Sunday, February 28, 2010

'கிணற்றுத் தவளையும்...கடல் தவளையும்'
ஒரு கிணற்றில் ஒரு தவளை வாழ்ந்து வந்தது..அது அங்கேதான் பிறந்து வளர்ந்ததால் கிணற்றைத் தவிர அதற்கு எதுவும் தெரியாது.

ஒரு நாள் வேறு தவளையொன்று அக்கிணற்றுக்கு வந்தது...இரு தவளைகளும் பின் நட்புடன் பழக ஆரம்பித்தன...

ஒரு நாள் புது தவளை 'இந்தக் கிணறு சிறியதாக இருக்கிறது..நான் வாழும் இடம் பெரிது' என்றது.

'நீ எங்கே வாழ்கிறாய்?' என் கிணற்றுத்தவளை கேட்டது.

புதிய தவளை சிரித்தவாறே ....'நான் கடலிலிருந்து வந்தேன் ..கடல் மிகப்பெரியதாக இருக்கும்' என்றது.

'உன் கடல்..என் கிணறு போல இருக்குமா?' என்றது கிணற்றுத்தவளை...

அதற்கு புதிய தவளை ..'உன் கிணற்றை அளந்து விடலாம்...சமுத்திரத்தை யாராலும் அளக்கமுடியாது'என்றது.

'நீ சொல்வதை என்னால் நம்ப முடியாது..நீ பொய்யன்.உன்னுடன் சேர்ந்தால் எனக்கு ஆபத்து'என்றது கிணற்றுத்தவளை. மேலும்..'பொய்யர்களுக்கு இங்கு இடமில்ல.நீ போகலாம்'என கடல் தவளையை விரட்டியடித்தது.

உண்மையில் இழப்பு கிணற்றுத்தவளைக்குத் தான்.

நாமும் நமக்கு எல்லாம் தெரியும்..நாம் இருக்கும் இடமே உலகம்,,,நம் கருத்து எதுவாயினும் அதுவே சிறந்தது என எண்ணி...நம் அறிவை வளர்த்துக் கொள்ளாமல் கிணற்றுத் தவளையாய் இருந்து
விடக்கூடாது.

Friday, February 26, 2010

'முன்னேறிச்செல்'


விறகு வெட்டி ஒருவன் விறகு வெட்ட காட்டிற்குச் சென்றான்..அதற்குமுன் தாய் தந்தையரை வணங்கினான் அவன். அவர்கள் ...'உன் வழியில் முன்னறிச் சென்றுக் கொண்டேயிரு...வெற்றிப்பெறுவாய்' என ஆசி கூறினர்.

அந்த வார்த்தைகள் அவன் மனதில் படிந்தது.

அவன் காட்டில் முன்னேறிச் சென்றபோது சந்தனமரங்களைப் பார்த்தான்...மனம் மகிழ்ந்து அவற்றை வெட்டிச் சென்று நிறைய பணம் சேர்த்தான்.

அடுத்தமுறை சென்றபோது..'முன்னேறிச்செல்' என்ற வார்த்தைகள் அவன் காதுகளில் ஒலித்துக்கொண்டேயிருந்தது....அப்படியே சந்தனக்காடுகளை கடந்து சென்றான்...வெள்ளிச்சுரங்கம் கண்ணில்
பட்டது.அது அவனை மேலும் பணக்காரன் ஆக்கியது....

மீண்டும் அவன் காட்டிற்குப் புறப்பட்டான்...இம்முறையும் வெள்ளிச்சுரங்கத்தையும் கடந்து முன்னேறிச்சென்றான்.அங்கு தங்கம்,ரத்தினம் எல்லாம் கிடைத்தன.

வாழ்க்கையில் முன்னேறிச் சென்று வெற்றி பெற்றால் போதும் என்று நில்லாது..மேலும் மேலும் முயன்றால் வெற்றிமீது வெற்றி நம்மை வந்து சேரும்.

முயற்சி திருவினையாக்கும்....முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார்

Tuesday, February 23, 2010

குட்டி மீனும் ...அம்மா மீனும்


ஒரு குளத்தில் அம்மா மீனும்....அதனுடைய குட்டி மீனும் இருந்தன...அம்மா மீன் குட்டி மீனுக்கு நீந்த கற்றுக்கொடுத்தது.

நாளாக ஆக... அம்மா மீனுக்கு வயதானதால்..அதனால் வேகமாக நீந்த முடியவில்லை..

ஆனால் குட்டி மீனோ..அதி வேகமாக நீந்த ஆரம்பித்தது...அதனால் அதற்கு கர்வம் ஏற்பட்டது...அம்மா மீனை கிண்டல் செய்தது...'உன்னால்..உன் உணவை பெறக்கூட நீந்த முடியவில்லை..ஆனால் என்னைப்பார்..எவ்வளவு அழகாக நீந்துகிறேன்...'என டைவ் எல்லாம் அடித்து நீந்தியது...அம்மா மீன் சொல்வது எதையும் குட்டி மீன் கேட்பதில்லை..

ஒரு நாள் ... மீன் பிடிப்பவன் ஒருவன் ...மீன் பிடிக்க தூண்டிலுடன் வந்தான்....கரையில் அமர்ந்து ...சிறு புழுவை தூண்டிலில் சொருகி ...குளத்தில் வீசினான்..

புழுவைத் தூண்டிலில் பார்த்ததும் ..அதை பிடித்து உண்ண குட்டி மீன் விரைந்தது...உடனே ..தாய் மீன் அதனிடம் போகாதே...அது உன்னைப் பிடிக்க வைக்கும் தூண்டில் ..அதில் மாட்டினால் நீ இறந்து விடுவாய் 'என்றது.

'உனக்கு முடியாததால்... எதைப்பார்த்தாலும் நீ சந்தேகப்படுகிறாய்..அந்தப் புழுவை நான் பிடித்து வருகிறேன் பார்' என்றது குட்டி மீன்.அதற்குள் வேகமாக வந்த வேறொரு மீன் தூண்டிலைக் கவ்வி அதில் மாட்டிக்கொண்டு உயிரிழந்தது..

பயத்துடன் குட்டி மீன் தாயைப்பார்த்தது....பின் 'அம்மா நீ சொன்னது உண்மை..உன் பேச்சைக் கேட்காமல் நான் தூண்டிலைக் கவ்வியிருந்தால் அந்த மீனுக்கு ஆன கதியே எனக்கும் ஆகியிருக்கும்..உன்னால் என் உயிர் காப்பாற்றப்பட்டது.தாய் சொல்லை மீறக்கூடாது என்பதை உணர்ந்து கொண்டேன்,,'என அம்மா மீனிடம் மன்னிப்புக் கேட்டது.

குழந்தைகளே.. நாமும் நம்மை விட மூத்தவர்கள் சொல்லும் அறிவுரைகளை கேட்டு நடக்கவேண்டும்.

Saturday, February 20, 2010

கந்தனும் .. பாம்பும்


அது ஒரு அழகிய கிராமம்..அந்த கிராமத்தில் கந்தன் என்றொருவன் இருந்தான்.அவன் மிகவும் நல்லவனாய் இருந்தான்.யாருக்கு என்ன உதவி வேண்டுமானாலும் அவனை அணுகினால் அவன் செய்து முடிப்பான்.

ஒரு நாள் அவன் நடந்து செல்கையில்....
குளிரில் விறைத்துப்போய் மயங்கிய நிலையில் பாம்பு ஒன்றைப் பார்த்தான்..உடனே அதன் மீது பரிதாப்பட்டு அதை எடுத்து தன் உடலுடன் அணைத்துக் கொண்டான்.

அவன் உடல் சூட்டில் பாம்பின் குளிர் அகன்றது...கண் திறந்த பாம்பு...தன் இயற்கைக் குணப்படி 'சுருக்'என கந்தனை கடித்தது..

கந்தனுக்கு உடலில் விஷம் ஏறியது..'ஒரு கொடிய வஞ்சகப் பிராணிக்கு நான் இரக்கம் காட்டியதற்குத் தகுந்த பரிசு எனக்கு கிடைத்தது' என்று கூறியபடியே உயிர் விட்டான் அவன்.

நன்றி கெட்டவர்களுக்கு உதவி செய்வது நல்லதல்ல..மேலும்..நம் முன்னோர்கள்..'பாத்திரமறிந்து பிச்சை இடு' எனக் கூறியுள்ளதை இங்கு நினைவில் கொள்ளவேண்டும்.

Friday, February 19, 2010

புறாவும் எறும்பும்


ஒரு எறும்பிற்கு தாங்க முடியாத தாகம்...தண்ணீர் குடிக்க ஒரு நதிக்கு சென்றது.அது தண்ணீர் குடிக்கும் சமயத்தில் வெள்ளம் வந்து அதை அடித்துக்கொண்டு போயிற்று.தண்ணீரில் மூழ்கும் தறுவாயில்

இருந்த எறும்பை அருகாமையில் மரத்தின் மேல் உட்கார்ந்திருந்த புறா ஒன்று பார்த்தது.உடனே அது மரத்திலிருந்த ஒரு இலையை பறித்து எறும்புக்கு அருகே தண்ணீரில் போட்டது.இலையின் மேல்

எறும்பு மெதுவாக ஏறி கரையைஸ் சேர்ந்தது.சிறிது நேரத்திற்குப் பிறகு....வேடன் ஒருவன் வந்து ...மரத்தின் மேல் அமர்ந்திருந்த புறாவைப் பிடிக்க எண்ணி....அதை நோக்கி...வில்லில் அம்பைப் பொருத்தி

குறி பார்த்தான்.அதை கவனித்துக் கொண்டிருந்த எறும்பு வேடனின் காலில் கடித்தது.அதனால் ஏற்பட்ட வலியில் வேடனின் குறி தப்பியது.புறாவும் அங்கிருந்து "சட்" என பறந்தோடி தப்பியது.

ஒருவர் நமக்கு செய்த உதவிக்காக அவரிடம் நன்றியுள்ளவனாக இருப்பதோடு.....சந்தர்ப்பம் ஏற்பட்டால் அவருக்கு உதவவும் வேண்டும்.

இதையே திருவள்ளுவர்

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.

என்கிறார்.

ஒருவர் நமக்கு செய்த நன்மையை மறக்கக்கூடாது.அதே சமயம் யாரேனும் நமக்கு தீமை செய்தால் அதை மறந்துவிடுவது நல்லது.

அன்பு உள்ளங்களுக்கு

அன்புடையீர்

வணக்கம்.
"சிறுவர் உலகம்"என்ற வலைப்பூ பற்றி சில வரிகள்.
பெரியம்மா,சித்தி,சித்தப்பா,அத்தை ,மாமா போன்ற உறவுகள் என்றால் என்ன என்று குழந்தைகளுக்கு
சொல்லி விளக்கவேண்டிய நிலை இன்று.அது மட்டுமன்றி தாத்தா,பாட்டி தனியாக ஒரு இடத்திலும்..
அம்மா,அப்பா ஒரு இடத்திலும்..நாம்..நம் குடும்பம்..(கணவன்,மனைவி,ஒரு குழந்தை)என தனியாகவும் இருக்கும்
காலகட்டம்...கூட்டுக்குடும்பக் காலங்கள் சிதைந்து விட்டது இப்போது.

இந்நிலையில் ...தாத்தா பாட்டிகளை அணைத்துக்கொண்டு..அவர்கள் மேல் கால் போட்டுக்கொண்டு ..இரவு படுக்கையில்
நாம் கேட்ட கதைகளை நம் குழந்தைகளுக்கு நம்மால் சொல்ல முடியவில்லை.

அதற்கு நமக்கு நாமே சொல்லிக்கொள்ளும் சமாதானம் நேரமின்மை....ஆனால் உண்மையான காரணம் பல கதைகளை நாம் மறந்துவிட்டதே.
ஆகவேதான் இந்த "சிறுவர் உலகம்" என்ற வலைப்பூவின் மூலம் அவற்றை சொல்ல வருகிறேன்.
படியுங்கள்...குழந்தைகளை படிக்கச்சொல்லுங்கள்..நீங்களும் படித்து குழந்தைகளுக்கு சொல்லுங்கள்.

நன்றி.வணக்கம்.