும்,மூன்றாவது மீனும் குளத்திலே இருந்தன.

அடுத்த நாள் இரண்டு மீனவர்களும் வந்து மீன்களை பிடித்துக்கொண்டனர்.மீன் வலையில்  இரண்டாவது மீனும் ,மூன்றாவது மீனும் மாட்டிக்கொண்டன.

இரண்டாவது மீன் மீனவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக இறந்தவன் போல் நடித்தது. இறந்த மீன் நமக்கு எதற்கு என்று  மீனவர்கள் அதை  மீண்டும் குளத்தில் விட்டனர்.அது தப்பித்து சென்று விட்டது.

மூன்றாவது மீன் செய்வதறியாது வலைக்குள்ளே மாட்டிக்கொண்டது.

நமக்கு வரப்போகும் துயரை முன்னமே அறிந்து அதிலிருந்து விடுபடும் வழியை  முதலிலேயே மேற்கொள்ளவேண்டும். 

Friday, March 31, 2023

21. கழுதையின் புத்திசாலித்தனம்

21- கழுதையின் புத்திசாலித்தனம்




 ஒரு காட்டில் கழு தை ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது.அந்த கழுதையை ஒரு ஓநாய் கவனித்து கொண்டிருந்தது.கழுதை எப்பொழுதும் தனியாகவே காட்டில் போய்கொண்டிருக்கும்.

அதை பயன்படுத்தி ஓநாய் அதை அடித்து தின்னும் நோக்கத்துடன் அதன் மீது பாய்ந்தது.

தனக்கு வந்த ஆபத்தை உணர்ந்த கழுதை மனதுக்குள் ‘ இந்த ஓநாயை எதிர்த்து சண்டை போடுவது கஷ்டம்.ஆகையால் ஏதாவது தந்திரம் பண்ணித்தான் இதனிடமிருந்து தப்பிக்கவேண்டும்’ என தீர்மானித்தது.

கழுதை,ஓநாயின் பாய்ச்சலின்போது சற்று விலகிக்கொண்டு ‘ஓநாயாரே உம்முடைய வலிமையின் முன் நான் எம்மாத்திரம். நான் இன்று உனக்கு பலியாவது உறுதி.அதற்கு முன்னால் நான் சொல்ல வந்த  விஷயத்தை நீங்கள் கேட்கவேண்டும்’ என்று கேட்டுக்கொண்டது.

‘நீ என்ன சொல்ல விரும்புகிறாய், சொல்'  என்றது ஓநாய். .

‘என் காலில் பெரிய முள் ஒன்று குத்திவிட்டது.முள்ளை எடுக்க நான் எவ்வளவு  முயன்றும் முடியவில்லை. நீங்கள் என்னை அடித்து சாப்பிட்டால் அந்த முள் உங்கள் தொண்டையில் குத்தி உங்கள் உயிரை வாங்கிவிடும்.ஆகவே  முதலில் என் காலில் தைத்த முள்ளை எடுத்துவிட்டு பிறகு நீர் என்னை அடித்து தின்னலாம்’ என்றது.

ஓநாயும் அதற்கு ஒப்புக்கொண்டது.கழுதை தன் பின்னங்கால்களை திருப்பி காண்பித்தது முள் இருக்கிறதா என ஓநாய் தேடும் வேளையில், அந்த சந்தர்பத்தை பயன்படுத்தி கொண்ட கழுதை பின்னங்கால்களால் ஓநாயை பலமாக உதைத்தது.கழுதையின் உதையை தாங்கமுடியாமல் ஓநாய் கீழே விழுந்தது.கழுதையும்  தப்பித்தது.

20. நேர்மையே வெல்லும்

   20 - நேர்மையே வெல்லும்



வெகு காலத்துக்கு முன்  மதுரைக்கு  அருகே ஒரு அரசன் ஆண்டு வந்தார்.அவருக்கு வாரிசுகள் இல்லை என்பதால் தனக்கு பிறகு தன்னைப் போல் நீதியும் நேர்மையும்  தவறாத ஒரு இளைஞனை  கண்டுபிடித்து அவனை அரசனாக்க வேண்டும்  என்று  நினைத்தார்.

அதன்படி அரசர்  நாட்டிலுள்ள   வீரமிக்க  இளைஞர்களை அழைத்து அவர்களுக்கு வில் போட்டி,வாள்போட்டி மற்றும் வாய் மொழி கேள்விகள் என்று பல போட்டிகள்  வைத்து கடைசியில் பத்து இளைஞர்களை தேர்ந்தெடுத்தார்.

அவர்களிடம் தனித்தனியாக ஒரு செடியின் விதையை கொடுத்தார்.இந்த விதையை ஒரு தொட்டியில் போட்டு வளர்த்து பெரிய செடியாக்கி ஆறு மாதம் கழித்து என்னிட ம்கொண்டு வரவேண்டும் .இதில் வென்ற ஒருவரே என்னுடைய வாரிசாக அறிவிக்கப்படுவர் என்று கூறினார்..

ஒவ்வொருவரும் விதையை வீட்டிற்கு எடுத்து சென்று தொட்டியில் வைத்து வளர்க்க ஆரம்பித்தனர்.பாண்டியன் என்று பெயருடைய ஒருவனுக்கு அவன் போட்ட விதை வளரவில்லை..எவ்வளவு முயன்றும் விதை போட்ட இடத்தில் ஒன்று ம்வரவில்லை.

மற்றவர்கள் வீட்டிற்கு  சென்று பார்த்ததில் அவர்களுடைய தொட்டியில் பெரிய செடிகளாக வளர்ந்து இருந்தன..அவனுக்கு என்ன செய்வதென்று  புரியவில்லை.

'வருவது வரட்டும்.  அப்படியே தொட்டியை அரசனிட ம்கொண்டு போய் காண்பிப்போம் தண்டனையை ஏற்றுக்கொள்வோம் ' என்ற முடிவோடு அரண்மனை சென்றான்.

அரசர் எல்லோருடைய தொட்டிகளையும் பார்த்துவிட்டு பாண்டியன் தான் வெற்றிபெற்றவன் என்று கூறினார்.

மீண்டும் அரசர் சொன்னது ‘நான் எல்லோருக்கும் வெந்நீரில் போட்டுஎடுத்த காய்ந்த விதையைத்தான் கொடுத்தேன்.அப்படிப்பட்ட விதை எப்படி முளைக்கும்.

பாண்டியனைத்தவிர மற்றவர்கள் அதனை மாற்றி வேறு விதையை போட்டு வளர்த்திருக்கிறார்கள்.ஆனால், நேர்மையாக  இருந்த பாண்டியன் தான் என்னுடைய வாரிசாக நியமிக்கப்படுகிறார்' என்று கூறினார்.

நேர்மையே  வெல்லும்..

19.தைரியமும் வலிமையும்

19 -தைரியமும் வலிமையும்

 



 ஒரு காட்டில் முயல் கூட்டம் ஒன்று வாழ்ந்து வந்தது.அந்த காட்டில் பச்சை  பசேல் என்று எங்கு பார்த்தாலும் செடிகளும்,காய்கறிகளும்,பழங்களும்  இருந்தன .இந்த முயல்கள் இதை சாப்பிட்டு சந்தோஷமாக  வாழ்ந்து வந்தன.

கோடை காலம் வந்தது.வெப்பம் அதிகமாக இருந்ததால் செடிகள் எல்லாம் கருகி பாலைவனம் போல் தோற்றமளித்தன..முயல்களுக்கு  சாப்பிட உணவு கிடைக்கவில்லை.

அந்த காட்டில்  வேட்டை நாய்கள் அதிகம் காணப்பட்டன..அவை தினமும் ஒரு முயலை அடித்து கொன்று சாப்பிடுவது வழக்காக கொண்டிருந்தன..ஆகையால் மற்ற முயல்கள்  உயிருக்கு பயந்து தனது பொந்துக்குள்ளேயே அடைந்து கிடந்தன..எவ்வளவு நாள் நாம் இப்படியே அடைந்து கிடப்பது நாம் ஏதாவது செய்யவேண்டும் என்று பேசிக்கொண்டன.

ஒரு முயல் ‘என்னால் இந்த பொந்தில் அடைந்து  கிடக்கமுடியாது.ஏதாவது ஒரு நதியில் விழுந்து  என் உயிரை மாய்த்துக்கொள்ளப்போகிறேன்’என்றது..

"நம்மை ஏன் கடவுள் இப்படி பலவீனமாக படைத்துவிட்டார்" என்று எல்லா முயல்களும் வருத்தப்பட்டன.

அந்த முயல்கள் எல்லாம் நதிக்கரையை அடைந்தபோது முயல்களைப் பார்த்து  தவளைகள் பயந்து நீருக்குள் குதித்தன.

இதைப்பார்த்த முயல்கள் ஆச்சிரியம் அடைந்தன..ஆண்டவன் நம்மைவிட வலிமை குறைந்தவர்களையு ம்  உலகில் படைத்திருக்கிறான்.ஆகவே உயிர் வாழ தைரியத்துடன் கூடிய வலிமை தான் தேவை

என்பதை உணர்ந்தன.

இனி நாம் தைரியமாக செயல்படவேண்டும் என்று தீர்மானம் எடுத்துக்கொண்டன.

வாழ்க்கையில் எந்த பிரச்சனை வந்தாலும் அதை தைரியமாக எதிர்கொள்ளவேண்டும்.



.

.

18.நியாய தீர்ப்பு

18- நியாய தீர்ப்பு




 திண்டுக்கல் என்ற ஊரில் மாரியப்பனும் அவனது தந்தையும்  வாழ்ந்து வந்தனர். மாரியப்பன் தன் வீட்டில் உள்ள தோட்டத்தில் விளையும் காய்கறிகளையும் பழங்களையும் விற்று பிழைத்துவந்தான்.

மாரியப்பன் தந்தைக்கு வயதாகிவிட்டதால் அவரால் அவனுக்கு ஒன்றும் உதவி செய்ய  முடியவில்லை.அவர் தான் சிறுக சிறுக சேர்த்துவைத்திருந்த ரூபாய் ஒரு லட்சத்தை அந்த ஊரில் அவரது நண்பரும் கணக்கு பிள்ளையுமான தாமோதரனிட ம்கொடுத்து கூடவே ஒரு கடிதமும் கொடுத்தார்.அந்த கடிதத்தில், ‘நீ விரும்பியதை என் மகன் அவனுடைய தொழிலுக்கு தேவை ஏற்படும்போது கொடு'என்று எழுதியிருந்தது.இந்த லெட்டரின் ஒரு நகலை மகனிடமும் கொடுத்திருந்தார்..

சில மாதங்களில் தந்தை இறந்துவிட மாரியப்பன் கணக்குபிள்ளையான தாமோதரனிடம் அப்பா கொடுத்த பணத்தை தன்னுடைய தோட்டத்தை சீரமைக்கவேண்டும் என்று கேட்டான்.அவர் அவனிட ம்ரூபாய் 25000/- மட்டுமே கொடுத்தார்.மாரியப்பன் இதற்கு ஒத்துக்கொள்ளவில்லை.இது நியாயமாக இல்லாததால் மாரியப்பன் இந்த வழக்கை தனக்கு தெரிந்த அந்த ஊர் நீதிபதியிடம் எடுத்து சென்றான்.

நீதிபதி தாமோதரனிடம் நீ மாரியப்பனுக்கு எவ்வளவு கொடுக்க விரும்புகிறாய் என்று கேட்டார்.அவர் ரூபாய் 25000/- என்று கூறினார்.தந்தை கொடுத்துள்ள லெட்டரை பார்த்துவிட்டு நீதிபதி தாமோதரனிட நீ எவ்வளவு எடுத்துக்கொள்ள விரும்புகிறாய் என்று கேட்டார்.அதற்கு தாமோதரன் ரூபாய் 75000/- என்றார்.

தந்தை கொடுத்த லெட்டரில் ‘ நீ விரும்பியதை கொடு’என்று எழுதியிருந்ததால்,அதன் படி நீ எடுத்துக்கொள்ள விரும்பியதுரூபாய் 75000/-அதுவே நீ விரும்பியத்தொகையாகும் ஆகவே ரூபாய் 75000/-ஐ மாரியப்பனிடம் கொடுத்துவிட்டு நீ ரூபாய் 25000/-ஐ எடுத்துக்கொள் என்று கூறி வழக்கை முடித்தார்..


 

17.சோம்பித் திரியேல்

   17 - சோம்பித் திரியேல்



முருகன் என்ற ஒருவன் மதுரை அருகே நத்தம் என்ற கிராமத்தில் தனது பெற்றோர்களுடன் வாழ்ந்து வந்தான்.அவன் ஒரு சோம்பேறி.ஒரு வேலையும் செய்யமாட்டான்.உண்பதும் தூங்குவதுமாக அவனுடைய  பொழுது கழிந்தது.

அவனது பெற்றோர் அவனை எப்படியாவது திருத்தவேண்டுமென்று அவனை ஒரு வைத்தியரிடம் அழைத்து சென்றனர்.வைத்தியர் அவனுக்கு ஒரு பாட்டில்  நிறைய பொடி ஒன்று கொடுத்தார். மேலும் அவனிடம்  முருகா உனக்கு எப்பொழுது வேர்க்கிறதோ அப்பெல்லாம் இந்த பொடியை ஒரு ஸ்பூன் சாப்பிடு.ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிடவேண்டும்.உடம்பில் இருக்கும் எல்லா வியாதிகளும் போய்விடும் என்றார்.

அந்த பொடியை வாங்கிகொண்டுவந்த முருகனுக்கு அதை சாப்பிட்ட பின்பும்  ஒரு குணமும் தெரியவில்லை.அவனது பெற்றோர் அவனிடம் "நீ ஏதாவது வேலை செய்யவேண்டும்” அப்பொழுதுதான் வேர்க்கும் ‘என்றார்கள்.

அவனும் வீட்டில் துணிதோய்ப்பது,தோட்டவேலை செய்வது,கடைகளுக்கு செல்வது என்று எல்லா வேலைகளையும் செய்தான்.வைத்தியர் கொடுத்த பொடியும் கொஞ்சம் குறைந்தது.அவன் சுறுசுறுப்பானான்.

பின்னர் வைத்தியரிடம் சென்று நான் நீங்கள் கொடுத்த பொடியை முழுமையாக சாப்பிடவில்லை.ஆனால் நன்றாக குணமடைந்துவிட்டேன் என்றான்.

அதற்கு அவர் ‘நீ மருந்தால் குணமடையவில்லை’சுறுசுறுப்பாக நீ வேலை செய்ததால் குணமடைந்துவிட்டாய்.மேலும் நான் கொடுத்தது மருந்து இல்லை வெறும் துளசியும் வெல்லமும் சேர்ந்ததுதான்' என்றார்.

நாமும் சோம்பலை நீக்கி சுறுசுறுப்பாக இருந்தால் நோயின்றி வாழலாம்.

16. உழைப்பிற்கேற்ற ஊதியம்

    16- உழைப்பிற்கேற்ற ஊதியம்



வயலூர் என்ற ஊரில் சின்னையன் என்ற ஒருவன் ஆடுகளை மேய்ப்பதை தொழிலாக கொண்டிருந்தான்.

அவனிடம் நிறைய ஆடுகள் இருந்தன.அவனால் சரியாக அவற்றை காவல்காக்க முடியவில்லை.தினமும் ஒரு ஆடு காணாமல் போயிற்று.

இதனை கண்காணிக்க வேட்டை நாய் இரண்டை வாங்கி காவலுக்கு வைத்தான்.ஆனால் அவற்றிற்கு சரியாக உணவு கொடுப்பதில்லை.

காவல் வைத்தும் மீண்டும் தினம் ஒரு ஆடு காணாமல் போயிற்று.சின்னையனுக்கு என்ன செய்வது  என்று புரியவில்லை.ஒரு நாள் என்ன நடக்கிறது என்பதை மறைந்திருந்து பார்த்தான்.ஒரு ஓநாய் ஒரு ஆட்டை கொன்று  சாப்பிட்டு மீதியை வேட்டை  நாய்கள்சாப்பிட போட்டு விட்டது.வேட்டை நாய்களும் தினமும் ஓநாய் மூலம் தங்களுக்கு உணவு கிடைக்கிறதே என்று ஓநாயை விரட்டாமல் இருந்தது.

சின்னையனும் மிகவும் மனம் வருந்தி தனக்கு  தெரிந்த பெரியவர் ஒருவரிடம் நடந்ததைக் கூறினான்.அவர்' யாருக்கும் சரியாக உணவு கொடுத்தால் தான்’வேலையை ஒழுங்காக செய்வர்.நீ கொடுத்த உணவு வேட்டை நாய்களுக்கு போதவில்லை.ஆகையால் வேட்டை நாய்களுக்கு தேவையான உணவு  கொடு. அவை உன்னிடம் விசுவாசமாக இருக்கும் "என்றார்.

அன்றிலிருந்து அவன் வேட்டை நாய்களுக்கு தேவையான உணவு கொடுத்தான்.அது முதல் வேட்டை நாய்கள் ஓநாய் வந்தால் அடித்து விரட்டியது.மந்தையில் ஆடுகள் குறையவில்லை.

நம்மிடம் வேலை செய்பவர்களுக்கு அவர்களை ஏமாற்றாமல்  உழைப்பிற்கேற்ப ஊதியம் கொடுத்தால் அவர்கள் நம்மிடம் விசுவாசமாக நடந்து கொள்வார்கள்.




Monday, February 27, 2023

15.பகைவனுக்கு உதவ வேண்டும்

  15- பகைவனுக்கு உதவ வேண்டும்


ஒரு பெரிய காட்டில் சிங்கம்,புலி கரடி போன்ற மிருகங்களும், மான்,குரங்கு போன்ற சிறிய மிருகங்களும்  ஒற்றுமையாக வழ்ந்து வந்தன.

அந்த காட்டில் ஒரு சிங்கம் மட்டும் கர்வத்துடன் யாருக்கும் அடங்காமல் இருந்தது.இதனுடைய இந்த குணத்தால் இது தனிமை படுத்தப்பட்டு தனிக்காட்டு ராஜாவாக உலாவி வந்தது.

நாளடைவில் அந்த காட்டிலுள்ள மான்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது.இந்த சிங்கம் தான் மான்களை வேட்டையாடி தனக்கு  இரையாக்கிகொண்டிருந்தது.

ஒருநாள் ஒரு அடர்ந்த புதர் பக்கத்தில் சிங்கம் கர்ஜிப்பதை போன்று சப்தம் கேட்டது.மான்கள் கூட்டம் அங்கு போய் பார்த்தபோது சேறும் சகதியும் நிறைந்த ஒரு குழியில் முதலை ஒன்றுடன் சிங்கம் உயிருக்கு போராடிக்கொண்டிருந்ததை பார்த்தன.

எல்லா மிருகங்களும் ஒற்றுமையாக இந்த முரட்டு  சிங்கத்தை காப்பாற்றக்கூடாது என்று முடிவு எடுத்தனர்.

ஆனால் குரங்குகளும்/ மான்களும் எப்படியாவது சிங்கத்தை காப்பாற்றவேண்டும் என்று எண்ணி குரங்குகள் மரங்களில் படர்ந்திருக்கும் கொடிகளை கீழே போட மான்கள் அதை எடுத்து  சிங்கம் உள்ள குழியில் போட்டன.சிங்கமும் கொடியை கவ்வி பிடித்துக்கொண்டு தப்பித்தோம் பிழைத்தோம் என்று கூறிக்கொண்டு மேலே வந்தது.

தன்னை முதலையிடமிருந்து காப்பாற்றிய மான்களுக்கும் குரங்குகளுக்கும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தது.தான் மான் இனத்தை வேட்டையாடியும் அதை பொருட்படுத்தாமல் மான்கள் காப்பாற்றியது கண்டு அவற்றிடம் மன்னிப்பு கேட்டது.

இனிமேல் நான் எல்லா உயிர்களுக்கும் உதவி செய்வேன்,தொந்தரவு செய்யமாட்டேன் என உறுதி பூண்டது. 

Sunday, February 26, 2023

14.நாவினால் சுட்ட வடு


    14- நாவினால் சுட்ட வடு



சுரேஷ் மிகவும் கோபக்கார பையன்.எடுத்ததெற்கெல்லாம்  அவனுக்கு கோபம் வரும்.

கோபம் வந்தால் எல்லாரையும் கண்டபடி திட்டிவிடுவான்.பின்னால் அவர்களிடம் சென்று வருத்தப்படுவான்.நாளடைவில் அவனுக்கு சுற்றுவட்டாரத்தில் நண்பர்களே இல்லாமல் போயிற்று..எல்லோரும் அவனை வெறுக்க ஆரம்பித்தார்கள்.

அவனது தந்தைக்கு அவனை பற்றி ரொம்ப கவலை.எப்படி அவனை திருத்துவது என்று எண்ணிக்கொண்டிருந்தபோது ஒரு யோசனை தோன்றியது.

ஒரு நாள் ஒரு பையில் சில ஆணிகளையும் ஒரு சுத்தியலையும் கொடுத்தார்.ஒவ்வொருமுறை ஆத்திரப்படும்போதும் சம்பந்தபட்ட நண்பனை திட்டாமல் அதற்கு பதில் ஒரு ஆணியை அருகில் உள்ள மரத்தில் அடிக்கவேண்டும்.அவனும் இதற்கு ஒப்புக்கொண்டான்.

நாளடைவில் மரத்தில்  50 ஆணிகள் வரை அடித்து விட்டான்.இவன் கோபப்படாததால் இவன் நண்பர்கள் இவனிடம் நல்ல-படியாக  பேச ஆரம்பித்தனர்.

நடந்ததை அப்பாவுடன் போய் கூற அவர் ஒரு சுத்தியலைக் கொடுத்து ஒவ்வொரு ஆணியாக பிடுங்கச் சொன்னார்.எல்லா ஆணிகளையும் பிடுங்கிய பிறகு பார்த்தால் ஆணி இருந்த இடத்தில் வடுக்கள் இருந்தன.

"இந்த ஆணியை போலத்தான் நீ திட்டிய ஒவ்வொரு சொல்லும் இன்னொருவர் மனதில் ஆழமாக பதிந்து வடுக்களை உண்டாயிருக்கும் அல்லவா?’ அந்த வடு நீ மன்னிப்பு கேட்ட பின்பும் இந்த ஆணி ஏற்படுத்திய வடுவைபோல் மறைவது மிகவும் கடினம்.ஆகவே இனி எதைப் பேசும்போதும் யோசித்து பேசு" என்றார் அப்பா..

சுரேஷும் அவனுடைய தவறை உணர்ந்து அது முதல் யார்மீதும் கோபப்படுவதில்லை.

Saturday, February 25, 2023

13.புத்திசாலி தீர்ப்பு

13- அருமையான தீர்ப்பு



 

ஒரு செல்வந்தரிடம் 17 குதிரைகள் இருந்தன. அவருக்கு மூன்று மகன்கள் இருந்தனர்.அவர் நோய்வாய் பட்டதால் கீழ்கண்டவாறு உயில் எழுதி வைத்தார்.

இருக்கும் 17 குதிரைகளில் பாதி பெரியவனுக்கும்,மீதியில் 2/3 பங்கு இரண்டாம்மகனுக்கும்.இரண்டாம் மகனுக்கு கொடுத்த பின் மீதியில் 2/3 பங்கு   மூன்றாம்  மகனுக்கும்  எழுதி வைத்திருந்தார்.

மூன்று  மகன்களுக்கும்  ஒண்ணுமே புரியவில்லை.எப்படி குதிரைகளை பிரித்துக்கொள்வது என்று தெரியவில்லை..

உடனே அவர்கள் அந்த ஊர் நாட்டாண்மையிடம் சென்று அவருடைய உதவியை நாடினர்.நாட்டாண்மை புத்திசாலி.எல்லோருடைய சிக்கல்களையும் தீர்த்து வைப்பார்.

செல்வந்தரின் உயிலை பார்த்துவிட்டு நாட்டாண்மை கீழ்கண்டவாறு  கூறினார்

முதலில் தன்னிடம் இருக்கும் ஒரு குதிரையை கொண்டு வந்து நிறுத்தினார். மொத்தம் 17+1= 18 ஆயிற்று.முதல் மகனுக்கு 18 குதிரைகளில் பாதி அதாவது 9 குதிரைகளை  கொடுத்துவிட்டார்.

இண்டாம் மகனுக்கு மீதி 9 ல் 2/3 பங்கு அதாவது 6 குதிரைகள் அவனுக்கு கொடுப்பது என்று முடிவாயிற்று.

மூன்றாம் மகனுக்கு முதல் இரண்டு பேருக்கு கொடுத்த மீதியில் 2/3 பங்கு.அதாவது மீதியுள்ள 3 ல் 2/3 பங்கு, 2 குதிரைகளை அவனுக்கு கொடுப்பது என முடிவாகியது.

எஞ்சிய ஒரு குதிரை செல்வந்தருடையது. ஆகையால் அவர் அந்த குதிரையை எடுத்துக்கொண்டு அந்த இடத்தை விட்டு அகன்றார்.

Friday, February 24, 2023

.12.முயன்றால் முடியாதது இல்லை (நீதிக்கதை)

   12- முயன்றால் எல்லாமே முடியும்


மதன நாட்டு அரசனின் படை மிகவும் சிறியது.அவனால் பக்கத்து ஊர் அரசனிடம் போராடி வெல்ல முடியவில்லை.

தோல்வியுற்ற அரசனை கொலை செய்யுமாறு எதிரி நாட்டு அரசன் கட்டளையிட்டான்.அதனால் மதன நாட்டு அரசன் ஒருகுகைக்குள் ஓடி ஒளிந்து கொண்டான்,மனச்சோர்வினால் துணிவு இழந்தான்.

ஒரு நாள் சோம்பலுடன் அரசன் குகைக்குள் படுத்துக்கொண்டிருந்தான்.அப்பொழுது  ஒரு சிலந்தி வலையை ப் பின்ன கடுமையாக முயற்சி செய்து கொண்டிருந்தது.ஒவ்வொரு தடவையும் அது பின்னிய வலைஅறுந்து விழுந்து கொண்டிருந்தது.அது தன் முயற்சியை கைவிடாமல் மீண்டும் மீண்டும் முயற்சித்தது.

சிலந்தியின் விடாமுற்சியை பார்த்ததும் அரசனுக்கு தைரியம் வந்தது.தானும் சிலந்தி மாதிரி முயற்சி செய்யவேண்டும்,ஓடி ஒளியக்கூடாது என்று சபதம் பூண்டான்.

