Thursday, December 31, 2020

48 -உழைப்பே உயர்வே தரும்


 

ராமுவும், சோமுவும் நண்பர்கள்.


ராமு கடினமான உழைப்பாளி.அதனால் வாழ்க்கையில் முன்னேறி ஊரார் பாராட்டும் வகையில் நடந்து வந்தான். 

ஆனால்..சோமு இதற்கு நேர் எதிர்.சரியான சோம்பேறியாய் இருந்தான்.எந்த ஒரு செயலையும் செய்யாமல்..ராமுவைப் பார்த்து பொறாமைப்படுவதுடன்..இறைவன் தன்னை மட்டும் முன்னேற விடாது..ஏன் சோதிக்கிறார் என வருந்துவான்.


ஒருநாள்  அவன் தன் ஆசிரியர் ஒருவரை சந்தித்தான்.அவரிடம் சோமு, ராமுவைப் பற்றியும், தன்னைப் பற்றியும் சொல்லி..இறைவன் ஏன் என்னை மட்டும் சோதிக்கின்றான் என வருந்தினான்.


அவன் ஆசிரியர்..அதற்கானக் கராணத்தை சொல்லுமுன்..உனக்கு ஒரு கதை சொல்கிறேன் கேள்..என சொல்ல ஆரம்பித்தார்.


"ஒரு சிற்பி..ஒரு தெய்வத்தின் சிலை செய்ய ஒரு பெரிய கல்லைத் தேர்ந்தெடுத்தான்.அப்போது அந்த கல்.."வேண்டாம்..என்னை விட்டு விடுங்கள்.நீங்கள் என்னை சுத்தியாலும், உளியாலும் அடிப்பீர்கள்.என்னால் அந்த வலியினைத் தாங்க முடியாது" என்றது.


"சரி" என்று சொன்ன சிற்பி,பின்னர் வேறு ஒரு கல்லைத் தேர்ந்தெடுத்தான்.அந்தக் கல் ஒப்புக் கொண்டது.அதை செதுக்கி ஒரு தெய்வவுருவாக ஆக்கி கோயிலின் கருவறையில் வைத்தான்.அதற்கு தினமும் அபிஷேகமும், ஆராதனையும்,பூஜையும் தினமும் நட்க்க ஆரம்பித்தது.


"மாட்டேன்" என்ற கல் கோயிலின் வெளியே தினமும் தேங்காய் உடைக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டு தினமும் அடி வாங்கத் தொடங்கியது.


நம் வாழ்விலும்..நாம் முன்னேற சிற்பி செதுக்கியக் கல் போல பல துன்பங்களியயும், வலியையும் தாங்க நேரிடும்.அதற்கு பயப்படாது வலிமையோடு எதிர் கொண்டால்..வாழ்வின் பிற்காலம் ஒளிமயமாக அமையும்" என்றார்.


அப்போதுதான் சோமு..தன சோம்பேறியாய் இருப்பதால்தான் ராமுவைப்போல வாழ்வில் முன்னேற முடியவில்லை என்பதை உணர்ந்து..அன்று முதல் சுறு சுறுப்பாய் செயல் பட ஆரம்பித்தான்.


சோம்பேரிகள் வாழ்வில் முன்னேறவே முடியாது.

Wednesday, December 30, 2020

47. ' வீண் சண்டை " (நீதிக்கதை)

 ஆந்த வருடம் மழையே இல்லை.எங்கும் வறட்சி. அந்த வறட்சி காடுகளிலும் தெரிந்தது.அப்படிப்பட்ட ஒரு காட்டில் வசித்து வந்த பெரும்பான்மை விலங்குகள்... வேறு காடு தேடிச்சென்றன.இதனால் காட்டில் இருந்த மற்ற விலங்குகளுக்கு உணவு பஞ்சம் ஏற்பட்டது.

அதனால்...அந்த காட்டில் இருந்த சிங்கம் ஒன்றும்...கரடி ஒன்றும் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டன.இருவரும் வேட்டையாடிய இரையை சமமாக பிரித்துக் கொள்ளவேண்டுமென.

ஒரு நாள் இரண்டும் வேட்டைக்கு செல்கையில் கால் ஒடிந்த ஒரு சிறு மான் குட்டி வழியில் படுத்திருப்பதைப் பார்த்தனர்.இன்று உணவு கிடைத்து விட்டது என்று மகிழ்ந்தன.

இப்போது சிங்கம் மானை அடித்து தான் வயிற்றுப்பகுதியை உண்பதாகக் கூறியது.ஆனால் கரடியோ 'மானின் வயிற்றுப்பகுதி தனக்குத்தான்' என்றது.

மானைப் பங்கு போடுவதில் சிங்கத்திற்கும் கரடிக்கும் பயங்கர சண்டை ஏற்பட்டது.இரண்டும் சண்டைபோட்டு ஒரு கட்ட்த்தில் களைப்படைந்து படுத்து விட்டன.

இதையெல்லாம் தொலைவிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த நரி ஒன்று...ஓடி வந்து இறந்து கிடந்த மானை தனக்கு 

 உணவாக தூக்கி சென்று விட்டது.

சிங்கமும் கரடியும் தங்கள் வேட்டையில் கிடைத்ததை சண்டையின்றி பங்கு போட்டுக்கொண்டிருந்தால் இரையை இழந்திருக்காது.

'வீண் சண்டை'...இரு தரப்பினருக்கும் நஷ்டத்தை உண்டாக்கியுள்ளது.



Monday, December 28, 2020

46 - உடைந்த பானை (நீதிக்கதை)

 


முனுசாமி தன் வீட்டுத்  தேவைக்காக தினமும் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவான்.


தண்ணீர் எடுத்து வர அவன் இரண்டு பானைகளை வைத்திருந்தான்.அந்தப் பானைகளை..ஒரு நீளமான கழியின் இரண்டு முனைகளிலும் தொங்க விட்டு..கழியைத் தோள்களில் சுமந்து வருவான்.


இரண்டு பானைகளில் ஒன்றில் சிறிய ஓட்டை இருந்தது.அதனால் ஒவ்வொரு நாளும் வீட்டிற்கு வரும் போது ஓட்டைப் பானையில் பாதியளவே நீர் இருக்கும்.

ஓட்டை இல்லா நல்ல பானை....ஓட்டையுள்ளப் பானையைப் பார்த்து இதனால் கிண்டல்செய்யும். அதனுடைய கேலியை பொறுக்க முடியாமல்...ஓட்டை பானை ஒரு நாள் முனுசாமியைக்கேட்டது.

'ஐயா...தினமும் என் குறையால்....நீங்கள் வரும் வழியில் தண்ணீர் சிந்தி உங்கள் வேலைப்பழுவை அதிகரிக்கின்றேன். என் குறையை தயவுசெய்து சரி செய்யுங்கள் என்றது.'

அதற்கு முனுசாமி ' பானையே...ஒன்றைப் பார்த்தாயா?..நாம் வரும்போது உன் பக்கம் இருக்கும் பூச்செடிகளின் வரிசையைப் பார்த்தாயா.உன்னிடம்

இருந்து சிந்தும் தண்ணீர் படும்படி வழி முழுவதும் பூச்செடிகளை நட்டு வைத்தேன்.அவை தினமும் நீ சிந்தும் நீரினால் இப்பொழுது பெரிதாக வளர்ந்து அழகான

 பூக்களை அளிக்கின்றன.நான் அவற்றை விற்று லாபம் அடைகிறேன்.அது உன்னால்தானே' என்றான்.

இதைக்கேட்ட பானை தன் குறையை மறந்தது.மற்றவர் பேச்சைப் பற்றி கவலைபடாது தன் வேலையை செய்யத்தொடங்கியது.ஓட்டை பானையின் செயலை அறிந்து நல்ல பானையும் அதை கேலி செய்வதை நிறுத்தியது.

அடுத்தவர் பேச்சைப்பற்றி கவலைப்படாது நாம் நம் வேலையை செய்யவேண்டும்.



45 -நன்றி மறந்த சிங்கம் (நீதிக்கதை)

 


வேடன் ஒருவன் காட்டிற்குள் வேட்டையாடச் சென்றபோது,திடீரென சிங்கத்தின் கர்ஜனை அவனை பயந்து ஓட வைத்தது. 

அப்போது ' மனிதா....பயப்படாதே உன் வலப்பக்கம் பார்....யாரோ விலங்குகளைப் பிடிக்க வைத்த கூண்டில் நான் மாட்டிகொண்டுவிட்டேன்.கூட்டைத் திறந்து என்னை விடுவிக்கிறாயா?'  என்றது.

வேடன் சொன்னான்,'சிங்கமே...உன்னை விடுவித்தால் வெளியே வந்து என்னை உணவுக்காக நீ கொன்று விடுவாயே.'

'கண்டிப்பாக மாட்டேன்.என்னை காப்பற்றும் உன்னைக் கொல்வேனா...மாட்டேன் ' என சிங்கம் சொல்ல ..வேடன் கூண்டைத்திறந்து சிங்கத்தை விடுவித்தான்.

வெளியே வந்த சிங்கம் ..வேடன் மீதுபாயத்தயாரனது.'சிங்கமே நீ செய்வது நியாயமா என்றான்'  வேடன்.

'மனிதனை அடித்துக் கொல்வது என் குணம்.நான் வெளியே வர நான் சொன்னதை நீ நம்பியது உன் தவறு' என்றது.

இவர்கள் பேசிக்கொண்டிருப்பதை பார்த்து நரி ஒன்று அங்கு வந்தது.

என்ன விஷயம் என்று கேட்டது. வேடன் நடந்ததைக்கூறி நியாயம் கேட்டான்.சிங்கமும் நரி சொல்வதை தான் கேட்பதாகக் கூறியது.

உடன் நரி ' முதலிலிருந்து நடந்ததைக் கூறுங்கள்'நீங்கள் எந்த கூண்டில் எப்படி இருந்தீர்கள்' என சிங்கத்திடம் வினவ , சிங்கம் கூண்டிற்குள் சென்று ' இங்கே இப்படித்தான் இருந்தேன் என்றது.'

சிங்கம் கூண்டிற்குள் போனதும் ,நரி உடனே கூண்டை மீண்டும் பூட்டிவிட்டது.பின் சிங்கத்திடம் ' என்னை மன்னியுங்கள்.நீங்கள் உங்களை காப்பற்றுபவனுக்கு கொடுத்த உறுதிமொழியை மீறி கொல்ல நினைப்பது  நம்பிக்கை துரோகமாகும்.ஆகவே தான் இப்படி நடந்துகொண்டேன்' என்று சொல்லிவிட்டு  வேடனிடம் உதவி செய்யும்போது அந்த உதவி நமக்கு தீங்கு விளைவிக்குமா என்று ந ன்கு யோசித்துவிட்டு செய்யவேண்டும். என்று சொல்லி  விரைந்தது நரி,

நன்றி மறந்த சிங்கமும் தன் தவறை எண்ணி கூண்டிற்குள் இருந்து வருந்தியது..





Saturday, December 26, 2020

43. ஆணவம் அழிவைத்தரும்....(நீதிக்கதை)

 


ஓரு காட்டில் ஒரு ஆமையும்,ஒரு நத்தையும் மெதுவாக ஊர்ந்து சென்று கொண்டிருந்தன.

துள்ளி குதித்து வந்தமுயல் ஒன்று அவர்களைப் பார்த்து ....'நான் எவ்வளவு வேகமாக துள்ளிக் குதித்து ஓடுகிறேன்.நீங்கள் இருவரும் பாவம் ..மெதுவாகத்தான் உங்களால் நகரமுடிகிறது.அதற்கு காரணம் உங்கள் உடலில் இருக்கும் கூடு தான்.அதன் சுமையால் தான் உங்களால் வேகமாகச் செல்ல முடியவில்லை. காட்டில் ஏதாவது அபாயம் வந்தாலும் நான் ஓடி தப்பி விடுவேன்.நீங்கள் தான் பாவம்..அதில் சிக்கிக்கொண்டு..மரணம் அடைவீர்கள்' என கேலி செய்தது.

அந்நேரம் மரங்களின் இடையிலிருந்து ஒரு ஓநாய் வெளிப்பட ....முயல் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள விரைந்து ஓடத்தொடங்கியது.ஓநாயும் அதை துரத்தியது.

ஆனால் ...ஆமையும் நத்தையும் தங்கள் தங்கள் உடலிலிருந்த கூட்டினுள் தங்களை செலுத்திக்கொண்டு  ,,ஆடாது அசையாது அங்கயே நின்று...தங்களைக் காப்பாற்றிகொண்டன.

அடுத்தநாள் அந்த முயலைப் பார்த்த போது ஆமைசொல்லியது' எங்கள் முதுகில் ஓடு இருப்பதால் நாங்கள் அதனுள்சென்று உயிர் பிழைத்தோம்.நாங்கள் இருப்பதே ஓநாய்க்கு தெரியாது.ஆனால் பாவம்..நீ தான் பயந்து போய் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓட வேண்டியதாயிற்று.' என்றது.

முயலும் தேவையில்லாமல் ஆணவத்துடன் ஆமையுடனும்,நத்தையுடனும் நடந்து கொண்டதற்கு வருத்தம் தெரிவித்தது.மேலும் ஆணவம் ஒரு நாள் அழிவைத்தரும் எனவும் உணர்ந்தது.

நாமும் எந்த நேரத்திலும் கர்வம் கொள்ளக்கூடாது.ஆணவம் அழிவைத்தரும் என்று உணர வேண்டும்.


Thursday, December 24, 2020

42. வாலிழந்த நரி ....(நீதிக்கதை)

 


ரவியும்,சோமுவும் ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் படித்து வந்தார்கள்.

ரவி நன்கு படிப்பான்.சோமுவோ சோம்பேறி.படிப்பிலும் மக்கு.

ஒரு நாள் ரவி சோமுவிடம், 'நீயும் நன்றாக படித்தால் வாழ்க்கையில் பெரிய ஆளாக வரலாமே' என்றான்.

சோமுவிற்கோ..ரவியையும் படிக்க விடாமல்..சோம்பறியாக்க வேண்டும் என கெட்ட புத்திமதிகளைச் சொல்லி வந்தான்.

ரவி...இது  குறித்து அம்மாவிடம் ' சோமு ஏன் இப்படி இருக்கிறான்' என்றான்

அம்மா'அதை சொல்வதற்கு முன் உனக்கு ஒருகதை சொல்கிறேன்' என்று கதை சொல்ல ஆரம்பித்தாள்

ஒரு நரி காட்டில் இரு மரங்களிக்கிடையே சென்றபோது ....அதன் வால் மாட்டிகொண்டது.அதை விடுவிக்க முயன்றபோது வால் அறுந்து போய்விட்டது.

வாலை இழந்த  நரிக்கு அவமானமாய் இருந்தது.அனைத்து நரிகளும் தன்னைப் போலவே வாலில்லாது போனால் தன் குறைபாடு யாருக்கும் தெரியாது என


எண்ணி ...அனைத்து நரிகளையும் ஒரு நாள் கூட்டியது.

கூடிய நரிகளைப்பார்த்து,வாலிழந்த நரி ' வாலை வைத்துக்கொண்டு நீங்கள் படும்பாடு எனக்கு வருத்தமாக இருக்கிறது.வால் இருப்பதால் எவ்வளவு இன்னல்கள் தெரியுமா.நம்மை தொடரும் விலங்குகள் நம் வாலை இழுத்துப் பிடித்து நம்மை பிடித்து விடுகின்றன.உண்மையில் இந்த வாலினால் எந்த பிரயோசனமும் இல்லை.மனிதர்களைப் பாருங்கள்..வாலே இல்லை.நாமும் நம் வாலை வெட்டிக்கொண்டால் ஒன்றாக செயல் பட முடியும். 'நான் இப்பொழுது சந்தோஷமாக இருக்கிறேன்.அது போல நீங்களும் வாலை வெட்டிக்கொண்டால் சந்தோஷமாக இருக்கலாம்' என்றது.

அப்போது மூத்த நரி ஒன்று அங்கு வந்தது.' வாலில்லாத நரி ...வால் தேவையில்லை என்பதை உனக்கு வால் இருக்கும்போதே சொல்லியிருந்தால்....நாங்கள் 

நம்பி இருப்போம்.' இப்போது உன்னைபோல எங்களை மாற்றும் உன் தந்திரம் புரிந்து விட்டது.' என்றது.

என்று கதையை முடித்த அம்மா,'சோமு மக்காய் இருப்பதால் ...அவனைப்போல உன்னை மக்காய்  இருக்கவேண்டும் என உன்னைப் படிக்காதே என்று சொல்கிறான்...அவன்  சொல்வதைக் கேட்காதே என்றார்.

நாமும் நமக்கு தீயசெயல்களை செய்ய சொல்பவர்களை ஒதுக்கி விடவேண்டும்.


.

41 - எது அழகு?....(நீதிக்கதை)

 


ஓரு காட்டில் இருந்த மரத்தில் கிளி,குயில்,புறா,காகம் ஆகிய பறவைகள் வசித்து வந்தன.


அவர்களுக்குள் தங்களுக்குள் யார் அழகு? என்ற கேள்வி பிறந்தது.


அப்போது கிளி சொன்னது.."மனிதர்களில் கூட அழகாக இருக்கும் பெண்களை, கிளிபோல இருப்பதாக சொல்வார்கள்.ஆகவே நான்தான் அழகு" என்றது.


"எனது குரல் கேட்டு மயங்காதவர்கள் இல்லை.இனிய குரல் உள்ளவர்களை என்னோடுதான் ஒப்பிட்டு சொல்வார்கள்.ஆகவே நானே அழகு"என்றது குயில்.


புறாவோ, "அந்த நாளில் காதலர்களும், அரசர்களும் தூது சொல்ல என்னையே அனுப்பி வைப்பார்கள்.பெண்களை இன்றும் கொஞ்சும் புறா என சொல்வார்கள்.ஆகவே நானே அழகு "என்றது.


"நீங்கள் எல்லாம் உணவைத் தேடிச் செல்ல வேண்டும்.ஆனால் மக்கள் என்னை "காகா..காகா" என கூப்பிட்டு உணவளிப்பர்.ஆகவே நான்தான் அழகு" என்றது காகம்.


இவர்கள் சொல்வதையெல்லாம் மரத்தின் கீழே இருந்து கேட்டுக் கொண்டிருந்தது ஒரு முயல்.அதைக் கவனித்த பறவைகள் முயலிடம் தங்களில் யார் அழகு? எனக் கேட்டன.


"உங்களில் யார் அழகு என நான் நீதிபதியாய் இருந்து நாளை காலை 9மணிக்கு சொல்கிறேன்.அனைவரும் என் பொந்திற்கு காலை 9மணிக்கு வந்துவிடுங்கள் "ஏன்று கூறி தன் பொந்திற்கு தாவி ஓடிப் போயிற்று.


அடுத்தநாள் காலை எல்லாப் பறவைகளும் கிளம்பும் போது..ஒரு குருவிக் குஞ்சு அம்மரத்தில் இருந்த குருவிக் கூட்டிலிருந்து கீழே விழுந்து துடித்துக் கொண்டிருந்தது.கீழே விழுந்த குருவியைப் பார்த்தும், நேரமாகிவிடப் போகிறதே..என அவை விரைந்தன.ஆனால் காகம் மட்டும்..அக்குருவிக் குஞ்சிற்கு சிறிது தண்ணீரைக் கொடுத்து விட்டு..அதைத் தன் அலகினால் பத்திரமாகக் கவ்வி ,அதன் கூட்டில் வைத்து விட்டு முயலைப் பார்க்கக் கிளம்பியது.


எல்லாப் பறவைகளும் சரியான நேரத்துக்கு வந்தும்..காகம் மட்டும் தாமதமாக வந்து முயலிடம்..நடந்ததை கூறி..தாமதமானதிற்கு மன்னிக்க வேண்டும் என்றது.


இப்போது முயல் கூற ஆரம்பித்தது..


