Monday, May 30, 2011

75. அவசர புத்தி (நீதிக்கதை)ஒரு ஊரில் ஒர் அரசன் இருந்தான்.அவன் நல்லாட்சியால் மக்கள் மகிழ்ச்சியாய் இருந்தனர்.

ஒரு நாள்..அவனது அமைச்சர் அவனிடம் ' அரசே..உங்களுக்கு வைரம் என்றால் ஆசை என்று அறிவேன்.நம் நாட்டில் மருதன் என்னும் வியாபாரியிடம் விலை மதிபற்ற வைரம் இருக்கிறது' என்றான்.

உடன் அரசனும் மருதனுக்கு...அவனிடம் உள்ள வைரத்தை தனக்குக் கொடுக்குமாறும் அதற்குரிய விலையை கொடுத்து விடுவதாகவும் ஒரு கடிதம் எழுதி சேவகனிடம் கொடுத்து அனுப்பினான்.

மருதனிடம் உண்மையாக வைரம் இல்லை.அதை தெரியப்படுத்த...ஒரு கடிதம் எழுதத் தொடங்கினான்.

" அரசே என்னிடம் அப்படி ஏதும் வைரம் இல்லை....அப்படியே இருந்திருந்தாற் கூட ....' என்று எழுதிக் கொண்டிருந்தபோது ...வேறு வேலை ஒன்று வரவே எழுந்திருந்துச் சென்றான்.

சென்ற மருதன் திரும்ப நேரமானதால் சேவகர்கள் அவன் முற்றுப்பெறாமல் எழுதியிருந்த கடிதத்தை எடுத்துக்கொண்டு அரசனிடம் விரைந்தனர்.

அரசன் அக்கடிதத்தைப் படித்து ...முற்றுப் பெறாத அக்கடிதத்தில் என்ன எழுதியிருக்கக்கூடும் என அமைச்சரைக் கேட்டான்.

அரசே....அக்கடிதத்தில் 'என்னிடம் அப்படி ஏதும் வைரம் இல்லை...அப்படியே இருந்திருந்தாற் கூட...என எழுதிய மருதன்....'இருந்திருந்தாற் கூட உங்களுக்குத் தர விருப்பமில்லை' என எழுதியிருப்பான் என்றான்.

உடனே அரசன் மருதனை அழைத்து கோபமாகக் கேட்டான்.

உடன் மருதன் ' அரசே ...இருந்திருந்தாற் கூட....உங்களிடம் எந்த விலையும் எதிர்பாராது இலவசமாக தந்துவிடுவேன் 'என்றே எழுத நினைத்தேன் என்றான்.

அமைச்சரின் அவசர புத்தியால் மருதனை கோபப்பட்டோமே என அரசன் எண்ணி வருந்தினான்.

நாமும் எந்த ஒரு விஷயத்திலும் அவசரப்படாமல் நன்கு ஆலோசித்தபின்னரே சரியான முடிவு எடுக்கவேண்டும்.

Saturday, May 21, 2011

74. செய்வன திருந்தச்செய் (நீதிக்கதை)ஒரு குளத்தில் இரண்டு தவளைகள் இருந்தன.வெயில் காலம் வந்தபோது அந்த குளத்தில் நீர் வற்றத் தொடங்கியது.

ஆகவே அத்தவளைகள் குளத்திலிருந்து வெளியேறி வேறு இடம் தேடிச்சென்றன.

வழியில் தண்ணீர் நிறைந்திருந்த கிணற்றைப் பார்த்தன.உடன் ஒரு தவளை " நாம் இக்கிணற்றில் இறங்கி...இதிலேயே இருப்போம்.தண்ணீர் நிறைய இருக்கிறது" என்றது.

உடன் இரண்டாவது தவளை ...'வெயில் அதிகமாக அதிகமாக ...இக்கிணற்று நீரும் வற்றிவிட்டால் இந்த ஆழமான கிணற்றிலிருந்து நாம் எப்ப்டி வெளியே வருவது' என்று கேட்டது.

இரண்டாவது தவளை....புத்திசாலித்தனமாக யோசித்து ...ஒரு காரியத்தில் ஈடுபடும்போது ....அதற்குப்பின்னால் ஏற்படும் விளைவுகளைப்பற்றியும் யோசித்தது.

நாமும் எந்தக் காரியத்தை செய்தாலும் அதன் பின் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை யோசித்து....செய்யும் காரியத்தை திருந்தச் செய்யவேண்டும்.

Saturday, May 14, 2011

73. பகிர்ந்து உண்ணவேண்டும். (நீதிக்கதை)
ஒரு காட்டில் சிங்கம் ஒன்றும் புலி ஒன்றும் நண்பர்களாயிருந்தன..ஒரு நாள் இரண்டும் இரை ஏதும் கிடைக்காமல்...காட்டில் அலையும் சமயம் ஒரு ஆட்டுக்குட்டியைக் கண்டன.

இரண்டும் ஒரே சமயத்தில் அந்த ஆட்டின் மீது பாய்ந்து கொன்றன.

பின்னர்...அந்த ஆடு யாருக்கு சொந்தம் என இரண்டும் விவாதம் புரிந்து....சண்டையிடத் தொடங்கின.

பசியை மறந்து பலத்த சண்டை போட்டுக்கொண்டிருக்கும் சமயம்...நரி ஒன்று அந்த வழியே வந்தது....அது இறந்து கிடந்த ஆட்டை இழுத்துக்கொண்டுபோய் சாப்பிடத் தொடங்கியது.

சண்டையிட்டதால் மிகவும் களைப்புடனும்...பசியுடனும் இருந்த சிங்கமும் புலியும்...ஆட்டை உண்டு கொண்டிருந்த நரியை பார்த்தன.

அப்போதுதான் .....அவை நமக்குள் சண்டையிடாமல் கிடைத்ததை சமபாகமாக பிரித்து உண்டுயிருக்கலாமே என எண்ணின.

ஒற்றுமையில்லாமல் சண்டையிட்டதால்....எதுவுமே கிடைக்காமல் போனதே என வருந்தின.நாம் ஒற்றுமையுடன் இருந்திருந்தால் நம் உழைப்பின் வெற்றியை நாமே அனுபவித்திருக்கலாமே என்றும் எண்ணின.

நாமும் நமக்கு கிடைப்பதை பகிர்ந்து உண்ணவேண்டும்.

Thursday, May 5, 2011

72. 'பேராசை பெரு நஷ்டம் ' (நீதிக்கதை)
கந்தன் என்ற ஒரு ஏழை தன் மனைவியுடன் குடிசையில் வாழ்ந்து வந்தான்.வயதாகி விட்டதால் வேலைக்கும் செல்ல முடியாததால்...அவர்கள் உண்ண உணவின்றி தவித்தனர்.

இந்நிலையில் ஒரு நாள் அவன் ஆண்டவனை நோக்கி ...'இறைவா எங்களை ஏன் இப்படி படைத்தாய்...இது இப்படியே நீடித்தால்....வறுமை தாங்காது...நாங்கள் இறப்பதை தவிர வேறு வழியில்லை' என வேண்டினான்.

உடன் இறைவன் நேரில் தோன்றி....அவனுக்கு வாத்து ஒன்றை பரிசளித்தார்.உடன் அந்த வாத்து ஒரு பொன் முட்டை இடும் என்றும்...அதை அன்றன்று அவன் விற்று தன் வாழ்நாளைக் கழிக்கலாம் என்றும் கூறி மறைந்தார்.

வாத்து தினம் முட்டையிட ...அவர்கள் வாழ்வு தினமும் இனிதாகக் கழிந்தது.

ஒரு நாள் கந்தனின் மனைவி அவனிடம் 'தினம் தினம் இது பொன் முட்டையிட்டு அதை விற்று நாம் பிழைக்கிறோம்.அதற்கு பதில் இதை அறுத்து அதன் வயிற்றில் உள்ள மொத்த பொன் முட்டைகளையும் எடுத்து விற்று நாம் பெரிய பணக்காரராக ஆகிவிடலாமே' என்றாள்.

கந்தனும் அவளது பேச்சைக் கேட்டு..அந்த வாத்தை பிடித்து அதன் வயிற்றைக் கிழித்தான்.ஆனால் அதன் வயிற்றில் ஏதும் இல்லை....மற்ற வாத்துக்களைப் போலவே இருந்தது.

முட்டாள் கந்தனும்,மனைவியும் தினமும் அடையும் லாபத்தை விட்டு ஒரே நாளில் பணக்காரராகும் பேராசையுடன் செயல்பட்டதால் இருந்ததையும் இழந்தனர்.

' பேராசை பெருநஷ்டம் '.