Tuesday, March 11, 2014

131. ' யார் உயர்ந்தவர்.. (நீதிக்கதை)




ஒன்று முதல் ஒன்பது வரை ஒன்பது நண்பர்கள் விளையாடிக்கொண்டிருந்தார்கள். ' 0 ' மட்டும் தனியாக சோகமாக அமர்ந்துள்ளது.அவர்கள் விளையாட்டில் அதை சேர்க்கவில்லை.

ஆசிரியர்:  வகுப்பறைக்குள் நுழைய ....

ஒன்று :   ஆசிரியர் வந்துட்டார்...ஆசிரியர் வந்துட்டார்.....

எல்லோரும் எழுந்து நின்று: வணக்கம் சார்..

ஆசிரியர்: வணக்கம். எல்லோரும் உட்காருங்க.இப்ப attendance எடுக்கப் போறேன். வந்திருக்கிறவர்கள் present சொல்லவும்.ஒன்று..

ஒன்று:    Presnet Sir

ஆசிரியர்:  இரண்டு

இரண்டு:    Present Sir

ஆசிரியர்:   மூன்று

மூன்று:     Present Sir

(இப்படி ஒன்பது வரை கூப்பிட அனைத்து எண்களும் Present சொல்ல )

ஆசிரியர்:   சைஃபர்
(Present  சப்தம் வராததால் மீண்டும்) சைஃபர் இன்னிக்கு வரலியா.......

இரண்டு:  வந்திருக்கான் Sir.

ஆசிரியர்:  என்ன...சைஃபர் தூங்குகிறாயா?
          எழுந்து நில்
         (சைஃபர் சோகத்துடன் எழுந்து நிற்க)
         ஏன் Present சொல்லவில்லை....

         (சைஃபர் அழ ஆரம்பிக்க)

ஆசிரியர்: ஏன் அழற!

சைஃபர்:  நான் சைஃபர்.அதனால் எனக்கு மதிப்பு இல்லையாம்.ஒன்று முதல் ஒன்பது வரை எந்த நண்பனும்...என்னை அவர்களுடன் விளையாட்டில் சேர்த்துக் கொள்ள மாட்டேன்  என்று சொல்கிறார்கள்.

ஆசிரியர்: அப்படியா...உட்கார்..நீ மதிப்புள்ளவன் என அவர்கள் வாயாலேயே சொல்ல வைக்கிறேன்.

          ஒன்று முதல் ஒன்பது வரை ஒவ்வொருவரும் தாங்கள் ஏன் மதிப்புள்ளவர்கள் என்று சொல்லவேண்டும்.

          முதலில்  ஒன்று நீ சொல்...

ஒன்று:    (எழுந்து நின்று ) ஐயா...நீங்களே நாங்கள் பத்து பேர் இருக்கும் போது ஒன்றான என்னையே முதலில் கூப்பிட்டீர்கள்.இது ஒன்றே நான் அவர்களை விட மதிப்பு வாய்ந்தவன் என்பதற்கான சான்று.

          தவிர ...படிப்பில் முதல் மாணவனாய் இருக்கவேண்டும்...முதல் மதிப்பெண் பெற வேண்டும் என ஆசிரியர்களும் பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை நினைக்கின்றனர்.ஆகவே    
           நானே அனைவரை விட உயர்ந்தவன்.

ஆசிரியர்:  சரி...இப்போது ....இரண்டு நீ சொல்....

இரண்டு:   ஐயா...இறைவனால் படைக்கப்பட்டுள்ள அனைத்திற்கும்,மனிதன் படைத்த அனைத்திற்கும் இரண்டு பக்கங்கள்தான்.  உதாரணமாக ஒரு இலையை எடுத்து கொண்டாலும்    
          இலையின் உள்புறம்,வெளிபுறம் என இரண்டு.ஆண்பெண்,இன்பம்,துன்பம், வலது,இடது என எல்லாமே இரண்டுதான். ஆகவே நானே உயர்ந்தவன்.

ஆசிரியர்: o.k. ...மூன்று  நீ சொல்...


