Monday, October 24, 2016

159-அப்பாவின் கோபம்

                   



தேர்வில் குறைவான மதிப்பெண்கள் பெற்றிருந்ததால் பாஸ்கரின் தந்தை அவனை கோபித்துக் கொண்டார்.

பாஸ்கரும் அழுதபடியே, தன் தவறை உணராமல், அப்பாவை மனதிற்குள் திட்டியபடியே தன் அறைக்குள் வந்தான்.கட்டிலில் படுத்தவன் அப்படியேத் தூங்கி விட்டான்.

அவன் கண் விழித்தபோது, அப்பா, அம்மாவிடம் பெசிக் கொண்டிருந்தது கேட்டது.அதில், தன் பெயரும் அடிபட்டதால், அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று கூர்ந்து கேட்டான்.

அப்பா, அம்மாவிடம் "பாஸ்கர் இன்னும் சாப்பிடலியா? பாவம், குழந்தை மதிப்பெண் குறைவு என்பதால் அதிகம் திட்டிவிட்டேன்.அப்படித் திட்டினால்தான், அவனுக்கு மனதில் உறுதி ஏற்பட்டு, அடுத்தத் தேர்வில் அதிகம் மதிப்பெண் வாங்குவான்.மற்றபடி அவன் மீது எனக்கு எந்த கோபமும் இல்லை.நீ அவனை எழுப்பி சாப்பாடு போடு" என்றார்.

அப்போதுதான் அப்பாவைப் பற்றித் தெரிந்து கொண்டான் பாஸ்கர்.பார்வைக்கு அப்பா கரடுமுரடாக பலாப்பழம் போலத் தெரிந்தாலும், அவரது உள்ளம் அப்பழத்தின் உள்ளே இருக்கும் பலாச்சுளைப் போல இனிமையானது என உணர்ந்தான்.மேலும், அப்பாவிற்கு தன் மீது பாசம் இருப்பதால் தான் தான் நன்குப் படித்து வாழ்வில் பெரிய மனிதனாக வேண்டும்  என்ற எண்ணத்தில் தன்னைக் கோபித்துக் கொண்டார் என்றும் அறிந்தான்.

குழந்தைகளே! உங்களையும், உங்கள் அப்பாவோ, அம்மாவோ கோபித்தால் அது உங்கள் நல்லதிற்குத்தான் என புரிந்து கொள்ளுங்கள்.

No comments: