Thursday, April 29, 2010

23.மரமும் ..கிளியும்


பல பறவைகள் ஒரு மரத்தில் கூடு கட்டி..அதில் பழுக்கும் பழங்களை உண்டு மகிழ்ந்து வந்தன.

ஒரு சமயம்..மழையில்லாமல்,மரம் வாட ஆரம்பித்தது..அதன் இலைகள் உதிர்ந்தன..பூக்கவில்லை..பழுக்கவில்லை அம்மரங்கள்.

அம்மரத்தை நம்பி..அது காய்க்கும் பழங்களை நம்பி வாழ்ந்த பறவைகள் வேறு இடம் தேடி ஓட ஆரம்பித்தன.

ஒரு கிளி மட்டும் ..அந்த மரத்தை விட்டுப் போகாமல்...மரத்தினடமே இருந்தது...பட்டினியால் வாடியது..தினமும் கடவுளை வேண்டியது.

ஒரு நாள் கடவுள் அந்த கிளி முன் தோன்றி.. 'தினமும் என்னை வேண்டுகிறாயே...உனக்கு என்ன வேண்டும் என்றார்.

'இறைவா..இந்த மரம் மீண்டும் பூத்து ..காய்க்க வேண்டும் என்றது கிளி..

'இந்த மரத்தைப் பற்றி யோசிக்காது...மற்றப் பறவைகள் போல் நீயும் ஓடியிருக்கலாமே என்றார் கடவுள்.

அதற்குக் கிளி..'இந்த மரம் பழுத்து இது நாள் வரை எங்களை காத்தது...இன்று இது தண்ணீர் இன்றி துன்பப்படுகிறது...இச்சமயத்தில் நம்மைக் காத்ததை மறந்து..இதை விட்டு ஓடுதல் சுயநலமில்லையா..பாவமில்லையா' என்றது கிளி.

கிளியின் சுயநலமற்றத் தன்மையைப் போற்றிய இறைவன் ..அம்மரம் மீண்டும் தழைக்க ..மழையை பொழிய வைத்து அருளினார்.

ஒருவர் செய்த நன்றியை மறக்காது..அவர்கள் துன்புறும்போது அவர்களுடன் சேர்ந்தே ஆறுதலாய் இருக்கவேண்டும்.

Sunday, April 25, 2010

22.நடப்பது யாவும் நல்லதற்கே.


ஒரு கப்பல் கடலில் சென்று கொண்டிருந்தபோது இயந்திரக் கோளாறால்...கடலில் மூழ்கியது.அதிலிருந்த அனைவரும் மடிந்தனர்.கப்பல் கேப்டன் மட்டும் உயிர்பிழைத்து..நீந்தியபடியே ஆள் இல்லாதீவு ஒன்றிற்கு வந்தான்

தனியாக என்ன செய்வது எனத்தெரியாத அவன்..அந்தத்தீவில் கிடைத்த ஓலை..குச்சி எல்லாவற்றையும் சேகரித்து இருக்க ஒரு குடிசையை அமைத்துக்கொண்டான்.

பின் வயிற்றைக் கிள்ளியதால் ..உண்பதற்கு ஏதேனும் கிடைக்குமா..என்று தீவைச் சுிற்றிவரக் கிளம்பினான்.திரும்பி வந்து பார்த்தபோது...அவன் அமைத்திருந்த குடிசை தீப்பற்றி எறிஞ்சிருந்தது...

அதைப் பார்த்த அவன் கண்களில் நீருடன் 'கடவுளே நான் என்ன தீங்கு செய்தேன்..என்னை யாருமில்லா தீவில் சேர்த்தாய்.உண்ண உணவில்லை.இருக்க கட்டிய குடிசையும் தீப்பற்றி எறிய வைத்துவிட்டாயே' எனக் கதறினான்.

அப்போது ..அந்தத் தீவை நோக்கி ஒரு கப்பல் வந்தது..அதில் இருந்தவர்கள் இவனைக் காப்பாற்றி தங்கள் கப்பலில் ஏற்றினர்.

'நான் இங்கு மாட்டிக்கொண்டது உங்களுக்கு எப்படித் தெரிந்தது'என அவர்களிடம் இவன் கேட்டான்.

அவர்கள் சொன்னார்கள்..'யாருமில்லா தீவில் நெருப்பு பற்றி எறிந்ததைக் கண்டோம்...உடன் யாருக்கோ உதவி தேவை என்பதை உணர்ந்து வந்தோம்'. .என்றனர்.