மூன்று:  ஐயா....தமிழ் என்றாலே மூன்று எழுத்து.தவிர்த்து இயற்றமிழ்,இசைத்தமிழ்,நாடகத்தமிழ் என தமிழை மூன்று வகைப் படுத்துவர்.
         அது போல தெய்வங்களிலும் பிரம்மா,விஷ்ணு,சிவன் என படைத்தல்,காத்தல்,அழித்தல் தொழில்களை புரியும் சுவாமிகளை மும்மூர்த்திகள் என்றே சொல்லுவார்கள்.ஆகவே மூன்றான நானே
         உயர்ந்தவன்.


ஆசிரியர்: o.k. நான்கு  நீ சொல்  ....


நான்கு : ரிக்,யஜூர்,சாம,அதர்வணம் என வேதங்கள் நான்கு வகைப்படும்.எந்த ஒரு செயல்செய்தாலும் அதுபற்றி நாலு பேரை கேட்டு தெரிந்து கொள் என்பார்கள்.
         ஆகவே நான்கான நானே உய்ர்ந்தவன்.


ஆசிரியர்: ஐந்து


ஐந்து:    ஒவ்வொரு மனிதன் கைகளிலும் ஐந்துவிரல்கள்.கால்களில் ஐந்து விரல்கள்..தவிர...இந்த பூமியே பஞ்ச பூதங்களால் ஆனது...பூமி.காற்று,ஆகாயம்,நெருப்பு, நீர் என.தவிர மெய்,வாய்,கண்,மூக்கு
         செவி என மனித உடலும் ஐந்து ஆகும்.


ஆசிரியர்: ஆறு  நீ...
.

ஆறு:     சுவைகள்...இனிப்பு,காரம்,புளிப்பு,உப்பு,உவர்ப்பு.துவர்ப்பு என ஆறு வகைப்படும்.
         தமிழ்க் கடவுள் என போற்றப்படும் முருகனுக்கு ஆறு முகங்கள்..
         மனிதர்களுக்கு உணவு விளைவிப்பதற்கும்,குடிநீருக்கும் தண்ணீர் அவசியம், அது ' நதி ' எனப்படுகிறது
         அது ' ஆறு ' என எங்கள் பெயரிலேயே அழைக்கப்படுகிறது.
         ஆதலால் நானே உயர்ந்தவன்.

ஆசிரியர்: ஏழு...


ஏழு:     ஐயா...வாரத்தின் நாட்கள் ஏழு.
         திருப்பதி பாலாஜி வீற்றிருக்கும் இடம் ஏழுமலைகளைக் கொண்டது.
         அதனால் ஏழு ஆகிய நானே உயர்ந்தவன்.

ஆசிரியர்: எட்டு........
.

எட்டு:    திசைகள் எட்டு..மனிதன் எங்கு சென்றாலும் என்  எல்லைக்குள் தான் இருந்தாக வேண்டும். ஆதலால் நானே பெரியவன்..

ஆசிரியர்: ஒன்பது நீ என்ன சொல்லப்போகிறாய்?

ஒன்பது:  ஐயா நவக்கிரகங்கள் ஒன்பது.இன்பம்,நகைச்சுவை,கருணை,கோபம்.வீரம்.பயம்,அருவருப்பு,அற்புதம்,சாந்தம் என நவரசங்கள்.நவராத்திரி,நவரத்தினம் என்றெல்லாம் சொல்லப்படுகிறது.
         ஆகவே ஒன்பதான நானே உயர்ந்தவன்.

ஆசிரியர்: சைஃபர் ...இவர்கள் சொல்வதை எல்லாம் கேட்டாயா? இப்போதும் நான் மதிப்பில்லாதவன் என்று நீ சொன்னதையே திரும்பச் சொல்லப்போகிறாயா..?

சைஃபர்:  ஆம் Sir.

ஆசிரியர்: சரி...உன் மதிப்பு உனக்கு தெரியவில்லை...நானே சொல்கிறேன் கேள்.  நீ எல்லாரையும் விட மதிப்பு அதிகம் வாய்ந்தவன். முதலில் உன்னை கண்டுபிடித்ததே இந்தியர்கள் என
         பெருமைப்படுவோம்.
         சைஃபர் நீ இங்கே வா.....வந்து நில்...
         (சைஃபர் வந்து நிற்கிறது)
         ஒன்று இங்கே வா.. சைஃபரின் அடுத்து நில்.....
         (ஒன்று வந்து நிற்கிறது)
         இப்பொழுது ஒன்றே உன் மதிப்பு என்ன?

ஒன்று:   ஒன்று.

ஆசிரியர்: சைஃபர்..நீ இப்போது ஒன்றின் அடுத்தபக்க்ம் இடம் மாறி நில்.
         ஒன்றே இப்போது உன் மதிப்பு என்ன?

ஒன்று:    பத்து...

ஆசிரியர்: சைஃபர் பார்த்தாயா...நீ ஒன்றின் பக்கத்தில் வந்து நின்றதும் ஒன்றின் மதிப்பு...பத்து மடங்கு உயர்ந்து விட்டது.அதாவது ஒன்று உன்னுடன் சேர்ந்ததும்தான் அதிக மதிப்பைப் பெற்றது,.
          இது போல ஒவ்வொரு எண்ணுடன் நீ சேரும்போது அவற்றின் மதிப்பை பத்து மடங்கு உயர்த்தி விடுகிறாய்.
         எண்களே ...இப்போது புரிந்து கொள்ளுங்கள் சைஃபர் உங்களுடன் இணைந்ததும் உங்கள் மதிப்பு உயர்கிறது.
         இனியாவது ' 0 ' ஐ உங்களுடன் விளையாட சேர்த்துக் கொள்வீர்களா...

ஒன்று   ஐயா..இதுவரை சைஃபரின் மதிப்பு தெரியாமல் அதை ஒதுக்கி வைத்தோம்.
முதல்    இனி நாங்கள் அனைவரும் சைஃபருடன் சேர்ந்து ஒன்றாக...ஒற்றுமையாக இருப்போம்.
ஒன்பது   இதை விளங்க வைத்த உங்களுக்கு நன்றி.
 வரை

சைஃபர்: என்னை எனக்கே புரிய வைத்த உங்களுக்கு நன்றி Sir.

ஆசிரியர்: உங்களுக்கெல்லாம் இன்னொன்றும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்,இறைவனால் படைக்கப்பட்ட,,மனிதனால் உருவாக்கப்பட்ட எதற்கும் மதிப்பில்லை என்பதே கிடையாது.எல்லாமே மதிப்பு
         வாய்ந்தவை அதனதன் உபயோகத்தில். இறைவன் அனைவருக்கும் ஒரே மூளையைத் தான் கொடுத்திருக்கிறான்.அதனால், யாரும் யாரையும் விட உயர்ந்தவர்க ள் அல்ல.
         இறைவன் அளித்த மூளையை சரியான வகையில் உபயோகிப்பவன் புத்திசாலியாகிறான்.
         இறைவன் படைத்த மூளையின் மதிப்பு உணர்ந்து படித்து ...நாமும் புத்திசாலி என பெயர் எடுப்போம்.
   
         அடுத்தது Play Time. என்ன செய்யப்போகிறீர்கள்.

எல்லா எண்களூம்:
        எல்லோரும் ஒன்றாக விளையாடப் போகிறோம்  Sir.

ஆசிரியர்: Good.



 

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

/// ஒவ்வொரு எண்ணுடன் நீ சேரும்போது அவற்றின் மதிப்பை பத்து மடங்கு உயர்த்தி விடுகிறாய்... ///

ஆகா... சொன்னவிதம் மிகவும் அருமை...

வாழ்த்துக்கள் அம்மா...

Kanchana Radhakrishnan said...

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திண்டுக்கல் தனபாலன்.

sury siva said...

கதை என்றாலும் கருத்தின்
விதையில் ஒரு
புதையல் இருக்கிறது. அப்புதையலில் ஒரு
புதுமை இருக்கிறது. அப்புதுமையில் மனமலர்ந்து
புன்னகை மலர்கிறது.


சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.com

Kanchana Radhakrishnan said...

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி
Sury Siva Sir.

வெங்கட் நாகராஜ் said...

அருமையான கதை....

கடவுளால் படைக்கப்பட்ட அனைத்திற்கும் ஏதோ ஒரு விதத்தில் சிறப்பு இருக்கும் என்பதை அருமையாகச் சொன்ன கதை.

பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

Kanchana Radhakrishnan said...

நன்றி. வெங்கட் நாகராஜ்.