வெளியே சென்று தனக்கு நம்பிக்கையான ஆட்களை சந்தித்து பலம் மிகுந்த படையை உருவாக்கினான்.தன் எதிரிகளுடன்  மீண்டும் போர் புரிந்து இழந்த நாட்டை  மீண்டான்.

எந்த ஒரு காரியத்தில் ஈடுபட்டாலும் சோர்வு இன்றி முயற்சி செய்தால் வெற்றி பெறலாம்.

Monday, February 20, 2023

11. நேர்மை (நீதிக்கதை)

11- நேர்மை

 

 வயலூர் என்ற ஊரில் ராமன்,லட்சுமணன் என்ற இரு நண்பர்கள் இருந்தனர்.ஓரளவு படித்திருந்தாலும் இருவருக்கும் சரியான வேலை கிடைக்கவில்லை.ஊரில் சிறு சிறு வேலைகளை செய்து பிழைத்து வந்தனர்.

சிலநாட்களுக்கு பிறகு இருவரும் ஏதோ ஒரு வேலையின் பொருட்டு பக்கத்து நகருக்கு சென்றனர்.வழியில் ஒரு பை கிடைத்தது.அதில் ஐம்பதாயிரம் ரூபாய் இருந்தது.ராமன்’ இருவரும் பாதிப்பாதி எடுத்துக்கொள்ளலாம்’ நம்முடைய  வறுமையும் குறையும் "என்றான்.

லட்சுமணனோ, "வேண்டாம் இது இன்னொருவரது பணம்.நமக்கு வேண்டாம்.நாம் இதை நம்மூர் தாசில்தாரிடம் ஒப்படைத்துவிடுவோம்.அவர் விசாரித்து உரியவரிடம் ஒப்படைப்பார் 'என்றான்.

ராமனோ, "முடியாது நமக்கு கிடைத்ததை நாம் ஏன் விடவேண்டும்.இருவரும் சமமாக பகிர்ந்து கொள்ளலாம்" என்று லட்சுமணன் கையில் ரூபாய் 25000/- த்தை திணித்துவிட்டு மீதியை அவன்  வீட்டுக்கு எடுத்து சென்று அந்த  பணத்தில் மனைவி, குழந்தைகளுக்கு துணி மணி வாங்கிகொடுத்து தாராளமாக செலவு செய்தான்.

லட்சுமணன் நேராக  அந்த ஊர் தாசில்தாரிடம் சென்று நடந்ததைக்கூறி அவரிடம் தன்னிடமிருந்த 25000/- ரூபாயை கொடுத்து உரியவரிடம் சேர்க்க சொன்னான்.

தாசில்தாரும் விசாரித்து அந்த பணம் ஒரு பழ வியாபாரியின் பணம் என்றும்,அன்றைய கடை வசூலை எடுத்துக் கொண்டு செல்லும் போது தொலைத்து விட்டதாகவும் கூறியதால்,அப்பணத்தை தாசில்தார் அவரிடம் ஒப்படைத்து விட்டதாகக் கூறினார். மேலும், லட்சுமணனை உடனடியாக தன்னைப் பார்க்க வரச் சொன்னான். லட்சுமணனும் அங்கு சென்றார்.அங்கே இருந்த பழவியாபாரி அவனுடைய நேர்மையை பாராட்டி அவனுக்கு தனக்கு தெரிந்த கடை ஒன்றில்  கேஷியராக வேலை வாங்கிக்கொடுத்தார்.

மீதி ராமன் எடுத்துச் சென்ற பணத்தை அவனைப் பார்த்து எப்படி வாங்கிக் கொள்ள வேண்டுமோ..அப்படி வாங்கிக் கொள்வதாகக் கூறினார்.

லட்சுமணன்,நடந்ததை ராமனிடம் கூறி ராமா’ ஒன்றை நினைவில் கொள்,நேர்மையாக  நடந்தால் நிச்சயம் நல்ல பலன் உண்டு.ஆகவே அவர் வந்தால் அப்பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிடு’ என்றான்.

நாமும் லட்சுமணனைப்போல நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும்.