Monday, February 27, 2023

15.பகைவனுக்கு உதவ வேண்டும்

  15- பகைவனுக்கு உதவ வேண்டும்


ஒரு பெரிய காட்டில் சிங்கம்,புலி கரடி போன்ற மிருகங்களும், மான்,குரங்கு போன்ற சிறிய மிருகங்களும்  ஒற்றுமையாக வழ்ந்து வந்தன.

அந்த காட்டில் ஒரு சிங்கம் மட்டும் கர்வத்துடன் யாருக்கும் அடங்காமல் இருந்தது.இதனுடைய இந்த குணத்தால் இது தனிமை படுத்தப்பட்டு தனிக்காட்டு ராஜாவாக உலாவி வந்தது.

நாளடைவில் அந்த காட்டிலுள்ள மான்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது.இந்த சிங்கம் தான் மான்களை வேட்டையாடி தனக்கு  இரையாக்கிகொண்டிருந்தது.

ஒருநாள் ஒரு அடர்ந்த புதர் பக்கத்தில் சிங்கம் கர்ஜிப்பதை போன்று சப்தம் கேட்டது.மான்கள் கூட்டம் அங்கு போய் பார்த்தபோது சேறும் சகதியும் நிறைந்த ஒரு குழியில் முதலை ஒன்றுடன் சிங்கம் உயிருக்கு போராடிக்கொண்டிருந்ததை பார்த்தன.

எல்லா மிருகங்களும் ஒற்றுமையாக இந்த முரட்டு  சிங்கத்தை காப்பாற்றக்கூடாது என்று முடிவு எடுத்தனர்.

ஆனால் குரங்குகளும்/ மான்களும் எப்படியாவது சிங்கத்தை காப்பாற்றவேண்டும் என்று எண்ணி குரங்குகள் மரங்களில் படர்ந்திருக்கும் கொடிகளை கீழே போட மான்கள் அதை எடுத்து  சிங்கம் உள்ள குழியில் போட்டன.சிங்கமும் கொடியை கவ்வி பிடித்துக்கொண்டு தப்பித்தோம் பிழைத்தோம் என்று கூறிக்கொண்டு மேலே வந்தது.

தன்னை முதலையிடமிருந்து காப்பாற்றிய மான்களுக்கும் குரங்குகளுக்கும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தது.தான் மான் இனத்தை வேட்டையாடியும் அதை பொருட்படுத்தாமல் மான்கள் காப்பாற்றியது கண்டு அவற்றிடம் மன்னிப்பு கேட்டது.

இனிமேல் நான் எல்லா உயிர்களுக்கும் உதவி செய்வேன்,தொந்தரவு செய்யமாட்டேன் என உறுதி பூண்டது. 

Sunday, February 26, 2023

14.நாவினால் சுட்ட வடு


    14- நாவினால் சுட்ட வடு



சுரேஷ் மிகவும் கோபக்கார பையன்.எடுத்ததெற்கெல்லாம்  அவனுக்கு கோபம் வரும்.

கோபம் வந்தால் எல்லாரையும் கண்டபடி திட்டிவிடுவான்.பின்னால் அவர்களிடம் சென்று வருத்தப்படுவான்.நாளடைவில் அவனுக்கு சுற்றுவட்டாரத்தில் நண்பர்களே இல்லாமல் போயிற்று..எல்லோரும் அவனை வெறுக்க ஆரம்பித்தார்கள்.

அவனது தந்தைக்கு அவனை பற்றி ரொம்ப கவலை.எப்படி அவனை திருத்துவது என்று எண்ணிக்கொண்டிருந்தபோது ஒரு யோசனை தோன்றியது.

ஒரு நாள் ஒரு பையில் சில ஆணிகளையும் ஒரு சுத்தியலையும் கொடுத்தார்.ஒவ்வொருமுறை ஆத்திரப்படும்போதும் சம்பந்தபட்ட நண்பனை திட்டாமல் அதற்கு பதில் ஒரு ஆணியை அருகில் உள்ள மரத்தில் அடிக்கவேண்டும்.அவனும் இதற்கு ஒப்புக்கொண்டான்.

நாளடைவில் மரத்தில்  50 ஆணிகள் வரை அடித்து விட்டான்.இவன் கோபப்படாததால் இவன் நண்பர்கள் இவனிடம் நல்ல-படியாக  பேச ஆரம்பித்தனர்.

நடந்ததை அப்பாவுடன் போய் கூற அவர் ஒரு சுத்தியலைக் கொடுத்து ஒவ்வொரு ஆணியாக பிடுங்கச் சொன்னார்.எல்லா ஆணிகளையும் பிடுங்கிய பிறகு பார்த்தால் ஆணி இருந்த இடத்தில் வடுக்கள் இருந்தன.

"இந்த ஆணியை போலத்தான் நீ திட்டிய ஒவ்வொரு சொல்லும் இன்னொருவர் மனதில் ஆழமாக பதிந்து வடுக்களை உண்டாயிருக்கும் அல்லவா?’ அந்த வடு நீ மன்னிப்பு கேட்ட பின்பும் இந்த ஆணி ஏற்படுத்திய வடுவைபோல் மறைவது மிகவும் கடினம்.ஆகவே இனி எதைப் பேசும்போதும் யோசித்து பேசு" என்றார் அப்பா..

சுரேஷும் அவனுடைய தவறை உணர்ந்து அது முதல் யார்மீதும் கோபப்படுவதில்லை.

Saturday, February 25, 2023

13.புத்திசாலி தீர்ப்பு

13- அருமையான தீர்ப்பு



 

ஒரு செல்வந்தரிடம் 17 குதிரைகள் இருந்தன. அவருக்கு மூன்று மகன்கள் இருந்தனர்.அவர் நோய்வாய் பட்டதால் கீழ்கண்டவாறு உயில் எழுதி வைத்தார்.

இருக்கும் 17 குதிரைகளில் பாதி பெரியவனுக்கும்,மீதியில் 2/3 பங்கு இரண்டாம்மகனுக்கும்.இரண்டாம் மகனுக்கு கொடுத்த பின் மீதியில் 2/3 பங்கு   மூன்றாம்  மகனுக்கும்  எழுதி வைத்திருந்தார்.

மூன்று  மகன்களுக்கும்  ஒண்ணுமே புரியவில்லை.எப்படி குதிரைகளை பிரித்துக்கொள்வது என்று தெரியவில்லை..

உடனே அவர்கள் அந்த ஊர் நாட்டாண்மையிடம் சென்று அவருடைய உதவியை நாடினர்.நாட்டாண்மை புத்திசாலி.எல்லோருடைய சிக்கல்களையும் தீர்த்து வைப்பார்.

செல்வந்தரின் உயிலை பார்த்துவிட்டு நாட்டாண்மை கீழ்கண்டவாறு  கூறினார்

முதலில் தன்னிடம் இருக்கும் ஒரு குதிரையை கொண்டு வந்து நிறுத்தினார். மொத்தம் 17+1= 18 ஆயிற்று.முதல் மகனுக்கு 18 குதிரைகளில் பாதி அதாவது 9 குதிரைகளை  கொடுத்துவிட்டார்.

இண்டாம் மகனுக்கு மீதி 9 ல் 2/3 பங்கு அதாவது 6 குதிரைகள் அவனுக்கு கொடுப்பது என்று முடிவாயிற்று.

மூன்றாம் மகனுக்கு முதல் இரண்டு பேருக்கு கொடுத்த மீதியில் 2/3 பங்கு.அதாவது மீதியுள்ள 3 ல் 2/3 பங்கு, 2 குதிரைகளை அவனுக்கு கொடுப்பது என முடிவாகியது.

எஞ்சிய ஒரு குதிரை செல்வந்தருடையது. ஆகையால் அவர் அந்த குதிரையை எடுத்துக்கொண்டு அந்த இடத்தை விட்டு அகன்றார்.

Friday, February 24, 2023

.12.முயன்றால் முடியாதது இல்லை (நீதிக்கதை)

   12- முயன்றால் எல்லாமே முடியும்


மதன நாட்டு அரசனின் படை மிகவும் சிறியது.அவனால் பக்கத்து ஊர் அரசனிடம் போராடி வெல்ல முடியவில்லை.

தோல்வியுற்ற அரசனை கொலை செய்யுமாறு எதிரி நாட்டு அரசன் கட்டளையிட்டான்.அதனால் மதன நாட்டு அரசன் ஒருகுகைக்குள் ஓடி ஒளிந்து கொண்டான்,மனச்சோர்வினால் துணிவு இழந்தான்.

ஒரு நாள் சோம்பலுடன் அரசன் குகைக்குள் படுத்துக்கொண்டிருந்தான்.அப்பொழுது  ஒரு சிலந்தி வலையை ப் பின்ன கடுமையாக முயற்சி செய்து கொண்டிருந்தது.ஒவ்வொரு தடவையும் அது பின்னிய வலைஅறுந்து விழுந்து கொண்டிருந்தது.அது தன் முயற்சியை கைவிடாமல் மீண்டும் மீண்டும் முயற்சித்தது.

சிலந்தியின் விடாமுற்சியை பார்த்ததும் அரசனுக்கு தைரியம் வந்தது.தானும் சிலந்தி மாதிரி முயற்சி செய்யவேண்டும்,ஓடி ஒளியக்கூடாது என்று சபதம் பூண்டான்.

வெளியே சென்று தனக்கு நம்பிக்கையான ஆட்களை சந்தித்து பலம் மிகுந்த படையை உருவாக்கினான்.தன் எதிரிகளுடன்  மீண்டும் போர் புரிந்து இழந்த நாட்டை  மீண்டான்.

எந்த ஒரு காரியத்தில் ஈடுபட்டாலும் சோர்வு இன்றி முயற்சி செய்தால் வெற்றி பெறலாம்.

Monday, February 20, 2023

11. நேர்மை (நீதிக்கதை)

11- நேர்மை

 

 வயலூர் என்ற ஊரில் ராமன்,லட்சுமணன் என்ற இரு நண்பர்கள் இருந்தனர்.ஓரளவு படித்திருந்தாலும் இருவருக்கும் சரியான வேலை கிடைக்கவில்லை.ஊரில் சிறு சிறு வேலைகளை செய்து பிழைத்து வந்தனர்.

சிலநாட்களுக்கு பிறகு இருவரும் ஏதோ ஒரு வேலையின் பொருட்டு பக்கத்து நகருக்கு சென்றனர்.வழியில் ஒரு பை கிடைத்தது.அதில் ஐம்பதாயிரம் ரூபாய் இருந்தது.ராமன்’ இருவரும் பாதிப்பாதி எடுத்துக்கொள்ளலாம்’ நம்முடைய  வறுமையும் குறையும் "என்றான்.

லட்சுமணனோ, "வேண்டாம் இது இன்னொருவரது பணம்.நமக்கு வேண்டாம்.நாம் இதை நம்மூர் தாசில்தாரிடம் ஒப்படைத்துவிடுவோம்.அவர் விசாரித்து உரியவரிடம் ஒப்படைப்பார் 'என்றான்.

ராமனோ, "முடியாது நமக்கு கிடைத்ததை நாம் ஏன் விடவேண்டும்.இருவரும் சமமாக பகிர்ந்து கொள்ளலாம்" என்று லட்சுமணன் கையில் ரூபாய் 25000/- த்தை திணித்துவிட்டு மீதியை அவன்  வீட்டுக்கு எடுத்து சென்று அந்த  பணத்தில் மனைவி, குழந்தைகளுக்கு துணி மணி வாங்கிகொடுத்து தாராளமாக செலவு செய்தான்.

லட்சுமணன் நேராக  அந்த ஊர் தாசில்தாரிடம் சென்று நடந்ததைக்கூறி அவரிடம் தன்னிடமிருந்த 25000/- ரூபாயை கொடுத்து உரியவரிடம் சேர்க்க சொன்னான்.

தாசில்தாரும் விசாரித்து அந்த பணம் ஒரு பழ வியாபாரியின் பணம் என்றும்,அன்றைய கடை வசூலை எடுத்துக் கொண்டு செல்லும் போது தொலைத்து விட்டதாகவும் கூறியதால்,அப்பணத்தை தாசில்தார் அவரிடம் ஒப்படைத்து விட்டதாகக் கூறினார். மேலும், லட்சுமணனை உடனடியாக தன்னைப் பார்க்க வரச் சொன்னான். லட்சுமணனும் அங்கு சென்றார்.அங்கே இருந்த பழவியாபாரி அவனுடைய நேர்மையை பாராட்டி அவனுக்கு தனக்கு தெரிந்த கடை ஒன்றில்  கேஷியராக வேலை வாங்கிக்கொடுத்தார்.

மீதி ராமன் எடுத்துச் சென்ற பணத்தை அவனைப் பார்த்து எப்படி வாங்கிக் கொள்ள வேண்டுமோ..அப்படி வாங்கிக் கொள்வதாகக் கூறினார்.

லட்சுமணன்,நடந்ததை ராமனிடம் கூறி ராமா’ ஒன்றை நினைவில் கொள்,நேர்மையாக  நடந்தால் நிச்சயம் நல்ல பலன் உண்டு.ஆகவே அவர் வந்தால் அப்பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிடு’ என்றான்.

நாமும் லட்சுமணனைப்போல நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும்.