கடவுள் எது செய்தாலும் அது நல்லதற்கே என்பதை உணர்ந்தான் அவன்.

Tuesday, April 20, 2010

21- .'கெட்ட சகவாசம்'


அருண் நன்கு படிக்கும் மாணவன்.ஆனால் கடந்த சில மாதங்களாக தேர்வில் அவன் எதிபார்த்த மதிப்பெண்களைப் பெறவில்லை.இது அவனது தந்தையை வேதனை அடையச் செய்தது.

அவனின் இந்த நிலைக்கு என்னக் காரணம் என்று அவன் தந்தை...சில ஆசிரியர்களை வினவ ..ஒரு ஆசிரியர்..'சமீபகாலமாக அவன் நண்பர்கள் சரியில்லை...அவர்கள் படிக்காமல் ஊர் சுற்றுபவர்கள் என்று சொன்னார்.

அது கேட்டு அவன் தந்தை அருணைக் கூப்பிட்டு நயமாக..கெட்ட சகவாசத்தை விடச் சொன்னார்...அருணோ அதற்கு இசையவில்லை....தன் நண்பர்களால் தன்னை மாற்ற முடியாது என்றான்.

அப்போது ..அவன் தந்தை ஒரு கூடையில் சில ஆப்பிள்களைக் கொண்டு வந்தார்...அருணிடம் ..ஒரு அழுகிய ஆப்பிளைக் கொடுத்து கூடையில் இருந்த மற்ற ஆப்பிள்களுடன் வைக்கச் சொன்னார்.

இரவு கழிந்தது..

மறுநாள்,,அந்த ஆப்பிள் கூடையை அருணைக் கொண்டு வரச்சொன்னார்...கூடையில் மேலும் சில ஆப்பிள்கள் அழுகியிருந்தன...

அருணின் அப்பா சொன்னார்...'அருண் பார்த்தாயா நேற்று கூடையில் நல்ல ஆப்பிள்கள் இருந்தன.அத்துடன் ஒரு அழுகிய ஆப்பிளை வைத்ததுமே மற்ற ஆப்பிள்களும் கெட்டுப்போகத் தொடங்கி விட்டன.அதுபோல நல்ல நண்பர்களுடன் ஒரு கெட்ட நண்பன் சேர்ந்தாலும்,நல்ல நண்பர்கள் அனைவரையும் கெடுத்துவிடுவான்.ஆனால் உனக்கோ கெட்ட நண்பர்கள் அதிகம்' என்றார்.

அது கேட்டு...அருண் ...தன் தவறை உணர்ந்து தன் கெட்ட நண்பர்கள் சகவாசத்தை விட்டான்.

Friday, April 16, 2010

20- 'தன் கையே தனக்கு உதவி'.


வினோத்தும் விக்னேஷும் நண்பர்கள்..இருவரும் ஒரே பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தனர்.

வினோத் வீட்டில் வேலைக்காரர்கள் இருந்தனர்.அவனுக்கு பள்ளிக்கு செல்ல சீருடை அணிவிப்பது..அவனது ஷூவுக்கு பாலிஷ் போட்டு அணிவிப்பது...அவனுக்கு தலைவாரிவிடுவது எல்லாம் வேலையாட்களின் வேலை...

ஒரு நாள் அவன் பள்ளி செல்லும்வழியில் இருந்த விக்னேஷ் வீட்டிற்கு செல்ல நேரிட்டது.

அப்போது விக்னேஷ்...தன் ஷூவிற்கு பாலிஷ் போடுவதைப் பார்த்தான்...'உன் ஷூவிற்கு நீயே வா பாலிஷ் போடுவாய்' என வினோத் ஆச்சிரியத்துடன் கேட்டான்.

'ஆமாம்..நீ வேறு யார் ஷூவிற்கு பாலிஷ் போடுவாய் 'என்று கிண்டலாக பதிலுக்குக் கேட்டான்..விக்னேஷ்.

'என் ஷூவிற்கு வேலையாட்கள் தான் பாலிஷ் போடுவார்கள் 'என்றான் வினோத்.

'அப்படியா..நமக்காக நம் வேலையை பிறரைச் செய்யச் சொல்வது தவறல்லவா..'.கடவுள் நம் வேலைகளை நாமே செய்ய வேண்டும் என்பதற்காகத்தானே நமக்கு இரு கைகளை கொடுத்திருக்கிறார் 'என்றான் விக்னேஷ்.

