Thursday, May 13, 2010

28.அச்சம் தவிர்- (நீதிக்கதைகள்)


ஒரு காட்டில் பல முயல்கள் இருந்தன...இவை..தினம்..தினம்.,சிங்கம்..புலி ஆகியவை தாக்குமோ என பயந்து பயந்து வாழ்ந்தன.

ஒரு நாள் இவை எல்லாம் ஒன்று சேர்ந்து ..'நாம் கோழைகளாக தினம்..தினம் ..பயந்து சாவதை விட ஒட்டு மொத்தமாக குளத்தில் விழுந்து சாகலாம்'என முடிவெடுத்து..ஒரு குளத்தை நோக்கிச் சென்றன..

அந்த குளத்தில்.. பல தவளைகள் வாழ்ந்து வந்தன..குளத்தின் கரையில் உட்கார்ந்து கொண்டிருந்த தவளைகள்...எல்லா முயல்களும் அவற்றை நோக்கி வருவதைப் பார்த்து ..குளத்தில் குதித்து மறைந்தன.

இதைப் பார்த்த முயல்களின் தலைவன் மற்ற முயல்களைப்பர்த்து ..'நாம் கோழைகள் தான்..ஆனால் நம்மை விட கோழையானவர்களும் உலகில் உள்ளனர்.அவர்களே பயமில்லாமல் வாழும்போது நாம் ஏன் பயப்படவேண்டும்' என்று கூற .. அனைத்தும் திரும்பின.

நாம் பிறரைக் கண்டு பயப்படாமல் இருக்கவேண்டும்.நம்மைக் கண்டு பயப்படுபவர்களும் உலகில் இருப்பார்கள்.

பயம்..மனிதனை சிறிது சிறிதாக கொன்றுவிடும்.ஆகவே எதற்கும் எப்போதும் பயப்படக்கூடாது

Monday, May 10, 2010

27-'ஏமாறாதே....ஏமாற்றாதே'(நீதிக்கதைகள்)


ஒரு காட்டில் நரி ஒன்று இருந்தது.அதற்கு எப்போதும் யாரையாவது ஏமாற்றி...அவர்கள் ஏமாறுவதைக் கண்டு ..மனம் மகிழ்வது பொழுதுபோக்காக இருந்தது.

ஒரு நாள் ..கொக்கு ஒன்றை...அந்த நரி பார்த்தது.. அதை தன் வீட்டிற்கு விருந்துக்கு அழைத்தது.

கொக்கும் ...நரியை நண்பன் என நினைத்து அதனுடைய வீட்டிற்குச் சென்றது.

கொக்கைக் கண்ட நரி..ஒரு தட்டில் கஞ்சியை எடுத்து வந்து கொக்கு உண்ணக் கொடுத்தது.கொக்கால் ..தன் அலகால்..தட்டிலிருந்த கஞ்சியை சாப்பிட முடியவில்லை...ஒரு வாயகன்ற ஜாடி போன்ற பாத்திரங்களில் இருந்தால் மட்டுமே ...கொக்கு தன் அலகை அதில் விட்டு கஞ்சியை உறிஞ்சி குடிக்க முடியும்.

கொக்கு படும் துன்பத்தைக் கண்டு நரி சிரித்து மகிழ்ந்தது...அவமானம் அடைந்த கொக்கு..நரிக்கு பாடம் புகட்டத் தீர்மானித்தது.

நரியை ஒரு நாள் கொக்கு விருந்துக்கு அழைத்தது..வந்த நரியை நன்கு உபசரித்த கொக்கு..ஒரு வாய் குறுகிய ஜாடியில்..கஞ்சியைக் கொண்டு வந்து வைத்தது

நரியால்..நாக்கால் நக்கி கஞ்சியை குடிக்க முடியவில்லை..

அதைக் கண்ட கொக்கு ..'நரியாரே..இப்பொழுது எப்படி உங்களால் கஞ்சியை குடிக்க முடியவில்லையோ..அதே போல தட்டில் இருந்தால் ...என்னால் குடிக்க முடியாது என தெரிந்தும் எனக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி ..மனம் மகிழ்ந்தீர்கள்.ஆனால் நான் அப்படியில்லை..உங்களுக்கு பாடம் புகட்டவே ஜாடியில் கஞ்சியை வைத்தேன்...என்று கூறியபடியயே ..கஞ்சியை தட்டில் ஊற்றிக் கொடுத்தது.
தன்னை ஏமாற்றிய நரிக்கு கொக்கு நல்லதே செய்தது.

நரி தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்து விட்டு ..கஞ்சியைக் குடித்தது.

அது முதல் திருந்திய நரி. பிறகு யாரையும் ஏமாற்றுவதில்லை.

பிறர் துன்பம் கண்டு மகிழ்ச்சியடையாது..அவர்களுக்கு உதவியும் செய்ய ஆரம்பித்தது.


.

Thursday, May 6, 2010

26.ஒன்று பட்டால் வாழ்வு.


ஒரு நாள் நம் உடல் உறுப்புகளிடையே சண்டை வந்தது...எல்லா உறுப்புகளும் 'வயிறை'விரோதியாக்கின.

அப்போது கைகள் சொன்னது 'நாங்கள் இரவும் பகலும் கடுமையாக உழைக்கிறோம்...ஆனால் உணவை சுவையாக வயிறு தான் விழுங்கிறது'என்றன..

உடனே கால்கள்..'நாங்கள் மட்டும் என்ன...இந்த உடம்பை சுமந்து தினமும் எவ்வளவு தூரம் நடக்கிறோம்...ஆனால் வயிறோ ஒரு வேலையும் செய்யாது உண்ணுகிறது'என்றன..

தலை குறுக்கிட்டது...'நான்தான் பார்க்கிறேன்,கேட்கிறேன்,முகர்கிறேன்,சிந்திக்கிறேன்..ஆனால் எந்த வேலையும் செய்யாத வயிறு உணவை உண்டு மகிழ்கிறது 'என்றது.

வாயோ...நான் உணவை மென்று வயிறு அனுபவிக்கவே அனுப்புகிறேன் என்றது.

இப்படி எல்லா உறுப்புகளும் வயிறை குறை சொல்லின.பின் அனைத்து உறுப்புகளும் ..வயிற்றுக்கு இனி எந்த உதவியும் செய்யக்கூடாது என தீர்மானித்தன.

அதனால்...வயிறுக்கு உணவு கிடைக்கவில்லை..உடல் மெலிந்தது..கை..கால்..தலை என அனைத்து உறுப்புகளும் வலுவிழந்தன.

அப்போதுதான் அவற்றிற்கு ..தனிப்பட்ட முறையில் தங்களால் எதையும் செய்யமுடியாது.தங்களுக்கு ஆற்றல் அனுப்புவது வயிறே...என்று புரிந்தது.

வயிற்றிடம் அவை மன்னிப்பு கேட்க ..வயிறும் வழக்கம்போல செயல்படத் தொடங்கியது.

நம் உடலில் எல்லா உறுப்புகளும் ஒன்று பட்டு செயல்பட்டாலே ..உடல் சுறுசுறுப்பாய் இயங்கும்.

ஆகவே எந்த காரியத்தை செய்வதாயினும் நமக்குள் ஒற்றுமை அவசியம்.

Monday, May 3, 2010

25 யானையும் குறும்பும்.....


ஒரு ஊரில் யானை ஒன்று இருந்தது.அது தினந்தோறும்...அந்த ஊர் கடைத்தெரு வழியாக ஆற்றில் குளிக்கச் செல்லும்.

குளித்து முடித்து திரும்புகையில் கடைத்தெருவில் உள்ள கடைக்காரர்கள் யானைக்கு தின்பதற்கு ஏதேனும் தருவார்கள்.தன் துதிக்கையில் வாங்கி அது உண்ணும்.

