Tuesday, June 2, 2015

147 - குற்றம் பார்க்கின்....

                               

ஒரு காட்டில் பெரிய மரம் ஒன்று நன்கு தழைத்து வளர்ந்து, கனிகளுடன் காணப்பட்டது.அம்மரத்தில், பல பறவைகள் கூடு கட்டி, தனது குஞ்சுகளுடன் சந்தோசமாக அக்கனிகளை உண்டு வாழ்ந்து கொண்டிருந்தன.

அதே காட்டில், வஞ்சக நரி ஒன்று இருந்தது.அது எப்போதும் பிறர் மீது குற்றம் சொல்லியே வாழ்ந்து வந்தது.

ஒரு சமயம், மழையே இல்லாததால், தண்ணீர் இல்லாது அக்காட்டில் விலங்குகளும், பறவைகளும் தவித்தன.அந்த மரமும் தனது இலைகளையெல்லாம் இழந்து..எலும்புக் கூடாய் வாடிக்காணப்பட்டது.
அதனால், அம்மரத்தில் வசித்து வந்த பறவைகள் வேறு இடம் தேடிச் சென்றன...

இதுதான் சமயமென்று, நரி மரத்திடம் வந்து, "பார்த்தாயா?  நீ வளமாய் இருந்த போது உன்னையே சுற்றி வந்த பறவைகள், நீ வாடியதும் உன்னை விட்டுச் சென்று விட்டன.அவை திரும்பி வந்தால் அடைக்கலம் கொடுக்காதே" என்றது.

ஆனால், அந்த மரமோ, நரியைப் போல குறுகிய நோக்கம் கொண்டது அல்ல..அது நரியிடம், " நரியாரே! எல்லாவற்றிலும் குறை காணக்கூடாது.மழை இல்லாவிடினும், எனது ஆழமான வேர்கள் எனக்கு வேண்டிய தண்ணீர் மற்றும் ஊட்டச் சத்துகளை பூமியிலிருந்து பெற்றுத் தந்து விடும்.அதுபோன்ற வசதி, அந்தப் பறவைகளுக்குக் கிடையாது.ஆகவே..அவை உயிர் வாழ வேண்டுமாயின் வேறு இடம் தேடித்தான் செல்ல வேண்டும்" என்றது.

மரத்தின் குணத்தைப் பாருங்கள்.

நாமும் அந்த நரியைப் போல இல்லாமல், நமது சுற்றத்தினர், நட்பு ஆகியோரிடம் தேவையின்றி குறைகளைக் கூறி வெறுக்கக்கூடாது, குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்பதை உணர வேண்டும்.

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

ஆகா...! அருமையான கதை...