Tuesday, January 25, 2011

62. உண்மை எது...பொய் எது...(நீதிக்கதை)ஒரு சமயம் முகலாய பேரரசராய்த் திகழ்ந்த அக்பருக்கு..உண்மை எது பொய் எது என எப்படிக் கண்டு பிடிப்பது,..அதற்கான தூரம் எவ்வளவு என்ற சந்தேகம் வந்தது.

தன் அரசரவை மந்திரிகளை எல்லாம் கூப்பிட்டு..தனது சந்தேகத்தைச் சொல்லி அதை தீர்த்துவைக்குமாறு கோரினார்.

எந்த அமைச்சருக்கும் அதற்கான விடை தெரியவில்லை.அக்பர் அரசவையில் அமைச்சராக இருந்த பீர்பால் என்பவர் மிகவும் புத்திசாலி...

அவர் அரசரைப் பார்த்து 'மன்னா..உண்மைக்கும் பொய்க்குமான இடைவெளி நான்கு விரற்கடை தூரம்' என்றார்...

அக்பர்...'அது எப்படி..தங்களால் நிரூபிக்கமுடியுமா' எனக் கேட்டார்.

உடன் பீர்பால்...தன்  இடது கையை எடுத்து இடது கண்ணிலிருந்து  இடது காதுக்கு தன் நான்கு விரல்களை வைத்துக் காட்டினார்.பின் 'அரசே...இது தான் உண்மைக்கும் பொய்க்கும் ஆன தூரம்.எந்த ஒரு விஷயத்தையும் காதால் கேட்பது பொய்யாக முடியலாம்.ஆனால் கண்ணால் பார்ப்பது பொய்யாக ஆக வாய்ப்பில்லை.கண்ணால் கண்டதை சற்று தீர விசாரித்தால் அதுவே மெய்யாக முடியும்' என்றார்.
நாமும் எந்த ஒரு விஷயத்தையும் கேட்பது மூலம் அதை நம்பிவிடாது அதை பார்த்து தீர விசாரித்து உண்மையை உணரவேண்டும்

Wednesday, January 19, 2011

61.பேராசை பெரு நஷ்டம் (நீதிக்கதை)


ஒரு ஊரில் அரிசி வியாபாரி ஒருவன் இருந்தான்.அவன் அவனது தானியக்கிடங்கில் பெரிய பிரும்மாண்டமான உலோகத்தால் ஆன டிரம்களில் அரிசியை சேகரித்து வைத்திருந்தான்.அப்படிப்பட்ட டிரம்களில் ஒன்றில் கீழே சிறு ஒட்டை இருந்தது.அதில் இருந்து வந்த அரிசி வெளியே சிதறிக் கிடந்தது.

அந்த வீட்டில் இருந்த இரண்டு எலிகள் இதைப் பார்த்து சிதறிக் கிடந்த அரிசியை உண்டு பிழைத்து வந்தன.

இந்நிலையில் இரு எலிகளில் பேராசை பிடித்த ஒரு எலி மற்றொரு எலியுடன் ..நாம் இந்த ஒட்டை வழியே உள்ளே சென்று விட்டால்,நிறைய அரிசி இருக்கும்.

வேண்டும் வரை உண்ணலாம் வா என்றது.

ஆனால் மற்ற எலியோ "பேராசை வேண்டாம்.இப்போது நமக்கு கிடைக்கும் அரிசியே போதும் " என்று கூறிவிட்டது.

அந்த எலியின் பேச்சை கேட்காத முதல் எலி,அந்த ஒட்டையின் மூலம் உள்ளே சென்று...அரிசியை சாப்பிட ஆரம்பித்தது.இதனால் அது உள்ளே நுழையும் போது

இருந்ததை விட பருத்து விட்டது.அதனால் இப்போது அந்த சின்ன ஒட்டையின் மூலம் வெளியே வர இயலவில்லை.

ஒரு நாள் டிரம்மிலிருந்த அரிசியை விற்பனைக்கு எடுத்தான் வியாபாரி.அப்போது அதில் பதுங்கியிருந்த குண்டு எலியைக் கண்டு அதை அடித்துக் கொன்றான்.

பேராசை இல்லாத எலி பிழைத்தது.

பேராசை கொண்ட எலி இறந்த்து.

பேராசை பெரு நஷ்டமாகும்.

