Sunday, December 20, 2020

37 - கர்வம் கூடாது (நீதிக்கதை)




 அந்த ஊரில் இருந்த குளம் ஒன்றில் அநேக மீன்கள் வாழ்ந்து வந்தன.அவற்றில் பளப்பள என மின்னும் வண்ணத்தில் மிக அழகான மீன் ஒண்றும் இருந்தது.


தான் அழகாய் இருப்பதால்..அந்த மீன் மற்ற மீன்களுடன் சேராது கர்வத்துடன் குளத்தில் நீச்சலடித்துக் கொண்டிருந்தது.


அதனுடன் நட்பை விரும்பி ஒரு மீன் வந்தது.ஆனால் வண்ண மீனோ ' என் அழகைப்பார்...வண்ணங்களைப்பார்...எவ்வளவு அழகாய் இருக்கிறேன்.ஆனால் நீயோ அவலட்சணமாய்,கறுப்பாக இருக்கிறாய்.உன்னுடன் நான் நட்புகொள்ளமாட்டேன் என்றது.

அதற்கு வண்ணமற்ற மீன் சொன்னது..'தோற்றம் எப்படியிருந்தால் என்ன...மனம் களங்கமில்லாது இருக்கவேண்டும்.படைப்பு நம் கையில் இல்லை....அதனால் நீ கர்வம் கொள்வது நல்லதல்ல.....இந்த அழகே உனக்கு ஒரு நாள் விரோதியாகிவிடும்' என்றது.

அந்த குளத்தின் கரையில் கொக்கு ஒன்று ஓற்றைக் காலில் நின்றுகொண்டு நீரில் போகும் மீன்களை எல்லாம்  பார்த்துகொண்டிருந்தது.

அப்போது அந்த அழகிய வண்ண மீன் நீர்பரப்பின் மேற்பகுத்திக்கு வந்தது.

மினுமினுப்பான வண்ண மீனைப்பார்த்த கொக்கு..'.ஆஹா.. இது என்னமாய் ஜொலிக்கிறது...உண்ண அற்புதமாய் இருக்கும்'என்றபடியே கவ்வி பிடித்தது.

இதை பார்த்துக்கொண்டிருந்த வண்ணமற்ற மீன்' வண்ண நிறத்தால் அழகாய் இருப்பதாக கர்வத்துடன் இருந்தாயே...அதுவே உன் உயிருக்கு உலை வைத்துவிட்டதே...என்னுடன் நட்பாய் இருந்திருந்தால் கொக்கை பார்த்ததும் உன்னை ஆழமான பகுதிக்கு அழைத்து சென்றிருப்பேனே' என்று கூறி அந்த இடத்தை விட்டு அகன்றது.

நாம் எப்படிப்பட்ட நிலையில்  இருந்தாலும் கர்வம் படக்கூடாது.ஏனெனில் கர்வம் ஒருநாள் நம்மை அழித்துவிடும்.

No comments: