Thursday, June 2, 2016

156.ஸ்ரீ ராமகிருஷ்ணர் அருளிய கதைகள்

5. ' பற்றற்றான் பற்று '


நடுத்தர வயது கணவன், மனைவி  அவர்கள்.
உலக வாழ்க்கையை வெறுத்து துறவு பூண்டனர். இறைவனை தரிசிக்கும் நோக்கத்துடன் பல புண்ணியத்தலங்களுக்கு சென்று வந்தனர்,

ஒரு நாள்,அவர்கள் நடந்து செல்லும்போது,மனைவி சற்று பின்னாக வந்து கொண்டிருந்தாள். முன்னால் சென்றுகொண்டிருந்த கணவனின் கால்களில்எதுவோ இடறியது.குனிந்து பார்த்தவன்  அது ஒரு வைரக்கல் என்பதை உணர்ந்தான்.அதைக்கண்டால் தன் மனைவிக்கு உலகப்பற்று ஏற்பட்டுவிடும் என்று ஐயம் கொண்டான்.ஆகவே,மனைவி வருவதற்கு முன்,அந்த வைரக்கல்லை  அவளது பார்வை படாது மறைக்க முயன்றான்.

ஆனால் மனைவிக்கு கணவன் எதையோ மறைக்க முயன்றது புரிந்துவிட்டது. அவனது மூடிய கையை பிரித்தாள்.அதில் வைரம் இருந்ததையும்,கணவன் மறைக்க முயன்ற நோக்கத்தையும் அறிந்தாள்.

கணவனைப் பார்த்து, ' வைரத்துக்கும், கூழாங்கல்லுக்கும் வேறுபாடு காண்பவன் எப்படித் துறவியாய் இருக்க முடியும்? என்று கேட்டாள்.

கணவன் வெட்கி தலை குனிந்தான்.ஆசை அதிகம் உள்ளவர்களுக்கு எல்லாவற்றிலும் விருப்பம்.ஆனால் இறைவன் மீது பற்று வைத்தவர்களோ,இறைவனை மட்டுமே மனதில் தேக்கிக் கொள்கிறார்கள்.மற்றவற்றின் மீதிருந்த நாட்டத்தை விடுகிறார்கள்.

No comments: