Friday, February 18, 2011

65. அன்பே சிறந்தது (நீதிக்கதை)அந்த வீட்டில் குமரன் தன் தாய் தந்தையுடன் வசித்துவந்தான்.

அப்போது வீடட்டின் முன் மூன்று வயதானவர்கள் வந்து ' உள்ளேவரலாமா ' என்று கேட்டனர்.

தந்தை 'வாருங்கள்' என்றார்.

'நாங்கள் மூவரும் ஒன்றாக வரமுடியாது...யாராவது ஒருவர் தான் வரமுடியும்...என் பெயர் பணம்...இவர் பெயர் வெற்றி...இவர் பெயர் அன்பு..எங்கள் மூவரில் ஒருவர் தான் ஒரு வீட்டிற்குள் செல்லமுடியும்...எங்கள் மூவரில் உங்களுக்கு யார் வேண்டுமோ அவரை அழைத்துக் கொள்ளுங்கள்' என்றார் பணம் எனப்படுபவர்.

குமரனின் தந்தை ' வெற்றியை அழைக்கலாம்..நாம் எந்த வேலையைச் செய்தாலும் அதில் வெற்றியடையலாம்' என்றார்.

ஆனால் குமரனோ ...'அப்பா பணத்தையே உள்ளே அழைக்கலாம்...நம்மிடம் பணம் சேர்ந்துவிட்டால்...எல்லாவற்றையும்..வெற்றி ..உட்பட ...அனைத்தையும் வாங்கலாம்' என்றான்.

ஆனால் குமரனின் தாயோ 'வேண்டாம்...அன்பையே அழைக்கலாம்.அன்பு தான் முக்கியம்' என்றாள்.

பின் மூவரும், 'அன்பு உள்ளே வரட்டும்' என்றனர்.

அன்பு உள்ளே வர, அவரைத் தொடர்ந்து வெற்றியும், பணமும் கூட உள்ளே நுழைந்தனர்.உடன் குமரனின் அம்மா'அன்பை மட்டும் தானே உள்ளே அழைத்தோம்' என்றார்.

அன்பு சொன்னார்,' நீங்கள் பணத்தையோ, வெற்றியையோ அழைத்திருந்தால்..மற்ற இருவரும் வெளியே நின்றிருப்போம்.ஆனால் அன்பான என்னை வரச் சொன்னதால்..நான் இருக்கும் இடத்தில் தான் பணமும், வெற்றியும் இருக்கும்..ஆகவே அவர்களும் உள்ளே வந்து விட்டனர்'

அன்பு உள்ளம் இருந்தால்..நம் வாழ்வில் வெற்றியும்,தேவையான வசதிகளும் தானாகவே வந்துவிடும்.

அன்பே சிவம்...அன்பே முக்கியம்.

இதையே வள்ளுவர்..

அன்பின் வழிய துயிர்நிலை அஃதிலார்க்கு

என்புதோல் போர்த்த உடம்பு


என்கிறார்..

அன்பு நெஞ்சத்தின் வழியில் இயங்குவதே உயிருள்ள உடலாகும்.இல்லையேல் ,அது வெறும் எலும்புத்தோல் போர்த்திய வெறும் உடலாகும்.

சுருங்கச் சொன்னால்..அன்பு மனம் கொண்டவர்களே மனிதர்கள் ஆவர்.

Friday, February 11, 2011

64-புலியும்..மானும்..நரியும் (நீதிக்கதை)
ஒரு காட்டில் புலியை வேட்டையாட வேடன் ஒருவன் ஒரு கூண்டை வைத்து..அதில் ஆடு ஒன்றைக் கட்டி வைத்திருந்தான்.புலி ஆட்டிறைச்சி மீது ஆசைப்பட்டு உள்ளே வந்ததும் கூண்டு மூடிக்கொள்ளும்..அப்படியான கூண்டு அது.

அதன்படியே, புலி ஒன்று ஆட்டிற்கு ஆசைப்பட்டு உள்ளே செல்ல..கூண்டு மூடிக் கொண்டது.

கூண்டிற்குள் மாட்டிக் கொண்ட புலி..தப்பிக்க வழி தெரியாமல் விழித்த போது..ஒரு மான் அந்தப் பக்கம் வந்தது.

புலி மானிடம் தன்னைக் காப்பாற்றுமாறு கூறியது.

அதற்கு அந்த மான்..'உன்னை நான் காப்பாற்றினால் வெளியே நீ வந்ததும் என்னை அடித்துக் கொன்றுவிடுவாயே!'என்றது.

உடன் அந்தப் புலி 'நான் அப்படி செய்ய மாட்டேன்' என உறுதி கூற, மான் கூண்டின் கதவை திறந்து விட்டது.கூண்டிற்குள் இருந்த ஆடு தப்பினால் போதும் என ஓடி ஒளிந்தது.வெளியே வந்த புலி, 'ஆடும் ஒடி விட்டது..எனக்கோ பசி..உன்னைத்தான் கொல்லப் போகிறேன்' என்றவாறு மானின் மீது பாயத் தயாராகியது.

உடன் மான் புலியின் உறுதிமொழியை ஞாபகப் படுத்தியது. 'என் உயிரை காப்பாற்றிக் கொள்ள அளித்த உறுதி அது' என்றது புலி.

அந்நேரம் ஒரு நரி அங்கு வந்து..நடந்த விஷயங்களை கேட்டு அறிந்தது.

மானைக் காப்பாற்ற விரும்பிய நரி, புலியைப் பார்த்து ' நான் நீதி வழங்குகிறேன்..நடந்தவற்றை அப்படியே இருவரும் செய்துக் காட்டுங்கள்' என்றது.

பின் புலியைப் பார்த்து..'நீங்கள் கூண்டிற்குள் எங்கு இருந்தீர்கள்?' என்றது.

புலியும் கூண்டினுள் சென்று..'இங்குதான்' என்று சொல்லும் போதே நரி மீண்டும் கூண்டை மூடியது.புலி இப்போது மீண்டும் கூண்டுக்குள்.

நரி புலியைப் பார்த்து சொல்லிற்று..'உங்களைக் காப்பாற்றிய மானையே கொல்லத் துணிந்ததற்கு இதுதான் தண்டனை '

பின் மானிடம், 'ஒருவரைக் காப்பாற்றுமுன் அவரின் தராதரத்தை அறிந்துக் கொள்ள வேண்டும்..தகுதியில்லாதவர்க்கு உதவக் கூடாது' என அறிவுரை சொல்லிவிட்டுச் சென்றது.

நாமும் தகுதியற்றவர்களுக்கு உதவினால் துன்பத்தில் மாட்டிக் கொள்வோம்.ஒருவரின் தரம் அறிந்து உதவ வேண்டும்.

Wednesday, February 2, 2011

63. வேப்பமரமும்...சிறுவனும் (நீதிக்கதை)

வேப்பமரம் ஒன்றின் கீழே அமர்ந்து ராமன் அழுது கொண்டிருந்தான்.அதைக் கண்ட மரம் 'தம்பி ஏன் அழறே' என்றது. அதற்கு ராமன் எனக்கு யாரையுமே பிடிக்கவில்லை

.காலையில் எழுந்ததுமே 'முதலில் பல் தேய்த்துவிட்டு வா' என அம்மா அதட்டுகிறாள். பின் அப்பா 'காலை எழுந்ததும் படிப்பு. உன் பள்ளிப் பாடங்களைப் படி' என்று கண்டிக்கிறார்.பின் குளித்து முடித்து 'பசிக்கலை' என்று சொன்னால் அம்மா திட்டி சாதம் சாப்பிடச் சொல்கிறாள்.பள்ளிக்கு வந்தாலோ 'பாடம் படிக்கலைன்னும்,பாடம் சொல்லிக்கொடுக்கும் போது வேடிக்கைப் பார்க்கக்கூடாது என்று டீச்சர் திட்டராங்க"நாள் முழுக்க
எல்லாருமே. என்னை திட்டிக்கிட்டேயிருக்காங்க. எனக்கு யாரையுமே பிடிக்கலை" என்றான் அழுது கொண்டே.

வேப்பமரம் "என் இலைகளை நீ சாப்பிட்டு இருக்காயா?" என்றது.'ஓ...இலை மட்டுமா உன் இலை,குச்சி எல்லாமே ஒரே கசப்பு.சாப்பிட்டால் வாந்தி வந்துடும் என்றான் ராமன்.

"ஆனால் பல வியாதிகளுக்கு நான் மருந்தாக இருக்கிறேன்.நான் கசந்தாலும் பலர் வாழ்க்கையில் இனிமை உண்டாகக் காரணமாக இருந்திருக்கிறேன்.

அது போல் பெற்றோர்,ஆசிரியர்கள் சொல்வது இப்போது உனக்கு கசப்பாக இருக்கிறது.ஆனால் அந்த கசப்பை ஏற்று அதன் படி நடந்தால் பின் உன்னோட வாழ்க்கை இனிமையாக அமையும் என்றது.

நாமும் நம்முடைய மூத்தவர்கள் சொல்லும் அறிவுரையை ஏற்று அதன்படி நடந்தால் அனைவராலும் விரும்பபப்டுவது அல்லாது மிகவும் சிறந்தவராகவும் ஆவோம்