Friday, March 23, 2018

18 - தெரியாத வேலையில் தலையிடாதே
ஒரு விறகு வெட்டி இருந்தான். காட்டுப் பகுதிக்கு ஒட்டி இருந்தது அவன் குடிசை.
மரங்களை வெட்டிவருவது, கோடரியால் பிளப்பது, சிறு துண்டுகளாக்கி பக்கத்துக்கு கிராமங்களுக்கு கொண்டு விற்பது. அதை கொண்டு குடும்பம் நடத்துவது, அவனது அன்றாட வேலை.
அன்று அப்படிதான் ஒரு பெரிய அடிமரத்துண்டை கோடரியால் பிளக்க ஆரம்பித்தான்.
கலப்பு வந்தது. அடிமரத்தை பாதியளவு பிளந்திருந்ததால் அப்பிளவுக்கு இடையில் ஆப்பு போல் ஒரு மரச்சக்கையை வைத்துவிட்டு ஓய்வெடுக்கச் சென்றான்.
பக்கத்திலேயே ஒரு பெரிய மரம் இருந்தது. அம்மரத்தின் ஒரு கிளையில் இருந்த அக்குரங்கு ஒன்று மரம் வேட்டியின் செயலைப் பார்த்துக் கொண்டிருந்தது.
மரம் வெட்டி அப்பால் நகர்ந்ததும் அக்குரங்கு உடனே இறங்கி வந்தது.
அம்மரத்துண்டின் பிளவுபட்ட பகுதியில் வால் முழுவதும் விட்ட நிலையில் படிய அதன்மேல் அமர்ந்து கொண்டது.
அது குரங்கு அல்லவா! அதற்கே உரிய குரங்கு வேலையைச் செய்ய ஆரம்பித்தது; ஆப்பாக சொருகி இருந்த மரத்துண்டை ஆட்டி ஆட்டி எடுக்க ஆரம்பித்தது/
ஒரு ஆட்டு, இரண்டு ஆட்டு, மூன்று ஆட்டு….. சில ஆட்டுகள்!
படுக்கென்று அந்த ஆப்புதுண்டு வந்துவிட்டது. சடக்கென்று பிளவுபட்டப் பகுதியின் இடைவெளி குறைந்துவிட்டது.
அத்துடனா?
பிளவுக்குள் தொங்கி இருந்த வால் நசுங்க குறைந்து “வீல்…வீல்” என்று அலறியது.
ஓய்வாக உள்ளே இருந்த மரம்வெட்டி அலறல் கேட்டு அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்தான்.
பாத்தால் குரங்கு பாவம் செத்துவிட்டது.
“இத்தனை நாள் இல்லாமல் எங்கிருந்து வந்துத் தொலைந்தது இன்று சாவதற்கென்றே” என்ற முணுமுணுப்புடன் குரங்கின் உடலை அப்புறப்படுத்தினான் அவன்.
குரங்கின் அசட்டுச் செயல் அதற்கே அழிவை தந்துவிட்டது

Monday, March 19, 2018

17 - அன்னதானம்

அன்னதானத்தின் அவசியம் தெரியுமா?
அனைவருக்கும் கேட்டவரம் அனைத்தையும்
அளித்த கொடையாளி கர்ணன். தன் வாழ்நாளின்
ஒருவரை அமர்வித்து உணவளித்து அன்னதானம்
செய்ததில்லை.
இறந்தபின் சொர்க்கம் அடைந்தான்.
அங்கு அனைவரும் பசி, தாகம் இன்றி சுகமாக
இருந்தனர். ஆனால் கர்ணனுக்கு மட்டும் கடும்
பசி எங்கு தேடியும், யாரை கேட்டும்
உணவு கிடைக்கவில்லை.
நாரதரை கண்டு, எனக்கு மட்டும் சொர்க்கத்தில்
ஏன் இந்த அவல நிலை? எனக் கேட்டான். நாரதர்,
கர்ணா! உனது ஆள்காட்டி விரலை வாயில்
இட்டு சுவை என்றார். கர்ணனும்
அப்படியே செய்ய பசியும் தீர்ந்தது. ஆனால்
வாயிலிருந்து விரலை எடுத்தாலோ மீண்டும்
பசித்தது. காரணம் கேட்ட கர்ணனிடம் நாரதர் நீ
உனது வாழ்நாளில் ஒருவருக்காவது அன்னதானம் செய்ததில்லை.ஒரு சமயம் துரியோதனன் வீட்டில் அன்னதானம் நடைபெற்றது. பசியால் வாடிய ஒருவன் உன்னிடம் வந்து விசாரித்த போது, அன்னதானம் நடக்கும் இடத்தை நீ உனது ஆள்காட்டி விரலால் சுட்டிக்காட்டினாய். அந்த பெரும் புண்ணியம் உனது ஆள் காட்டி விரலில் தொற்றியுள்ளது. அந்த விரலைச் சுவைத்தவுடன்
பசி நீங்குகிறது. எனவே தான் தானத்தின்
சிறந்தது அன்னதானம் என்றார்.
எனவே தான் கர்ணன், அன்னதானம்
செய்வதற்காகவே மறுபிறவி எடுக்க விரும்பி,
சிவனிடம் வரம் கேட்டுப் பெற்றான். கர்ணனின்
மறுபிறவியே சிறுத்தொண்ட நாயனார்.
பக்தரின் அன்னதான அவசியத்தை உலகுக்
உணர்த்தவே சிவன் வீர சைவ அடியாராக
வந்து பிள்ளைக்கறி கேட்டு அருள் புரிந்தார்.
இக்கதையையே சீராளன் கதை என கிராமங்கள்
தோறும் பல நூற்றாண்டுகளாக சிவபக்தர்கள்
சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்