"அழகு என்பது புற அழகு மட்டும் அல்ல.பிறருக்கு உதவி செய்வதும் அழகுதான்.நீங்கள் அனைவரும் அந்த குருவி அடிப்பட்டிருப்பதைப் பார்த்தும்,அதை சட்டை செய்யாமல் வந்து விட்டீர்கள்.ஆனால்..காகம் அதைக் காப்பாற்றி..கூட்டில் ஜாக்கிரதையாக வைத்து விட்டு வந்துள்ளது.ஆகவே பிறருக்கு உதவும் குணம் உள்ள காகமே அழகு"என தீர்ப்பளித்தது.


நாமும் பிறருக்கு நம்மால் முடிந்த உதவி செய்யும் குணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

Wednesday, December 23, 2020

44 - தன் வினை தன்னை சுடும்

 


சலவைத் தொழிலாளி ஷண்முகத்திடம் இரண்டு கழுதைகள் இருந்தன.சுறுசுறுப்பாய் இருக்கும்  கழுதை ஒன்று.எப்போதும் சோம்பேறியாய் இருக்கும் கழுதை ஒன்று.


தினமும் சுறுசுறுப்பாய் இருக்கும் கழுதையின் முதுகில் அழுக்குத்துணி மூட்டைகளை வைத்து நதிக்கு எடுத்துச் சென்று,துணிகளைத் தோய்த்து காயவைத்து..மீண்டும் மூட்டையாகக் கட்டி கழுதையின் முதுகில் வைத்து திரும்பி வருவதை ஷண்முகம் வழக்கமாய்க் கொண்டிருந்தான்.

ஒரு நாள் மிகுந்த பாரமாய் இருந்ததால் உழைத்த களைப்புடன் சோர்வாக சுறுசுறுப்பான கழுதைவந்து சேர்ந்தது. இரவு அதற்கான உணவைக்கூட உண்ணாமல் படுத்தது.இதைக்கண்ட சோம்பறிக் கழுதை பரிதாபப்பட்டு அதனிடம் சொன்னது.

'உன்னை பார்க்க பாவமாக இருக்கிறது....ஏன் தினமும் உழைக்கிறாய்...என்னைப்பார்...காலையில் அவன் வந்து எழுப்பும்போது ..எழுந்திராமல் படுத்துக்கொண்டே இருப்பேன்.சாட்டையால் என்னை நாலடி அடிப்பான்.பொறுத்துக்கொள்வேன். சரி...இது வேலைக்கு ஆகாது என என்னை விட்டுவிட்டு உன்னை மட்டும் பாரம் சுமக்கவைப்பான்.என்னைப்போல நீயும் சண்டித்தனம் செய்....உன்னையும் இரண்டு அடி அடிப்பான்.பின் விட்டுவிடுவான் என்றது.

அதன் பேச்சைக் கேட்டு அடுத்த நாள் சுறுசுறுப்பு கழுதை அடித்தும் எழுந்து கொளவதாய் இல்லை.உடனே சண்முகம் ' பாவம் தினமும் உழைக்கும் இந்த க் கழுதை சண்டித்தனம் செய்கிறதென்றால் ஒரு வேளை உண்மையாகவே அதற்கு உடம்பு சரியில்லை என்று நினைத்தான்,'

இன்று சுறுசுறுப்புக் கழுதைக்க்கு ஓய்வு கொடுத்துவிட்டு,உழைக்காமல் காலத்தைத் தள்ளும் சோம்பறிக்கழுதையை இன்று அழைத்து செல்லலாம்..என்று சாட்டையால் பலமாக  அதை அடித்து ஓட்டிக்கொண்டு சென்றான்.'

சோம்பறிக்கழுதை சுறுசுறுப்பு கழுதைக்கு கெட்ட அறிவுரைகள் சொல்லியதால்  அதன் பிழைப்பும் கெட்டது.

நாம் தவறாக சொன்னாலோ,தவறாக அறிவுரை சொன்னாலோ...அதுவே திரும்ப வந்து நம்மைதாக்கும்.


40 - மனசாட்சிப் படி நட..

 



தந்தையும்,அவரது பத்து வயது மகனும் அவர்களிடமிருந்த குதிரைக்குட்டி ஒன்றை விற்பதற்காக சந்தைக்கு ஓட்டி சென்று கொண்டிருந்தனர்.

அப்போது வழிப்போக்கன் ஒருவன் ...'குதிரைக்குட்டியை ஓட்டி செல்கிறீர்களே அதன் மீது நீங்கள் யாராவது ஏறிச்செல்லலாமே' என்றான்.

உடன் தந்தை தன் மகனை குதிரை மீது ஏற்றினார்.சிறிது தூரம் சென்றதும் வேறு ஒரு வழிப்போக்கன்,' வயதான நீங்கள் நடக்கிறீர்கள்...சிறுவன் குதிரையின் மேல் உட்கார்ந்துள்ளானே?' என்றார்.

உடனே தந்தை சிறுவனை இறக்கிவிட்டு ...தான் குதிரையின் மீது ஏறி அமர்ந்தார்.

சிறிது தூரம் சென்றதும்....அந்த வழியே வந்த வழிப்போக்கன் 'திடமாக இருக்கும் நீங்கள் குதிரையில்...பாவம் சிறுவன் நடந்தா..;என கேட்டான்,

'சரி' என இம்முறை தந்தை,மகன் இருவரும் குதிரையின் மீது ஏறிக்கொண்டனர்.சிறிது  தூரம் சென்றதும் ஒருவன் ;பாவம் குதிரைக்குட்டியின் மீது இரண்டு தடியன்கள் பயணம் செய்கிறார்கள் என்றான்.'

இதைக்கேட்ட தந்தையும், மகனும் குதிரையிலிருந்து இறங்கி வழக்கம் போல நடந்து சென்றனர்.

அப்போது மகன் கேட்டான்' ஏம்பா...நம்ம குதிரை..நாம் அதனுடன் நடந்தோ...இல்லை ஏறியோ எப்படி வேண்டுமானாலும் செல்லலாம்.அதை 

விமர்சிக்க  இவர்கள் எல்லாம் யார்? என்றான்.'

அப்போதுதான் தந்தையும் உணர்ந்தார்.....யார் எப்படி நம்மை விமர்சித்தாலும் பரவாயில்லை ...நம் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் நடந்துகொண்டால் போதுமென.

இவர்கள் மனதின் எண்ண ஓட்டத்தை  புரிந்து கொண்டது போல குதிரையும் சந்தோஷத்தில் கனைத்து,அவர்களுடன் சேர்ந்துநடக்க ஆரம்பித்தது.

Monday, December 21, 2020

39. சிந்தித்து செயல் படவேண்டும் (நீதிக்கதை)




 அந்த ஊரில் ஆலமரம் ஒன்றில் ஆண் காகமும்,பெண் காகமும் வசித்து வந்தன.

அந்த ஆலமரத்தின் கீழே பெரிய பொந்து ஒன்று இருந்தது.அதில் ஒரு  பாம்பு வசித்து வந்தது.பெண்காகம் தனது கூட்டில் முட்டைகள் இட்டு குஞ்சு பொரிக்கும்.

ஆண்காகமும் பெண் காகமும் இரைத்தேடி செல்லும் நேரம்  பொந்தில் இருக்கும் பாம்பு மரத்தில் ஏறி முட்டைகளைத் தின்றுவிடும்.

நீண்ட நாட்கள் முட்டைகள் எப்படி காணாமல் போகிறது என காகங்கள் அறியவில்லை.

ஒருநாள் பாம்பு முட்டைகளை சாப்பிடுவதை பெண் காகம் பார்த்துவிட்டது.

பின் ஆண் காகத்திடம் அது முறையிட ..பாம்பை எப்படி ஒழிப்பது என அவை யோசித்தன.

பின் ஒரு தீர்மானத்திற்கு அவை வ்ந்தன.

அந்த நாட்டு இளவரசி நீராடும் குளத்திற்கு வந்தன.அவள் தன் விலையுயர்ந்த ஆபரணத்தை கழட்டி கரையில் வைத்துவிட்டு குளிக்க சென்றாள்.

ஆண் காகம் முத்துமாலையை கொத்திக்கொண்டு ஓடியது. இளவரசியுடன் வந்த காவலர்கள் காகத்தை துரத்திக்கொண்டு வந்தனர்.

காகம் அந்த முத்துமாலையை பாம்பு வசிக்கும் பொந்தில் போட்டதை பார்த்த காவலர்கள் புற்றை இடித்து நகையை தேடும்போது பாம்பு வெளியே வர  அதை அடித்துக் கொன்றுவிட்டு நகையைஎடுத்து சென்றனர்.

அதன் பிறகு அந்த இரண்டு காகங்களும் பயமில்லாமல்  மகிழ்ச்சியுடன் வாழ ஆரம்பித்தன.

நமக்கு துன்பம் வரும்போது.கலங்காது. யோசித்தோமானால்  அந்த துன்பம் நீங்க வழி பிறக்கும்.

38.உழைப்பே உயர்வு தரும்...(நீதிக்கதை)

 


ராமனும்,கோவிந்தனும் இரு சகோதரர்கள்.ஒரு நாள் அவர்கள் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது ஒரு பிச்சைக்காரன் வந்து 'ஐயா பசிக்கிறது ஏதாவது சாப்பிட கொடுங்கள்' என்றான்.

ராமன் உடனே அவனுக்கு உணவளித்தான்.கோவிந்தனோ,ராமனைப் பார்த்து 'ராமா...இப்படி நீ இவனுக்கு உணவளித்து அவனை சோம்பேறியாக்குகிறாய்'என்றான்.

அடுத்தநாளும்  அவன் பிச்சை எடுக்க வந்தான்.ராமன் அவனுக்கு உணவளிக்க வந்தபோது அவனை தடுத்து நிறுத்தி.அந்த பிச்சைக்காரனை தடதடவென இழுத்துக் கொண்டு போனான் கோவிந்தன்.

அவனுக்கு ஒரு தூண்டிலை வாங்கிக்கொடுத்து ...பக்கத்து ஊர் குளத்தில் மீன் பிடித்து உழைத்துப் பிழைத்துக்கொள் என்று சொல்லிவிட்டு திரும்பினான்.

ஒரிரு வருடங்கள் கழித்து ராமனும் கோவிந்தனும் வீட்டில் இருந்தபோதுஅவர்கள் வீட்டின் முன் ஒரு பெரிய கார் வந்து நின்றது.அதிலிருந்து ஒரு செல்வந்தர் இறங்கி வந்தார்.அவனது கார் ஓட்டுநர் கூடைகூடையாய் இனிப்புகளும்,பழங்களும் எடுத்து உள்ளே வைத்தார்.

செல்வந்தர் கோவிந்தனைப் பார்த்து 'என்னை யார் என்று தெரிகிறதா.நான் உங்கள் வீட்டுக்கு பிச்சை எடுக்க வந்தேன்.எனக்கு தூண்டில் வாங்கிக்கொடுத்து மீன் பிடித்து உழைத்து சம்பாதிக்க கற்றுக்கொடுத்தவர் நீங்கள்.நான் பின் உழைத்து....இன்று மீன் களை பதப்படுத்தி வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் பெரிய தொழிலதிபர் ஆகிவிட்டேன்.உழைப்பின் அருமையை எனக்கு உணர்த்திய உங்களுக்கு  எப்படி நன்றி சொல்வேன்''என்றார்.

உழைப்பு உயர்வு தரும் என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்தால் வாழ்வில் நமக்கு முன்னேற்றம் ஏற்படும்.

Sunday, December 20, 2020

37 - கர்வம் கூடாது (நீதிக்கதை)




 அந்த ஊரில் இருந்த குளம் ஒன்றில் அநேக மீன்கள் வாழ்ந்து வந்தன.அவற்றில் பளப்பள என மின்னும் வண்ணத்தில் மிக அழகான மீன் ஒண்றும் இருந்தது.


தான் அழகாய் இருப்பதால்..அந்த மீன் மற்ற மீன்களுடன் சேராது கர்வத்துடன் குளத்தில் நீச்சலடித்துக் கொண்டிருந்தது.


அதனுடன் நட்பை விரும்பி ஒரு மீன் வந்தது.ஆனால் வண்ண மீனோ ' என் அழகைப்பார்...வண்ணங்களைப்பார்...எவ்வளவு அழகாய் இருக்கிறேன்.ஆனால் நீயோ அவலட்சணமாய்,கறுப்பாக இருக்கிறாய்.உன்னுடன் நான் நட்புகொள்ளமாட்டேன் என்றது.

அதற்கு வண்ணமற்ற மீன் சொன்னது..'தோற்றம் எப்படியிருந்தால் என்ன...மனம் களங்கமில்லாது இருக்கவேண்டும்.படைப்பு நம் கையில் இல்லை....அதனால் நீ கர்வம் கொள்வது நல்லதல்ல.....இந்த அழகே உனக்கு ஒரு நாள் விரோதியாகிவிடும்' என்றது.

அந்த குளத்தின் கரையில் கொக்கு ஒன்று ஓற்றைக் காலில் நின்றுகொண்டு நீரில் போகும் மீன்களை எல்லாம்  பார்த்துகொண்டிருந்தது.

அப்போது அந்த அழகிய வண்ண மீன் நீர்பரப்பின் மேற்பகுத்திக்கு வந்தது.

மினுமினுப்பான வண்ண மீனைப்பார்த்த கொக்கு..'.ஆஹா.. இது என்னமாய் ஜொலிக்கிறது...உண்ண அற்புதமாய் இருக்கும்'என்றபடியே கவ்வி பிடித்தது.

இதை பார்த்துக்கொண்டிருந்த வண்ணமற்ற மீன்' வண்ண நிறத்தால் அழகாய் இருப்பதாக கர்வத்துடன் இருந்தாயே...அதுவே உன் உயிருக்கு உலை வைத்துவிட்டதே...என்னுடன் நட்பாய் இருந்திருந்தால் கொக்கை பார்த்ததும் உன்னை ஆழமான பகுதிக்கு அழைத்து சென்றிருப்பேனே' என்று கூறி அந்த இடத்தை விட்டு அகன்றது.

நாம் எப்படிப்பட்ட நிலையில்  இருந்தாலும் கர்வம் படக்கூடாது.ஏனெனில் கர்வம் ஒருநாள் நம்மை அழித்துவிடும்.

Friday, December 18, 2020

36. இறைவனே காத்தான்....(நீதிக்கதை)

 


அந்த காட்டிற்குள் ....இரு அணில்கள் மரத்திற்கு மரம் ஆடி..ஓடி விளையாடிக்கொண்டிருந்தன.

அதில் ஒரு அணில் இறைவன் மீதி பக்தி அதிகம் கொண்ட அணில்.எது நடந்தாலும் ....அது தான் வணங்கும் இறைவனின் செயலாகும் என்றும்...தன்னை எப்போதும் எந்த விபத்து வந்தாலும் அவன் காப்பாற்றி விடுவான் என்றது.

ஆனால் மற்றொரு அணிலோ இதைக்கேட்டு சிரித்தது.'இறைவன் என்பவன் மீது எனக்கு நம்பிக்கை இல்லை..' என்றது.

'உனக்கு ஒரு ஆபத்து வந்து அதிலிருந்து நீ தப்பினால் தான் ..உனக்கு புத்தி வரும் என்றது பக்தி அணில்.

பிறகு இரண்டும் ஒரு மரத்தில் ஏறி அதன் ஒரு கிளையில் அமர்ந்து தங்கள் முன் கால்களில் அம்மரத்திலிருந்து ஒரு பழத்தைப் பறித்து த் தின்று கொண்டிருந்தன.அப்போது திடீரென அந்த கிளை முறிந்து கீழே விழுந்தது.அதனுடன் அணில்களும் விழுந்தன.

நம்மை அனைத்து கிளைகளும் தாங்குமே..இது எப்படி முறிந்தது' என வியந்தன.

அப்போது பக்தி அணில் மேலே பார்க்க அவை அமர்ந்திருந்த முறிந்த கிளையை ஒட்டி இருந்த கிளையில் ஒரு பாம்பு ஒன்று அமர்ந்திருந்தது.கிளை மட்டும் முறியாமல் இருந்திருந்தால் அந்த பாம்பு  அணில்களை விழுங்கியிருக்கும்.

பாம்பைக்காட்டி...மற்ற அணிலுக்கு இறைவனே கிளையை முறியவைத்து நம்மை காத்தான் இறைவன் என்றது பக்தி அணில்.

அதை உணர்ந்து கொண்ட மற்ற அணிலும் அன்று முதல் இறைவனை வணங்க ஆரம்பித்தது.

35. உன் வலிமையை உணர்...(நீதிக்கதை)

 


காலை நேரம்....நரி ஒன்று கிழக்கு திசையிலிருந்து  மேற்கு நோக்கி சென்றது.அப்போது  கிழக்கிலிருந்து வந்த சூர்யஒளியில் அதன் நிழல் வெகு நீளமாக பெரிதாகத் தெரிந்தது.

நரிக்கு ஒரே சந்தோஷம்.தான் மிகப்பெரியதாக வளர்ந்து விட்டதாகவும் இனி காட்டின் ராஜாவாக உள்ள சிங்கத்தை விட தான் பெரியவன் என எண்ணியது.

செல்லும் வழியில் எதிரில் சிங்கத்தை பார்த்தது.அது அப்போதுதான் இரை சாப்பிட்டுவிட்டு வந்ததால் .. நரியை கண்டும் காணாதது போல இருந்தது.

நரியோ சிங்கம் தன் உருவத்தை பார்த்து பயந்ததாக எண்ணியது.அதனால் சிங்கத்திடம் ' இனிமேல் காட்டுக்கு ராஜா நான் தான் 'என்றது.

சிங்கமோ கோபத்துடன் ,'நீ என்ன பிதற்றுகிறாய்.எனக்கு பல முறை இரைக்காக  விலங்குகளை ஏமாற்றி அழைத்து வந்திருக்காய் என்பதால் உன்னை மன்னிக்கிறேன்.இங்கிருந்து போய் விடு' என்றது.

அதற்குள் மதிய நேரம் வர உச்சி வெய்யிலில்  நரியின் நிழல் குறைந்து  அதன் உண்மையான அளவே தெரிந்தது.

அப்போதுதான் சூர்ய ஒளியால் தான் காலையில் தன் உருவம் பெரிதாக தெரிந்தது' என்பதைஉணர்ந்தது.

' நல்லவேளை  .. சிங்கம் நம்மை மன்னித்து விட்டது என ஓடி ஒளிந்தது,

முட்டாள்தனமாக நம்மை பற்றி தெரியாது நம்மைபெரிதாக எண்ணக்கூடாது என நரி உணர்ந்தது.




Thursday, December 17, 2020

34. பேராசை பெரு நஷ்டம் (நீதிக்கதை)

 ஓரு ஊரில் சோமசுந்தரம் என்ற பணக்காரன் ஒருவன் இருந்தான்.அவன் மளிகைக்கடை ஒன்று நடத்திவந்தான்.அவன் ஊர் மக்களை ஏமாற்றியும் ,எடை குறைவாகவும் சாமான்களைக் கொடுத்து பெரும் பணம் ஈட்டி வந்தான்.பேராசைக்காரனாகவும் இருந்தான்.

ஒரு நாள் தன் கடைக்கு மளிகைசாமானகள் வாங்கிவர அடுத்த ஊருக்கு   செல்லும்போதுகையில் பணம் ஐம்பதாயிரத்தை வழியில் எங்கோ தவறவிட்டான். அதை அவனால் கண்டுபிடிக்கமுடியவில்லை.

கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு பத்து சதவிதம் அதாவது ரூபாய் ஐயாயிரம் பரிசளிப்பதாக ஊர் முழுவதும் தண்டோரா போட்டான்.

ராமன் என்ற ஒர் ஏழை விவசாயி தெருவில் நடந்துசென்றபோது அந்தப் பணப்பை கிடைத்தது.சோமசுந்தரத்தின் பை அது என்று தெரிந்து அவனிடம் கொடுத்தான்.

பேராசைக்காரனான சோமசுந்தரம் அறிவித்த பரிசுத்தொகையை கொடுக்காமல் ராமனைப் பார்த்து " பணம் சரியாக இருக்கிறது ஆனால் இதில் என் வைர மோதிரம் இருந்தது.அது எங்கே? என்றான்.

ராமனோ தனக்கு அதைப்பற்றி எதுவும் தெரியாது என்று கூற வழக்கு அந்த ஊர் அரசனிடம் சென்றது.

சோமசுந்தரத்தின் பேராசையை அறிந்த அரசன் "சோமாசுந்தரம் ...உன் பையில் பணத்துடன் வைர மோதிரம் இருந்ததா' என்று வினவ. சோமசுந்தரமும் 'ஆமாம் மன்னா' என்றான்,உடன் அரசன்; ராமன் கண்டெடுத்த பையில் பணம் இருந்தது ஆனால் மோதிரம் இல்லை.ஆகவே இது உன் பையாக இருக்கமுடியாது.யாருடையது என


தெரியாத நிலையில் பையைகண்டெடுத்த ராமனுக்கத் தான் சொந்தம் என்று தீர்ப்பளிக்கிறேன் என்றான்.

சோமசுந்தரம் தன் பேராசையால் மொத்த பணத்தையும் இழந்தான்.

Tuesday, December 15, 2020

34. மூத்தோர் சொல் கேள்..(நீதிக்கதை)


 தன்னுடைய ஆடுகள் அனைத்தையும் புல்வெளி ஒன்றில் மேயவிட்டுவிட்டு அங்கிருந்த மர நிழலில் சற்றே கண்ணயர்ந்தான் கண்ணன்.

அப்போது நரி ஒன்று அங்கு வந்தது.கொழுத்து இருந்த ஆடுகளப்பார்த்து அதன் நாக்கில் எச்சில் ஊறியது.இதில் ஒரு ஆட்டை சிங்கராஜாவிற்கு கொடுத்தால் அது நம்மை பாராட்டுவதோடு எஞ்சிய ஆட்டு இறைச்சியையும்  தான் சாப்பிடலாமே என நரி ஆசைப்பட்டது.

தனக்கு  உரிய தந்திர குணத்துடன் ...ஒரு கொழு கொழு ஆட்டுக்குட்டியிடம் சென்று" இந்தஇடத்து காய்ந்த புற்களை மேய்ந்து கொண்டு இருக்கிறாயே..என்னுடன் வா..இளம் புல் இருக்குமிடம் காட்டுகின்றேன் அதைத்தின்று அருகில் இருக்கும் ஓடைத்தண்ணீரை குடித்தால் எவ்வளவு ருசியாக இருக்கும் தெரியுமா? என்றது.

"நமக்கு முன்பின் தெரியாதவர்கள் அழைத்தால் அவர்களுடன் எங்கும் போகக்கூடாது என்று அம்மா அறிவுரை சொல்லியிருந்ததை மறந்து ஆட்டுக்குட்டி நரியுடன் சென்றது.

அப்போதுதான் கண் விழித்தக் கண்ணன்...நரியுடன் ஆட்டுக்குட்டி செல்வதைப்பார்த்து....நரியை அடித்து விரட்டினான்.

நடந்ததை அறிந்த ஆட்டுக்குட்டியின் தாய் "நல்ல வேளை...கண்ணன் பார்த்தான்....நான் சொன்னதை மறந்து நீ நரியுடன் சென்றிருந்தால் அது உன்னை அடித்து தின்றிருக்கும் என்று கூறி ' எப்போதும் அம்மா,அப்பா சொல்வதைக்கேட்டு அதன்படி நடந்து கொண்டால் யாருக்கும் துன்பம் வராது.நான் சொன்னபடி முன்பின் தெரியாத நரியுடன் நீ செல்லலாமா'என்றது.

ஆட்டுகுட்டியும் தன் தவற்றை உணர்ந்து மன்னிப்பு கேட்டது.

நாமும் நம்மை விட பெரியவர்கள் சொல்வதை கேட்டு நடந்தால் நம்மை எந்த துன்பமும் எப்போதும் அண்டாது.

Monday, December 14, 2020

33. வேலைக்கேற்ற கூலி (நீதிக்கதை)

 கந்தன் என்பவனிடம் நிறைய ஆடுகள் இருந்தன. அவற்றை மேய்ச்சலுக்குஅழைத்து சென்று இரவு கொட்டிலில் அடைப்பான்.


ஆனால்..சில நாட்களாக தினமும் ஒரு ஆடு காணாமல் போய்க் கொண்டிருந்தது.இரவு சரியான காவல் இல்லாததால் ஏதோ விலங்கு ஒன்று வந்து ஆட்டை அடித்து இழுத்து சென்று எங்கேயாவது போட்டு தின்றிருக்கலாம் என கந்தன் நினைத்தான்.

அதனால் ஒரு நாள் இரவு மறைந்திருந்து கவனித்தான்.அப்பொழுது ஓநாய் ஒன்று வந்து ஆடு ஒன்றைக் கொன்று இழுத்துச் சென்றதை கவனித்தான்.

அடுத்த நாள் இரு வேட்டை நாய்களை வாங்கி இரவு காவல் காக்க வைத்தான்.ஆனால் அப்போதும் ஆடு காணாமல் போய்கொண்டிருந்தது.

முன்னர் செய்தது போல இம்முறையும் மறைந்திருந்து கவனித்தான்.

ஆனால் இம்முறை ஓநாய் வந்து ஆட்டை அடித்து இழுத்துச் சென்று...சாப்பிட்டுவிட்டு மிச்சம் கொஞ்சம் மாமிசத்தை வேட்டை நாய்களுக்கு கொடுத்ததை பார்த்தான்.

இதற்கு என்ன செய்வது என வருத்தத்துடன் இருந்தபோது..அடுத்த ஊரில் தன் சித்தப்பா..அவனைப்போலவே  பல ஆடுகளை வைத்து பராமரித்து வந்தது நினைவுக்கு வர ...அவரிடம் வந்து நடந்ததைக் கூறினான்.

அவன் கூறியதைக் கேட்ட சித்தப்பா..."காவலுக்காக நீ வைத்துள்ள வேட்டை நாய்கள் ஏன் உனக்கு எதிராக நடந்து கொள்கிறது என நீ யோசித்தாயா? நீ அவற்றுக்கு போடும் உணவு போதவில்லை.ஆகவே அவை தங்கள் பசியைப் போக்கிக் கொள்ள வழிதெரியாது ஓநாய்க்கு உதவி தங்கள் பசியை தீர்த்துக் கொண்டன.

நம்மிடம் நமக்காக வேலை செய்பவர்களுக்கு வயிறார சாப்பாடும் ..சம்பளமும்  கொடுக்கவேண்டும்.அப்பொழுதுதான் அவர்கள் நமக்கு உண்மையாக இருப்பார்கள் என்றர்.

