Tuesday, November 30, 2010

52..காலத்தால் செய்த உதவி -நீதிக்கதை.

பிரதீப் நன்கு படிக்கும் மாணவன்.அவனது லட்சியமே நன்கு படித்து டாக்டராக ஆகி ஏழைகளுக்கு இலவச வைத்தியம் பார்க்க வேண்டும் என்பதே.

ஆனால் அவனது குடும்பத்தில் அவன் உடன் பிறந்தவர்கள் ஐந்துபேர்.ஆகவே அவனுக்குத் தேவையானதைத் தரக்கூட அவனது பெற்றோர்களால் முடியவில்லை.

இந்நிலையில் ஒருநாள் சரியான சாப்பாடுக் கூட சாப்பிடாது..பள்ளி பரீட்சைக்குக் கிளம்பினான் அவன்.

வெளியே நல்ல வெயில்..பசி வேறு வயிற்றைக் கிள்ள..தெரு ஓரம் மயங்கி விழுந்தான்.

தெருவில் வந்துக் கொண்டிருந்த மூதாட்டி ஒருத்தி அதைப் பார்த்தார்.உடன்..தன் கையில் வாங்கி வந்துக் கொண்டிருந்த பாலை ஒரு தம்ளரில் ஊற்றி அவனுக்கு அளித்தாள்.அதைப் பருகிய பிரதீப் பின் தெம்புடன் தேர்வுக்குச் சென்றான்.

காலம் ஓடியது..

அந்த மூதாட்டி நோய் வாய் பட்டாள்.ஒரு மருத்துவமனையில் அண்டை வீட்டார் அவளைச் சேர்த்தனர்.அவளுக்கு நல்ல சிகிச்சைக் கொடுக்கப் பட்டது.உடல் நன்கு தேறியது..பின்னரே அவளுக்கு மருத்துவ மனைக்கான செலவை எப்படிக் கொடுப்பது என்ற எண்ணம் வந்தது.

அவளை வீட்டிற்குப் போகலாம் என்ற மருத்துவர் ஒருவர் கட்டணத்திற்கான பில்லைக் கொடுத்தார்.அதில் கட்டணம் ஒரு தம்ளர் பால்..அதுவும் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு விட்டது என்றிருந்தது.

புரியாத மூதாட்டி..அந்த மருத்துவரைப் பார்த்தாள்.அவர் "அம்மா..நான் யார் என்று தெரியவில்லையா...நான் தான் அன்று ஒருநாள் பரீட்சைக்குப் போனபோது மயங்கி விழுந்து..உங்களால் பாலை வாங்கி அருந்தி புத்துயிர் பெற்று பரீட்சைக்கு சென்ற மாணவன்.அன்று உங்கள் உதவி எனக்கு மிகவும் பெரிதாய் இருந்தது' என்றார்.

காலத்தால் செய்த உதவி சிறிதாய் இருந்தாலும்..அதைப் பெரிதாக நினைத்து மறக்கக் கூடாது

Thursday, November 18, 2010

51.மானும்..ஓநாயும் (நீதிக்கதை)

ஒரு ஊரில் மான் கூட்டம் ஒன்று வசித்து வந்தன.அவற்றுள் ஒரு சின்ன மான் மிகவும் புத்திசாலியாய் இருந்தது.

அதே நேரம் தன் புத்திசாலித்தனத்தைக் கண்டு மற்ற மான்களிடம் சற்று கர்வமாகவே நடந்துவந்தது.

ஒரு நாள் எல்லா மான்களும் மேய்ச்சல் முடிந்து திரும்புகையில் இருட்ட ஆரம்பித்தது..ஆனால் அப்போதும் அந்த

சின்ன மான் திரும்ப வரவில்லை..

'இருட்டில் எந்தமிருகமாவது வந்து உன்னை அடித்து உண்டு விடும்'என்று வயதான மான் ஒன்று அறிவுரை கூறியும்

சின்ன மான் கேட்கவில்லை..'சரி' என மற்ற அனைத்து மான்களும் திரும்பின..

அந்த நேரம் அங்கு வந்த ஒரு ஓநாய் ஒன்று சின்ன மான் தனியாய் இருப்பதைப் பார்த்து ...அதை கொன்று உண்ண விரும்பியது..

உடன் சின்ன மான் புத்திசாலித்தனமாக' என்னை நீ உண்பதில் எனக்கு ஆட்சேபணையில்லை..ஆனால் அதற்கு முன் உன் இனிய குரலில்

பாட்டு ஒன்று கேட்க ஆசை'என்றது.

ஓநாயும் சின்ன மானின் கடைசி விருப்பத்தை கேட்டுவிட்டு போகட்டும் என்ற எண்ணத்தில் தன் கொடூரக்குரலால் பாட ஆரம்பித்தது.