அது கேட்டு தன் தவறை உணர்ந்த வினோத்..இனி தன் வேலைகளைத் தானே செய்யவேண்டும் என்று தீர்மானித்தான்.

தன் வேலையைத் தானே பார்ப்பது ..தவறில்லை..அது நம்மை மேலும் சந்தோஷமாக வைக்கும்.

(ஆப்ரஹாம் லிங்கன் வாழ்வில் நடந்த சம்பவத்தை பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்டது)

Wednesday, April 14, 2010

19.ஆட்டின் புத்திசாலித்தனம்


ஒரு காட்டில் ஓநாய் ஒன்று இருந்தது..அது இரவு நேரத்தில் ஊருக்குள் புகுந்து ..ஊரில் இருந்த ஆடு..மாடுகளை வீழ்த்தி உண்டு வந்தது..

அதே ஊரில் மாடசாமி என்பவன் ஒரு ஆட்டை வளர்த்து வந்தான்.அந்த ஆடு புத்திசாலியாக வளர்ந்தது...

ஒரு நாள் இரவு ஊருக்குள் வந்த ஓநாய் மாடசாமியின் ஆட்டைப் பார்த்துவிட்டது,அதன் மீது பாய தயாரானது...ஆடோ..உயரமான இடத்திற்கு ஓடியது.அங்கிருந்தபடியே புத்திசாலியான அந்த ஆடு..
கீழே இருந்த ஓநாயிடம் ..'உமக்கு உணவாக ஆக நான் தயார்...ஆனால் அதற்கு முன் எனக்கு ஒரு சிறு ஆசை...இவ்வளவு அழகாக உள்ள நீங்கள் பாட...நான் ஆட வேண்டும்' என்று கூறியது.

தன்னை அழகன் என்ற புகழ்ச்சியில் மகிழ்ந்த ஓநாய் பாட சம்மதித்து தன் கொடூரக்குரலால் பாட ஆரம்பித்தது.

அந்த சத்தம் கேட்டு ..தூங்கிக்கொண்டிருந்த ஊர்மக்கள் விழித்தெழிந்து வந்து ஓநாயை அடித்துக் கொன்றனர்.

புகழ்ச்சியில் மயங்கிய ஓநாய் உயிரைவிட்டது.ஊரில் இருந்த ஆடு..மாடுகள் பயமின்றி வாழ்ந்தன...மாடசாமியின் ஆட்டின் புத்திக்கூர்மையை அனைவரும் பாராட்டினர்.

Sunday, April 11, 2010

18. பயமே கூடாது


ஒரு சிங்கமும் ...யானையும் நண்பர்களாக இருந்தது.

ஒரு நாள் சிங்கம் யானையிடம் தனக்கு சேவல் கூவும்போது பயமாயிருக்கும் என்றது...

அதைக்கேட்ட யானை...சிங்கத்தைப் பரிகசித்தது.. 'பல மிருகங்கள்,உன்னை காட்டுக்கு ராஜா எனக் கூறி உன்னிடம் பயப்படும் போது..கேவலம்..நீ..ஒரு சேவலுக்குப் பயப்படுகிறாய் என்றது..'
'
அப்போது..ஒரு 'ஈ ' ஒன்று பறந்து வந்து..யானையின் காதருகே அமர்ந்தது..உடனே பயந்த யானை..தன் காதுகளை பலமாக ஆட்டியது.

'ஈ' க்கு பயந்த யானையைப் பார்த்து 'என்னை பரிகசித்த நீ கேவலம் 'ஈ' க்கு பயப்படுகிறாயே 'என்றது சிங்கம்.

'அது என் காதிற்குள் போனால் ..நான் அவ்வளவு தான்' என்றது யானை.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றில் பயம்..ஆனால் பயம் என்பதே அர்த்தமில்லாதது...நாம் வழ்வில் எந்த விஷயத்திற்கும் பயமில்லாமல் தைரியமாக செயல்படவேண்டும்.

Friday, April 9, 2010

17.முயற்சி வேண்டும்


ராமன் பள்ளிப்பாடங்களை சரிவர படிக்கமாட்டான்.அதனால் அவனால்...அவன் நண்பன் லட்சுமணனைப்போல அதிக மதிப்பெண்கள் வாங்க முடிவதில்லை.

