Sunday, February 11, 2018

9-நன்றி மறப்பது நன்றன்று


ஒரு காட்டில், சிங்கம் ஒன்றை உயிருடன் பிடிக்க எண்ணிய சிலர், ஒரு கூண்டினைத் தயாரித்து அதில் ஒரு ஆட்டுக் குட்டியை கட்டி வைத்திருந்தனர்
ஆட்டிற்கு ஆசைப்பட்டு ,சிங்கம் கூட்டினுள் அகப்பட்டுக் கொள்ளும் என்ற எண்ணத்தில்.

ஒரு சிங்கமும், அதுபோலவே கூண்டினுள் மாட்டிக் கொண்டது

அப்போது ,அவ்வழியாக ஒரு விறகுவெட்டி வந்தான்.சிங்கம் அவனிடம்,"மனிதா! என்னை விடுவித்து விடு.நான் உன்னை ஒன்றும் செய்ய மாட்டேன்" என்றது

மனிதர்களை அடித்துக் கொல்பவன் நீ.உன்னை நான் எப்படி நம்புவது?" என்றான் விறகுவெட்டி

'நான் மனிதர்களை அடித்துக் கொல்பவன் தான்.அதற்காக..என்னை காப்பாற்றியவனை நான் அப்படிச் செய்வேனா? நன்றி மறப்பவன் அல்ல நான்" என்றது

சிங்கத்தின்பேச்சினை நம்பிய விறகுவெட்டி, கூண்டினைத் திறந்து சிங்கத்தை விடுவித்தான்.

வெளியே வந்த சிங்கம் ,விறகுவெட்டி மீது பாயத் தயாரானது.

உடன் விறகுவெட்டி, "சிங்கமே! உன்னை விடுவித்த எனக்கு நீ காட்டும் நன்றி இதுதானா?" என்றான்

"மனிதனை அடித்துக் கொல்பவன் நான்.என் உயிரைக் காப்பாற்றுக் கொள்ள பொய் சொன்னேன்.நீ மனிதன்.உன் அறிவைப் பயன் படுத்தி, ஒருவருக்கு உதவும் முன், அது நல்லதா?கெட்டதா? என்பதை உணர வேண்டாமா" என்றது.

அப்போது அவ்வழியாக நரி ஒன்று வந்தது.

"நாம் நரியிடம் நியாயம் கேட்போம்" என்றான் விறகுவெட்டி.

மனிதனை அடித்துத் தின்று விட்டு,  நரியையும் கொன்று உண்ணலாம் என்ற ஆசையில், சிங்கம் அதற்கு சம்மதித்தது.

சிங்கத்தின் நன்றி கெட்ட செயலை அறிந்த நரி, விறகுவெட்டியை காப்பாற்ற எண்ணியது

அதனால், சிங்கத்திடம் ,"நீங்கள் எந்த கூண்டில் அடைபட்டு இருந்தீர்கள்?" என்றது.

சிங்கம் கூண்டினைக் காட்டியது.

"எப்படி அடைபட்டுக் கிடந்தீர்கள்?" என்றது நரி.

"இப்படித்தான்" என்று கூறியபடியே, சிங்கம் கூண்டினுள் சென்றது.உடன் நரி, கூண்டினை இழுத்து மூடியது.

இப்போது, சிங்கம் மீண்டும் கூண்டினுள்.

நரியைப் பார்த்து சிங்கம், "நரியே! நீ செய்தது நியாயமா?" என்றது

"உதவி செய்த மனிதனை, நீ அடித்துக் கொல்வது நியாயமானால், நான் செய்ததும் நியாயம்தான்"என்ற நரி, விறகுவெட்டியைப் பார்த்து,"ஒருவருக்கு உதவும்முன், அந்த உதவிக்கு அவன் தகுதியானவனா? என யோசித்து செய்ய வேண்டும்" என அறிவுரை கூறியது.

நாமும் ஒருவர் செய்த உதவியை மறந்து நடந்தோமானால், தீங்கு விளையும் என்று உணர வேண்டும்.

நன்றி மறப்பது நன்றன்று 

2 comments:

கலியபெருமாள் புதுச்சேரி said...

தொடரட்டும் உங்கள் கதைகூறல் சேவை.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி கலியபெருமள்.