Friday, March 31, 2023

21. கழுதையின் புத்திசாலித்தனம்

21- கழுதையின் புத்திசாலித்தனம்




 ஒரு காட்டில் கழு தை ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது.அந்த கழுதையை ஒரு ஓநாய் கவனித்து கொண்டிருந்தது.கழுதை எப்பொழுதும் தனியாகவே காட்டில் போய்கொண்டிருக்கும்.

அதை பயன்படுத்தி ஓநாய் அதை அடித்து தின்னும் நோக்கத்துடன் அதன் மீது பாய்ந்தது.

தனக்கு வந்த ஆபத்தை உணர்ந்த கழுதை மனதுக்குள் ‘ இந்த ஓநாயை எதிர்த்து சண்டை போடுவது கஷ்டம்.ஆகையால் ஏதாவது தந்திரம் பண்ணித்தான் இதனிடமிருந்து தப்பிக்கவேண்டும்’ என தீர்மானித்தது.

கழுதை,ஓநாயின் பாய்ச்சலின்போது சற்று விலகிக்கொண்டு ‘ஓநாயாரே உம்முடைய வலிமையின் முன் நான் எம்மாத்திரம். நான் இன்று உனக்கு பலியாவது உறுதி.அதற்கு முன்னால் நான் சொல்ல வந்த  விஷயத்தை நீங்கள் கேட்கவேண்டும்’ என்று கேட்டுக்கொண்டது.

‘நீ என்ன சொல்ல விரும்புகிறாய், சொல்'  என்றது ஓநாய். .

‘என் காலில் பெரிய முள் ஒன்று குத்திவிட்டது.முள்ளை எடுக்க நான் எவ்வளவு  முயன்றும் முடியவில்லை. நீங்கள் என்னை அடித்து சாப்பிட்டால் அந்த முள் உங்கள் தொண்டையில் குத்தி உங்கள் உயிரை வாங்கிவிடும்.ஆகவே  முதலில் என் காலில் தைத்த முள்ளை எடுத்துவிட்டு பிறகு நீர் என்னை அடித்து தின்னலாம்’ என்றது.

ஓநாயும் அதற்கு ஒப்புக்கொண்டது.கழுதை தன் பின்னங்கால்களை திருப்பி காண்பித்தது முள் இருக்கிறதா என ஓநாய் தேடும் வேளையில், அந்த சந்தர்பத்தை பயன்படுத்தி கொண்ட கழுதை பின்னங்கால்களால் ஓநாயை பலமாக உதைத்தது.கழுதையின் உதையை தாங்கமுடியாமல் ஓநாய் கீழே விழுந்தது.கழுதையும்  தப்பித்தது.

20. நேர்மையே வெல்லும்

   20 - நேர்மையே வெல்லும்



வெகு காலத்துக்கு முன்  மதுரைக்கு  அருகே ஒரு அரசன் ஆண்டு வந்தார்.அவருக்கு வாரிசுகள் இல்லை என்பதால் தனக்கு பிறகு தன்னைப் போல் நீதியும் நேர்மையும்  தவறாத ஒரு இளைஞனை  கண்டுபிடித்து அவனை அரசனாக்க வேண்டும்  என்று  நினைத்தார்.

அதன்படி அரசர்  நாட்டிலுள்ள   வீரமிக்க  இளைஞர்களை அழைத்து அவர்களுக்கு வில் போட்டி,வாள்போட்டி மற்றும் வாய் மொழி கேள்விகள் என்று பல போட்டிகள்  வைத்து கடைசியில் பத்து இளைஞர்களை தேர்ந்தெடுத்தார்.

அவர்களிடம் தனித்தனியாக ஒரு செடியின் விதையை கொடுத்தார்.இந்த விதையை ஒரு தொட்டியில் போட்டு வளர்த்து பெரிய செடியாக்கி ஆறு மாதம் கழித்து என்னிட ம்கொண்டு வரவேண்டும் .இதில் வென்ற ஒருவரே என்னுடைய வாரிசாக அறிவிக்கப்படுவர் என்று கூறினார்..

ஒவ்வொருவரும் விதையை வீட்டிற்கு எடுத்து சென்று தொட்டியில் வைத்து வளர்க்க ஆரம்பித்தனர்.பாண்டியன் என்று பெயருடைய ஒருவனுக்கு அவன் போட்ட விதை வளரவில்லை..எவ்வளவு முயன்றும் விதை போட்ட இடத்தில் ஒன்று ம்வரவில்லை.

மற்றவர்கள் வீட்டிற்கு  சென்று பார்த்ததில் அவர்களுடைய தொட்டியில் பெரிய செடிகளாக வளர்ந்து இருந்தன..அவனுக்கு என்ன செய்வதென்று  புரியவில்லை.

'வருவது வரட்டும்.  அப்படியே தொட்டியை அரசனிட ம்கொண்டு போய் காண்பிப்போம் தண்டனையை ஏற்றுக்கொள்வோம் ' என்ற முடிவோடு அரண்மனை சென்றான்.

அரசர் எல்லோருடைய தொட்டிகளையும் பார்த்துவிட்டு பாண்டியன் தான் வெற்றிபெற்றவன் என்று கூறினார்.

மீண்டும் அரசர் சொன்னது ‘நான் எல்லோருக்கும் வெந்நீரில் போட்டுஎடுத்த காய்ந்த விதையைத்தான் கொடுத்தேன்.அப்படிப்பட்ட விதை எப்படி முளைக்கும்.

பாண்டியனைத்தவிர மற்றவர்கள் அதனை மாற்றி வேறு விதையை போட்டு வளர்த்திருக்கிறார்கள்.ஆனால், நேர்மையாக  இருந்த பாண்டியன் தான் என்னுடைய வாரிசாக நியமிக்கப்படுகிறார்' என்று கூறினார்.

நேர்மையே  வெல்லும்..

19.தைரியமும் வலிமையும்

19 -தைரியமும் வலிமையும்

 



 ஒரு காட்டில் முயல் கூட்டம் ஒன்று வாழ்ந்து வந்தது.அந்த காட்டில் பச்சை  பசேல் என்று எங்கு பார்த்தாலும் செடிகளும்,காய்கறிகளும்,பழங்களும்  இருந்தன .இந்த முயல்கள் இதை சாப்பிட்டு சந்தோஷமாக  வாழ்ந்து வந்தன.

கோடை காலம் வந்தது.வெப்பம் அதிகமாக இருந்ததால் செடிகள் எல்லாம் கருகி பாலைவனம் போல் தோற்றமளித்தன..முயல்களுக்கு  சாப்பிட உணவு கிடைக்கவில்லை.

அந்த காட்டில்  வேட்டை நாய்கள் அதிகம் காணப்பட்டன..அவை தினமும் ஒரு முயலை அடித்து கொன்று சாப்பிடுவது வழக்காக கொண்டிருந்தன..ஆகையால் மற்ற முயல்கள்  உயிருக்கு பயந்து தனது பொந்துக்குள்ளேயே அடைந்து கிடந்தன..எவ்வளவு நாள் நாம் இப்படியே அடைந்து கிடப்பது நாம் ஏதாவது செய்யவேண்டும் என்று பேசிக்கொண்டன.

ஒரு முயல் ‘என்னால் இந்த பொந்தில் அடைந்து  கிடக்கமுடியாது.ஏதாவது ஒரு நதியில் விழுந்து  என் உயிரை மாய்த்துக்கொள்ளப்போகிறேன்’என்றது..

"நம்மை ஏன் கடவுள் இப்படி பலவீனமாக படைத்துவிட்டார்" என்று எல்லா முயல்களும் வருத்தப்பட்டன.

அந்த முயல்கள் எல்லாம் நதிக்கரையை அடைந்தபோது முயல்களைப் பார்த்து  தவளைகள் பயந்து நீருக்குள் குதித்தன.

இதைப்பார்த்த முயல்கள் ஆச்சிரியம் அடைந்தன..ஆண்டவன் நம்மைவிட வலிமை குறைந்தவர்களையு ம்  உலகில் படைத்திருக்கிறான்.ஆகவே உயிர் வாழ தைரியத்துடன் கூடிய வலிமை தான் தேவை

என்பதை உணர்ந்தன.

இனி நாம் தைரியமாக செயல்படவேண்டும் என்று தீர்மானம் எடுத்துக்கொண்டன.

வாழ்க்கையில் எந்த பிரச்சனை வந்தாலும் அதை தைரியமாக எதிர்கொள்ளவேண்டும்.



.

.

18.நியாய தீர்ப்பு

18- நியாய தீர்ப்பு




 திண்டுக்கல் என்ற ஊரில் மாரியப்பனும் அவனது தந்தையும்  வாழ்ந்து வந்தனர். மாரியப்பன் தன் வீட்டில் உள்ள தோட்டத்தில் விளையும் காய்கறிகளையும் பழங்களையும் விற்று பிழைத்துவந்தான்.

மாரியப்பன் தந்தைக்கு வயதாகிவிட்டதால் அவரால் அவனுக்கு ஒன்றும் உதவி செய்ய  முடியவில்லை.அவர் தான் சிறுக சிறுக சேர்த்துவைத்திருந்த ரூபாய் ஒரு லட்சத்தை அந்த ஊரில் அவரது நண்பரும் கணக்கு பிள்ளையுமான தாமோதரனிட ம்கொடுத்து கூடவே ஒரு கடிதமும் கொடுத்தார்.அந்த கடிதத்தில், ‘நீ விரும்பியதை என் மகன் அவனுடைய தொழிலுக்கு தேவை ஏற்படும்போது கொடு'என்று எழுதியிருந்தது.இந்த லெட்டரின் ஒரு நகலை மகனிடமும் கொடுத்திருந்தார்..

சில மாதங்களில் தந்தை இறந்துவிட மாரியப்பன் கணக்குபிள்ளையான தாமோதரனிடம் அப்பா கொடுத்த பணத்தை தன்னுடைய தோட்டத்தை சீரமைக்கவேண்டும் என்று கேட்டான்.அவர் அவனிட ம்ரூபாய் 25000/- மட்டுமே கொடுத்தார்.மாரியப்பன் இதற்கு ஒத்துக்கொள்ளவில்லை.இது நியாயமாக இல்லாததால் மாரியப்பன் இந்த வழக்கை தனக்கு தெரிந்த அந்த ஊர் நீதிபதியிடம் எடுத்து சென்றான்.

நீதிபதி தாமோதரனிடம் நீ மாரியப்பனுக்கு எவ்வளவு கொடுக்க விரும்புகிறாய் என்று கேட்டார்.அவர் ரூபாய் 25000/- என்று கூறினார்.தந்தை கொடுத்துள்ள லெட்டரை பார்த்துவிட்டு நீதிபதி தாமோதரனிட நீ எவ்வளவு எடுத்துக்கொள்ள விரும்புகிறாய் என்று கேட்டார்.அதற்கு தாமோதரன் ரூபாய் 75000/- என்றார்.

தந்தை கொடுத்த லெட்டரில் ‘ நீ விரும்பியதை கொடு’என்று எழுதியிருந்ததால்,அதன் படி நீ எடுத்துக்கொள்ள விரும்பியதுரூபாய் 75000/-அதுவே நீ விரும்பியத்தொகையாகும் ஆகவே ரூபாய் 75000/-ஐ மாரியப்பனிடம் கொடுத்துவிட்டு நீ ரூபாய் 25000/-ஐ எடுத்துக்கொள் என்று கூறி வழக்கை முடித்தார்..


 

17.சோம்பித் திரியேல்

   17 - சோம்பித் திரியேல்



முருகன் என்ற ஒருவன் மதுரை அருகே நத்தம் என்ற கிராமத்தில் தனது பெற்றோர்களுடன் வாழ்ந்து வந்தான்.அவன் ஒரு சோம்பேறி.ஒரு வேலையும் செய்யமாட்டான்.உண்பதும் தூங்குவதுமாக அவனுடைய  பொழுது கழிந்தது.

அவனது பெற்றோர் அவனை எப்படியாவது திருத்தவேண்டுமென்று அவனை ஒரு வைத்தியரிடம் அழைத்து சென்றனர்.வைத்தியர் அவனுக்கு ஒரு பாட்டில்  நிறைய பொடி ஒன்று கொடுத்தார். மேலும் அவனிடம்  முருகா உனக்கு எப்பொழுது வேர்க்கிறதோ அப்பெல்லாம் இந்த பொடியை ஒரு ஸ்பூன் சாப்பிடு.ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிடவேண்டும்.உடம்பில் இருக்கும் எல்லா வியாதிகளும் போய்விடும் என்றார்.

அந்த பொடியை வாங்கிகொண்டுவந்த முருகனுக்கு அதை சாப்பிட்ட பின்பும்  ஒரு குணமும் தெரியவில்லை.அவனது பெற்றோர் அவனிடம் "நீ ஏதாவது வேலை செய்யவேண்டும்” அப்பொழுதுதான் வேர்க்கும் ‘என்றார்கள்.

அவனும் வீட்டில் துணிதோய்ப்பது,தோட்டவேலை செய்வது,கடைகளுக்கு செல்வது என்று எல்லா வேலைகளையும் செய்தான்.வைத்தியர் கொடுத்த பொடியும் கொஞ்சம் குறைந்தது.அவன் சுறுசுறுப்பானான்.

பின்னர் வைத்தியரிடம் சென்று நான் நீங்கள் கொடுத்த பொடியை முழுமையாக சாப்பிடவில்லை.ஆனால் நன்றாக குணமடைந்துவிட்டேன் என்றான்.

அதற்கு அவர் ‘நீ மருந்தால் குணமடையவில்லை’சுறுசுறுப்பாக நீ வேலை செய்ததால் குணமடைந்துவிட்டாய்.மேலும் நான் கொடுத்தது மருந்து இல்லை வெறும் துளசியும் வெல்லமும் சேர்ந்ததுதான்' என்றார்.

நாமும் சோம்பலை நீக்கி சுறுசுறுப்பாக இருந்தால் நோயின்றி வாழலாம்.

16. உழைப்பிற்கேற்ற ஊதியம்

    16- உழைப்பிற்கேற்ற ஊதியம்



வயலூர் என்ற ஊரில் சின்னையன் என்ற ஒருவன் ஆடுகளை மேய்ப்பதை தொழிலாக கொண்டிருந்தான்.

அவனிடம் நிறைய ஆடுகள் இருந்தன.அவனால் சரியாக அவற்றை காவல்காக்க முடியவில்லை.தினமும் ஒரு ஆடு காணாமல் போயிற்று.

இதனை கண்காணிக்க வேட்டை நாய் இரண்டை வாங்கி காவலுக்கு வைத்தான்.ஆனால் அவற்றிற்கு சரியாக உணவு கொடுப்பதில்லை.

காவல் வைத்தும் மீண்டும் தினம் ஒரு ஆடு காணாமல் போயிற்று.சின்னையனுக்கு என்ன செய்வது  என்று புரியவில்லை.ஒரு நாள் என்ன நடக்கிறது என்பதை மறைந்திருந்து பார்த்தான்.ஒரு ஓநாய் ஒரு ஆட்டை கொன்று  சாப்பிட்டு மீதியை வேட்டை  நாய்கள்சாப்பிட போட்டு விட்டது.வேட்டை நாய்களும் தினமும் ஓநாய் மூலம் தங்களுக்கு உணவு கிடைக்கிறதே என்று ஓநாயை விரட்டாமல் இருந்தது.

சின்னையனும் மிகவும் மனம் வருந்தி தனக்கு  தெரிந்த பெரியவர் ஒருவரிடம் நடந்ததைக் கூறினான்.அவர்' யாருக்கும் சரியாக உணவு கொடுத்தால் தான்’வேலையை ஒழுங்காக செய்வர்.நீ கொடுத்த உணவு வேட்டை நாய்களுக்கு போதவில்லை.ஆகையால் வேட்டை நாய்களுக்கு தேவையான உணவு  கொடு. அவை உன்னிடம் விசுவாசமாக இருக்கும் "என்றார்.

அன்றிலிருந்து அவன் வேட்டை நாய்களுக்கு தேவையான உணவு கொடுத்தான்.அது முதல் வேட்டை நாய்கள் ஓநாய் வந்தால் அடித்து விரட்டியது.மந்தையில் ஆடுகள் குறையவில்லை.

நம்மிடம் வேலை செய்பவர்களுக்கு அவர்களை ஏமாற்றாமல்  உழைப்பிற்கேற்ப ஊதியம் கொடுத்தால் அவர்கள் நம்மிடம் விசுவாசமாக நடந்து கொள்வார்கள்.