நாளை முதல் தேர்வு ஆரம்பம்.கடவுளிடம் ராமன் ..இந்த முறை லட்சுமணனைவிட அதிக மதிப்பெண்கள் கிடைக்குமாறு செய் என வேண்டினான்.ஆனால் தேர்வு முடிவு வந்ததும்...லட்சுமணனுக்கே அதிக மதிப்பெண்கள்.

கோவிலுக்கு வந்த ராமன் ..'கடவுளே.. நான் உன்னை அவ்வளவு வேண்டியும் என்னை ஏமாற்றிவிட்டாயே!' என்றான்.

ஆண்டவன் உடனே அவன் முன் தோன்றி..'ராமா..உனக்கே மதிப்பெண்கள் அதிகம் கிடைக்க வழி செய்ய நான் முனைந்தேன்..ஆனால் அதற்கு நீ படித்து..பதில்களை எழுதியிருந்தால் மட்டுமே என்னால் முடியும்.ஆனால் நீ எழுதியிருந்தவை எல்லாம் தவறு என்று தெரிந்து என்னால் எப்படி உனக்கு உதவிட முடியும்' என்றார்.

ராமனுக்கு அப்போதுதான் தெரிந்தது...ஆண்டவனை மட்டுமே வேண்டினால் போதாது...நாமும் உழைத்து படித்திருக்க வேண்டும் என்று.

தெய்வ நம்பிக்கை மட்டுமே இருந்தால் போதாது ஒரு செயலில் வெற்றியடைய நம் முயற்சியும் வேண்டும்.

Tuesday, April 6, 2010

15. கையே சுகாதாரமானது


(இன்று உலக சுகாதார தினம்.அதை ஒட்டி ஒரு சிறு சம்பவம்.)

ராமனும்,லட்சுமணனும் நண்பர்கள்.ஒரு முறை அவர்கள் இருவரும் ஒரு நண்பனின் வீட்டிற்கு சாப்பிடச் சென்றார்கள்.

ராமன்...உணவை,எடுத்து சாப்பிட ஒரு ஸ்பூனும்..ஒரு ஃபோர்க்கும் கேட்டான்.லட்சுமணனோ..தன் கையால் உணவை எடுத்து சாப்பிட ஆரம்பித்தான்...

உடனே ராமன் அவனைப் பார்த்து 'ஸ்பூனை உபயோகித்து சாப்பிடு...அதுதான் சுகாதாரமானது...சுத்தமானது..'என்றான்.

ஆனால் லட்சுமணன் சிரித்துக்கொண்டே...'இல்லை..ராமா..கைதான் சிறந்தது..இது தான் சுகாதாரமானது...ஏனெனில் என் கையை என்னைவிட வேறு எவரும் பயன்படுத்தி இருக்கமுடியாது'என்றான்.

ராமன் வாய் மூடி மௌனியானான்.

(உண்மையில் இது வின்ஸ்டன் சர்ச்சிலுக்கும்...நம் நாட்டின் ஜனாதிபதியாயிருந்த ராதாகிருஷ்ணனுக்கும் இடையில் நடந்த சம்பவம்)

Friday, April 2, 2010

14.ஆண்டவன் படைப்பில்


ஒரு காட்டில் இருந்த மான் தண்ணீர் குடிக்க தண்ணீர் அதிகம் இருந்த குளத்தருகே வந்தது.

தண்ணீரில் தன் உருவத்தைப் பார்த்தது.தனக்கு ஆண்டவன் அளித்துள்ள அழகான உருவத்தையும்...புள்ளிகளையும் கொம்புகளையும் கண்டு மகிழ்ந்தது.

அப்போது சிறுத்து நீண்ட தன் கால்களைப் பார்த்தது.என்னை இவ்வளவு அழகாக படைத்த இறைவன் ...கால்களை இப்படி படைத்துவிட்டாரே என வருந்தியது.

அச்சமயம் ஒரு சிங்கம் ...அந்த மானை அடித்து சாப்பிட எண்ணி மானை நோக்கிப் பாய ...அலறி அடித்து மான் நான்கு கால் பாய்ச்சலில் பாய்ந்து ஓடி தப்பியது.

அப்போது அது.. ஆண்டவன் தனக்கு ஏன் இப்படிப்பட்ட கால்களைக் கொடுத்தான் என்பதை உணர்ந்து கடவுளுக்கு நன்றியைச் சொன்னது.

ஆண்டவன் படைப்பில் காரணமில்லாமல் எதையும் அவன் செய்வதில்லை