அதன் குரல் கேட்ட வேட்டைக்காரர்கள் சிலர் அங்கு ஓடி வந்து ஓநாயை கொன்றனர்.

சின்ன மான் உயிர் தப்பியது.

கர்வம் இல்லாமல் ...மூத்த மான் சொன்ன அறிவுரையை கேட்டிருந்தால் சின்ன மானுக்கு இந்த நெருக்கடி வந்திருக்காது.

ஓநாயும் தன் கொடூரக்குரலை பற்றி புரிந்துகொண்டு பாடாமல் இருந்திருந்தால் இறந்திருக்காது

Thursday, November 11, 2010

50.ஓநாயும் ஆடும் (நீதிக்கதை)

ஒரு காட்டில் ஒரு ஓநாயும்...ஒரு வெள்ளாடும் இருந்தது,

கொழுத்த அந்த ஆட்டின் மீது ஓநாய்க்கு எப்போதும் ஒரு கண்...அதை அடித்து சாப்பிடவேண்டும் என்று.

அதற்காக பலமுறை ஓநாய் அந்த ஆட்டை சண்டைக்கு இழுத்தது.

ஓநாயின் குணம் அறிந்த ஆடு..ஓநாயிடம் இருந்து தன் புத்திசாலித்தனத்தால் தப்பிவந்தது.

ஒரு சமயம்..ஒரு நதியின் நடுவில் குறுகலான ஒரு பாலத்தில் ஆடு சென்றது .அப்பாலம் ஒரு நபர் சென்றால்..ஒருவர்

எதிரே வர முடியாத அளவு குறுகலானது.

பாலத்தில் ஆடு வருவதைக்கண்டு,பெரும்பகுதியை ஆடு கடந்ததும்,ஓநாய் அந்த முனையிலிருந்து ஆட்டை நோக்கி வந்தது..

இப்போது ஆடும்.ஓநாயும் எதிரெதிரே வந்துவிட்டன.

ஆடு ஓநாயிடம் ..'நான் கிட்டத்தட்ட பாலத்தைக் கடந்துவிட்டேன்...சற்று நீங்கள் பின் சென்று எனக்கு இடம் கொடுத்தால்..நான்

சென்றுவிடுவேன் ..'என்றது.

இதுதான் சரியான தருணம் என எண்ணி ஓநாய் ஆட்டை வீண் சண்டைக்கு இழுத்தது ''நான் முட்டாள்களுக்கு இடம் தர மாட்டேன்'

நீயே எனக்கு இடம் கொடுத்துப் பின்னால் போ' என்றது.

ஓநாயின் நோக்கம் அறிந்த ஆடு ..'நான் முட்டாள்களுக்கு முதல் இடம் தருவேன்' என தான் பின்னால் சென்று..ஓநாய் பாலத்தை கடக்கச் செய்தது.ஓநாயும் தன் செயல் இம்முறையும் பலிக்கவில்லையே என சென்றுவிட்டது.

ஆடு...தன் புத்திசாலித்தனத்தால்..ஓநாயை முட்டாள் என மறைமுகமாக சொன்னதுடன்..கெட்டவர்களுடன் வீண்வாதம் கூடாது என்று உணர்ந்ததால்

உயிர் பிழைத்தது.

Wednesday, November 3, 2010

49-முயலும் ஆமையும் (நீதிக்கதை)ஒரு மரத்தடியில் ஆமையிடம் ஓட்டப்பந்தயத்தில் தோற்ற முயல் இளப்பாறிக் கொண்டிருந்தது.அதனிடம் வென்ற ஆமை..தனது ஓடும் திறமையில்தான் வென்றோம் என்னும் இறுமாப்பில் முயலைப் பார்த்து'மீண்டும் ஓட்டப் பந்தயத்திற்கு வருகிறாயா?'எனக் கேட்டது.
தனது அலட்சியப் போக்கால் முன்னர் தோல்வியடைந்த முயல்..சரியான தருணத்திற்குக் காத்திருந்தது.ஆமைக் கேட்டதுமே முயல் 'சரி' எனச் சொல்லி விட்டது.
இம்முறை தூங்கிவிடாது, ஒரே தாவலாய்த் தாவி வெற்றிக் கோட்டை அடைந்தது முயல்.
ஆமையும் ..அப்போது தான் முயல் போல தன்னால் வேகமாக ஓட முடியாது என்பதை உணர்ந்து..வெட்கித் தலை குனிந்தது.
முயலும் சென்ற முறை தன்னை உயர்வாக எண்ணியதால்..ஓடுகையில் தூங்கச் சென்றதை உணர்ந்து..அத் தவறை இம்முறை செய்யாது ஓடி வென்றது.
தவறு செய்வது என்பது அனைவரும் செய்யக் கூடியதே..
அது போல ஒரு முறை தவறு செய்துவிட்டால் அத்தவறை மீண்டும் செய்யாமல் கவனமாய் இருக்க வேண்டும்.