Tuesday, January 11, 2011

60. மருதனும்...பாறாங்கல்லும் (நீதிக்கதை)


ஒரு ஊரை ஒரு அரசன் ஆண்டு வந்தான். அந்த ஊர் மக்கள் அனைவரும் சுயநலவாதிகளாகவே இருந்தனர்.யாருக்கும் எந்த உதவியும் செய்யாமல் ...
தங்கள் நலத்தையே எண்ணி,,அதனால் பிறர் துன்பம் அடைந்தாலும் கவலைப்படாமல் வாழ்ந்து வந்தனர்.
அவர்களை திருத்த என்ன செய்யலாம் என மன்னன் நீண்ட நேரம் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தான்.
அந்த ஊருக்குள் வரும் முக்கியமான சாலை ஒன்றிற்கு குறுக்கே ஒரு பெரிய பாறாங்கல்லை போட்டு வைத்தான்.
மறுநாள் மக்கள் ...அவ்வழியில் நடக்கையில் ..அந்த கல்லின் மீது ஏறியே தங்கள் பயணத்தை மேற்கொண்டனர்.ஒருவருக்காவது வழியில் தடையாயிருக்கும்

அந்தக் கல்லை நீக்கி பின்னால் வருபவர்களுக்கு உதவ வேண்டும் என்று தோன்றவில்லை.
அந்த ஊரில் இருந்த மருதன் என்ற ஒருவன் மட்டும் இந்த கல்லை எடுத்துப் போட்டால் ....மக்கள் கஷ்டப் படாமல் நடப்பார்கள் என நினைத்து..அவன் மிகவும்
கஷ்டப்பட்டு ...யாருமே உதவிக்கு வராத நிலையில் ...அதை எடுத்து ஒரு ஒரத்தில் போட்டான்.
கல் இருந்த இடத்திற்கு கீழே மன்னன் பல தங்கக்காசுகளை வைத்து ..இதை அகற்றியவனுக்கு கடவுளின் பரிசு என்று எழுதியிருந்தான்.
மருதனுக்கு அக்காசுகள் கிடைத்ததும் மக்கள் மனம் திருந்த ஆரம்பித்தனர்.பிறருக்கு நன்மை செய்தால் கடவுள் நமக்கு உதவுவார் என்ற எண்ணம் ஏற்பட
அனைவரும் ஒருவருக்கொருவர் உதவ ஆரம்பித்தனர்.
பிறருக்கு உதவி செய்பவனுக்கு கடவுளின் உதவியும் கருணையும் கிடைக்கும்.

Friday, January 7, 2011

59-குரங்கும்..முதலையும் (நீதிக்கதைகள் )ஒரு ஊருக்கு வெளியே ஆறு ஒன்று ஓடிக்கொண்டிருந்தது.ஆற்றின் கரையில் ஒரு நாவல் மரம்.அதில் இருந்த நாவல் பழங்களைத் தின்று குரங்கு ஒன்று உயிர் வாழ்ந்து வந்தது.

ஒருநாள் ஆற்றில் இருந்த முதலை ஒன்று நாவல் பழம் தின்று கொண்டிருந்த குரங்கைப் பார்த்து'நாவல் பழம் மிகவும் ருசியானதா?' எனக் கேட்டது.

குரங்கும்.."முதலையாரே! உமக்கும் சில நாவல் பழம் பறித்துத் தருகிறேன். சாப்பிட்டுப் பாருங்கள்" என்று நாவல் பழங்கள் சிலவற்றை பறித்து ஆற்றில் வாயைப் பிளந்துக் கொண்டிருந்த முதலையின் வாயில் போட்டது.முதலையும் பழத்தை ருசித்து விட்டு..குரங்கிடம் மேலும் சில பழங்களை தன் மனைவிக்கு வாங்கிச் சென்றது.

முதலையின் மனைவி அப்பழங்களை சாப்பிட்டு விட்டு முதலையிடம்..'இப்பழங்கள் இவ்வளவு இனிக்கிறதே..இதே பழத்தை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் அந்த குரங்கின் குடல் எவ்வளவு இனிக்கும்! அது எனக்கு வேண்டும்." என்றது.

முதலையும் குரங்கிடம் வந்து நயவஞ்சகமாக..'குரங்கே!..நாவல் பழம் தந்த உனக்கு என் மனைவி விருந்திட விரும்புகிறாள்..வா.." என்றதும்.குரங்கும் மகிழ்ந்து..முதலையின் முதுகில் உட்கார்ந்து ஆற்றில்..முதலையின் இருப்பிடம் செல்லத் தொடங்கியது.

பாதி தூரம் வந்ததும்..இனி குரங்கால் நீரில் தனித்து ஓட முடியாது என முதலை..'மட குரங்கே!..உண்மையில் விருந்து உனக்கல்ல. என் மனைவிக்குத் தான்.அவள்தான் உன் குடலை சாப்பிட விரும்புகிறாள்" என்றது.

சற்று நேரம் யோசித்த குரங்கு..'முதலையே அதை முதலிலேயே சொல்லக் கூடாதா..நான் என் குடலை கழட்டி மரத்தில் அல்லவா வைத்திருக்கிறேன்..திரும்ப மரத்திற்கு என்னைக் கொண்டு போ. குடலை எடுத்து மாட்டிக்கொண்டு வருகிறேன்..' என்றது.

முதலையும் யோசிக்காது..குரங்கு உண்மை சொல்வதாக எண்ணிக் கொண்டு அதை திரும்ப மரத்திற்கு அழைத்து வந்தது

வேகமாக மரத்தில் ஏறிய குரங்கு..'முட்டாள் முதலையே. குடலை உடலிலிருந்து கழட்டி மாட்ட முடியுமா? உன்னை நம்பிய என்னை ஏமாற்றிவிட்டாயே..நியாயமா? என்று கேட்டது.

முதலையும் ஏமாந்து திரும்பியது.

நாமும் யாரையும் உடன் நம்பக்கூடாது. அவர்கள் நல்லவர்களா..கெட்டவர்களா என நட்பு கொள்ளுமுன் பார்க்க வேண்டும்.

ஆபத்துக் காலத்தில் நம் மூளையை உபயோகித்து..ஆபத்திலிருந்து விடுபட வேண்டும்.

Tuesday, January 4, 2011

58.குரங்கும்...இரண்டு பூனைகளும்- (நீதிக்கதை)


இரண்டு பூனைகள் நண்பர்களாயிருந்தன....ஆனால் அவைகளுக்குள் ஒற்றுமையில்லாது அடிக்கடி சண்டைப்போட்டுக் கொண்டிருந்தன.

ஒரு நாள் அப்பூனைகளுக்கு அப்பம் கிடைத்தது.அவை இரண்டும் சாப்பிட நினைத்த போது ..அதை சரிசமமாக பிரிப்பதில் அவைகளுக்குள் சண்டை வந்தது.

பிறகு இரண்டும் யாரிடமாவது சென்று அப்பத்தை சரிசமமாக பங்கிட்டு தரச்சொல்லலாம் என எண்ணின .அப்போது ஒரு குரங்கு அங்கு வந்தது.

குரங்கிடம் அப்பத்தை சமமாக பிரித்துத் தரச்சொல்ல குரங்கும் சம்மதித்து ஒரு தராசு கொண்டு வந்தது.

அப்பத்தை இரண்டாக்கி தராசின் ஒவ்வொரு தட்டிலும் அப்பத்துண்டை வைத்தது குரங்கு.தராசின் ஒரு தட்டு சற்று கீழே செல்ல,குரங்கு அந்த தட்டில் உள்ள

அப்பத்தை ஒரு கடி கடித்து சாப்பிட்டு விட்டு மீதியை தட்டில் போட்டது .இப்போது மற்றொரு தட்டு கீழே தாழ்ந்தது.அந்த தட்டில் இருந்த அப்பத்தை சிறிது

கடித்து விட்டு மீண்டூம் போட்டது..

இப்படியே மாறி மாறி தட்டுகள் தாழ...குரங்கும் மாறி மாறி அப்பத்துண்டுகளை சாப்பிட்டது.

அப்பம் குறைவதைக் கண்ட பூனைகள் " இனி நீங்கள் அப்பத்தை பிரிக்க வேண்டாம் நாங்களே பார்த்துக்கொள்கிறோம்" என மீதமுள்ளதை கேட்டன

ஆனால் குரங்கோ,மீதமிருந்த அப்பம் 'நான் இது வரை செய்த வேலைக்கு கூலி' என்று சொல்லிவிட்டு அதையும் வாயில் போட்டுக்கொண்டது.

பூனைகள் ஒன்றுக்கொன்று விட்டுக்கொடுத்து ஒற்றுமையாக இருந்திருந்தால்...அப்பத்தை சாப்பிட்டு இருக்கலாம்.ஒற்றுமையில்லாததால் நஷ்டம் அடைந்தன.

நாமும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கவும்,ஒற்றுமையுடனும் இருக்கவேண்டும்.