Thursday, March 1, 2018

16. எல்லோரும் உயர்ந்தவர்களேகாகம்  ஒன்று தான் கருப்பு நிறத்தில் இருப்பதாக தாழ்வு மனப்பான்மை கொண்டு இருந்தபோது ஒரு அன்னத்தை பார்த்தது.

அது அன்னத்திடம் சென்று ' அன்னமே ! நான் உன்னைப்போல வெண்மையாக விரும்புகிறேன் என்றது.

அதற்கு அன்னம், "காகமே! உண்மையில் என்னை விட பச்சைக் கிளி தான் அழகு.நானே, பச்சைக்கிளியாக  விரும்புகிறேன்" என்றது.

அடுத்து காகம் , பச்சைக்கிளியிடம் சென்று, "பச்சைக்கிளியே! நான் உன்னைப்போல ஆக விரும்புகிறேன்" என்றது

அதற்குக்  கிளி, "காகமே! எனக்கு இரண்டு நிறங்களே உள்ளன.ஆனால், மயிலுக்கோ, பலநிறங்கள்.ஆகவே, நானே அழகாக மயிலாக இருக்க விரும்புகிறேன்" என்றது

உடன் காகம். மயிலிடம் சென்று, "மயிலே! நான் உங்களைப் போல ஆக விரும்புகிறேன்" என்றது.

அதற்கு, மயில், "காகமே! என்னைப் போல அழகாக இருந்தால் ஆபத்தும் உண்டு.என்னைக் கொண்டு சென்று, மிருகக் காட்சிச் சாலையில் கூண்டில் அடைத்துவிடுகிறார்கள்.எனக்குத் தெரிந்து, காகங்கள் மட்டுமே , யாருக்கும் பயப்படாமல், சுதந்திரமாக பறந்துக் கொண்டிருக்கும் பறவை இனம் ஆகும்.ஆகவே நீ நீயாகவே இரு.அதுதான் நல்லது: என்றது.

அப்பொதுதான் காகத்திற்கு, தான் மட்டுமே, அபாயமின்றி சுதந்திரமாக பறக்கக் கூடிய இனம் என்று உணர்ந்தது.

மேலும், இறைவன் படைப்பில், உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்று யாருமில்லை.எல்லோரும் சமமானவர்களே என்றும் உணர்ந்தது    

Monday, February 26, 2018

15 -முற்பகல் செய்யின்


நாம் யாருக்கேனும் தீங்கிழித்தோமாயின்..அதற்கான பலனை பின்னாளில் நாமே அனுபவிக்க வேண்டியிருக்கும்.

கர்ணன் வாழ்க்கையிலும் அப்படி நடந்தது,அதுவே இக்கதையாகும்.

முனிவர் ஒருவர் காட்டில் தியானம் செய்து கொண்டிருந்தார்.அவரது ஆசிரமத்தைச் சேர்ந்த பசுவும், கன்றும் அருகே புல்லை மேய்ந்து கொண்டிருந்த நேரத்தில், கன்றின் மீது அம்பு ஒன்று பாய்ந்தது.அக்கன்று துடிதுடித்து இறந்தது..இறக்கும் தறுவாயில் அக்கன்றின் வேதனைக் கத்தல் கேட்டு முனிவர் தியானம் கலைந்தது.

அவர், இறந்த கன்றையும், தாய்ப்பசு கண்ணீருடன் நிற்பதையும் பார்த்தார்.

அம்பு எய்தி பசுவைக் கொன்றவனைத் தேடினார். அப்போது ஒரு வீரன் கையில் வில்லுடன் அங்கு வந்தான்.அவன்தான் அம்பை எய்திருக்க வேண்டும் என முனிவர் எண்ணினார்.அவரது கோபம் அந்த வீரன் மீது சாபமாக அமைந்தது.

"சிறு கன்றின் மீது அம்பு எய்தி கொன்றவனே! உனக்கு முடிவுகாலம் வருகையில், உன் தேரில் நின்று நீ போர் புரிகையில், தேரின் சக்கரங்கள் மண்ணுக்குள் புதையும்.அந்த நேரமே உனக்கு மரண நேரமாய் அமையும் என்பதை உணர்வாயாக!" என்றார்.

அந்த வீரன் தான் கர்ணன்.

கன்றைக் கொன்ற தன் செயலால் வருந்தினான் கர்ணன்.ஆனாலும் விதியின் செயல் இது என தன்னை தேற்றிக் கொண்டான்.

அந்த முனிவர் சாபப்படியே பாரதப் போரில் கர்ணன் மரணம் நிகழ்ந்தது. .

Monday, February 19, 2018

14. நமது கடவுள்


ஒருநாள் கடவுள், ஒரு குழந்தையை பூமியில் பிறக்க வைக்கத் தயாராய் ஆனார்.

அப்போது அந்தக் குழந்தைக் கடவுளைக் கேட்டது..
"கடவுளே! என்னை பூமிக்கு அனுப்பினால், அங்கு யாருக்கும் என்னைத் தெரியாதே!"
அதற்குக் கடவுள் சொன்னார்,"கவலைப்படாதே! பூமியில் நிறைய தேவதைகள் உள்ளனர்.அவற்றில் ஒரு தேவதை  யிடம்தான் உன்னை அனுப்புகிறேன்"
"அது புதிய இடம்.யாரையும் எனக்குத் தெரியாது.அழுகை, அழுகையாக வரும்.இங்கு நீங்கள் இருக்கிறீர்கள்,நான் சந்தோஷமாக இருக்கிறேன்" என்றது
அதற்குக் கடவுள்."பயப்படாதே! பூமியில் உன்னை வரவேற்கக் காத்திருக்கும் தேவதை, உனக்காகப் பாடுவார்.உன்னிடம் அன்பாய் இருப்பார்.உன்னை எப்போதும் சந்தோஷத்தில் வைப்பார்"என்றார்.
"எனக்கு அங்கு பேசும் மொழி தெரியாதே!" என்றது குழந்தை
"அனைத்தையும் அந்தத் தேவதைக் கற்றுக் கொடுப்பார்" என்றார்.கடவுள்
"உங்களை மீண்டும் என்னால் பார்க்க முடியுமா? "என்றது குழந்தை
"என்னைப் பற்றியும்,என்னைத் தொழும் முறையையும், மீண்டும் என்னிடம் வர செய்ய வேண்டியதை அந்தத் தேவதை உனக்கு சொல்லிக் கொடுப்பார்" என்றார் கடவுள்
"சரி" என்றது குழ்ந்தை.
அப்போது அங்கு ஒரு பெரும் சப்தம் கேட்கக் கடவுள்"நீ பூமிக்கு செல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது" என்றார்.
உடன் குழ்ந்தை, "என்னை வரவேற்கப் போகும் தேவதையின் பெயரைச் சொல்ல வில்லையே" என்றது
அதற்கு க் கடவுள், "அந்த தேவதையின் பெயர் உனக்கு வேண்டாம்.ஆனால் அவரை நீ கூப்பிட வேண்டியது "அம்மா" என்று" என்றார்.
அப்போது,, பூமியில் ஒருவர் வீட்டில் குழந்தை ஒன்று பிறந்தது.


Sunday, February 18, 2018

13- மாறவேண்டியது நாமேபலநூறு ஆண்டுகளுக்கு முன்னால், ஒரு நாட்டை ஆண்டு வந்த அரசன், தனது நாட்டைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பினான்.

கரடு முரடான சாலைகளிலும், வெயிலால் சூடேறிக் கிடந்த தெருக்களிலும் நடந்தான்.மிகவும் சிரப்பட்டான்.காலில் சூட்டினால் கொப்புளங்கள்.வலியும் அதிகமாய் இருந்தது.

சமதள சாலைகளும், தெருவின் சூட்டைக் குறைக்க தெருமுழுதும் பசுவின் தோலினால் மூடினால், அவதிப்படுவதைத் தடுக்கலாம் என்றனர் அமைச்சர்கள்.

ஆனால், நாடு முழுதும், பசுத்தோல் போர்த்துவது நடக்கும் செயலா? அதற்கு எவ்வளவு செலவாகும்.ஆயிரக் கணக்கில் பசுக்கள் இறந்தால்தானே தோலும் கிடைக்கும் என்றெல்லாம் மன்னன் நினைத்தான்.

அப்போது, மூத்த அமைச்சர் ஒருவர் , ஒரு செய்தியைக் கூறினார்,"மன்னா!நம்மால் அவ்வளவு செலவு செய்ய முடியாது.ஆனால், தெருக்களை தோலினால் மூடுவதற்குப் பதிலாக, நாம் ஏன்., அவரவர் கால்களை தோலினால் மூடிக் கொள்ளக் கூடாது.தோலும் அதற்கு சிறிதளவேப் போதுமே!"

அமைச்சரின் இந்த அறிவுரை, மன்னனுக்குப் பிடித்தது.இதுவே காலணிகள் தோன்றக் காரணமாக அமைந்தது.

இதிலிருந்து நாம் ஒரு நீதியையும் அறியலாம்.

"ஊரை மாற்ற நினைக்காமல், நம்மை மாற்றிக் கொண்டால்...ஊர் தானாக மாறும்" என்பதுதான்.

Wednesday, February 14, 2018

12- உருவம் பார்த்து எடை போடக்கூடாது


                        


உருவத்தில் சிறியவனாக இருப்பதால் அவனை ஏளனம் செய்யக்கூடாது. அவன் வேறு விடையங்களில் வல்லவனாக இருப்பான் என்பதை உண்ர்த்தும் நீதிக்கதை

ஒரு காட்டில் சிங்கம் ஒன்று வசித்து வந்தது. அது தனது பலத்தாலும், தோற்றத்தாலும், கர்ஜனையாலும் காட்டில் வசித்த அனைத்து மிருகங்களையும் பயமுறுத்தி வந்தது.
பயம் காரணமாய் அனைத்து மிருகங்களும் சிங்கத்திற்கு கிட்டச் செல்வதில்லை. சிங்கத்தைக் கண்டால் பயந்து ஓடிவிடுகின்றன.

ஆனால் 'ஈ" ஒன்று பயமின்றி சிங்கத்தின் மீது வந்து அமர்ந்தது.  அதைப் பார்த்ததும் சிங்கம் கோபமுற்று கர்ஜனை செய்தபடியே..'உன்னை என் பற்களால் கடித்துக் குதறுவேன், நகங்களால் விறாண்டுவேன், நசுக்கிப் பொசிக்கிப் போடுவேன் என்றது.

அதற்கு ஈ யோ நீ பலசாலியாய் இருக்கலாம்..உன்னைப் பார்த்து மற்ற மிருகங்கள் பயப்படலாம். ஆனால் நான் பயப்பட மாட்டேன். இன்னும் சொல்லப்போனால்..நீ சொன்னபடி உன்னையே நீ பற்களால் கடித்துக் கொள்ளவும், நகங்களால் விறாண்டிக் கொள்ளவும் செய்வேன்" என்றது.

இதைக் கேட்ட சிங்கம் கோபத்துடன் ஏலுமாயின் அதைச் செய் என் சவால் விட..ஈ பறந்து வந்து சிங்கத்தின் முதுகில் அமர்ந்து அதைக் கடித்தது. ஈ முதுகில் அமர்ந்த போது..அதை விரட்ட சிங்கம்.தன் பற்களால் முயன்ற போது..ஈ பறந்து விட சிங்கம் தன் முதுகைத் தானே கடித்துக் கொண்டது.

ஈ சிங்கத்தின் முகத்தில் அமர்ந்த போது, அதை விரட்ட தன் கால் நகங்களால் முயல..ஈ பறக்க...சிங்கம் தன் நகங்களால் தன் முகத்தையே விறாண்டிக் கொண்டது. இவ்வாறு பலதடவை சிங்கத்தை நன்கு இம்சை செய்து விட்டு ஈ பறந்தது. 

சிங்கத்தினால் ஈயை பிடிக்கவோ நசுக்கவோ முடியவில்லை. அதனால் சிங்கம் தன் இயலாஇயை எணி வெட்கப்பட்டது. 

அதன் பின்புதான் சிங்கத்திற்கு புரிந்தது..தான் உடலளவில் வீரமாய் இருந்தாலும்..ஒரு சிறு ஈ தன்னை இம்சைப் படுத்தி விட்டதே என்று. .

உருவத்தைக் கண்டு யாரையும் எடை போடக் கூடாது