அந்தக் கடைத்தெருவில் இருந்த ஒரு தையல்கடையின் தையல்காரர் தினமும் யானைக்கு வாழைப்பழம் தருவார்.

ஒரு நாள் அதனிடம் குறும்பு செய்ய எண்ணிய அவர் அது பழத்திற்கு வந்த போது ..அதன் துதிக்கையில் பழம் தராமல் ஊசியால் குத்தினார்.

யானை...கோபத்துடன் சென்று விட்டது.

அடுத்த நாள் குளிக்க சென்ற யானை..குளித்து முடித்ததும் தும்பிக்கையில் சேற்று நீரை நிரப்பிக் கொண்டு வந்து ...தையல் கடையில் நின்று கொண்டிருந்த தையல்காரர் மீது பீச்சியடித்தது.

தையல்காரர்..தைப்பதற்கு வாங்கி வைத்திருந்த புதுத் துணிகளும் சேறாயின..

தன் குறும்புச் செயல் இவ்வளவு பெரிய தண்டனையை அளித்ததுக் கண்டு தையல்காரர் மனம் வருந்தினார்.

குறும்பு செய்யும் பழக்கம் பெரியவர்களுக்கு மட்டுமல்ல குழந்தைகளுக்கும் உண்டு...

ஆனால் அக்குறும்பு பிறருக்கு மன வருத்தத்தையோ,காயத்தையோ ஏற்படுத்தக்கூடாது.

Saturday, May 1, 2010

24.தவளையும் ..கொக்குகளும்


மீன்கள் நிறைந்த குளமொன்றில் அவற்றுடன் ஒரு தவளையும் வாழ்ந்து வந்தது...

மீன்களை கொத்தி உணவாக்கிக் கொள்ள பல கொக்குகள் அந்தக் குளத்தைத் தேடி வருவதுண்டு...அவற்றில் இரு கொக்குகள் தவளைக்கு நண்பனாயின.அவை வந்தவுடன் தவளையை நலம் விசாரித்தப் பின்னரே தங்களுக்கு இரையான மீனைத் தேட ஆரம்பிக்கும்.

கோடைகாலம் வந்தது.குளம் வற்றியது...மீதமிருந்த மீன்களும் மடிந்தன...தவளை மட்டும் செய்வதறியாது திகைத்தது.

அப்போது அதன் நண்பர்களான கொக்குகள் .. தவளையைத் வேறு தண்ணீர் உள்ள இடத்தில் விடுவதாகக் கூறின.

ஆனால் தவளை என்னால் உங்களுடன் சேர்ந்து பறக்க முடியாதே என்று கூறியது.

அப்போது ஒரு கொக்கு ..ஒரு பெரிய குச்சியைக் கொண்டு வந்து ..அதன் நடுவில் தவளையைக் கவ்விக் கொள்ளச் சொன்னது.

குச்சியின் இரு முனையையும் இரு கொக்குகளும் பிடித்துக்கொண்டு பறப்பதாகவும்...ஆனால் எக்காரணம் கொண்டும் தவளை தன் வாயைத் திறக்கக் கூடாது என்றன...

தவளையும் ஒப்புக் கொண்டது.

அப்படி அவை பறக்கும் போது தெருவில் நின்றிருந்த சில சிறுவர்கள் ..'தவளை பறக்குது'..'தவளை பறக்குது' என கத்தினர்.

அச்சத்தத்தைக் கேட்ட தவளை கொக்குகள் சொன்னதை மறந்து 'அங்கு என்ன சத்தம்' என்று கேட்க வாயைத் திறந்தது.கீழே விழுந்து படு காயமடைந்தது.

தன்னைவிட அறிவில் சிறந்தவர்கள் கூறும் அறிவுரையைக் கேட்டு நடக்க வேண்டும்...இல்லாவிட்டால் அந்த தவளையைப் போல துன்பமே வந்து சேரும்...