அடுத்தநாள் கந்தன் வேட்டை நாய்களுக்கு தேவையான


உணவைக் கொடுக்க ..அவை ஓநாயை அங்கு மீண்டும் வராமல் ...தன் முதலாளியின் நம்பிக்கைக்கு பாத்திரமாக திகழ்ந்தன.




Wednesday, October 14, 2020

ஆணவம்

 





 பல வண்ணங்கள் கொண்ட கிளி ஒன்றும் காகம் ஒன்றும் நட்புடன் இருந்தன.


ஆனாலும் கிளி அவ்வப்போது காக்கையை அதன் நிறத்தைச் சொல்லி கேலி செய்து வந்தது.


ஒருநாள், வேடன் ஒருவன் கையில் அக்கிளி சிக்கிக் கொண்டது.


அவன் அதை தன் வீட்டிற்கு எடுத்துச் சென்று, அதன் நாக்கை வழித்து வழித்து..மிளகாயினாலும்,பூண்டினாலும் வழித்து..தமிழில் பேசு..தமிழில் பேசு என துன்புறுத்திக் கொண்டிருந்தான்.


அதைக் கண்ட காகம் வருந்தியது.அப்போது வேடனின் மனைவி, சாத உருண்டை ஒன்றைக் கொண்டு வந்து வைத்து.."காகா..காகா" என இதைப் பார்த்துக் கூவினாள்.


காகம் ,கிளியைப் பார்த்துச் சொன்னது..


"பார்த்தியா..அவனது மொழியில் பேசச் சொல்லி அவன்  உன்னை துன்புறுத்துகிறான்.ஆனால், அவன் மனைவியோ என் பாஷையில் என்னைக் கூப்பிட்டு சோறு வைக்கிறாள்.காரணம் உனது அதீத அழகும், ஆணவமும்..சில நேரத்தில் அவை நமக்கே ஆபத்தாக அமையும்..என சொல்லி விட்டுப் பறந்தது.




Monday, March 30, 2020

32 - ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு


ஒரு கோவில் கோபுரத்தில் சில நீல நிறப் புறாக்களும் சில வெள்ளை நிறப் புறாக்களும் வாழ்ந்து வந்தன. நீலப் புறாக்கள் தாம் வெள்ளைப் புறாக்களைவிட அழகாக இருப்பதாக எண்ணி கர்வர்த்துடன் இருந்தன. சிலநாட்களின் பின் அக் கோபுரத்தில் திருத்த வேலகள் ஆரம்பமானது.
அதனால் எல்லாப் புறாக்களுக்கும் கோபுரத்தை விட்டு வெளியேற வேண்டி ஏற்பட்டது. புறாக்கள் எல்லாம் வேறொரு இடம் தேடி ஒரே திசையில் பறந்து சென்றன.  அவைகள் பறந்து செல்லும் போது ஓரிடத்தில் வெய்யிலில் உலர்வதற்காக பரப்பப்பட்ட நெற்களைக் கண்டன. கண்டதும் அனைத்தும் ஒன்றாக அவ்விடத்திற்கு பறந்து சென்று காயப் போடப்பட்ட நெற்களை தின்று தீர்த்து விட்டு அருகே இருந்த ஒரு பெரிய மரம் ஒன்றில் அமர்ந்தன.
தானியத்தை காய்வதற்காக பரப்பி விட்டு சென்ற வேடன் திரும்பி வந்து பார்த்த பொழுது தானிய மணிகள் ஒன்று கூட இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தான். தானியங்கள் காயப்போட்ட இடத்தில் புறாக்களின் எச்சம் கிடப்பதை பார்த்து வேடன் என்ன நடந்தது என்பதை ஊகித்தான்.
நாளைக்கு இந்த புறாக்களை எப்படியும் வலை விரித்து பிடித்து விட வேண்டும் என்று முடிவு செய்து அதன்படி மறுநாள் வலை ஒன்றைத் தயார் செய்து அந்த இடத்தில் விரித்து தானியங்களையும் போட்டு புறாக்கள் வரும்வரை காத்திருந்தான்.
அடுத்த நாள் அங்கே வந்த புறாக்கள் தானியத்தைப் பார்த்ததும், அதை உண்ணும் ஆசையில் வேகமாக தரையிறங்கி உண்ணத் தொடங்கின. சில மணித்துளிகளில் அதன் கால்கள் வலைகளில் சிக்கிக் கொண்டன.
சற்று தொலைவில் மறைந்திருந்த வேடன் நிலைமையை நன்கு புரிந்து கொண்டு புறாக்களை பிடிக்க ஓடி வந்தான். வேடன் வருவதைப் பார்த்த புறாக்கள் ஆபத்தை உணர்ந்து கொண்டு, உயிர் மீதுள்ள ஆசையினால் எல்லாப் புறாக்களும் ஒன்றாக இறக்கையை விரித்து பறக்க ஆரம்பித்தது. வலையையும் புறாக்கள் தூக்கி கொண்டு உயரப் பறந்து சென்றன.
இதனைக் கண்ட வேடன், “அய்யய்யோ… புறாக்கள் போனாலும் பரவாயில்லை. நான் கஷ்டப்பட்டு தயாரித்த வலையும் அதோடு போகிறதே…” என்று புலம்பிக் கொண்டே, பறந்து செல்லும் புறாக்களின் பின்னே ஓடினான்.
பறந்து செல்லும் போதே, அதில் இருந்த நீலப் புறாக்கள் கர்வத்தோடு, “எங்களது வலிமையால்தான் நீங்களும் காப்பாற்றப்பட்டு இருக்கிறீர்கள். நாங்கள் சிறகை மிக வேகமாக அடித்து பறக்கவில்லை என்றால்… அவ்வளவுதான்” என்று கூறின. உடனே வெள்ளை நிறப் புறாக்களும் தம் பங்குக்கு, “நாங்கள்தான் வலிமையோடு பறந்தோம். உங்களுக்கு அழகு இருக்கலாம், ஆனால் ஆற்றல் கிடையாது” என்று கூறிக் கொண்டு ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொண்டே பறந்தன. வீ ண் கர்வத்தினால் சண்டையிட்டுக் கொண்டு பறந்ததினால் அவற்றின் பறக்கும் வேகம் குறைய ஆரம்பித்தது, அதனால் அவை ஒரு மரக்கிளையில் வலையுடன் சிக்கிக் கொண்டது.
இதனைப் பார்த்த வேடனுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு” என்ற பழமொழிக் கெற்ப இப்புறாக்கள் தப்பி விடுமோ என்று பயந்தேன். நல்லவேளையாக அவற்றின் “ஒற்றுமை நீங்கியதால் அனை வருக்கும் தாழ்வு” என்ற நெறிப்படி பறந்த புறாக்களே நன்றி” என்று புறாக்களைப் பார்த்து கூறிக் கொண்டே அவைகளை பிடித்து தனது கூடைக்குள் போடத் தொடங்கினான்.